வெள்ளி, 29 ஜனவரி, 2016

இதனால்...நான்

பூக்களைப்பறிப்போர்
புல்மீது நடப்போர்.

கிறுக்கலில்லா
வெள்ளைச்சுவர்.
நுனி கடிக்கா
வெல்லக்கட்டி.

மழலைக்கு
ஊசியிடும்
மருத்துவன்..

டயப்பர்
வைத்த
சிறுகுண்டி.
பிள்ளை வைத்துத்
தள்ளும் வண்டி.

புடலைக்கு
கல் கட்டாத
புறத்தோட்டம்.

குளம்
நனைக்கா
குதிக்கால்கள்.

கேள்வி கேட்கும்
பள்ளிக்கூடம்.

புகையில்லா
புகைவண்டி..
புரியாத
கவிதை சொல்லி..

சிரிக்காத
அறிவாளி..
சிந்திக்கா
முழு மூடன்..

தோல்வியில்லா
ஓர்
வெற்றி..

இருக்கையில்லாப்
பேருந்து..
இருகை கொண்டு
வாங்கும்
பிச்சை.

ஆடறுக்கும்
கத்தி..
ஆலை கொண்டு
போகும்
கரும்பு..

மாடேற்றிச்செல்லும்
லாரி..
சூடின்றிப்போன
தேனீர்.

மேட்டுப்பாதை
சைக்கிள் பயணம்.

பன்னீர்ப்பூ
மரமில்லா
தெருவின் சாலை..

நீர் தெளித்துக்
கோலமிடா
சிறுவாசல்..

திண்ணையில்லா
பெரியவீடு..
எண்ணையில்லா
ஒர் விளக்கு.

நாயொன்று
துரத்தாத
நள்ளிரவுத்தேடல்.

விலக்கமுடியா
ஓர் பார்வை..
விடியலில்
விலகும்
போர்வை.

கனவினிலும்
வந்து கொல்லும்
ஒரு வார்த்தை..

அழுது முடியா
சோகம்..
எழுதி முடியா
கவிதை.

பட்டாம் பூச்சி
துரத்தா
விழிகள்..

பொன்வண்டு
சிறைசெய்யும்
தீப்பெட்டி..

நிலவில்லா வானம்..
நிலையில்லா
குடிகாரன்..

கவிதை சொல்லா
காதல்..

காதலில்லா
பருவம்.

காதோடு
பேசாத
ரகசியங்கள்.
கண்பார்த்துச்
சொல்லாத
வார்த்தை.

இளைத்ததாய்
சொல்லாத
அம்மா...

பிழையொன்றும்
பொறுக்காத
நட்பு..

நினைவிலுண்டு,
வரியில்லை..
இன்னுமுண்டு
எதிரிகள்.

உண்மையிது..

எப்போதும்
இவைகளுடன்..

ஒட்டுமில்லை.
உறவுமில்லை..

நாணயம் போற்றுவோம்.

தமிழன் என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ள எத்தனையோ உண்மைகள் உள்ளன.தமிழின் மரபு,சிந்துசமவெளியைக்
காட்டிலும் முந்தைய நாகரீகம்.

பண்பாடு,மொழிவளம்,இலக்கியங்கள் எனப்பல இருந்தாலும்,  எல்லையில்லாமல் பரந்துபட்ட அவன் காலடித்தடங்களின் சாட்சியாக இன்னும் கிடைப்பது அவன் நாணயங்களேயாகும்.

பண்டமாற்று தாண்டி ஒரு பொதுப்பணத்தை உருவாக்கும் போது அதற்கு "நாணயம்" எனப்பெயர் வைத்ததே போதும் தமிழனின் தலைசிறந்த வாழ்வின் சாட்சிக்கு.

சங்ககால வரலாறுகளே இலக்கியங்களின் அதீத கற்பனை என்ற கூற்றும் இங்கே நெடுநாள் இருந்தது.

அந்த அறிவுமிக்கோர் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் பெயர்கூட கற்பனையாக இருக்கலாம் என்றே பிதற்றிக்கொண்டிருந்தனர்.

ஆனால் மிகச்சமீபத்தில் தினமலர் திரு.இரா.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் "பெருவழுதி " எனப்பெயரிடப்பட்ட நாணயத்தை எடுத்து இயம்பியதன் மூலம் இரட்டைச்சாதனைகள் செய்திருக்கிறார்.

பழந்தமிழர் வாழ்வொன்றும் கற்பனைகளின் கூடாரமல்ல,தமிழின் ஆதிப்பெருமைகளில் எந்த மொழிக்கும் இல்லாத "ழு" உம் ஒன்றென.

பண்டைத்தமிழன் ரோமாபுரியிலும் காலூன்றி இருந்த வரலாறு தோண்டியெடுக்கப்படும் நாணயங்கள் பறைசாற்றுகின்றன.

புதுக்கோட்டையின் புகழ்க்கொடிகளில் ஒன்று அதன் "அம்மன்" காசுமாகும்.
பொதுவாய் நாணயங்கள் என்பது பரிமாற்றம் என்பதற்கு மட்டுமல்ல.
நாணயங்களின் பரிணாமம் என்பது ஒரு தேசத்தின் ,மொழியின், சமூகத்தின் வரலாற்றையும் சுமந்தே வந்திருக்கிறது.

நாணயங்கள் சேகரிக்கும் ஒவ்வொருவரும் ஒரு வரலாற்றுக்கடமையை செய்கின்றனர்.

நாணயங்கள் மருவி பணத்தாள்கள் ஆனாலும் வரலாற்றை வரைந்துகொண்டிருக்கும் பணியை துறந்துவிடவில்லை அவைகள்.

பணத்தாள்களின் ஒவ்வொரு வண்ணமும் ஒரு கதை சொல்லும்.

ஒரு மொழியின் வளர்ச்சியும்,கீழ்நோக்கி இறங்கும் அவலத்தையும் கூடச்சொல்லும்.

சுதந்திர இந்தியாவின் பணத்தாள்களில் பத்துக்குள் இருந்த தமிழ், பதின்மூன்றாம் இடத்தில் வந்ததை இதன் உதாரணமாய்ச் சொல்லலாம்.
உற்றுப்பார்த்தால் இது போன்ற பல உண்மைகள் இருக்கும்.

