தாய்வழிச்சமூகம்..
வகைகள்
- அன்பின் சக்திக்கு (51)
- அனுபவங்கள் (22)
- கட்டுரை (41)
- புதுக்கவிதை (144)
- விமர்சனம் (21)
- வீடியோ (4)
வியாழன், 29 டிசம்பர், 2016
மூத்த குடி...
தாய்வழிச்சமூகம்..
புதன், 28 டிசம்பர், 2016
அரசியல் குப்பைகள்..
அரசியலுக்கும் இது பொருந்தும் அதிசயம்.
செவ்வாய், 20 டிசம்பர், 2016
செப்பித்திரிவாரடி....
ஞானம் வந்தால்
அமைதி பெறும்..
வெள்ளி, 25 நவம்பர், 2016
கணக்கில் வராதது...
கொடுத்த
காக்கிச்சீருடை...
புதன், 16 நவம்பர், 2016
விட்டு விடுதலையாகி...
சனி, 12 நவம்பர், 2016
ஒழிஞ்சா என்ன?...
நான் நலமாயில்லை.
தாங்கள் நலமாய் இருப்பீர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நான்.நிற்க.
சனி, 5 நவம்பர், 2016
நமக்கான கவிதை...
கொதிக்கும்
அறிவாயா...
செவ்வாய், 1 நவம்பர், 2016
கொங்குதேர் வாழ்க்கை....
இறுதி ஊர்வலம்
பார்த்தேன்..
ஞாயிறு, 30 அக்டோபர், 2016
இறையனார் கேட்ட வரம்...
என் வீட்டுக்கு
காலையிலேயே
வந்துவிட்டார்..
வியாழன், 27 அக்டோபர், 2016
ஆனந்தம் கொண்டாடும்...
பண்டிகை கால நெரிசலில் சிக்கித்தவிக்கும் கடைவீதிகளும்,மற்ற நெருக்கடிகளில் மாட்டிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கவலைகள் இருக்கத்தான் செய்கிறது..
புதன், 26 அக்டோபர், 2016
திருடா..திருடா..
டயர்கள் கொளுத்திய கரும்புகைசூழ் வீதியுலாவில்
உன் வாசல் கடந்தேன்..
திங்கள், 24 அக்டோபர், 2016
ஒரு காதல் கடிதம்...
பார்த்திருந்தால்
ஞாயிறு, 23 அக்டோபர், 2016
வீதிக்கு ஒரு கவிதை
பெண்ணுக்கு
நாணமென
எவன் சொன்ன
அடையாளம்?
வியாழன், 20 அக்டோபர், 2016
கற்பனை என்றாலும்...
ஒப்பில்லாக்காதலி
கண்டெடுத்தேன்..
செவ்வாய், 18 அக்டோபர், 2016
நித்திய ராத்திரி
திங்கள், 17 அக்டோபர், 2016
ஊழ்வினை வந்து...
மறுதீர்ப்பில்
குற்றநிரூபனமிலாத
வணிகனாய்
புதன், 12 அக்டோபர், 2016
பொழுதெல்லாம் கொள்ளை கொண்டு போகவோ..?
நலம் .நலமறிய ஆவல்.
திங்கள், 10 அக்டோபர், 2016
ஞாயிறு, 9 அக்டோபர், 2016
ஆயுதபூஜையும்,அவித்த சுண்டலும்..
எப்ப பார்த்தாலும் நடந்ததையே சொல்லிட்டு
வெள்ளி, 7 அக்டோபர், 2016
தோள் தொட்டில்...
இன்று உன்னிடம் ஒரு சம்பவத்தை சொல்லிவிடப்போகிறேன்.
திங்கள், 26 செப்டம்பர், 2016
பிளாஸ்டிக் வாய்க்கரிசி...
சனி, 24 செப்டம்பர், 2016
நீளும் விரல்கள்...
எத்தனை பிள்ளை
பிறந்ததுன்னு
தெரியாது யாருக்கும்.
வெள்ளி, 23 செப்டம்பர், 2016
என்னங்கடா உங்க கல்வி..
வியாழன், 22 செப்டம்பர், 2016
திண்ணைப்பேச்சு வீரர்கள்
வல்லுனர்கள் ஒவ்வொரு பத்துவருடங்களுக்கும் ஒவ்வொரு துறை அபரீத வளர்ச்சி அடைவதாகக் கூறுவார்கள்..
செவ்வாய், 20 செப்டம்பர், 2016
இணைய விரத பலன்கள்..
திங்கள், 19 செப்டம்பர், 2016
சக்தி......
பிறந்தநாள் வாழ்த்துகள்.
வியாழன், 15 செப்டம்பர், 2016
தேவை....தண்ணீரல்ல...
கவனம் சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளைகளில் வேறு பல நடந்துகொண்டிருக்கலாம்..
கார்ப்பரேட் மூளைகளின் வக்கிரங்கள் இன்னும் என்னவெல்லாமோ செய்யும்...
தொடங்கியதிலிருந்து பெட்ரோலிய விலைகளிலேயே ஒரு நூற்றாண்டுக்கான வருமானங்கள் கிடைத்திருக்கும்..
தக்கவைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
குஜராத் கோரமுகங்கள் வாசிக்கும் போது அத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது.
கணினிகளின் துல்லியத்தில் மனித மனங்களை கணித்து உணர்வுகளைத்திருப்பி சாதித்தவர்கள்..
இந்துத்வா, மதவாதம்,மாட்டுக்கறி, படுகொலைகள், காவேரி உட்பட எல்லாம் கவனம் திருப்பும் சாகசங்கள்.
ஆட்சி,பதவி வெறிகளின் உச்சத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
அடுத்து வரும் தேர்தலை கவனித்துப்பாருங்கள்..இது வரை இந்தியா சந்தித்திராத பணம்,அதிகாரம் எல்லாம் தூள்பறக்கும்.
காவேரி என்பதும் இன்றைய பிரச்சனை அல்ல..
காலம் காலமாய் இருப்பது தான்.இவ்வளவு மோசமாக தூண்டக்காரணம் வேறு ஏதேனும் இருக்கும்..
கர்நாடகாவில் ஒன்றும் காட்டுமிராண்டிகள் வாழவில்லை.
மக்களின் மென்முனைகளைத் தட்டிவிட்டால் நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கும் இதுதான் நடக்கும்.
வாகனங்களை எரித்ததிலும் பின்புலம் இருக்கும்.
ஒரு மத்திய சட்டத்துறை அமைச்சராய் இருந்தவர்,
இன்னும் அமைச்சராய் இருப்பவர் மற்றொரு மாநிலத்தின் மீது மிகச்சாதாரணமாக குற்றம் சாட்டுவது இறையாண்மைக்கு ஏற்றதல்ல..
