புதன், 30 மார்ச், 2016

சரியான தீர்ப்பு..

இதற்கு மேல் ஒரு தீர்ப்பு இருக்கமுடியாது..
ஒரு தனிமனிதனின் உரிமையை நிலைநாட்டியிருக்கும் தீர்ப்பு..
சட்டத்தின் பயன் சாமான்ய மனிதனையும் சென்றடையவேண்டும் என்ற பேராவலில் நீதிக்கடவுள்கள் வழங்கியிருக்கும் விமர்சனமில்லா தீர்ப்பு..

அந்த தனிமனிதனா அத்தனையும் செய்தான்..?

சாதாரண வேலை செய்யவந்த அந்த அப்பிராணி மனிதனை ஆசைகாட்டி கண்டதை செய்யச்சொல்லி அவனிடம் வாங்கித்தின்று வயிற்றை வளர்த்துவிட்டு...
எல்லாம் அவனே எனச்சொன்னால் நீதிதேவதையின் கண்கள் இருண்டா போய்விடும்...

விளம்பரங்கள் சுண்ணாம்பால் எழுதப்பட்டிருந்த பாறைகளை எத்தனை இயந்திரங்களைக்கொண்டு கலைநயத்தோடு அறுத்து அந்நியச்செலவாணிகளை கொண்டுவந்த அற்புதமனிதன் களிதின்ன வேண்டுமெனில் நாட்டின் நீதியின் மேல் களங்கம் வந்து சேராதா?

ஒரு போகம் விளையாத நிலங்களை ஒருபோதும் போகாத விலைக்கு அன்புடன் வாங்கி...அப்பாவி மக்களை பணக்காரராக்கிய பண்புக்கு தண்டனையெனில் தர்மத்தாய் அழமாட்டாளா?

எப்படியோ இறந்தாலும் அந்த மனிதர்களை மார்பிள் தோட்டத்தில் அடக்கம் செய்து அழகு பார்த்த மனிதனுக்கு சிறையென்றால் சீற்றம் கொள்ளாதா இயற்கை?

இருக்கும் குளங்களை மூடிக்கொண்டிருந்த வேளையில் எத்தனை ஆழக்குளங்களை கற்களை வெட்டி கஷ்டப்பட்டு தோண்டிய வள்ளலை வதை செய்தால் கல்லணை கட்டியவன் சாபம் விடமாட்டானா?

ஒன்றுமில்லை என எல்லாரும் நினைத்ததை
உருப்படியாக்கி உலகக்காசெல்லாம் உள்ளூருக்கு கொண்டுவந்தவரை இப்படியா கொடுமை செய்வது..?
பணமானது உண்மையெனில் இங்கேதானெ இருக்கிறது?
எத்தனை அதிகாரிகளை கோடீஸ்வரர் ஆக்கியிருப்பார்?
ஓய்வுபெற்ற எத்தனை நல்ல மனிதர்களுக்கு வேலை கொடுத்து வாழ வைத்திருப்பார்...

நேர்மையான அதிகாரிகள் எனப்பெயரெடுக்க அவரை என்னவெல்லாம் படுத்துவீர்கள்?
அரசின் திட்டங்களை மக்களிடம் சொல்லுவதும்,,மனிதச்சங்கிலிகளில் கைகோர்த்து நின்று விழிப்புணர்வு ஊட்டுவதையும் விட்டுவிட்டு..
அவரைத்தோண்டுவதும்..புதைத்த பிணங்களை தோண்டுவதெல்லாம் எந்த சட்டத்தில் படித்தார்கள்..

நீதி சரியாய் இருப்பதாலும்,கருணைமட்டுமே நிரம்பித்தளும்புவதாலும் இந்த அளவில் உங்களை கண்டித்து விட்டிருக்கிறது.

அடடா..நீதி நின்று கொன்றிருக்கிறது...

வாழ்க..நம் நீதி..
வளரட்டும் இன்னும் இவர் போன்றோர்..



புதன், 23 மார்ச், 2016

ஒன்னா மண்ணாப்போங்க...

கடுப்பாகுது...

என்ன கொடுமை?
ஒன்னும் பிடிக்கலை..

பழம் நழுவி விழுந்து
பாலும் கெட்டுப்போனது..