ஓட்டைக்காசுகள் தொடங்கி பிளாஸ்டிக் தாள்களில் பயணிக்கத்தொடங்கியிருக்கிறது நாணயத்தின் பயணம்..

உலகின் ஒவ்வொரு தேசத்தின் பணத்தாள்களும் அந்தந்த நாட்டின் வரலாற்றையும்,வளத்தையும்,போராட்டங்களையும் சொல்லாமல் சொல்பவை.

நாணயங்களை ஒவ்வொரு நாடும் எந்த பெயர்களில் அழைக்கின்றன?
அதன் மதிப்பு முன்பு எப்படியிருந்தது?
இன்றைய மதிப்பு என்ன?
உலகின் எந்த நாடுகள் பணத்தை "ரூபாய்" என்று அழைக்கின்றன?
ரூபாய் என்பதன் பாரம்பரியம் என்ன?

ரூபாய் என்றழைக்கப்படும் நாடுகளில் எல்லாம் தமிழனின் ஆட்சி நடைபெற்றதாய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய ஜப்பானின் நாணயத்தின் பெயர் "யென்".. அது ஆதியில் ரூபாய் என்றிருந்திருக்கிறது.

தமிழ் எழுத்துக்களை மட்டுமல்ல,தமிழ் எண்களை நாணயங்களில் பயன்படுத்தும் தேசங்களும் உண்டு இன்னும்.

இந்தோனேசிய பணத்தாள்களில் பிள்ளையார் உட்கார்ந்திருக்கிறார்.

நாணயங்களும்,பணத்தாள்களும் வரலாறு சொல்கிறதென்றால் ,
அஞ்சல் தலைகள் அன்றாட மாற்றத்தை அறிவிக்கின்றன.

வரலாறு மறந்தவர்களாய்த்தான் நாம் அவசர உலகில் மாறிப்போனோம்.

நமக்குள்ள பாரம்பரியம் உலகில் யாருக்கும் கிடைக்காத பெரும்பேறு நம்மிடம் உள்ளது.
இதைக்கட்டிக்காப்பது ஒருபுறம் என்றால்,
அறிந்து கொள்வதே முதல அவசியம்.

இனி உங்கள் கரங்களில் புழங்கும் நாணயங்களை,
பணத்தாள்களை வெறும் எண்களாய் பார்க்காமல் ,வரலாறாய் உணருங்கள்.



31.01.2016 ல் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில் காலை 10 மணி முதல் 5 மணி வரை 175 நாடுகளின் நாணயம்,பணத்தாள்கள்,மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறுகிறது...
வாய்ப்பிருப்போர் வந்து
ஒருநாள் வரலாற்றோடு வாழ்ந்துவிட்டுப்போகலாம்.

புதன், 27 ஜனவரி, 2016

முதலுதவி...

அன்பின் சக்திக்கு,
கவிதைகளின் பக்கம் கொஞ்சம் காலாற நடந்ததனால்,உனக்கான கடிதங்களை மறந்துவிடவில்லை நான்.

வாழ்க்கை என்னும் வலிய போராட்ட நதியில் எதிர்நீச்சல் போடும்போதெல்லாம் சிந்தனைகளும்,எழுத்தும் மட்டுமே சிறுதுண்டுமரமாய் என்னை கொஞ்சம் மிதக்கவைக்கிறது.

எழுதச்சொல்லி உனக்கு ஆயிரம் தூண்டுதல்கள் உண்டு எனக்குள்.

காண்பவை,கேட்பவை,வாசிப்பவை எல்லாமே எழுதத்தூண்டுவதைவிட,
அழத்தூண்டுகிறது.
கண்ணின் ஈரம் காய்ந்தபின் எழுதலாம் என்றால்,அது இந்த மனிதநாளில் முடியாது போலிருக்கிறது.

படிக்கும் பிள்ளைகள் தற்கொலை,அடிக்கும் கொள்ளைகள், ஊடக தர்மங்கள், தலைமறைவு வாழ்வு நடத்தும் ஆய்ந்த தமிழறிஞர்கள், விதியென கடந்துபோகும் மனிதர்கள்..அடுத்த ஆட்சிக்காய் ஆயுதங்கள் தேடும் அரசியல் கட்சிகள்..

நிறைய இருக்கின்றன எழுத..

சக்தி...

அரசியல்கட்சிகளின் அரிதாரப்பெட்டியில் புதிதாய் ஒரு அலங்கார சாமான் வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.....வந்தால்...?

பூரண மதுவிலக்கு..

அரசும் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டது, அது சாத்தியமில்லையென...

ஆனாலும் போராடுகிறார்கள்,
கூடுகிறார்கள்,பாடுகிறார்கள்..குடிக்கும் மக்களுக்காய் வெடித்து அழுகிறார்கள்.

அரசியல் வாதிகளின் வாய்களில் மதுவிலக்கு என்னும் வாடை எல்லாக்கேள்விகளுக்குமான பதிலாய் வருகிறது.

தம்மையும்,மக்களையும் மிக எளிதாக ஏமாற்றும் அளவிற்கு அறிவுமிக்க அரசியல் கட்சிகளிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எனக்குள் இருப்பதை உனக்கு அனுப்பிவைக்கிறேன்.

1)அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தமிழ்நாடு தவிர்த்துத்தான் வேறு இடங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்களா?

2)அய்யோ,மக்கள் குடித்து பாழாய் போகின்றார்கள் என அழும் என் தலைவர்களே! இந்த மக்கள் கூட்டத்தில் உங்கள் தொண்டர்கள் யாருமில்லையா?

3) நீங்கள் அழைத்ததும் வேலைமறந்து ஓடிவரும் தொண்டர்கள் உங்கள் மற்ற கட்டளைகளை மதிக்கமாட்டார்களா?

சரி ...நேரடியாகவே கேட்கலாம்..

உங்கள் கட்சிகளின் மற்ற தலைவர்கள்,தொண்டர்கள் யாரும் குடிப்பதில்லையா?