உள்ளபடி ஆயிரம் குறைகள் இங்கு உண்டென்றாலும் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்..தமிழ்
மக்களின் மனங்கள் பண்பட்டிருப்பது தெரிகிறது..
எல்லா இடங்களிலும் உணர்வுகளில் விளையாடுபவர்களின் சோதனை முயற்சி கூட தமிழகத்தில் தோற்றுப்போக 90 வயதுக்குப்பிறகும் மூத்திரப்பையை சுமந்து சுயமரியாதை வளர்த்த கிழவனின் தொண்டு அது.
என் தமிழகமே அந்தப்பெரியாரை இறைமறுப்புக்காய் திட்டுவதெனில் திட்டிவிட்டுப்போங்கள்..
ஆனால் சுயமரியாதையையும்,
பெண்ணினத்திற்காகப் போராடியதையும் இழிவுசெய்யாதீர்கள்.
காந்தி பிறந்த மண்ணில் தான் எல்லாம் பிறக்கிறது..
பெரியார் நடந்த மண்ணில் இன்னும் சுயமரியாதை சாகவில்லை..
அது சரியான வித்து.
அன்புடை நண்பர்களே..
இதுவும் கடந்து போகும்.
ஆனால் வரலாற்றில் நாம் பாடம் கற்றே ஆகவேண்டும்.
அவர்கள் காந்தியை மறந்து போகட்டும்..
நாம் அகிம்சையை மறக்கவேண்டாம்.
நடைபெறும் கலவரங்களின் புகையில் நீங்கள் பகையை பார்க்கின்றீர்கள்..
நான் உள்ளூற்றிய எண்ணையைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
அரசியல் கட்சிகள் யாவும் சமூக சேவைக்காய் அல்ல.
அவர்கள் சேவைக்காகவே.
நாம் என்று விளம்பரங்களில் சிக்காமல் விழிக்கின்றோமோ அன்றே விடியும் நம் நாள்.
ஆட்டுமந்தையென புலம்பலில் இன்பம் காணாமல் ஊடுருவிக்கிடக்கும் வன்மத்தைப் பாருங்கள்.
ஊடகங்களும்,
சமூகவலைத்தளங்களும் முற்றிலும் மக்களால் நடத்தப்படுபவை அல்ல..
எங்கெங்கும் அவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் நீண்டிருக்கும்.
வேறு எந்த சிந்தனையும் உங்கள் கவனத்தை திசைதிருப்பி விடாமல் பார்த்துக்கொண்டிருக்கும்.
விடிவென்பது சேவல் கூவியல்ல..
கண்கள் விழிப்பதில் தான்.
காசுக்கும்,மதுவுக்கும்,உணர்வுகளுக்கும் அடிமைப்பட்டு வாக்களித்தோமானால் இதுவும் நடக்கும்..இன்னமும் நடக்கும்..
வாக்கென்னும் அற்புதம் நம் கைகளில் தான் இருக்கிறது.
ஒற்றை நிமிட யோசனை புரட்டிப்போடக்கூடும் யாவையும்..
அந்த ஒற்றை நிமிடத்தையும் களவாடப்பார்ப்பார்கள்.
கம்யூனிச தோழர்களின் களப்பணி நேரமிது..
கண்டனங்கள் கூட கனத்துச் சொல்லாமல் இருப்பது கவலைக்குரியது.
சுயசிந்தனையும் சுயகட்டுப்பாடும் மட்டுமே..
தற்போது தலையாய தேவை..
ஒரு மழை கனத்துப் பெய்தால் காவேரியை அவர்களே திறப்பார்கள்..
பிழைகள் நம் பக்கம் தான்..
இனியேனும் அதை செய்யாதிருப்போம்.
வெள்ளி, 9 செப்டம்பர், 2016
ஆயிரம் கை போதாது...
தற்செயல் விடுப்பவளுக்கு..
ஆசைகளடுக்கி
முன்னிரவு செய்கிறாள்.
அலாரம் அணைத்து
அரைமணிநேரம்
தூக்கம்..
வாசித்து பாதியில்
மடித்துவைத்த
புத்தகமொன்றை
முடித்துவிட..
மூலையில்
குவிந்தமலையென
துணிகளுக்கு
சலவை எந்திரம்
சுழற்ற..
மீன் விற்பவர் வருவாரா.
குளிர்ப்பெட்டி வைத்த
கீரை ஆயலாமா?
ஏதேனும் ஒரு
சீரியல் பார்க்கலாமா?
எதிர்வீட்டில்
கிளியுண்டே
கொஞ்ச நேரம்
தோள்களில் சுமக்க..
கண்ணாடிபார்த்து
நிறமாறிய முடி
பார்த்து நெட்டுயிர்க்க..
பள்ளிப்பிள்ளைகள்
வருவாரே
பலகாரம் ஏதேனும்
செய்ய..
தள்ளிப்போன
தாய்வீடு பேச..
ஆயுளின் நாள் தேடும்
வேலையுண்டு
அவளுக்கு..
இந்தவிடுப்பும்
கூட
தற் செயல் விடுப்பு தான்.
வியாழன், 8 செப்டம்பர், 2016
கிடந்தாய்...வாழி..
தென்பெண்ணை
பாலாறு..
நதிகளில்
இல்லடா
கோளாறு..
போட்டு
நாம்
கிழித்தோம்..
கொட்டும்
அருவியும்
பூட்டி வச்சான்.
பொங்குனா
திட்டிவச்சோம்..
பள்ளமா
காய்கையில்
தள்ளிவச்சோம்...
அள்ளிட்டு
கொள்ளிவச்சோம்..
மனுஷங்க
எதைடா
விட்டு வச்சோம்...
சோற்றுக்கும்
போராட்டம்...
நடுவுல
தேசிய நீரோட்டம்.
நம்மோட
தாய்நாடாம்...
எல்லாரும்
என் கூடப்பிறந்தவனாம்.
கேட்டோம்..
தாலியறுக்கிறான்.
தட்டிகேட்பவன்
வானத்துல
பறக்குறான்.
ஒன்னாகி
தரையில புரளுறான்..
டாஸ்மாக்
கடையில
பீருக்கு
அழுகுறான்.
தலைவனின்
படத்தை
பாலால
கழுவுறான்.
சாவதற்குள்...
வீதிக்கு
இறங்காவிட்டால்..
இல்லையடா..
நாதியத்துப்போவோம்
நாம்...
புதன், 7 செப்டம்பர், 2016
கசக்கும் பணம்..
இருபது ரூபாய்க்குள் இப்போது என்ன வாங்கிவிட முடியும்?
வடையுடன் ஒரு டீ? 50 எம்.பி க்கான இணைய டேட்டா? அம்மா குடிநீரல்லாத ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்?
என் வீட்டின் அருகிலொரு குழந்தைமை விலகாத சிறுவனொருவன் காலையில் 100 ரூபாய் நோட்டொன்றுடன் ரொட்டிவாங்க கடைக்குக் கிளம்புகிறான்..