மக்கள் நலக்கூட்டணி என்னும் மாற்று அணியில் தெரிந்த சின்ன வெளிச்சப்புள்ளி மங்கிப்போனது .

தோழர்கள் இதை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?

தனி மனிதனை முதலமைச்சர் வேட்பாளராக ஒத்துக்கொண்டால்
உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

எதைச்சொல்லி ஓட்டுக்கேட்பீர்கள்..?

எதிர்க்கட்சித்தலைவராக மட்டுமல்ல..
ஒரு அரசியல் கட்சித்தலைவராகக்கூட செயல்பட முடியாதவரை எப்படி ஆதரிப்பீர்கள்..?

பத்திரிக்கையாளர்களை துப்பிய,,
தன் வேட்பாளரையே அடித்த ..
இன்னும் இன்னும்...

எந்த முகத்தை வைத்து ஓட்டுக்கேட்பீர்கள்...?

மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் உண்டா?

வாக்காளரை எப்படி அழைப்பது..?

மக்கழே...?

அரசியல் என்பதை எப்படித்தான் புரிந்து தொலைப்பது?
இது தான் அரசியல் என்றால் வெறுப்பு வருகிறது.

பாண்டவர்களாம்..

உங்களுக்கு யார் கண்ணன்?

என்ன ஒரு உற்சாகம்..

அன்புத்தலைவர்களே..
கூட்டணியில் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கலாம்...

ஒரு சராசரித் தமிழனாய் என்னைப்போன்றோர்க்கு இதில் ஒரு சொட்டும் மகிழ்ச்சியில்லை..

மாற்றம் தமிழகத்துக்கு வருமுன் கூட்டணிக்கு வரவேண்டும்.

உங்கள் முந்தைய பரப்புரை கூட்டங்களை விட இனி அதிகம் கூட்டம் வரலாம்..

ஆனால் அதில் உணர்வுகள் குறைந்தே இருக்கும்.

இப்படித்தான் மாற்றம் இங்கே வரவேண்டுமென்றால்?

எனக்கென்னவோ..

ஒற்றுமையா சேர்ந்து..
ஒற்றுமையா காணாமப்போயிடுவீங்களோ?

அய்யோ....பயமாயிருக்கிறது..










செவ்வாய், 22 மார்ச், 2016

என் சன்னலோரம்...

ஆடுவந்து கடிப்பதில்லை..

அணைகட்டி
நீருமில்லை..

சாத்திரத்து
மழையுமில்லை..

சாணி எரு
ஏதுமில்லை..

உரத்துளிகள்..

முள்வேலி
கட்டவில்லை..
யாரும்
முனை முறித்துப்
போகவில்லை.

கருந்துளசி,
சிறுமுருங்கை
வகைகளில்லை..

வெண்குட்டம்
வந்தது போல்
மஞ்சள் இலை.

முள்ளாய் இலை
கொண்ட
சிறு சவுக்கு.

சீக்கிரமே
செத்துவிடும்
சீமைப்
பூங்கன்று.

பணம் வந்து
குமிய
ஒரு
இலைக்கொடி..

மலைப்புறத்தில்
மட்டும்
பூக்கும்
படர்ந்த மலர்.

மகரந்த
சேர்க்கைக்கு
வண்ணப்பூச்சி
வருவதில்லை..

சன்னலோரம்
நான் வளர்க்கும்
என்
தொட்டிப் பூச்செடியே...

குவளை நீர் குடித்து..

சிறு மொட்டு
விழிதிறக்க

பூக்கும்
என்
உள்ளமெல்லாம்..











வியாழன், 17 மார்ச், 2016

பால் குடி..மறங்க...

அன்பின் சக்திக்கு,

எரியும் பனிக்காடு படித்த நாட்களில் தேனீர் மீதான எரிச்சலும் கோபமும் கொஞ்சநாள் அதை ஒதுக்கிவைக்க உதவியது..

தனிமை தரும் உரிமையில் தேனீரும்,காப்பியும் மீண்டும் ஒட்டிக்கொண்டன.

பொதுவாய் பால் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாய் மாறிவிட்ட காலத்தில் இருக்கிறோம்.

என் இளமைக்காலங்களில் 100 மில்லிக்குமேல் பால் வாங்க வசதியில்லாத வீடு.

