ஞாயிறு, 22 மே, 2016

மானுடம் வென்றதாம்...

வீட்டுக்குள்
நான்கு
மனைவிகள்..
தப்பில்லை...

காட்டுக்கும்
பெண்ணை
அழைத்துப்போனான்
தப்பில்லை..

விட்டுவிட்டு
வேட்டைக்குப்
போனான்
தப்பில்லை..

வாலில்
தீ கட்டி
தீவெல்லாம்
சுட்டுவைத்தான்
தப்பில்லை..

அண்ணன் விட்டு
தம்பியைத்
தழுவிக்கொண்டான்
தப்பில்லை.

தீக்குள்
தள்ளி
கற்பளவு
சோதித்தான்
தப்பில்லை..

செருப்பாட்சி
நடந்ததும்...
குரங்காட்சி
கொன்றதும்
தப்பேயில்லை...

மானுடம்
வென்றதாம்

சரியா....?

தெரியவில்லை





எரியுதே....

ஒற்றைச்சிலம்பை
விற்கக்
கொடுத்துவிட்டு..

அப்படியென்ன
ஆவேசம்
அவளுக்கு...

உடைத்துவிற்காமல்
மூடியே
விலைசொன்னது
எப்படி
நல்ல வியாபாரம்?

அவளுக்கும்
கொஞ்சம்
ஆசை
இருந்திருக்கிறது...

அவன்
மீசைக்குள்ளும்
வேசமிருந்திருக்கிறது..

கணக்கு
தப்பானதால்
செத்தவனுக்கு
வாழவும்
தெரியவில்லை...

என்னடா
செஞ்சோம்.

நீங்கள்
வைத்த
தீ
மட்டும்
இன்னும்
எரிகிறது...







வெள்ளி, 20 மே, 2016

எங்களையே சொல்றீங்களே....

உங்கள்
பட்டாசுகளென
சிதறி
எம்
வாக்குகள்.

உம்
தலைவர் சிலை
மாலைகளென
காயத்தொடங்குகிறது
எம்
கனவுகள்.

ஆரவாரக்கூச்சல்களில்
அழுந்திக்கிடக்கிறது
அழுகை.

தேடித்தேடிச்
சொல்லும்
காரணங்களில்
எம்மையே
குறை சொல்வீர்..

பணத்துக்கு
விலைபோனதாய்
பதறுகிறீர்கள்..
நீங்கள்
தியாகத்
திருவுருவங்கள்?

மாறவே போவதில்லை
நாங்களென
உங்கள்
சர்ப்ப சாபங்கள்
கொத்தித்தீர்க்கிறது
எங்களை.

நீங்கள்
முற்றிலும்
மாறிவிட்டவர்கள்?

உங்கள்
மாற்றங்கள்
பற்றிய
கனவுகளை
உள்வாங்க
வில்லையென
உருகுகின்றீர்கள்..

தலைசிதறிய
தண்டவாளங்களை,
எரிந்துபோன
குடிசைகளை

மறக்கவும்
மாற்றவும்
முடியவில்லையே
இன்னும்..

உங்களுக்குத்தான்
பதவி
தேர்தல்
கூட்டணி
எல்லாம்..

எமக்கு
எப்போதும்
பிரிவதில்லை
பட்டினி
வயிறு.

சரி தலைவர்களே!
நீங்கள்
நன்றாக
கழுவக்
கற்றுக்கொண்டு
வாருங்கள்..

எங்கள்
கண்ணீர் துடைக்க...



செவ்வாய், 17 மே, 2016

வாழ்த்துகளுடன்,சில வேண்டுதல்கள்..

அன்பின் சக்திக்கு,

வெல்பவருக்கு நம் வாழ்த்துகளை முன்கூட்டியே அனுப்பிவிடுவோம்.

வெல்பவர்களே!
இந்த தேர்தல்கால உத்திகள் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.

மனசாட்சி இல்லாத வாக்குறுதிகள்,கூட்டணிக்காய் காத்துக்கிடந்தது,வாக்கு கேட்கப்போன இடங்களில் கிடைத்த மரியாதைகள்,விழுந்தெழுந்த கால்கள்,இணையவெளிகளில் நீங்கள் விமர்சிக்கப்பட்ட விதம்.