அந்த ரூபாயை அவன் கையாண்டிருந்த விதம் என்னை எழுதவைத்துவிட்டது..
பத்தாம் வகுப்புவரை அரைக்கால் சட்டையுடன் திரிந்த எனக்கு கைலி கட்டவேண்டுமென்ற ஆசை வலுத்துவிட்டது..
ஒருவாரம் போராடி 20 ரூபாயுடன் கீழராஜவீதிக்கு வந்துவிட்டேன்..
முதல் முறையாக எனக்கான ஆடையை நானே எடுப்பதில் மனசு பறக்கிறது.
அண்ணா சிலை அருகில் கட்டிலில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார் ஒரு வயதானவர்..
கைலி பச்சைக்கட்டம் போட்டது 10 ரூபாய்.. ஜட்டி 3 ரூபாய்..அரைக்கை வைத்த பனியன் 6 ரூபாய் மிச்சம் ஒரு ரூபாய் கைலியை மூட்டுவதற்கு...
அந்தக்கைலி என் நெஞ்சில் வைத்துக்கட்டினாலும் தரையைக்கூட்டும்.
இத்தனை நாள் இல்லாம ஜட்டி போட்டதுல ஒரு குறுகுறுப்பு.. புதுக்கைலி மொடமொடன்னு இருக்கு மடிச்சுக்கட்னா.. ஒரு படத்துல வடிவேல் கூடைய மாட்டிட்டு நடக்குற மாதிரியே இருக்கும்..
கட்டிட்டு ஊரையே ஒரு வட்டம் போட்டுட்டு வந்து கழட்டி வச்சுட்டேன்.
அப்பத்தாவுக்கு நான் பெரியாளாயிட்டேனு என் தாடையப்பிடிச்சு கொஞ்சல்..
அப்பறமா திருப்பூரே போய் சாயம் கலக்கிய காலத்தில் பனியன்கள் சகஜமாயிருச்சு.
அந்த முதல் கைலியும் பனியனையும் மறந்தே போய்ட்டேன்.
அப்பா திடீர்னு போன் பண்ணி அப்பத்தா செத்துப்போச்சுன்னு சொல்லும் போதே அழுகையா வருது..கிளம்பி வந்துட்டேன்..
வீதிக்குள்ள நுழையும் போதே அத்தையெல்லாம் என்னைப் பார்த்தவுடன் சத்தமா அழ ஆரம்பிச்சுட்டாங்க.
என்னமோ எனக்கு அழுகையே வரல்ல..
நேரா அப்பாகிட்ட போய் பணத்தை கொடுத்துட்டு பக்கத்துவீட்ல போய் தூங்கிட்டேன்..
தூக்கப்போகும் போது பேரனெல்லாம் சந்தனக்குச்சி பிடிக்க வாங்கடான்னு சொன்னப்ப போனேன்.
வாழ்நாள் முழுதும் பருத்திப்பால் விற்று எங்கள் உயிர் வளர்த்த அப்பத்தா பஞ்சடைச்சு கிடக்கு.
பிறந்தவீட்டுக்கோடி,புகுந்தவீட்டுக்கோடி,சம்பந்தக்காரர் கோடின்னு அப்பத்தா மேல புதுப்புது சேலைகள் மூடிக்கிடந்தது..
குளிப்பாட்டனும்னு ஒவ்வொரு துணியா எடுக்குறாங்க..
எல்லாம் எடுத்தபின் பார்க்கிறேன்..
நான் முதன்முதலில் எடுத்த பனியனை அப்பத்தா போட்டிருக்கிறது..
உடல்நிலை சரியில்லாமல் போனதை உணர்ந்த அப்பத்தா அந்த பனியனை தேடி எடுக்கச்சொல்லி போட்டுக்கொண்டதாம்.
அழுகை முட்ட ஆரம்பிக்கிறது..
தூக்கிவிட்டா படுத்திருந்த கட்டிலில் மடித்துப்போடப்பட்டிருக்கிறது பச்சைக்கட்டம் போட்ட அந்த கைலி...
வெடித்து அழுகிறேன்..கூட்டம் திகைக்கிறது.
இந்த பணம் தான் எத்தனை பாடுபடுத்தியிருக்கிறது.
கூடப்படிக்கும் ஒரு முஸ்லீம் நண்பனிடமே ரம்ஜான் நாளில் பள்ளி வாசலில் கையேந்தி நாலணா வாங்கவைத்திருக்கிறது..
எட்டு ரூபாய் சம்பளத்திற்காக பேருந்து நிலைய கழிப்பறை வாசலில் காசுவாங்கிப்போட வைத்திருக்கிறது..
அந்நிய தேசங்களில் மூட்டை தூக்க வைத்திருக்கிறது..
உறவுகளை விலக வைத்திருக்கிறது..
இலங்கை வேந்தனாய் ஓடி ஒளிய வைத்திருக்கிறது.
பணத்தை கடவுளின் உருவமென நண்பர்கள் தொட்டு வணங்கும் போதும்,பணத்துடன் பேசவேண்டும்,தொட்டுத்தடவி விட்டுத்தான் கொடுக்கவேண்டும் என்னும்போது எனக்கு பணத்தின் மீது கோபம்தான் வருகிறது.
மிக அலட்சியமாக அதை நான் வைத்திருப்பதாய் நண்பர்கள் குட்டும்போதெல்லாம் எனக்கு வலிக்கத்தான் செய்கிறது.
பின் எப்படித்தான் என் கோபத்தைச்சொல்லுவது?
செவ்வாய், 6 செப்டம்பர், 2016
ராத்துணை....
பிடித்துப்போனதை
எளிதில்
சொல்லிவிடமுடியாது.
மிக லாவகமாய்
சாவித்துளையின் வழியேகூட
நுழைந்துவிடமுடியுமதனால்
கனவுகளிலும்
கால்வைத்ததையறிந்தது
பின்னிரவு கடந்தும்
புரண்ட நேற்றில் ..
உருவமற்ற
பிறப்பாயெனில்..
உருவங்கள்
பிறப்பதே
தன்னால் என்றது..
தள்ளித்தள்ளி
உதறுகிறேன்...
ஒளியின் தூசியாய்
விலகிப்பெருக்கிறது..
நினைத்த பூவின்
வாசம் வருகிறது..
மலைத்தேனடர்ந்த
அடர்கானகம்
கடந்திருக்கும்
சுவைகாட்டும் படர்கை..
புத்தகம் புரட்டிய
இமைகளின்
ரெப்பைமூடி
வன்முறை செய்யும்
உன்னை
எப்படித்தண்டிக்க?
மன்னிப்பதும்,
மரணம் தருவதும்
நானேயென்றும்
நாளைவருவதாய்
சொல்லிப்போனது.
நான் விழிக்கிறேன்.