கூட்டுறவுப்பண்ணையின் கறந்த பாலை வாங்கி காப்பித்தூளை கலந்து வடிகட்டாத அந்த கருப்பும் வெளுப்புமல்லாத காப்பி 8 பேருக்கு பகிரப்படும்.

நகர காலங்களில் தண்ணீர் சேர்க்காத பாக்கெட் பாலில் உயர்தர காப்பிப்பொடி கலந்து கோப்பையில் அருந்தி நாளைத்தொடங்கும்
நாகரீக பிழைப்புக்கு
செருப்படி தந்திருக்கிறது சமீபத்திய அறிக்கை..

பயன்படுத்தும் பாக்கெட் பாலில் 70 சதவீதம் போலி அல்லது கலப்படம் என்பத்தை ஒத்துக்கொண்டிருக்கிறது அமைப்பு..

கலக்கும் பொருட்களாய் அறியப்படுபவை..

யூரியா,டிட்டர்ஜெண்ட்,
சீனப்பவுடர்,மைதா மாவு,

அடப்பாவிகளா...

அதைக்கண்டுபிடிக்கும் கருவிகளை வாங்கி இனி பரிசோதிக்கப்போகிறார்களாம்.

வெட்கமாய் இல்லை..

இயற்கை கொடுக்கும் பாலில் மனிதத்தன்மை கொஞ்சமும் இல்லாமல் நஞ்சைக்கலக்கும் இவர்களுக்கு சட்டம் தரும் தண்டனை 1500 வரை அபராதமாம்.

கொஞ்ச நாள் முன் பாலில் தண்ணீர் கலந்ததாய் செய்தி பரபரப்பாய் இருந்தது..அப்புறம் ஒன்றையும் காணோம்.

கூட்டணிப்பேரங்களில் இந்த செய்தியும் அடங்கிப்போய்விடும்.

ஆனால்,
இது அணையக்கூடாது.

பாலில் கலப்படமும்,போலிகளும் உலவுவதாய் ஒத்துக்கொள்ளத்தான் ஒரு அரசா?

இந்த நாட்டின் பாதுகாப்பை மெல்லப்பார்க்கலாம்..
எல்லாரும் செத்துச்சுண்ணாம்பான பின் எதற்கு பாதுகாப்பு..

சாராயம் விற்கும் அரசு எப்போது பாலின் பால் பார்வை செய்யும்?

கலப்படத்தையும்,
பொருட்களையும் கண்காணிக்கவேண்டிய துறை என்ன வேலை செய்து கொண்டிருக்கிறது?

யூரியாவும்,ஸ்டார்ச்சும் கலந்துவருவதாய் ஒத்துக்கொள்ளும் 70 சதவீத பாலைக்குடித்துத்தான் இந்தியக்குழந்தைகள் வளர்ந்து வல்லரசாக்க வேண்டும் நாட்டை..

இணைய நாட்களில் அப்பட்டமாய் தெரியவரும் கலப்படங்களையும்,
போலிகளையும் பார்த்தபின்னும் செவிடாய்,குருடாய் செயலற்றிருக்கும் அமைப்புகள் யாருக்காக?

தேசப்பாதுகாப்புக்கு குந்தக கோஷம் என்று வழக்கு போடும் உண்மையின் புதல்வர்களே..

ஒரு தேசத்தின் மக்களையே அழிக்கப்பார்க்கும் இவர்களுக்கு என்ன பரிசு தரப்போகிறீர்கள்?

பாலின் கலப்புகள் புளியைக்கரைக்கிறது?
சக்தி..

உன்  தோழர்களிடம் சொல்..
இந்த பாக்கெட் பால் நம்மை வாழவைக்க இல்லை.

வீட்டின் பால்கணக்கை நிறுத்து..

நல்லபால்தான் வேண்டுமென்றால் நாம் வாக்களிப்பதைப்பொறுத்து..

அன்புடன்,

மீரா செல்வக்குமார்.











புதன், 16 மார்ச், 2016

நீ தானே....என்..

உயிர்ப்பூக்கள்
தொடுத்த
மாலை
நீ.

இரண்டாம் 
தாய்.

என்
பாவங்களின்
மன்னிப்பு.

என்
தோட்டத்தில்
மலர்ந்த
ரோஜா..

புன்னகை
மட்டுமே
ஏந்திய
தேவதை..