எல்லாவற்றிலும் மேலாக இந்த வெயிலில் வாகனங்களில் நின்றுகொண்டு வாக்குகள் கேட்ட கொடூரம்.
உங்கள் எதிரிகளுக்கும் இனி வரவேண்டாம்.

நாளுக்குநாள் கிளம்பிய வதந்திகள்,காணொளிகள் யாவும் கற்காலத்திற்கு திரும்புகிறோமோ என்ற அச்சத்தை கொடுத்துவிட்டது.

ஒன்றை உணருங்கள்.
மக்கள் நீங்கள் நினைப்பதுபோல் முட்டாள்களில்லை.
மகச்சரியாக முடிவெடுப்பார்கள்.
"அன்பார்ந்த வாக்காளப்
பெருமக்களே" இனியும் எடுபடாது.

*உங்கள் வென்ற வேட்பாளர்களில் துறை தெரிந்தவர்களை அமைச்சராக்குங்கள்.

*மிக அன்புடன் அவர்களின் ஆலாசனைகளுக்கு செவிமடுங்கள்.

*தமிழ்நாடு என்றால் கேவலமாக நினைக்கும் மற்ற மாநில,வெளிநாட்டு நண்பர்களுக்கும் உங்கள் செய்கைகள் மூலம் பதில் கொடுங்கள்.

*அரசின் எல்லாச் செயல்பாடுகளையும் வெளிப்படையாக்குங்கள்.

*கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகளை தெளிவாகவும்,விரைவாகவும் எடுங்கள்.

*லஞ்சம் என்ற வார்த்தைக்கு முழுக்குப் போடுங்கள்.

*மீண்டுமொருமுறை பெருமழை வந்தால், என்ற பயத்துடன் தயாராகுங்கள்.

*ஊழலற்ற செயல்பாடுகளை ஆதரியுங்கள்.

*மேசை தட்டும் கலாச்சாரம் தவிர்த்து கலந்துரையாடுங்கள்.

*எதிர்க்கட்சிகள் ஒன்றும் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை,சட்டமன்றம் தாண்டியும் கைகுலுக்கிக்கொள்ளுங்கள்.

*அரசியல் என்பது புனிதமான மக்கள் பணி என்பதை மக்கள் உணரும் அளவில் இருக்கட்டும் உங்கள் சேவை.

*இலவசங்களைத் த்கவிர்க்கப்பாருங்கள்.

*விளக்குவைத்த கார்களில் ஏறிவிடுவதாலேயே உங்கள் தலையைச்சுற்றி கற்பனை செய்யும் ஒளிவட்டத்திலிருந்து மீளுங்கள்.

இதுவரை என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை.
தமிழகம் எல்லாவற்றையும் தாங்கும்.

இனியேனும் வாக்களிக்கும் மக்களை மனதில் வையுங்கள்.

உங்கள் திட்டங்கள் யாவும் மக்களுக்காக மட்டும் இருக்கட்டும்.

ஊழலற்ற நிர்வாகத்தை உங்களால் தரமுடியும்.

இந்த ஆட்சிகாலத்தை மக்களுக்காகவே நடத்திவிட்டு.நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்தபடியே வாக்கு கேட்கலாம்..

மக்கள் இன்னொரு முறை காமராஜரை தோற்கடிக்க மாட்டார்கள்.

நீயென்ன சொல்வது? நாங்களென்ன கேட்பது எனில்...
நல்லது..

அடுத்தமுறை இன்னும் வெயில் அதிகமாய் இருக்கும்.விலைவாசியும் உயர்ந்திருக்கும்.

வாழ்த்துகள்.

அன்புடன்.
செல்வக்குமார்.

சனி, 14 மே, 2016

செய்வீங்களா....செய்வீங்களா

ஜாதகம் கொடுக்க வேண்டும்.
ஜாதிபலம் சொல்ல வேண்டும்..

ஒருநாள் சிறை சென்ற செய்தித்தாள்
இணைக்க வேண்டும்.

படித்ததாய் பட்டம் வேண்டும்.
படிகளுக்கும்
பணிதல் வேண்டும்.

வீதியின் ஓர் சேதிக்கும்
ஓடோடி விரைய வேண்டும்.

மாற்றுக்கட்சிக்கெல்லாம்
மறுப்பு சொல்லி
பேச வேண்டும்.

கூட்டணிக்கு போய்விடாமல்
சொந்த ஊரே கிடைக்க வேண்டும்.