திங்கள், 5 செப்டம்பர், 2016
உள்ளேன் அம்மா...
அக்காக்கள்,அண்ணன்கள் எல்லாம் காலையில் பைகளை எடுத்துக்கொண்டு பட்டாம்பூச்சிகள் போல போகும்போது பள்ளிக்கூடம்னா ஏதோ அதிசயஉலகம் போல..
நாமளும் போகனும்னு ஒரு அக்காவின் விரல்களை பிடித்துக்கொண்டு ஒருநாள் போயேவிட்டேன்..
தரையில் போடப்பட்ட வரிசைப்பலகை..
வகுப்புகளைப்பிரிக்கும் தடுப்புகள் ஆசிரியர்கள் வகுப்பில் இல்லாத போது சலசலவென பேசி சிரித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள்..
வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பள்ளிக்கூடம் பூமியிலிருந்து சந்திரனுக்கு போய்வந்த ஆனந்தம்...
அடுத்தவருடத்தின் தொடக்கத்திலேயே அப்பா என்னை கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் சேர்க்க வந்துவிட்டார்...
முத்துக்கருப்பன் என்னும் தலைமை ஆசிரியர் அறையில் பதிவு நடக்கிறது..
வண்ணங்களில் இருந்த சாக்பீஸ் பெட்டிகள், வரைபடம்,வரிசையான தலைவர்கள் படங்கள், உலக உருண்டை என சுற்றிசுற்றி வருகிறேன்..
அப்பா கிளம்பிவிட்டார்.
அப்பா அத்துடன் சேர்த்து மூன்றுமுறை மட்டுமே எனக்காக பள்ளிக்கூடம் வந்திருக்கிறார்..
உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கவும் மறுபடியும் சான்றிதழ் வாங்கவும் என.
மற்றபடி எனக்கு துளி அறிவேனும் இருப்பதாய் நானும் நீங்களும் நினைத்தால் அதற்கான முழுக்காரணமும் என் ஆசிரியப்பெருமக்களன்றி யாராலும் இல்லை..
இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களோடு சகஜமாக பேசுவதைப்பார்க்கும் போது அப்படி ஒரு ஆச்சர்யம் எனக்கு வரும்.
எங்கள் காலங்களில் அப்படியெல்லாம் எங்களால் நினைத்தும் பார்க்க முடியாது..
நகரிலிருந்து வரும் ஒரு ஆசிரியை பேருந்துவிட்டு இறங்கும் போது காத்துக்கிடந்து அவரின் வயர்கூடையை வாங்கி வருவதில் அத்தனை சந்தோசமாக இருக்கும்.
விரல்களைப்பிடித்து "அ" சொல்லித்தந்த அனந்தர் சார்..
தலைப்பாகை கட்டிய தெய்வம் என்றால்..
பொறுமையான பெருமாள் சாரின் இரண்டாம் வகுப்பு அச்சரங்கள் தெரிந்த ஆர்ப்பாட்டம்..
வகுப்புகள் பிடிக்க ஆரம்பித்தது மூன்றாம் வகுப்பின் சம்பூர்ணம் டீச்சர் வகுப்பில்தான்..
அப்பாவின் சக ஆலைய்த்தொழிலாளியின் மனைவி..
உயரம் குறைவு என்றாலும் வானத்து தேவதையாய் தெரிவார் ஆங்கிலத்தின் எழுத்துகள் சொல்லும் போது..
A for Apple எனச்சொல்லி ஆப்பிள் படத்தைக்காட்டும் போது ஒரு தெய்வம் வந்து ஆப்பிளை எனக்கு ஊட்டுவது போலவே இருக்கும்.
ஜெயலட்சுமி டீச்சர் தன்னை அறியாமல் சொல்லிவிடும் சில அசைவ ஜோக்குகள் அர்த்தங்கள் புரியாவிட்டாலும் சிரிக்க வைக்கும்.
சோலைமுத்து ஆசிரியரிடம் அடிவாங்காத பையன்களே இல்லையென்றிருக்கும் பள்ளியில் எனக்கும் அவரே வாய்த்தார்.
பயத்துடன் தொடங்கிய நாலாம் வகுப்பு அவரிடம் அடியே வாங்கவில்லை என்ற கின்னஸ் சாதனையுடன் முடிந்தது என் வாழ்நாள் சாதனை.
ஐந்தாம் வகுப்பு மேரிஜான் என்னும் இன்னொரு அம்மா..
அப்பாவின் மேலாளர் மனைவி..
ஒரு ஆசிரியை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற பிம்பத்தை என்னை யோசிக்க சொன்னால் இவரே வருவார்..
எத்தனை காலங்கள் கடந்தாலும் இணையங்களில் சில சங்கேதக்குறிகளுக்காக உன் ஆசிரியர் பெயரை எழுதென்றால் கை என்னையறியாமல் அவரின் பெயரை எழுதிவிடும்..
பனிரெண்டாம் வகுப்போடு எனக்கும் படிப்புக்குமான பந்தம் முடிந்துபோனது..
திரைப்படங்களில் வருவது போல் எப்போதேனும் பள்ளியின் வழியே போகும் போது..
அந்த வாதாமரங்களும்,குல்மொஹர் மரங்களும் சூழ்ந்த பள்ளிவளாகம் என்னை ஆவிசேர்த்து வாடா மகனே என அணைத்துக்கொள்கிறது..
கருவையில் வேலியிருந்த பள்ளியின் சுற்றில் சுவர் வைத்துவிட்டார்கள்..
காலை வணக்கக்கூட்டத்திற்காகவும்,
சுதந்திரதின கொடியேற்றத்துக்காகவும் கூடிய முகப்பு மைதானம் இப்போதும் கொடியசைத்து அழைத்துக்கொண்டே இருக்கிறது..
பள்ளியில் போட்ட தோட்டம், அழைத்துப்போன பக்கத்து ஊர்ச்சுற்றுலா..
எனக்கு எழுதித்தந்து பேசவைத்த தரைமேடை..
காய்ச்சலில் பரிட்சைக்கு போகமுடியாத போதும் பாஸ் செய்த பர பிரம்மாக்கள்..
ஆசிரியர்களின் மீது அப்படி ஒரு பிரியம் ஆழப்பதிந்ததனால் தான் ஆசிரியர் சகவாசம் இப்போதும் தொடர்வதாக நினைப்பதுண்டு.
நகரத்தின் கடைவீதிப் பரபரப்புகளில் சில வேளைகளில் என் ஆசிரியையை பார்த்துவிடுவதுண்டு...
காலில் விழுந்துவிடுவோமா என நினைத்து கரங்களை பிடித்துக்கொள்வேன் ஒரு பச்சப்பிள்ளைபோல்.
அறிமுகப்படுத்தும் போது முதலில் யாரெனப்புரியாத கண்களின் சுருக்கம் தாண்டி புரியும் போது தலையைத்தடவிக்கொடுப்பார்கள்.