புத்தகக்காதலி.

எதுவும்
மறைக்க முடியாத
என்
ஆன்ம
ஸ்நேகிதி.

இருண்ட வானின்
ஒளி
நட்சத்திரம்.

சிறு சிரிப்பில்
என்
உயிர்
ஒளித்து வைக்கிறாய்.

அந்திவானின்
செவ்வொளிக்கீற்று.

என்ன
பரிசு வேண்டுமென்கிறேன்.
பிறந்தநாளில்.

எப்போதும்
என்னோடிரு
என்கிறாள்..

சின்னவளுக்கு
எப்படி
சொல்வது..

இருப்பதே
அவளுக்காய்
என்பதை..

ஞாயிறு, 13 மார்ச், 2016

யாதொன்றுமில்லை.

எப்படியும்
ஒரு கவிதை
எழுதிவிட
வேண்டும்.

அலைபேசி
அணைத்துப்போட்டு
அமைதியற்றிருந்த
நேற்று பற்றி?

கொடும்பசி
கிளம்பிய
நள்ளிரவில்
கனவுகள்
மென்று
கண்மூடிக்கிடந்தது?

பிறந்தநாள்
சண்டையிட்ட
சின்னவளின்
சாபம் பெற்ற
ஒற்றைவரி?

ஓடிக்கொண்டிருக்கும்
நகர் நதியை
உற்றுப்பார்த்து
சோம்பல்கொள்ளும்
வெயிலேறிய
மதியம்?

காயத்தொடங்கிய
காய்கறிகளின்
எறிதலுக்காய்
காத்துக்கொண்டிருக்கும்
மூதாட்டி?

தீவிரப்பேச்சினில்
தீராத
விடுமுறைப்பகல்?

வாசிக்கத்தொடங்கிய
நூலொன்றின்
வரிகள்
மறைந்து..
யோசனைகள்
மரம்தாவிய
மாயம்?

எத்தனை பேர்
என்னை
தேடியிருப்பார்கள்..

மறுசுழற்சியில்
வாட்ஸ் அப்
செய்திகள்.

தவணைக்கான
குறுஞ்செய்திகள்.

ஏழுநாளில்
நல்லது நடக்க..
பகிரச்சொல்லி
முகநூல்
வேண்டல்கள்.

பதிமூன்று
காதல்
கவிதைகள்.

நான்
மீண்டும்
தூங்கப்போகிறேன்.

அதற்குள்..

எப்படியும்
ஒரு
கவிதை
எழுதிவிட வேண்டும்.

வெள்ளி, 11 மார்ச், 2016

ஊருக்கு உபதேசம்..

சட்டங்களும் விதிகளும்  யாருக்காக இங்கே ..

ஒரு தலைநகரையே நாசப்படுத்தத்துணிந்த ,ஆன்மிகவாதி(?) எனப்படுபவர்  சட்டம் தந்த அபராதத்திற்கு பதிலளிக்கிறார்..

மரங்களை வெட்டவில்லையாம்..
கிளைகளை மட்டும் சிரைத்தார்களாம் ..

ஒரு பைசாவும் கட்டமுடியாதாம்..
நீதிமன்றம் தந்த தீர்ப்பை இப்படி அப்பட்டமாக விமர்சித்த அவருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை ..
இதையே சாதாரண குடிமகன் செய்திருந்தால் ?

ஒரு சதவிதம் கலால்வரிக்காக நகைக்கடைகளை மூடி வைத்திருக்கிறார்கள்.
சவரனுக்கு 200ரூபாய் கூடுமாம்..
பொதுமக்கள் பாதித்துவிடுவார்களாம் .

ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதை ..

போடும்சேதாரத்தில் 100 மில்லி குறைத்தாலே போதுமே..?
எத்தனை கடைகளில் சரியான பில்லோடு ,தரத்தோடு விற்கின்றார்கள்...

பெட்ரோலுக்காக எத்தனை முறை போராடினாலும் கேட்காத அரசு,விரைவில் நகைக்கடைகளின் நலன்  காக்கப்போவதை  காணலாம் .


கோடிகளை ஏப்பம்விட்ட  ஒருவன் ஓடிவிட்டான்.
கல்விக்கடன் பெற்றவரை போஸ்டர் அடித்து தேடுகிறான்..