மதுவை ஒழித்தே தீருவேன் என சவுக்கு எடுக்கும் ஒரு கட்சியின் மாநாட்டு நாளில் மதுக்கடை கல்லா நிறைந்ததாய் சொன்னார்களே,
அது சரிதானா?

ஊருக்காய் மதுவிலக்கு வேண்டும் நல்ல மனசுக்காரர்களே..
முதலில் உங்கள் கட்சி கூட்டுங்கள்...

தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் யாவரும் இனி குடிக்கக்கூடாதென முடிவெடுங்கள்..
அப்படி குடித்தால் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும்,அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்தும் பிடுங்கப்படும் என அறிவியுங்கள்.

முதலமைச்சர் கனவுகளில் மூழ்கிக்கிடக்கும் தியாகிகளே..
நீங்கள் சொல்லியும் திருந்தாமல் குடிக்கும் ஒரு தொண்டர் ஒருவரையேனும் நீக்கிவிட்டு ஓட்டுகேட்க வாருங்கள்.

வெற்று கோஷங்களிலும்,
வாய்ச்சவடால்களிலும் மக்களை ஏமாற்றியதும்,ஏமாந்ததும் போதும்.

அவரவர் கட்சிகள் சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கைக் கணக்கிற்கு ..நீங்கள் கட்சிக்குள் மதுவிலக்கு முடிவெடுத்தாலே போதும்..

ஆளும் கட்சி மட்டும் குடித்து டாஸ்மாக் வாழ்ந்துவிடாது..

தன்னைத்திருத்திக்கொண்டுதான்"இனிப்பு தின்னாதே" என நபிகள் நாயகம் சொன்ன கதை உண்டு.

உங்கள் கட்சியையும்,
தொண்டர்களையும் கட்டுப்படுத்திவிட்டு..
பாலாறும்,தேனாறும் ஓட ஆட்சிக்கு வாருங்கள்.

திறந்திருப்பதால் குடிக்கிறார்கள் என்பதெல்லாம் போதை தரும் வாதம்..
சாக்கடைகள் கூடத்தான் திறந்தே கிடக்கிறது...

குடிப்பதென்பது இங்கொரு கலாச்சாரமாய் மாறவிட்டுவிட்டு..... தும்பைப்பிடித்து என்ன செய்ய..?

போதைமனிதன் தெளிவாய்த்தான் இருக்கிறான்.
பேருந்தை மறிக்கும் அவன்..புகைவண்டி மறித்த செய்தியில்லை...

நீங்கள் தான் மதுவிலக்கென்னும் போதையில் இருக்கின்றீர்கள்..

தங்கள் அமைப்புக்குள்ளேயே...
மதுவிலக்கில் வென்றால்...
நீங்கள் ஓட்டுக்கேட்டு வரவே வேண்டாம்.
வாக்குகளே வந்து சேரும்.

மதுவைத்தாண்டியும் சீரழிந்து கொண்டிருக்கிறது சமூகம்..
லஞ்சப்பேய்கள் தலைவிரித்தாடும் காட்சிகள் அறியவில்லையா?
கல்விக் கொள்ளையர் யாரும் கண்ணில் படவில்லையா?
பெருமழை சோகம் தீர்ந்தே போனதா?
எல்லார்க்கும் கல்வி போய் சேர்ந்துவிட்டதா?
நீதித்துறைகளில் நீதி கிடைக்கிறதா?

எல்லாம் பாருங்கள்..எங்கள் தலைவர்களே...

செய்வார்களா சக்தி?

அன்புடன்.
செல்வக்குமார்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

என்னைப் புசியுங்கள்...

சாத்தான்
தோட்டத்து
கனி நான்..

வரிசை வேண்டாம்..
வந்து
புசியுங்கள்..

சாபக்கனியென்று....
என்னை
சட்டெனத்
தள்ளாதீர்...

பசியிருப்போர்
உண்ணுங்கள்
பாவம்
பார்க்காதீர்...

பட்டினியாய்
வாழ்ந்திருந்து
பரலோகம்
தேடாதீர்.

இச்சையுள்ள
மனிதரெல்லாம்
இந்த
பச்சைக்கனி
பாருங்கள்..

காணாத
கடவுளுக்காய்..
காத்திருந்து
சோராமல்..

கை வரும்
கனி
நான்..
கண்கள் மூடி
போகாதீர்.

ஆதிக்கதை..
நீதிக்கதை,
சொன்னதெல்லாம்
கேட்டதனால்..
இன்றுவரை
கவலை கொள்ளா
மனிதருண்டா?

எனைத்தின்று
மோட்சம்
கிட்டார்
உம்மிடத்தில்
சொன்னதுண்டா?

காமம்
சீண்டும்
சாமத்துக்கனி
நான்...
பாவமென்போர்
போர்த்தித்
தூங்குங்கள்.

ஆமென்போர்
மட்டும்
அடுத்தும்
வாருங்கள்..

அனுதினமும்
முன்னேறும்
நுட்பம்
நானறிவேன்..

குறுஞ்செய்தி,
அலைபேசி,
கணினியிலும்
இந்த
கனி கிடைக்கும்..

வீட்டுக்கே
வந்தாலும்
விலையொன்றும்
கிடையாது..

கல்லிலும்
வேர்பிடிக்கும்
என்
விதையின்
வீரியங்கள்...

வலிய வந்து
ஆடுவதால்...
வான்கோழி
என்னை
வைய்யாதீர்..

மயில்
கொண்டு
பிரியாணி..?
சாத்தியங்கள்
இங்கு இல்லை.

கவலைகள்
இதுவரை..
கவ்வாதார்
என்னைத் தள்ளலாம்.

சாதி
நான்
பார்ப்பதில்லை..
சகலரும்
கொள்ளலாம்.

முடியுமெனில்
சொல்லுங்கள்..

உங்கள்
கடவுளுக்கும்
அனுப்பலாம்...































































புகை படிந்த போதிமரங்கள்..

பட்டணத்து மரங்கள்
பாவம்.

புழுதிப்போர்வைக்குள்
மூச்சடைத்து
வாழும்
சாபம்.

உச்சிக்குடுமி
கட்சிக்கொடி
பறக்கும்...

கிளிகள்
வந்து போவதில்லை.
கிளையில்
ஒரு
ஊஞ்சல் இல்லை.