கடவுளின் கைக்கும் அந்த கனிவு இருக்குமாவெனத்தெரியாது..
விசாரித்துவிட்டு அவர்கள் நம்மை விலகி நடக்கும்போது..
சொல்ல முடியாத ஒரு நன்றி உணர்வும்..பாசமும் அலைக்கழிக்கும்..
அய்யோ..என் தேவதை அம்மாவே..
என்னை உங்களுக்கு முதலில் அடையாளம் தெரியாத அளவிற்கு போய்விட்டதே என அழத்தொடங்கும் அவர்களின் முதுமை பற்றிய பயம்..
அட...நமக்கு அவர்கள் இன்னொரு அம்மா தான்...
ஆனால் நாம் ஒருவருக்கு மட்டும் அவர் அம்மா இல்லையே...எத்தனை வருடங்கள்..எத்தனை சின்னப்பிள்ளைகளுக்கு அறிவுப்பால் ஊட்டிய அம்மா...
தெய்வங்கள் அப்படித்தான் இருக்கும்..
வணங்கவேண்டியவர்கள் தான் தேடவேண்டும்.
அய்யோ..நீளும் அவர்கள் பற்றிய எழுத்துகளை எப்படி முடிக்க?
இப்படியன்றி?
உள்ளேன் அம்மா...
நெகிழ்ச்சியான பல நினைவுகளை மீட்டெடுத்த இந்த தினத்தில் ஆசிரியப்பெருமக்களுக்கு என் அன்பு வணக்கங்கள்..
ஞாயிறு, 4 செப்டம்பர், 2016
கி.ராவுக்கு.....-மீரா எழுதும்...
இந்தா மறுபடியும் தடம் புஸ்தகத்துல ஆரம்பிட்டாய்ங்களே..
கி.ரா வோட பேட்டி தடத்துல வந்துருக்கு..
மனுஷன் 91 வயசுல என்ன வேகம்..
ஒரு பாட்டுல சொல்லுவாங்க...
ஒரு பொண்ணு அத்தையா,அக்காவா,பாட்டியா, பொண்டாட்டியா எப்படிப்பட்ட பாதகியாவும் இருப்பாளாம்..ஆனா அம்மான்னு வரும்போது மட்டும் அம்மாவாவே இருப்பாளாம்...
என்னன்னா ஒருத்தன் எத்தனை பேருக்கு விரோதியா இருந்தாலும் யாரோ ஒருத்தனுக்காச்சும் நல்லவனாத்தான் இருப்பான்..
ஆனா அவர் ஒரே போடா போட்டாரு..
கவிதை சர்வவிரோதின்னு..
சர்வநாடியும் ஆடி இன்னும் அடங்காம இருக்கு...எனக்கு..
பெரியவர் சொன்னா பெருமாள் சொன்ன மாரி தான்...
ஆனா கவிதை எழுதுறவனெல்லாம் உலகத்துக்கா எழுதுறான்.?
எல்லாமே திருவள்ளுவராகனும்னா ?
ஏதோ கைல புடிச்சுக்கிற மாதிரி ஒரு போட்டாவோட புத்தகம் இருந்தா கெத்து தானே?
சொந்தக்காதல்,நொந்தகாதல் எல்லாம் எப்படித்தான் சொல்லி அழுகுறது..?
உழத்தெரிஞ்சவன் உழுறான்,
அடிக்கத்தெரிஞ்சவன் அடிக்கிறான்...
எல்லாருமா உங்கள ப்போல எழுதிரமுடியும்.
கரிசக்காட்ல விளையுறது அங்கதான் வெளையும்.
கோயில்பட்டில ஆப்பிளப்போட்டா அரை அடிகூட வளருமான்னு தெரியாது..
பள்ளிக்கூடத்தை தாண்டி நாலு எழுத்த எப்படித்தான் எழுதுறது?
அடேய்...
கவிதன்னு எழுதுனா தீட்டுன்னா..
என்னத்தை செய்றது..?
என்ன சொல்லிக்கொடுத்தீங்க பள்ளிக்கூடத்துல..
பாடம் தாண்டி ஒரு இழவும் கிடையாது..
மனப்பாடப்பாட்டுக்கு படிச்சது தவிர செய்யுள் ஞானம் செங்கல் தான்.
முகநூல்ல வந்து பார்க்கச்சொல்லனும்
அய்யாவே,
தமிழ்ன்னு ஒன்னு ஏதோ இழுத்துக்கிட்டு கிடக்குன்னா கவிதைங்கிற உயிர்க்கஞ்சி ஊத்திக்கிட்டே இருக்குறதுலதானே..
இவியள..கவிதை எழுதாதடான்னா போட்டாவா புடிச்சு காலை,மாலை,நல்லிரவு வணக்கம்னு போடுவாகளே..
அதுக்கு இது எம்புட்டோ மேலன்னு அண்ணாச்சிக்கு தெரியாமப்போச்சே..
இளவட்டம் மட்டும் இல்ல அண்ணாச்சி..
வயசாளிகளுக்கே இது தான் இப்ப பென்சன் மாதிரி டென்சனைக்குறைக்குது..
சக்கர இருக்கவனை இப்படியே உக்காருன்னா..அவன் உக்காருவான்..அது நிக்கிமா..கவிதைகூட அப்படித்தான் அண்ணாச்சி..
எனக்கு ஒரு கூட்டாளி இருக்காரு..
கையெழுத்து கால்மணிநேரம் போடுவாரு..( அவர் கையெழுத்து தாங்க)
கவிதை ராத்திரி கேட்டமுன்னா காலைல வாக்கிங் போகும்போது ஒரு குயர் நாட்ல ஓம்..லாபமெல்லாம் போட்டு வீட்டுக்கதவைத்தட்டி டெலிவரி செஞ்சுட்டு போவாரு..
அவரை எழுதாதடான்னா என்ன பண்ணுவாரு..பாவமில்லையா?
பலபேரு இப்படி இருக்காக..
இன்னொரு சேக்காளி.. யாரோ சொன்னாங்கன்னு தாடிவளத்தாத்தான் கவிதை வருமுன்னு ...
ரொம்பத்தீவிரமா முயற்சிபண்ணி இப்பத்தான் கொஞ்சூண்டு ஆட்டுத்தாடி மாதிரி வளர்ந்துருக்கு..இனி அது தாகூர் மாதிரி வளர்ந்து ..கவிதை எழுதனுமா வேணாமா?
வருசத்துக்கு ஒருத்தர் ரெண்டு புத்தகம் போடுறாங்க...
ஒன்னு கவிதைப்புத்தகம்..
இன்னொன்னு சமையல் குறிப்பு...
சில நாள் சமைக்கலாம்னா அவுங்க புத்தகத்தத்தான் எடுத்துக்குறது..
