இதற்கு மேல் ஒரு தீர்ப்பு இருக்கமுடியாது..
ஒரு தனிமனிதனின் உரிமையை நிலைநாட்டியிருக்கும் தீர்ப்பு..
சட்டத்தின் பயன் சாமான்ய மனிதனையும் சென்றடையவேண்டும் என்ற பேராவலில் நீதிக்கடவுள்கள் வழங்கியிருக்கும் விமர்சனமில்லா தீர்ப்பு..
அந்த தனிமனிதனா அத்தனையும் செய்தான்..?
சாதாரண வேலை செய்யவந்த அந்த அப்பிராணி மனிதனை ஆசைகாட்டி கண்டதை செய்யச்சொல்லி அவனிடம் வாங்கித்தின்று வயிற்றை வளர்த்துவிட்டு...
எல்லாம் அவனே எனச்சொன்னால் நீதிதேவதையின் கண்கள் இருண்டா போய்விடும்...
விளம்பரங்கள் சுண்ணாம்பால் எழுதப்பட்டிருந்த பாறைகளை எத்தனை இயந்திரங்களைக்கொண்டு கலைநயத்தோடு அறுத்து அந்நியச்செலவாணிகளை கொண்டுவந்த அற்புதமனிதன் களிதின்ன வேண்டுமெனில் நாட்டின் நீதியின் மேல் களங்கம் வந்து சேராதா?
ஒரு போகம் விளையாத நிலங்களை ஒருபோதும் போகாத விலைக்கு அன்புடன் வாங்கி...அப்பாவி மக்களை பணக்காரராக்கிய பண்புக்கு தண்டனையெனில் தர்மத்தாய் அழமாட்டாளா?
எப்படியோ இறந்தாலும் அந்த மனிதர்களை மார்பிள் தோட்டத்தில் அடக்கம் செய்து அழகு பார்த்த மனிதனுக்கு சிறையென்றால் சீற்றம் கொள்ளாதா இயற்கை?
இருக்கும் குளங்களை மூடிக்கொண்டிருந்த வேளையில் எத்தனை ஆழக்குளங்களை கற்களை வெட்டி கஷ்டப்பட்டு தோண்டிய வள்ளலை வதை செய்தால் கல்லணை கட்டியவன் சாபம் விடமாட்டானா?
ஒன்றுமில்லை என எல்லாரும் நினைத்ததை
உருப்படியாக்கி உலகக்காசெல்லாம் உள்ளூருக்கு கொண்டுவந்தவரை இப்படியா கொடுமை செய்வது..?
பணமானது உண்மையெனில் இங்கேதானெ இருக்கிறது?
எத்தனை அதிகாரிகளை கோடீஸ்வரர் ஆக்கியிருப்பார்?
ஓய்வுபெற்ற எத்தனை நல்ல மனிதர்களுக்கு வேலை கொடுத்து வாழ வைத்திருப்பார்...
நேர்மையான அதிகாரிகள் எனப்பெயரெடுக்க அவரை என்னவெல்லாம் படுத்துவீர்கள்?
அரசின் திட்டங்களை மக்களிடம் சொல்லுவதும்,,மனிதச்சங்கிலிகளில் கைகோர்த்து நின்று விழிப்புணர்வு ஊட்டுவதையும் விட்டுவிட்டு..
அவரைத்தோண்டுவதும்..புதைத்த பிணங்களை தோண்டுவதெல்லாம் எந்த சட்டத்தில் படித்தார்கள்..
நீதி சரியாய் இருப்பதாலும்,கருணைமட்டுமே நிரம்பித்தளும்புவதாலும் இந்த அளவில் உங்களை கண்டித்து விட்டிருக்கிறது.
அடடா..நீதி நின்று கொன்றிருக்கிறது...
வாழ்க..நம் நீதி..
வளரட்டும் இன்னும் இவர் போன்றோர்..