மண்சோறு தின்ன வேண்டும்.
மயிர் மழித்து மகிழ வேண்டும்.

வட்டம் மாவட்டம்
மறுக்காமல் இருக்க வேண்டும்.

திட்டமிட்டு யார்கவிழ்ப்பார்
தெரிந்தாலும்
சிரிக்க வேண்டும்.

கூன் வளைந்து வணங்க வேண்டும்.
கும்பிட்டே உறங்க வேண்டும்.

தலைமைக்கும்
தனக்கும் சேர்த்து
விருப்பமனு
கொடுக்க வேண்டும்.

ஓட்டுனரோ
கூட்டுனரோ
உள்ளிருக்கும்
மனிதரென்றால்
உறவு சொல்லி பழக வேண்டும்.

ஒற்றறியும் திறனும் வேண்டும்.

செய்யாத செயலென்றால்
எதிர்க்கட்சி இழுக்க வேண்டும்.

செய்தித்தாள் திட்டிவிட்டால்
தீயிட்டுக்கொளுத்த வேண்டும்.

இணையத்தின் தொடர்பும் வேண்டும்.

முகம் சுழிக்கும் பகடிக்கும்
அகம் மகிழ்ந்து சிரிக்க வேண்டும்.

நள்ளிரவும் பேச வேண்டும்.
நாற்புறமும் பார்க்க வேண்டும்.

மாறுமொரு பட்டியலில்
பெயர் தங்கும் வரம் வேண்டும்.

நின்றுவிட்டால் அழவேண்டும்..
நிழல் கூட தொழல் வேண்டும்.

வீதிக்கட்சியையும்
விலை கொடுத்து வாங்க வேண்டும்..

வாக்கு விற்கும் விலையறிந்து பக்குவமாய் வாங்கவேண்டும்.

சாமி போகா வீதிக்கும்
சத்தியங்கள் தர வேண்டும்.

வெளியூரில் ஆளிருந்தால் விலை கொஞ்சம் அதிகமாகும்.

செத்தவர் ஓட்டுக்கும்
சிலநேரம் விலையிருக்கும்.

வாக்கெண்ணி முடியும் வரை வயிறெரியும் 
தாங்கவேண்டும்..

ஆள்வதற்கா.
எதிர்ப்பதற்கா,
மந்திரியா..

மனக்குரங்கை
கட்ட வேண்டும்.

நம்மில் ஒருவர் தான்
இத்தனையும்
செய்கிறார்.

நல்லவர்க்கு
வாக்களிக்கும்
ஒற்றை வேலை
விட்டுவிட்டு..

அழுது என்ன?

புலம்பி என்ன?





















சனி, 7 மே, 2016

இவர்களாலும்...

அன்பின் சக்திக்கு,

ஆற்றமுடியாமல் அங்கங்கே விட்டெறிந்த வரிகள் பலரால் வாசிக்கப்பட்டதும்,
நேசிக்கப்பட்டதும் அறிகிறேன்.

அன்பு நண்பர் மதுரைத்தமிழன் அவற்றை ஒரு பதிவாகவே எழுதி ஊக்கப்படுத்திவிட்டார்.

அது வரிகளின் வலிமையல்ல..அறிவேன்...
வலி தான்.

ஒவ்வொருவருக்கும் விடியலில் கவலைகளும் தான் கண் விழிக்கின்றன. அதையும் தாண்டி யோசிக்கும் போதுதான் மலைப்பாய் இருக்கிறது செய்திகள்.

இந்திய நாட்டின் தேர்தல் அமைப்பு உலகின் முன்னோடியாய் இருக்கிறது..மகிழ்ச்சி.

தேர்தல் காலங்களில் அத்தனை நடைமுறைகளும் பாரபட்சமின்றி நிகழ்கின்றன.
பணப்போக்குவரத்தை
கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாய் கவனிக்கிறார்களாம்.

அங்கே ஐந்து கோடி,இங்கே எட்டு கோடி என்கிறார்கள்.

ஆஹா..புல்லரிக்கிறது அதிகாரிகளே...

நீங்கள் பதவிக்கு வந்து ஒருசில மாதங்கள் தான் ஆகிறதா?
அல்லது அவர்களிடம் இப்போது தான் பணம் வந்து சேர்ந்ததா?

என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இத்தனை நாளாய்?