ஒரு நாளு..
சமையல் புத்தகத்துக்குப் பதிலா கவிதைப்புத்தகத்தை வாசிச்சுட்டே சமைச்சுட்டேன்..
உப்பப் போட மறந்துட்டேன்..
சாப்பிட்டா உப்பு அதிகமாவே இருக்கு..
இதென்னடா ...
மோடிமஸ்தான் வேலையா இருக்குண்ணு யோசிச்சா...
கவிதை படிச்சதுல அத்தனை கண்ணீரு..
சொல்லுங்க அந்தக் கவிதை யாரும் வாசிக்கலன்னாலும் அழுகாதா?
போற போக்குல சொல்லிட்டு சொத்து முதுகில அடிச்சுட்டுப்போனா பரவாயில்ல..
மூலத்துல குத்திட்டுப்போனா?
ஒரு வீட்டுக்கு சாமிரூம் இருக்கோ இல்லையோ சாக்கடை போற வழியில்லன்னா எப்படி..
யாருக்கு எப்படியோ எனக்கெல்லாம் கவிதைங்கிறது சுயஇன்பம் மாதிரித்தான் நடக்குது...
என்ன சிரமம்னா கொஞ்சம் வெளிய தெரிஞ்சு தொலைச்சுடுது..
ஆச்சி...மாடு வந்துருச்சு..கட்னா கட்டுங்க..கட்டாட்டிப் போங்கங்குற மாதிரி..
தோனுனதை சொல்லிட்டுப்போறேன்.
வயசாளிகள் திண்ணையில உக்காந்து பேசிக்கிட்டேதான் இருக்காங்க..
ஏன் பேசுற ..
ஒரு காசுக்கு புண்ணியமில்லன்னா..
அது பாவமா இல்லையா...
கவிதையோ கழுதையோ..
எழுதுறவனுக்கும் வாய்க்கிறது தான்..
சில சீதேவியா சிரிக்கும்..சில சீலப்பேனா அரிக்கும்...
சிரிச்சா ரசிங்க,அரிச்சா சொரிங்க..
அப்டித்தான் வருது..
பஸ்சப்புடிச்சு பாண்டிச்சேரி போய் கேட்டுட்டே வரலாம்னு..
சரி..இங்கன இருந்தே கேட்டுப்புடுவம்னுதான் கொட்டிப்புட்டேன் .
எல்லாத்துக்கும் மேல..
அண்ணாச்சி..
நீங்க கரிசக்காட்டு எழுத்துச்சீவன்..
சென்னைல எழுதுறாக, மருதைல எழுதுறாக,தஞ்சாவூர்ல எழுதுறாக..
படிக்கும் போதே புரிஞ்சுக்குற மாதிரி இக்கு வச்சுத்தான் எழுதுறாக..
கவிதை எழுதுறவன அப்படில்லாம் கண்டுபிடிக்க முடியுதா?
வெள்ளைக்காரன் எழுதுனாலும் அப்படித்தான்,
வெள்ளக்கோயில் காரன் எழுதுனாலும் அப்படித்தான்..
குத்துமதிப்பா நாலு வரி எழுதி ஒரு வெள்ளைக்காரன் பேர கீழ போடுங்க படிச்சுட்டு போறாகலா இல்லையா?
சொல்லப்போனா நம்மூர்ல நல்லாத்தான் எழுதுறாங்க அண்ணாச்சி கவிதையெல்லாம்..
வெளிநாட்டுக்காரன் கவிதையெல்லாம் நம்ம மொழியில படிச்சுப்பார்த்தா.. பேஸ்புக்குல நம்மூர்ப்பய எழுதுறதவிட சீண்டமாட்டாமத்தான் கிடக்கு..
எல்லாத்துக்கும் சரி...மொழிய திட்டாதீக அண்ணாச்சி... தமிழ் இல்லன்னா வேற மொழில எழுதிருப்பேங்கிறீக...
சரிதான் உங்களுக்கு தெலுங்கும் தெரியும்..
எங்களுக்குத்தான் வேற நாதியில்லையே?
விட்டுட்டுப்போங்க அண்ணாச்சி..
ஏதோ எழுதிட்டுப்போறோம்..
எழுதாத எழுதாத கவிதைன்னா..
இந்தா இப்ப நான் எழுதுற மாதிரிதான் எழுதனும்..
எங்களுக்கு ஒன்னும் பிரச்சன இல்ல அண்ணாச்சி..
மறுபடியும் தடத்துல பேட்டி எடுத்தான் நீங்கதான் திட்டுவீக...
சனி, 3 செப்டம்பர், 2016
ஹலோ...மழை வருது...படகு வருமா?
சிறியமழை ஆரம்பித்துவிட்டது..
சந்தோசப்படும் மனம் பயப்படவும் ஆரம்பிக்கிறது..
கடந்த வருட மழைக்காலங்கள் இன்னும் மறக்க முடியவில்லை.
காரொடும் வீதியெல்லாம் படகோட்டி பரிதவித்த படங்கள் இன்னும் மறையவில்லை.
அலைபேசிக்கோபுரங்கள் இயங்கவில்லை...
அடுத்த தெருவில் மிதந்தார்கள் பிணமாக..
பால்காரன் பணக்காரனானான்.
தண்ணீர் கேன் விற்றவன் வீடுகட்டிவிட்டான்.
எல்லாம் சரி...
இந்த வருடமும் மழைபெய்ய ஆரம்பித்துவிட்டதே..
என்ன செய்துகொண்டு இருக்கிறோம்.?
ஏரிகள் தூர்வாரினோமா?
ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டோமா?
கடலூரின் உடைப்பெடுக்கும் ஏரியை என்ன செய்தோம்?
மழை தன் கடமையை சரியாக செய்கிறது..
மனுசப்பயல் தான்..
சின்ன பிள்ளைகள் சேர்த்துவைத்த காசெல்லாம் வாங்கி நிவாரணப்பொருட்களுக்காய் ஓடினோம்..
குரங்குகளாய் வழியில் பறிக்கக்கொடுத்துவிட்டு உயிருக்கு பயந்து திரும்பிய நிகழ்ச்சிகள் மறக்கக்கூடியதல்ல.
எத்தனை துயரங்கள்?
எத்தனை மறக்கடிக்கப்பட்ட மரணங்கள்?
மருத்துவமனைகளில் மிதந்த பிணங்கள்..
எல்லாம் மழை..எல்லாம் மழை என்றோம்..
மழைமுடிந்த நாட்களில் தண்ணீருக்காகவும் வரிசையில் நின்றோம்.
குடும்பங்களை விட்டுவிட்டு பேசவும் முடியாமல்...
சம்பாதிக்கப்போனவன்
இருக்கானாசெத்தானா?தெரியாமல்..
இயற்கை இதற்கு மேலுமா பாடமெடுக்கும் நமக்கு?