ஒருமனிதனின் நேர்மையை  குறைக்க எத்தனை அவதூறுகள் ?

சாதித்த சகாயம்  பணிகள் சரியாய் செய்யவில்லை என மதிப்பளித்து இருக்கிறார்கள் சான்றோர் பெருமக்கள்.


பழம் நழுவி ..அதன் தலையிலேயே விழுந்துவிட்டது ..

ஒரு நாளிதழ்  படித்த பாவம் என்னை ..இப்படி ஆட்டுகிறது..






புதன், 9 மார்ச், 2016

செய்திகளின் நெரிசலில்...

அன்பின் சக்திக்கு,

கொஞ்சநாட்களாய் நமக்கான கடிதங்களில்
சிறு தொய்வு..

செய்திகளின் நெரிசலில் சிக்கிக்கொண்டேன்.
எதை எடுக்க ..எதை தொடுக்க..

மைதாஸின் விரலென என் பேனாவிற்கு வருமுன் செய்தி செத்துப்போய்விடுகிறது.

அவசர உலகம் தான்..
நாளின் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்துவிடுகிறது செய்திகளின் துரத்தல்கள்.

மூளைக்கான எல்லாவேலையையும் விரல்களுக்கு கொடுத்துவிட்டோம்.

என் அலைபேசி தொலைந்தால் எனக்கு யார் எண்ணும் தெரியாது.

செய்திகளின் ஆயுளுக்கு வருவோம்.

இங்கே எத்தனை செய்திகள் வரலாறு ஆகின்றன?

வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்திகளின் அழிப்பில் தொலைந்துபோகின்றன.

பெருமழை தொடங்கிய இந்த குறுகிய காலங்களில் எத்தனை செய்திகள்.?

துப்பல்
பீப் பாடல்
கோவன் கைது
ஸ்டிக்கர்
ரோஹித் மரணம்
மருத்துவ படிப்பு பிள்ளைகள் சாவு.
கன்னையா குமார் கைது..

அப்பா..இன்னும் எத்தனை செய்திகள்..

இவை ஊடகங்களின் துணையுடன் ஒரு கூட்டம் செய்யும் கெட்டிக்காரத்தனம்..

செய்திகள் செய்திகளென திணித்து  மழுங்கடித்துவைக்கிறார்கள் மக்களை..

மழைக்கு பின்னான முன்னேற்பாடுகள் என்ன?
நிவாரணப்பணிகளின் நிலை என்ன?
பீப் பாடிய சிம்பு வழக்கு என்ன ஆனது?
துப்பிய தலைவருக்கு பின்னே இன்னும் மைக் பிடித்து அலையும் அதே கும்பல்..
அறிவு இருக்கிறதா என இன்னும் தெரியவில்லை.
ரோஹித் மரணம் அவனைப்புதைத்ததோடு முடிந்ததா?

யார் கேட்பது இவ்வளவும்..
யாரும் கிடையாது..

அமைச்சராய் இருந்த ஒருவர் சிறைப்படுகிறார்..
குற்றமில்லை என விடுவிக்கப்படுகிறார்..
குற்றமற்ற என்னை ஏன் சிறைவைத்தீர்கள் என கேட்க மாட்டார்..

ஷேக்ஸ்பியர் சொன்னது தான்..எல்லாம் நாடகம்.

அரசியல் என்பது என்ன என தெரிந்தே இருக்கிறது..
லஞ்சங்கள் இந்த தேசத்தில் மறைமுகமாய் இல்லை.

செய்திகளுக்கு தகுந்த படம் போட்டு லைக்ஸ் கேட்பதும்,அடுத்த செய்திக்கு தாவுவதுமாய் நகர்கிறது நாடு..

எங்கள் காலங்களில் மாற்றம் சாத்தியமில்லாதது போல்தான் இருக்கிறது..

உங்கள் காலத்தில் செய்யுங்கள் சக்தி..

உங்கள் நாட்களில் எங்களை காறித்துப்புவீர்கள்..
துடைத்துக்கொள்கிறோம்

எங்கள் செய்திகளை தூக்கிப்போட்டுவிட்டு உண்மையுடன் வாழுங்கள்

நீங்கள் புரட்டிப்போடுங்கள்..
அமைதியான,நேர்மையான வாழ்க்கை உங்களுக்கு அமையட்டும்..