பணப்போக்குவரத்தை கண்காணிக்கக்கூடாதென உங்கள் கைகளை யாரேனும் கட்டிப்போட்டிருந்தார்களா?

வியப்பாய் இருக்கிறது உங்கள் வேலையின் ரகசியம்...

ஒன்று நிச்சயம் சக்தி!

இந்த நாடு கெட்டது அரசியல்வாதிகளால் மட்டுமல்ல.
எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கும்,வாங்கும் ஊதியத்துக்கும் மாறாக, மனிதாபிமானமுமற்ற அதிகாரிகளாலும் தான் கெட்டு குட்டிச்சுவராய்ப்போனது.

அரசியல் தலையீடென காரணம் சொல்வார்கள்.

ஊழலுக்கு துணைபோக மாட்டேன் என இவர்கள் உறுதியாய் நின்றால் எத்தனை பேரை கொன்றுவிடுவார்கள் அரசியல்வாதிகள்?

அப்படி நேர்மையான அதிகாரிகளும் உங்களிடமே இல்லாமலில்லை...

காமராஜர் கண்ட கனவு மதிய உணவு என்றாலும்...நெ.து சுந்தரவடிவேல் என்னும் அதிகாரியின் திட்டமிடலே அதன் சாத்தியம்....
கட்டிமுடியாத திரையரங்கத்திற்கு உரிமம் தராத பசுபதி என்னும் ஆட்சியர் இங்கேதான் இருந்தார்...
இவ்வளவு ஏன் சகாயம் என்னும் சக அதிகாரியை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.

சாலைகள் பல்லிளிப்பதாய் அர்சியல்வாதிகளை சாடுகிறோம்..
சரியாயிருக்கிறது என சான்றளித்த அதிகாரியை என்ன கேட்கப்போகிறோம்.

கடந்த வார நாளிதழ்களில் தமிழகத்தின் பல ஆட்சியாளர்கள்,காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கை என்கிறார்கள்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும் காரணம் என்னவாயிருக்கும்..

ஒருதலையான செயல்பாடு,அப்படி ஒரு சந்தேகம்,அல்லது செயல்பாடற்ற தன்மை என இவற்றில் ஒன்றாய் இருக்கலாம்.

ஒரு மாநிலத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்களா?
சந்தேகத்துக்கு உரியவரெனில் இவர்கள் கையில்தான் இத்தனை நாள் அதிகாரம் இருந்ததா?
தேர்தலுக்குப்பின் மீண்டும் வந்துவிடுவார்களே அது சரியா?
செயல்பாடற்றவரெனில் எதற்காக வேலையில் வைத்திருக்க வேண்டும்?

அரசியல்வாதிகளைத் திட்டுகிறோம்.
வாக்குகள் இருக்கிறது அவர்களை மாற்ற..

இந்த அதிகாரிகளின் அதிகபட்ச தண்டனை என்ன தெரியுமா?
இடமாறுதல்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல..இந்த தேசத்தின் சாபம்..

படித்த ,மோசமான அறிவுள்ள,சட்டத்தின் இடுக்குகளை சரியாகத்தெரிந்து சாதிக்கிற,
அரசியல்வாதிகளுக்கு சொல்லிக்கொடுத்து தூண்டுகிற இவர்களும் தான்.

மாற வேண்டும் சக்தி..

"தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா..."

ஆனாலும்,

"திருடராய்ப் பார்த்து
திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது"

அன்புடன்,
செல்வக்குமார்.

செவ்வாய், 3 மே, 2016

ஒரு வங்கிக் கனவு..

அன்பின் சக்திக்கு,

தமிழக வங்கிகளின் உள்ளே சென்றுவிட்டு வரும்போது பணம் அல்லது தன்மானம் இவற்றில் ஒன்றை கட்டாயம் விட்டு வருகிறோம்.

குறிப்பாய் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளராய் நாம் படும் இன்னல்கள் இன்னொரு சுதந்திரப்போராட்டம் தூண்டுபவை.

இவை இப்போது என்பதில்லை.
கி.ஆ.பெ.விஸ்வநாதம் ஒரு தடவை வங்கியில் நின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் அவற்றோடு விவாகரத்து வாங்கிய தொல் வரலாறு கொண்டது.