சரி சக்தி..
இந்த முறை எல்லாவற்றிற்கும் தயாராய் இருப்போம் நாமாகவே..
வீட்டுச்சாமான்களுடன்
உயிர்காக்கும் மிதவைகள் வாங்கிக்கொள்..
மெழுகுவர்த்தி..
பால் பவுடர்...
சில நாட்கள் பட்டினி இருந்தும் பழகிக்கொள்..
காலக்கடன்கள் கழிக்காமல்...
பற்கள் விளக்கவும் வழிகளில்லாமல் ரொட்டிகள் தின்றும் பழக்கம் கொள்..
கொஞ்சம் பெருமழை பெய்தால் மீண்டும் எல்லாம் நடக்கத்தான் செய்யும்...
எல்லாம் இழப்போம்..
உயிரைமட்டும் மிச்சம் வைப்போம்..
ஹெலிகாப்டர்கள் மீண்டும் நம் மாடிகள் உரசிப்பறந்து உணவுப்பொட்டலங்கள் போடும்..
கால்களில் ஈரம் படாமல் வெள்ளம் பார்க்க வருவார்கள்..
ஓலாக்காரர்கள் படகுவிடுவார்கள்.
அயலூர்க்காரர்கள் அலறி ஓடுவார்கள்..
நல்ல பணக்காரனும் மொட்டைமாடிகளில் கை ஏந்தி நிற்பார்கள்..
கடலூரின் குளங்களெல்லாம் நிரம்பி ஓடும்...
மீண்டும் முகநூலில் ஒன்றுதிரள்வோம்..
மழைக்காக மட்டுமே மசூதிகள் அனைவரையும் அனுமதிக்கும்,
ஆலயங்களில் மதங்களை வெளியேற்றி மனிதர்கள் இருப்பார்கள்..
தொப்பிகள் படகாக்கி கரைசேர்க்கும்..
மழை முடிந்ததும் மாமூலாகும்.
ஏன் சக்தி..?
ஒரு இடர்காலங்களில் தான் இவையெல்லாம் நடக்கவேண்டுமா?
மழைமுடிந்த நாட்களில் எங்கே போனது சமூக அக்கறை...
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருக்க வேண்டாமா?
குறைந்த பட்சம் அடுத்த மழைக்கான முன்னேற்பாட்டிற்காகவேணும் போராடியிருக்க வேண்டாமா?
பார்க்கலாம் சக்தி...
வரட்டும் மழை...
எனக்குக்கவலையெல்லாம்...
ஸ்டிக்கர் தயாராய் இருக்குமா என்பதுதான்...
அன்புடன்.
செல்வக்குமார்..
வெள்ளி, 2 செப்டம்பர், 2016
ஆதியில் ஒரு காதலி..
நமக்கே கொஞ்சம் சூடாயிருச்சு மூளை.
எப்பப்பார்த்தாலும் முரட்டுத்தனமா சீரியஸாவே எழுதிட்டு இருந்தா?
கொஞ்சம் வேற எழுதேன்..அப்படின்னு
ஒரு குரூப்பாவே பல்ப் எரிய ஆரம்பிச்சுடுச்சு..
சரி வா..எதாச்சும் கதை சொல்லிட்டுப்போகலாம்னு எழுத ஆரம்பிச்சேன்...
ஆனால் ஒன்று..இதைப்படிச்சுட்டு நீங்க சீரியஸான என்ன செய்யுறதுன்னு தான் இப்ப என் சீரியஸான கவலை)
கல்தோன்றி முன்தோன்றாக் காலமெல்லாம் இல்லை. இந்தாத்திரும்பிப்பார்த்திங்கண்ணா கிட்டத்துலதான் இருக்கும்...
பள்ளிக்கூடம் படிச்சுட்டு இருந்தேன்...எந்த வகுப்புன்னெல்லாம் தேடாதீங்க..
நான் படிச்சேன் அவ்ளோ தான்.
பிடிக்காத வார்த்தையெல்லாம் கெட்டவார்த்தை,
பிடிக்காத பழக்கமெல்லாம் கெட்டபழக்கம் அப்படி ரெண்டே கேட்டகிரிதான் அகராதில...
இதுல கெட்ட வார்த்தை,பழக்கம்ங்க்கிறது யாருக்குண்ணும் கேட்காதீங்க...
ஒரு ஜவுளிக்கடை பைதான் புத்தகப்பை..
நாலஞ்சு நோட்டிருக்கும்.
வாரம் ஒருமுறை மாற்றும் டிரவுசர்..
கசங்கிய சட்டை...
ஒரு டீச்சரும் அதற்காக அடிச்சதில்லை.
நான் நல்லா படிக்கிற பையனா.. படிக்காத பையனா..
(இந்த இடத்துல நீங்க என்னை நாயகன் கமல் மாதிரி நினைச்சீங்கன்னா ...
சரி..சரி படிங்க)
நான் இடையிலதான் இருப்பேன்..
ஆனா ரொம்ப டக்குன்னு கத்துக்குவேன்.
டீச்சரும் ,சாரும் பேசிட்டு இருக்கும்போது சுனாமியே வந்தாலும் குறுக்கிடக்கூடாதென்பதை மட்டும் ஒரு அறையிலேயே கத்துக்கிட்டேன்னா பாருங்க.
ரொம்ப முன்னாடி வரிசைலதான் உட்கார்ந்திருந்தேன்,.
எதுக்கெடுத்தாலும் அடிச்சா எப்படி உட்கார முடியும்?
நடுவுல உட்கார ஆரம்பிச்சுட்டேன்.
குடிமாற்றி வந்த ஒரு செவத்தப் பிள்ளைய அவங்க அப்பா, ஹெட்மாஸ்டரோட வந்து எங்க கிளாஸ்ல விட்டுட்டு போனாங்க...அந்த பொண்ணும் டக்குன்னு முதல் வரிசைல உட்காந்துடுச்சு..
மறுபடியும் முதல்வரிசைக்கும் போகமுடியாம,அந்த பிள்ளையும் பார்க்கமுடியாம..ச்சேய் என்ன கெரகம் நம்மல இப்படி சோதிக்குதே...
வாத்தியாரெல்லாம் வந்தா அந்தப் பிள்ளைய பக்கத்துல கூப்பிட்டு கன்னத்துல தட்டி விசாரிப்பாக...
நம்மலத்தான் ஏதும் கேட்டா..வேகமா கன்னத்துல தட்டுவாங்க..
அறிவியல் டீச்சர் வட்டவட்டமா கோடுபோட்டு சூரியக்குடும்பம் நடத்துவாங்க..அந்தப் புள்ளதான் சூரியன்..
நமக்கு புளூட்டோ...
மூஞ்சியக்கூட பார்க்காமத்தான் சுத்திச்சுத்தி வரனும்...