திங்கள், 7 மார்ச், 2016

குடங்களில் கொதித்த பால்...

கரும்புத்தொட்டிலில்
கதறும்
ஒரு குழந்தையை
கவனமாய்
தூக்கிப்போகிறார்கள்.

சின்ன சொம்பிலிருந்து
குடம்வரை
பால்.
ஸ்கூட்டிகள் தொடர
வழிந்து
செல்கிறது.

பெரும்பாலும்
சாலை அடைத்து நீள்கிறது
வாய்களில்
தைத்த வேல்கள்.

சர்க்கரைத்
தண்ணீருக்கும்
நீரான மோருக்கும்
நீளும் பிளாஸ்டிக் குவளைகள்.

வடித்துக்கிடக்கிறது
மலையென
அன்னம்..
அலறுகிறது மைக்..
வந்து
உண்ணச்சொல்லி..

வண்ணங்களில் வார்த்தெடுத்து
அடுக்கியிருக்கிறார்கள்
கண்கள்
மொய்க்கிறது
ஈக்கள் தொடும்
இனிப்புகளை.

வான்
சுற்றிவருகிறது
ராட்டினம்.
மயக்கத்தில் இறங்கிப்போகிறாள் ஒரு
புதுப்பெண்.

உண்டியல் கேட்டு
அழுகிறாள்
சிறுமி.

பெண்வேடமிட்ட ஆண்களும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

முண்டும் வரிசைகள்.

அபூர்வமாய் தாவணிகள்..

வெற்றுக்கால்கள் ..
நிழல் செருப்பு
தேடி அணிகின்றன.

விசில்கள்..
மேளமெனெ
வீசித்தெறிக்கிறது..

நாளைய
வெறுமை
ஞாபகம் வந்திருக்கலாம்
அம்மன் மட்டும்
அமைதியாய்
இருக்கிறாள்..

புதன், 2 மார்ச், 2016

இதுவும் வேணும் ....

என்ன ஒரு ஆணவம்..?
பொது அரங்கில் தம்மை எத்தனை பேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு கொஞ்சமும் இன்றி  ,
ஒரு முதியவரை லூசு  என அழைத்து தன்னையும் வெளிப்படுத்திக்கொண்ட ஒரு மனிதனுக்கு முதலில் என் கண்டனங்கள்...

அரசியலில் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருக்கட்டும்.
இது தான் தமிழன் பண்பாடா..?
இவர்தான் நாளைய தமிழகத்துக்கு தலைமை தாங்கப்போகிறவரா?

எனக்கு பயமாய் இருக்கிறது..

மக்கள் நலக்கூட்டணியை விட ஒரு ஓட்டு குறைந்தாலும் ..கட்சியை கலைத்துவிட்டு  கம்யுனிஸ்ட்  கட்சியில் சேர்ந்துவிடுவாராம்.

அட லூசு ,
அந்த கட்சியில அப்படியெல்லாம் சேர்த்துக்க மாட்டாங்க..


ஐயா. கூட்டணியே...
இதுக்காக வேணும்  மனசுவச்சு வேலை பாருங்க..


தோழர்கள்  இனி கவனமாக இருக்கவேண்டும்.

முதலில் இதுபோன்ற விவாதங்களுக்கு போவதற்கு முன்னால் ..எதிரில் யாருடன் விவாதிக்கப்போகிறோம் என்பதை பார்க்க வேண்டும்.
முன்பு ஒருமுறை சி.மகேந்திரன் அவர்களுக்கும் இதைபோன்று நடந்தது.


கூப்பிட்டு பேசவச்சவன் .. பெட்டியை கட்டி போய்விடுகிறான்..
பேச வந்தவர்களை மோதவிட்டு  வேடிக்கை காட்டி காசுபார்க்கும் இவர்களை முதலில் கவனியுங்கள்...

முதலில் இந்த ஊடகங்களின் பின்புலத்தை பாருங்கள்..

நீங்கள் டி.வி  யில் பேசித்தான் மக்களுக்கு விளக்கவேண்டியதில்லை...

ஏதோ கூப்பிட்டான் போனோம் னு ..பேச போனால்..

இப்படித்தான் கேட்கவேண்டிவரும்..