அப்படி ஒன்றும் வங்கிகள் நீதிநெறிப்படி உயர்ந்தோர் தாழ்ந்தோர் பார்க்காமல் செயல்படுவதுமில்லை.
கல்விக்கடனுக்காய் பணம் பெற்றவர் புகைப்படங்களை பொதுவில் வைத்தும்,
மல்லையாக்களோடு கைகுலுக்கியதில் நாற்றமெடுத்துக்கிடப்பதை நாடும் அறியும்.

யுரேகா யுரேகா என யோசனை தட்டிவிட்டுச்சென்றது.

இந்த தேர்தல் கால சிறப்பு விற்பனையில் சில கடன்களின் தள்ளுபடி தவிர வங்கிச்சேவைகள் குறித்த எதுவும் இல்லை..
ஒருவேளை அடுத்த தேர்தலுக்கு இருக்கலாம்.

யோசனை ஒன்று..

டாஸ்மாக் நடத்தும் அரசு ஏன் ஒரு வங்கி நடத்தக்கூடாது?

தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்து அதிகம் இருப்பது வங்கிகள் தான்.

பக்கத்து மாநிலம் தொடங்கி வெளிநாட்டுக்காரன் வரை வலையை விரித்து அள்ளிக்கொள்கிறான் வங்கிகளைத்திறந்து.

முழுக்க முழுக்க தமிழக அரசின் சொத்தாக நமக்கென ஒரு வங்கி இருந்தால் எப்படி இருக்கும்.?

அரசால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் நடத்தப்படுமானால் அது வரமாய் இருக்கும்.

ஆரம்பத்தொகை இல்லாமல் தமிழ்நாட்டின் அனைவருக்கும் கட்டாய புதுக்கணக்கு தொடங்க வேண்டும்.

தமிழகத்தின் எல்லாப்பணப் பரிமாற்றங்களும் அந்த வங்கி மூலமே நடத்தவேண்டும்.
அரசுத்துறையின் பணியாளர் சம்பளம் முதல் சாதாரணமானவனின் மான்யம் வரை சுய உதவிக்குழு,கல்விக்கடனென அதன் மூலமே நிகழ வேண்டும்.

தமிழகம் தாண்டி தமிழன் எங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெல்லாம் கிளைகள் வேண்டும்.

அதற்காக வங்கிகளின் நடைமுறையிலிருந்து சலுகைகளை எதிர்பார்க்கவில்லை.

அபராதம்,வட்டி,கமிஷன் என மற்ற வங்கிகளுக்கு அழும் தொகை அரசுக்கேனும் செல்கிறதே என்ற சின்ன ஆறுதலாவது கிடைக்கும்.

தமிழ்நாட்டில் வங்கி திறந்த எவனும் நட்டப்பட்டு மூடிவிட்டு போய்விடவில்லை.

சாராயத்தொழிலுக்கு வங்கித்தொழில் மோசமுமில்லை.

அரசின் வங்கியாக அது இருக்குமெனில் கருவூலத்துக்கும்,வங்கிக்கும் அலையும் அலுவலர்களின் சுமை குறையும்.

பத்திரப்பதிவு,மற்ற அரசுக்கட்டணங்கள் யாவும் இங்கேயே செலுத்துவதன் மூலம் இன்னொரு இடைத்தரகனாய் மற்றொரு வங்கி தேவையில்லை.

தமிழகத்தின் பஞ்சாயத்துக்கு ஒரு வங்கி என்றாலும் ஒரு வங்கிக்கு 10 பேர் என்றாலும் அத்தனை வேலைவாய்ப்பு..

நம்முடைய பணத்தால் வயிறுவளர்க்கும் மற்ற வங்கிகளின் சேவை கொஞ்சம் உருப்படலாம்.

வங்கி ஆரம்பிப்பதும்,நிர்வகிப்பதும் சுலபமான நடைமுறையல்ல..
தெரியும்...
ஆனால் அரசுக்கு அது கடினமல்ல.

படிக்கும் நண்பர்கள் இதை உருப்பெருக்கி தரவுகளோடு தருவார்களெனில் சிறக்கும்.

பொன்னான வாக்குகளை கேட்டு வாங்க வருபவர்களிடம் கேட்கலாம் சக்தி..

பேங்க் ஆப் தமிழ்நாடு..
தமிழ்நாடு வங்கி..

நன்றாய் இருக்கிறதா?

அன்புடன்,
செல்வக்குமார்.