செத்த
ஓர் உறவுக்காய்
சிறுதீபம்
வேரில் இல்லை.

கொத்து விளக்கெரியும்
சில இரவில்.

மற்றபடி
பட்டினிதான்.

மின்கம்பி
தாண்டவிடா
பத்தினி தான்.

உலுக்கிப்
பழம் பொறுக்க
உற்றார்
வருவதில்லை..

தாகம் எப்போதும்.

தார்ச்சாலை
சுரப்பதில்லை.

வேட்டிவிலகாத
துயில்
கண்டதில்லை
நிழல் வீட்டில்.

பெரும்போதை
யாத்திரைகள்..
பெரும்பாலும்
முடியுமிங்கு...
ஆடையின்றி.

இலைகிள்ளி
சிறு
பீப்பி
செய்வாரில்லை..

விலையில்லாப்
பொருளாக..
வீதியிலே
நிற்க வைத்தார்..

கரும்புச்சாறு
கடை முளைக்கும்
சில நாட்கள்.

காளானாய்...
விளம்பரத்தின்
குடைவிரியும்
பகல் வேளை.

புனிதனுக்கு
சிலுவை
தந்த
தண்டனையாய்...
அங்கமெல்லாம்
ஆணிக்காயங்கள்.

நகர மரங்களுக்கு
நாலு சாதி.

கல்லூரிச்சோலைக்குள்
வளர்வதெல்லாம்
கடவுள் வரம்.

எத்தனை நாள்
ஆனாலும்
வளராத
தொட்டிமரம்.

நடைபாதை
ஓரங்களில்
தள்ளித்தள்ளி
வைத்த மரம்..

இன்னுமொரு
மரமுண்டு...

நடக்கும்
பேசும்
தின்னும்
சாகும்..

தன்னை எரிக்கவும்
பிற
மரம் தேடும்..

மனிதரைப்போலவே
இருக்கும்..

மரம் தான்...






















வெள்ளி, 22 ஜனவரி, 2016

கர்ப்பம் யாதெனில்?

கவிதை சுமப்பதும்
கர்ப்பம் சுமப்பதும்
ஒன்றுதான்.

நெஞ்சுக்கூட்டுக்குள்
வார்த்தையின்
உயிரணுக்கள்
வந்துமோதும்
வேகத்தில் தான்
கவிதை
கர்ப்பம்
தரிக்கிறது.

படுக்கவிடாது..
உண்ணுதல்
குமட்டும்..
சித்தம்
வேறேதும்
பிடிக்காமல்
அமைதி வாந்தியெடுக்கும்.

பிஞ்சுக்கால்கள்
வைத்து
மூளையை
உதைக்கும்.

தாம்பத்யம்
சிற்றின்பமென்றால்,
இது
வார்த்தைகள்
இணையும்
பேரின்பம்

இதயம் கொள்ளும்
இந்த
எழுத்து நேசம்..
கொழுத்துத்திரியும்
கூடா நட்பல்ல..
செத்தபின்னும்
மறையா
சித்திரக்காதல்...

மொழிகள்
பார்ப்பதில்லை..
வலிகள்
வரையும்
வார்த்தை
ஓவியங்கள்..

நேசிப்பவர்
எங்கிருப்பினும்
வந்துவிடும்
கவிதைக் காதல்.

வயிறு
சுமந்து சரிவதாய்..
வார்த்தைகள்
திரண்டு
பிரசவமாகிறது
கவிதை..

ஆயுதப்பிரசவ
ஆபத்து
கவிதைக்கு
எப்போதும்
கிடையாது..

பெற்றுப்போட்ட
கவிதைக்கு
பெயரும்
வைக்கவேண்டும்
பிள்ளைக்குப்
போலவே..

எல்லாக் கவிதையும்
பொன்குஞ்சுகள்
தான்..
பெற்ற தாய்க்கு..

பொட்டுவைப்பதும்
பூச்சூட்டி
மகிழ்வதும்..

பார்ப்போர்,
படிப்போர்
அதன்
உச்சிமுகர்ந்து
முத்தம் ஒன்று
கொடுத்துவிட்டால்..

நித்தம்
கருத்தரித்து
தாயாக
தாவும்
மனசு..

உணவூட்டல்
போலவே..
கவிதைகளும்
பின்னூட்டத்தில்
வளரும்.

நூறேனும்
சொல்லலாம்
ஒற்றுமை..

வேற்றுமையும்
வேற்று
உவமையும்
உங்களுக்கிருந்தால்
சொல்லி
அனுப்புங்கள்..

இந்த
கவிதைக்
குழந்தையிடமே...

வியாழன், 21 ஜனவரி, 2016

தேடுங்கள்...தெரியும்..

என்
வரமொன்றைக்
காணவில்லை..

எனக்கு
உதவுங்கள்..

கண்களை மூடி
தேடிப்பாருங்கள்.

தூரத்தில்
ஒளிப்புள்ளியாய்
தெரியும்.
துரத்தி ஓடாதீர்கள்.

சில நேரம்
உங்கள்
அருகிலும்
திரியும்.

மூடி மறைக்கலாம்
என
முட்டாளாகாதீர்கள்
மூன்று
நொடிகள் போதும்..
முளைவெடித்து
கிளை பரப்பி
மரமாய்
மாறும்.


ஆறு

குளங்களென

அதை
தேடிப்பார்க்காதீர்கள்..

அது
எப்போதும்
சாகாது...

நல்ல வாசமென்று
நாசமாகாதீர்கள்
எந்த
வாசமும்
பிடிக்காமல்
போவீர்கள்.

அலைபேசி,
குறுஞ்செய்தி,
இணையவழி
விசாரிக்காதீர்கள்.
அதன்
தொடர்பு எல்லை
இன்னும்
அறுதியிட்டு
முடியவில்லை.

கடல் தாண்டிய
நண்பர்களும்
என்
கவலையில்
பங்கு கொள்ளலாம்.

களவு போனதுக்கு
கால்கள்
இருக்காது..
இறக்கைகள்
இருக்கும்.

விசாக்கள்
இல்லாத
வெளிநாட்டுப்பறவை
போல
உலாவித்திரியும்..
உற்றுப்பாருங்கள்
நிமிர்ந்தே
நடக்கும்.

கண்கள்
திறந்து மூடும்.
நாசிகள்
மூச்சும் விடும்.
அதன்
வாயருகில்
காது கொண்டு
கேளுங்கள்..

சில நேரம்
கவிதைகள்
சொல்லிக்
கொண்டிருக்கும்.

அது
எப்போதும்
ஒளியைச்
சிந்திக்
கொண்டிருக்கும்.

ஓராயிர
அடையாளம்
அதைப்பற்றிச்
சொல்லலாம்..
ஒருவேளை
அதைப்பார்த்தால்..

நான்
தேடுவதைச்
சொன்னாலும்....

அது குறித்து
கவிதை
எழுதுவதை
சொல்லாதீர்கள்....

செவ்வாய், 19 ஜனவரி, 2016

இதயத்தால் படியுங்கள்...

வாசிக்கும் முன்...
ஒரு சிறுகவிதை(?)யில் முடிந்த அந்த நூலின் விமர்சனம்..ஒரு உறுத்தலாகவே இருந்தது..
விரிவாய் சில உள்ளங்கள் கேட்டதாலும் ,உள்ளபடியே தேவையாய் இருந்ததாலும் முதன் முதலாய் ஒரு விமர்சனம்..
விமர்சனம் குறித்த உங்கள் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்...

பொதுவாய் ஜெயகாந்தன் படைப்புக்கள் தலைப்பிலேயே வாசிக்கத்தூண்டிவிடும் என்பார்கள்.

ஒரு நல்ல படைப்பின் தலைப்பென்பதே"நெருக்கப்பட்ட உள்ளடக்கம்"தான்.

நாலுபேர் நின்றாலும், நாற்பதாயிரம் பேர் உட்கார்ந்திருந்தாலும்,தமிழ்க்கோடி யாவும் அலைவரிசையில் பார்த்துக்கொண்டிருந்தாலும் வார்த்தை வசீகரத்தில் கட்டிப்போடும் மாயவித்தைக்காரர்.

 

35ஆண்டுக்கால கால ஆசிரியப்பணி,  தமிழகம் தாண்டி உலகமெல்லாம் தமிழுலாச்சென்று வாங்கிவந்த அனுபவங்களோடு, தான் வாசித்த ,யோசித்த சிந்தனைகளை பதினாறு அத்தியாயங்களில் பந்திவைத்துச்சென்றிருக்கிறார். 

வாசித்த நமக்குத்தான் மூடிவைக்க மனமில்லை.

 

எப்படியோ மூடியபின் எண்ணப்பறவை சிறகடித்துப்பறக்கிறது.

சில திரைப்படங்கள் தொடக்கத்தில் பெயர் போடும்போதே அலுக்கத்தொடங்கிவிடும்.

சில புத்தகங்களின் முன்னுரையும் அப்படி அமைந்துவிடுவதுண்டு.

உச்சநடிகரின் பெயர்வரும்போது அரங்கம் அதிரும் உற்சாக விசில் போல.. ஆட்டம் தொடங்கிவிடுகிறது முகவுரைகளில்..

மக்களின் படைப்பாளிகள் ச.தமிழ்ச்செல்வன்,மதுக்கூர் இராமலிங்கம் என
இருவர்.

தமிழோடே வாழும்
முனைவர்.பா.மதிவாணன்,செந்தலை.ந.கவுதமன் என  இருவராய் ஒரு தமிழ்நலக்கூட்டணி(?).

 

நூலின் ஆசிரியர் படைப்புகளையும் தாண்டி நேர்த்திகளுக்கு நேர்ந்து விடப்பட்டவர்.

ஒரு ஒற்றுப்புள்ளி எங்கேனும் குறையுமானால் முகம் சுருக்கி,உறக்கம் விலக்கி அந்தப் புள்ளிப்பொட்டை வைத்தால் தான் உறக்கம் வரும் அளவுக்கு வார்த்தைகளின் உளவாளி.

 

ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுத வந்துவிட்டு ஏதேதோ எழுதுவதால் நான் நுனிப்புல் மேய்ந்தவனாய் நினைத்து கடந்துபோகாதீர்கள்..அத்தியாயம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியத்தின் அல்லது பெரும் படைப்புக்கான வீரிய விதைகளின் கூட்டமாக இருக்கும் போது..

விதைநெல்லுக்கு நான் என்ன விலைவைத்துக்கூவ..?

 

வாசிப்பை மறந்துபோன ஒரு பாதிக்கூட்டத்திற்கு இந்த புத்தகத்தை வாசிக்கும் வரமளித்து பாவம் தீர்க்கலாம். 

என்னை உங்கள் பக்கங்கள் அனுமதிக்குமானால் ஒவ்வோரு அத்தியாயத்திற்கும் தனியே ஒரு புத்தகம் கேட்பேன்...

 

பெண்ணில் தொடங்கும் அத்தியாயங்களின் பிறப்பு உங்களுக்கும் புரியும்...

அவ்வை தொடங்கி அ.வெண்ணிலா ஊடாக.. 

அவர்கள் கனவுகள் விரிந்த கவிதைத்தோட்டத்திற்கு கரங்கள் இழுத்து நடத்திப்போகிறார்.

 

சிரிக்கும் பெண்பூக்கள் , ஒருபுறம் எரிக்கும் அவர்கள் கவிதைகள்...என அனல் தெறிக்கும் அவர்களின் அந்தப்புரத்தில் ஒரு பெண்ணாக இருந்தால் தான் எளிதில் ஊடுருவ முடியும்..

ஆணாயிருக்கும் இவரால் எப்படி? 

அன்பென்னும் ஒளிகொண்டு.இவர் இருளைப் பகலாக்கும் நிலா...

அதனால் சாத்தியமாயிருக்கக்கூடும்.

 

ஆதிப் பொதுவுடமைச் சமுதாயம் முதல் இன்றும் நம் கனவுகளில் ஒளிரும் சமத்துவச் சமுதாயம் வரை இவர் எழுதத்துணிந்த ஈடில்லாப் பெரும்பணியின் சிறு துண்டொன்றை சுவைக்கக்கொடுக்கிறார்..அத்தனை இனிப்பு..
பாரதி பின்தள்ளப்பட்ட போட்டி தெரியுமா உங்களுக்கு,

சரி ..

இரண்டாம் இடம் பிடித்த பாட்டு தெரியுமா?

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே"

விந்தை ..அத்தோடில்லை. 

முதல் பரிசுபெற்ற பெரும்புலவர் யார்?
செந்தமிழ் நாட்டை தோகடித்த வரிகள் யாது?
மறுக்கப்பட்ட மகா(?) உண்மை என்ன?
பதறித்தெரிக்கிறது உண்மையின் பரல்கள்.

செம்மொழி மாநாடு போன யாரேனும் அங்கு கம்பனைக்கண்டீர்களா?
இவர் பார்த்திருக்கிறார்.

மேலாண்மையின் கொலை என்றொரு கதையை  இவரின் விமர்சனக்கண்ணாடி பரிசோதனை செய்கிறது. இவரின் சோதனைக்கூடத்தில் எத்தனைக்கருவிகள்..?பாரதி,வ.வெ.சு, வீரமாமுனிவர்,வல்லிக்கண்ணன்,சி.சு.செல்லப்பா..அப்பப்பா...ஒரு கதைக்கு எத்தனை கதைகள்..?

வார்த்தைகளின் வீரியம் மட்டும் எழுத்துக்கும் பேச்சுக்கும் போதுமெனில் இங்கே ராசிபலன் எழுதுவோரும்,லேகியம் விற்போரும் பலபட்டம் பெற்றிருப்பார். 

இலைகளுக்கு மருந்தடிக்காமல் வேர்களுக்கு மருத்துவம் பார்க்கும் இவர் எல்லாப்பட்டங்களும் பெறும் நாள் தூரமில்லை.

 

க.நா.சு வின் விமர்சனக்கூடத்துள் நுழைகிறார்... வேண்டியது கிடைக்காமல் , சிக்கியஎழுத்துக்களை பிரித்தெடுக்கிறார்.
ஆங்கிலக்கண்ணாடி கொண்டு அவர் தீட்டிய தமிழ் வசைகளுக்கு
மருந்து போடுகிறார்..

 

ஜெயகாந்தன் சபைக்குள்ளும் புகையாய் படர்கிறார்.

அந்த ராஜசபையில் அவரின் பாத்திரங்களுடனே ஒரு ஆனந்த நர்த்தனம் ஆடித்தீர்க்கிறார்..
ஒரு சிங்கத்தின் பிடறியில் விரல்கள் கொண்டு நீவி அதன் பரிணாமம் சொல்கிறார் நம் காதோடு..
சித்தாளில் தொடங்கிய உற்சவ வேள்வி ஜெயஜெய சங்கராவாய் முடியும் ஹோம வரலாறு வாசிக்க மட்டுமல்ல..

அவரின் சபை தாண்டியும் ஆடவேண்டிய ஆட்டம் தான்...

ஏனோ,அடக்கம் அமரருள் உய்த்திருக்கிறது.

 எனக்கொரு ஆசை..
இவர் ஆங்காங்கே அள்ளித்தெளித்திருக்கும் கவிதைகள் பொறுக்கி ஒரு நூலில் கட்டினால் ஆகச்சிறந்த ஒரு கவிதாமாலை கிடைக்கும்.

 எல்லாம் இருக்கும் திருக்குறளில் தமிழ் இல்லை, தமிழ்நாடும் இல்லை..

திடுக்கிடும் திரைக்கதைக்கு சற்றும் குறைவில்லை.. இவர் விரல் கொடுத்த குரலின் வினாக்கள்.

கண்ணதாசன் தோளோடு கைபோட்டு கவிதைகள் பேசி நடக்கிறார்.

உணர்ச்சிக்கவிதைகளில் வரும் மயிருக்கும் மரியாதை செய்கிறார்.
ஆகாசம் விரியும் பார்வையின் கார்வைகள் பேராசான் ஜீவாவின் வார்த்தைகளையும் பேசவைக்கிறது.

தமிழென்னும் அணையில்லாப்பெருநதி இணையவெளிகளில் பாய்ந்தோட ஒரு கால்வாய் எடுக்கிறார்..

விரியும் வலைப்பூக்களில் வீசப்போகும் வாசத்திற்காய்  தவமியற்றி சொல்லும் ஒரு வரி போதும்...

" மெல்லத்தமிழினி வாழும்"

புத்தகக்கோட்டையின் கொத்தளம் யாவிலும்
தலைப்புக்கொடிகள் செம்மாந்து பறக்கின்றன..

"காலத்தை மீறிய கவிதைகள்"

"திருக்குறளில் பாடபேதம்"

"மரபுக்கவிதை எனும் மகாநதி வற்றிவிட்டதா?"

"காலங்களில் அவன் வசந்தம்"

"கம்பனும் கார்ல்மார்க்சும்"

பதினாறு கொடிகள்
பட்டொளிவீசிப்பறக்கும் போது..

தற்குறிப்பேற்ற அணி கண்களில் விரிகிறது.

சரி..சரி.. எல்லாமே நான் சொல்லிவிட்டால் நீங்கள் என்ன படிக்கப்போகின்றீர்கள்?

உங்கள் வாழ்க்கைப்புத்தகம் வாசித்துத்தீரும் முன் இந்தப்புத்தகத்தை வாசித்துவிடுங்கள்.

 யாரெல்லாம் வாசிக்கலாம்?

எழுத்துக்கூட்டி வாசிப்பவர் தொடங்கி

தமிழ் எழுத்து புரியும் எல்லாரும் வாசிக்கலாம்..

 தகுதியறிந்து பரிசில் அறிவித்த திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்திற்கு நாமும் வாழ்த்துச் சொல்லலாம்!

விமர்சனத்தை இப்படி முடிக்கலாமா..?

நூலின் ஒரு பகுதியாய் கமபனையும்,கார்ல் மார்க்ஸ்சையும் ஒரு கோட்டில் நிறுத்துகிறார்.

வதம் முடிந்து பதவியேற்ற ராமன் அனுமனை.  தழுவிக்கொள் என்றதும்...  எழுதி முடித்த மார்க்ஸ் தன் நண்பன் ஏங்கல்ஸை.. என்னைத்தழுவிக்கொள் என்றதும்,,

அந்த நேர்கோட்டில் மிக நெருக்கமாய் நிகழும் அதிசயங்கள்..

 

நான் ஒன்று சொல்வேன்..

அய்யா..

இன்னும் எழுதுங்கள்..

நானும் தழுவ வேண்டும்.

 - மீரா.செல்வக்குமார்


நூல் – “கம்பன் தமிழும் கணினித்தமிழும்”

ஆசிரியர் -நா.முத்துநிலவன்

வெளியீடு, அகரம் தஞ்சை.

தொலைபேசி – 04362 -239289

பக்கம்-216, விலை ரூ.150

ஆத்தா...நீ பாஸாயிட்ட...

தொடர்பு
எல்லைக்குள்
தான்
இருக்கின்றாள்.

தொட்டு
அவள்
வரி
தடவ
விட்டு
என்னை..
ஓடுகின்றாள்.

ஏனென்றும்
தெரியாமல்
நான்
புலம்ப..

ஆன்லயனில்
ஆடுகிறாள்
சொற் சிலம்பு..

பிரிவுத்துயர்க்கடலில்
நான்
தவிக்க..
தூரத்து
மணிவிளக்கை
கண்களுக்குள்
ஒளிக்கின்றாள்.

ஆலயம்
நான்
அடியெடுத்து
வைக்கும்
வேளை..
அந்த
அழகுத்திருக்கோயில்
அவசரமாய்
மூடுகிறாள்..

காதலுண்டு
நானறிவேன்
கர்வக்காரி...
கண்களுக்குள்.

நான்
சாதல்கண்டும்
சிரித்தா போவாள்...?

அடிப்போடி
நீ
வென்றுவிட்டாய்...
இந்த
சில
நாளில்
என்னைக்
கொன்றுவிட்டாய்..

எழுத்தறிந்த
நாள்முதலாய்
எடுத்தெறிந்த
காதல்கவி
துடித்தெழுத
வைத்துவிட்டாய்...

உலைவாய்,
ஊர்வாய்
இரண்டும்
மூடலாம்..
உன்
வாய்
மூடல்
பாவம்..

படுத்தெழும்
விழிகள்
உன்
வரி
தேடும்..

பாதகத்தி..
என்
தவிப்பு
உனை
பனிப்புகையாய்
மூடும்..

கூச்சம்
எனைத்தின்ன
கூச்சல்
தவிர்க்கின்றேன்..

எனை
ஆட்டுவிக்கும்..
உயிர்ப்பூவே..

காட்டடி
உன்
திருமுகத்தை..

உயிர்க்கின்றேன்..








திங்கள், 18 ஜனவரி, 2016

இப்பதான் காதலிக்கிறேன்...

துளைகளை
மூடி
உறையிட்டிருக்கின்றாள்
கச்சேரி
முடிந்ததென.

ஊசி
இடைவெளியில்
காற்றுரச
தீப்பிடிக்கும்
தேவகானம்.

எத்தனை
எழுதி
என்ன..
சிறு
புன்னகையில்
தோற்கடிப்பாள்..

எத்தனையோ
சொல்லுகின்றேன்.
பித்தனென்று
ஒதுங்குகிறாள்.

ஊர்க்குருவி
நான்
என்பாள்..
என்
மனச்சிறகின்
வேகம்
அறியாதாள்.

சுமந்து
திரிகிறேன்
தலைமீது..

விலையில்லா
என் காதல்.

சிலைபோலக்
கல்லானாள்.
மண்ணானேன்.

என்
வார்த்தை
வங்கிக்கு
ஞாயிறும்
விடுப்பு இல்லை..

சேர்த்த கவி
சொல்லியழ
வேறு எங்கும்
கிளைகள்
இல்லை.

தொடர்பு
எல்லைக்குள்
தொடர்பின்றி
மறைகிறாள்.

வருவாள்
ஒரு
நாளிலென
கவிதைகள்
கருத்தரித்திருக்கிறேன்

கல்லாய்
சமைந்திருக்கிறேன்.
அந்தப்
பொல்லாத
பேரழகி
கால்
வைக்கவேண்டாம்

ஒரு
ஹாய்
சொன்னால்
போதும்.


சனி, 16 ஜனவரி, 2016

கண்ணாமூச்சி ஏனடி?


இரவுப்பூவே.
ஏன்
மலர்ந்தாய்?

உணர்வு
உப்புகள்
குறையும்
என்
வாழ்க்கையில்
அப்படி
என்ன
பரிகாசம்?
வாசம்
காட்டி
மறைந்து
கொள்கிறாய்?

மலைதாண்டி
வரும்
நிலவே..
உன்
வெளிச்ச
விசாரணைகளுக்காய்
நான்
குறுகி
நிற்கிறேன்..
நீயோ
மேகங்களுக்குள்
மறைந்து
விளையாட்டு
காட்டுகின்றாய்.

மோகங்கள்
தொலைத்து
நான்
பரதேசியானேன்..

என்
வண்ணம்கூட்டி
நீ
உபதேசியாகிறாய்.

வார்த்தைகள்
பிடித்து
விளையாடும்
சிறுபிள்ளை
நான்..

பூக்களில்
தாவினால்
பிடித்துக்கொள்ளலாம்
பூவே
தாண்டினால்?

நடந்து
கால்
சோர்ந்து
தனித்திருப்பேன்..
நீ
வாழ்வின்
வழிசொல்லி
ஓடவைக்கிறாய்.

தவழத்
தொடங்குகிறேன்.

நடைபழக
விரல் கொடு.

ஓடிடும்
என்
பாதைக்கு
கோடிடு..

உயிரோடிருந்தால்
ஒரு
நாள்
பார்ப்பேன்..

இறைவன்
எனக்கொரு
வரம்
தந்தால்
இதைத்தான்
கேட்பேன்...













வியாழன், 14 ஜனவரி, 2016

வருகிறேன்....

வீடெனக்கு
புதுக்கோட்டை.

அவளிருப்பாள்
சென்னைப்
பேட்டை..

தொழில்
இருவர்க்கு
இருந்தால்
தான்
தொல்லையில்லை
வாடகைக்கு.

வருந்தி
உழைத்ததெல்லாம்
வாங்குகிறார்
பஸ்காரர்.

பிள்ளைக்கு
பரிட்சை என்றால்
அலைபேசி
அறிவுரைகள்.

யாருக்கும்
காய்ச்சலென்றால்
வாட்ஸ் அப்பில்
மாத்திரைகள்.

சென்னையில்
மழைபெய்தால்
குளிரெடுக்கும்
உள்ளுக்குள்.

வெளிநாட்டு
வேலை தரும்
வேதனைக்கும்
குறைச்சலில்லை
வெளியூர்
வேலை.

கூடி
இரையெடுத்தலின்றி
கூடுதலாய்
ஆசையில்லை.

பொங்கல்
விடுப்பெனக்கு..

நீயோ
புதுக்கோட்டை
கிளம்பிவிட்டாய்.

விசும்பாதே..
என் வீட்டம்மா..
விதியிருந்தால்
விழுப்புரத்து
மோட்டல் ஒன்றில்
சந்தித்து
வாழ்த்திக்கொள்வோம்.




புதன், 13 ஜனவரி, 2016

வெறுந்தரைக் கனவு...


தைலம்
ஒருபெட்டி.
தாத்தாவுக்கு
பச்சை
இடைவார்.

அம்மாவுக்கு
மின் அடுப்பு
தங்கைக்கு
வாசம் வீசும்
ஜப்பான் சேலை
மாமனுக்கு
மார்ட்டீன் சட்டை.

தம்பிக்கு
சிங்கு கடை
செல் ஒன்று.

கண்ணாடி சூட்கேஸ்
கம்பளி,

கருவில்
விட்டுவந்த
பிள்ளை
விளையாட
சிறு கார்.

கவனமாய்
ஒளிக்கவேண்டும்
கப் வைத்த
உள்பாடி
அவளுக்கு,

கரையும் மிட்டாய்கள்,

கைகளில்
இரண்டு கண்ணாடிக்குடுவைகள்.

ஆண்டுகள்
பல
தொலைத்து
வாங்கியது
இத்தனைதான்.

எல்லார்க்கும்
வாங்கிய
நான்
மீண்டும்
விசா வாங்க
மறந்துவிட்டேன்.

வீட்டுக்கடனிருக்கும்,
விட்டுவந்த
பகையிருக்கும்,

இருக்கட்டும்..

அம்மா
உன்
கைச்சோறும்,

அப்பா எனும்
பிள்ளை..

விட்டென்னைத்
துரத்தாதீர்.

வெறுந்தரையில்
தூங்கவேண்டும்.

வீடு வந்து
சேரவேண்டும்...

















திங்கள், 11 ஜனவரி, 2016

நீங்கள் தான் சொல்லனும்...

காலுடைந்த
கட்டிலொன்று,
கையொன்றில்லா
நாற்காலி.

சிலந்திகள்
கட்டிய
நூலாடை..

ஒற்றையாணியில்
தொங்கும்
நாதாங்கி.

மண்சுவர்
விரிசலில்
மறையத்தொடங்கும்
செங்காவி.

கோழிகள்
கிளறிய
பஞ்சாரம்.

மாடுகட்டி
நின்ற தொழு..

ஆட்டுக்கு
இலையறுத்த
சிற்றரிவாள்.

குதிர் இருந்த
இடத்தில்
கரையான் வீடு.

வனமாய்த்
தெரியும்
குப்பைமேனிச்செடிகள்

யாரும்
வைக்கவில்லையாம்
வாசலில்
ஒரு
கருவேல மரம்.

குதிரையும்
இல்லை..
அரிவாளும்
தொலைந்த
கோபக்கார
குலசாமி.

என் உச்சி
தடவுகிறார்
உள்ளூரின்
வயதான
பங்காளி.

என் தாத்தாவின்
அப்பாக்கள்
வாழ்ந்த
இடமிதுவே..

தரை விழுந்து
வீடுவந்தேன்...

புலம்பெயர்
அகதியென்றால்.
யாரென்கிறாள்
சின்னவள்.

யாரைச்சொல்ல.?




வெள்ளி, 1 ஜனவரி, 2016

என்னைக்கட்டிய நூல்

புத்தாண்டில்
ஒரு
புத்தகம்
சுமந்து
வந்திருக்கிறேன்

இதைவிடவா
வேறெதுவும்
பரிசு
இருக்கப்போகிறது?

இருநூற்றுப்பதினாறு
பக்கங்களில்
ஒரு
ஞானநதி
பிரவாகம்
எடுத்திருக்கிறது.

பதினாறு
அத்தியாயங்களில்
ஒரு
பகீரதப்பிரயத்தனம்
நடந்திருக்கிறது.

பெண்கவிகளில்
கசியத்தொடங்கிய
உண்மை
கணினியில்
கரைகடந்திருக்கிறது.

கம்பனைத்தழுவிய
கைகள்
கார்ல்மார்க்ஸின்
கரங்களை
குலுக்கியிருக்கிறது.

கா.நா.சு
எழுத்துக்களின்
அழுக்கெடுத்த
விரல்கள்
கண்ணதாசனுக்கு
சொடுக்கெடுத்திருக்கிறது

உயிராம்
குறளின்
திறனறிந்த
சிந்தை
மயிர் விளைந்த
கவிகளுக்கும்
பூச்சூட்டி
ரசிக்கிறது.

ஜெயகாந்தனை
ஜெயகாந்தனின்
படைப்புகளே
பேசும் அதிசயம்.
அவர் எழுத்தின்
போக்கை
இப்படி
யாரும்
இதுவரை
சொன்னதில்லை.

நெட்டுயிர்க்கிறேன்.

நல்ல எழுத்தாளர்
ஆழ்ந்த
சிந்தனையாளர்

நகைச்சுவை
பேச்சாளர்
எனும்
மாயத்திரை
விலக்கி...

எழுத வேண்டியது
இன்னுமிருக்கிறது.

முடியும்....

அவர்
நா.முத்துநிலவன்.

என்னைக்கட்டிய
நூல்

கம்பன் தமிழும்
கணினித்தமிழும்.