நாடகம் போட்டா..அந்தப்புள்ள கட்டபொம்மனா கத்தும்..நம்ம கம்ப கைலபுடிச்சுட்டு பார்த்துட்டு நிக்கனும்..
பிரேயர்ல நமக்கு நேர்நில் ,அகட்டிநில்லுன்னா..அந்தப்பிள்ளைய திருக்குறள் சொல்ல சொல்லுவாங்க..
அப்பல்லாம் கனவு வந்தா நமக்கு அதிகபட்ச ஆசையே டீச்சர் நம்ம கன்னத்தை தடவுறதா தான் இருக்கும்..வாத்தியார்ன்னா அதுவுமில்லை..
டவுசர் போடுறது கூச்சமா உணருற கட்டத்துல எல்லாப்பயலுக்கும் சோடி தேடுற அவசியம் வந்துடுச்சு..
எல்லாப்பயலும் அந்தப்புள்ளய சோடிபோட்டா அது என்ன செய்யும் பாவம்..
நம்ம செட்டுன்னா கூட பரவாயில்ல.. அண்ணன் செட்டெல்லாம் சுத்துறாய்ங்க..
நாமெல்லாம் களத்துல இருக்கோம்னு தெரிஞ்சாலே கிட்டிக்கம்பாலயே போட்ருவாய்ங்க..
கூழுக்கும் ஆச, ஆளுக்கும் ஆசை...
வேற என்னத்தச் சொல்ல?
கனவுல வந்த டீச்சரெல்லாம் கால்ல விழுந்து காலிபண்ணிட்டு அந்த பிள்ளைய குடிவச்சுட்டேன்...
அப்பறம் தினம் கொண்டாட்டம் ..
அண்ணன்கள் அந்தப்பிள்ளையப்பற்றி பேசும்போதெல்லாம் அப்பிராணியாய் இருந்துவிட்டு அந்தப்பிள்ளையிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கவனமாய் இருக்கச்சொல்வேன்..
எல்லாம் கனவுலதான்.
இடையில என்னவெல்லாமோ நடந்துருச்சு..
அந்தப்பிள்ளையும் நல்லா வளர்ந்துருச்சு..
கல்யாணமெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்கன்னாங்க..
எப்ப மனசு சரியில்லன்னாலும் நெனைச்சுக்குறதுதான்.
கனவுல இப்ப பிள்ளையெல்லாம் பிறந்தாச்சு..
எப்படியாச்சும் சொல்லிடலாமான்னு எழுத ஆரம்பிச்சதுதான் கவிதையெல்லாம்..
சொன்னதே இல்லை.
காலமெல்லாம் அப்படி ஒண்ணும் வேகமாவும் போகல...
முட்டிமோதி தடுமாறும் போதெல்லாம் பழைய பள்ளிநண்பர்கள் எவரேனும் பேசக் கிடைத்துவிடுவார்கள்.
இவ்வளவு நாளாகியும் தைரியமா அந்தப்புள்ளைய பற்றி விசாரித்ததில்லை..
பேச்சுவாக்குல அப்டியே கேட்டு தெரிஞ்சுக்குறது தான்...
கல்யாணமெல்லாம் ஆயிடுச்சாம்...ஏதோ சொந்தக்காரப்பையனுக்கு கட்டிவச்சாங்களாம்..
போன வருசத்துல ஒரு நாள் கோயில்திருவிழாவுக்கு போக வேண்டியிருந்ததால..
பள்ளிக்கூடத்தை தாண்டித்தான் போக வேண்டியிருந்தது.
அந்த ஊருல ஒரு வசதி பள்ளிக்கூடத்துக்கும்,கோயிலுக்கும்,
சுடுகாட்டுக்கும் ஒரே பாதைதான்.
பள்ளிக்கூடத்தைத்தாண்டித்தான் எல்லாத்தையும் தாண்டனும்..
கோயில்ல போய் சாமியக்கும்பிட்டுட்டு
பள்ளிக்கூடத்துல போய் படிச்சுட்டு அப்படியே சுடுகாட்டுக்கு போயிடவேண்டியது தான்..ஆஹா வாழ்க்கையைத்தான் எவ்வளவு எளிதாய் வடிவமைக்கத்தெரிந்தவர்களுக்கு
இன்னும் அந்த ரோட்டைமட்டும் வடிவமைகத்தெரியாமலே இருக்கிறார்கள்.
பள்ளிக்கூட வாசலில எப்பவும் ஒரு சின்ன பாயம்மா கடைதான் இருக்கும்...
விளக்கமாற்துக்குச்சியில ஒரு மிட்டாய் மேக் இன் பாயம்மா வீடு வச்சிருக்கும்..ஈ சரியா அந்த பிராந்தியத்துக்கே வராது..
டார்க் பிங்க் வண்ணத்துல ஒரு ஜவ்வுமிட்டாய் வாங்கி வாயில போட்டா..இப்பல்லாம் என்னா லிப்ஸ்டிக்...
உதடு..நாக்கு..அதையும் தாண்டி அடிவயிறு வரை சிவக்கும்..
அதெப்படி அடிவயிறு சிவந்தது உனக்குத்தெரியும்னு கேட்டீங்கன்னா அப்புறம் என் கதை அவசரத்துக்கும்,ஆத்திரத்துக்கு மட்டுமல்லாமல்....த்திரத்துக்கும் ஒதுங்கியது வரை சொல்லவேண்டிவரும்...
ஜாக்கிரதை...(நான் என்னைச் சொன்னேன்.)
விடுங்க...
இப்ப புதுசா ஒரு கடை வந்துருக்கு..
கொஞ்சம் பெருசா..நோட்டு ,பேனா,சாக்லேட்டுன்னு இருந்துச்சு...
ஸ்டூல் போட்டு ஒரு பெண் அமர்ந்திருந்தாள்..
கடந்துவிட்ட சில நொடிகளில் டக்கென நினைவில் வந்தது..
அட
அந்தப் புள்ள...
திரும்பும் போதெல்லாம் ஒரே கவலை..
ஒரு நாளில் பார்த்துவிட்டு வந்த எனக்கே இப்படி இருக்கிறதே...
அந்த அண்ணன்கள் மனசு எப்படியிருக்கும்.?
ரொம்ப முக்கியமான விசயம்..
தயவுசெய்து அந்தப்பெண்ணைப் பார்த்தீங்கண்ணா இதைச்சொல்லிடாதீங்க..
எனக்கு இன்னும் தைரியம் வரல்ல..
இது நமக்குள்ளயே இருக்கட்டும்..
வியாழன், 1 செப்டம்பர், 2016
ஏரோட்டும் உழவரெலாம்...தார் ரோட்டில்...
செய்திகளின் அழுத்தங்கள் மீண்டும் மீண்டும் உனக்கு எழுதத்தூண்டுகிறது.
உன்னையன்றி யாரிடம் சொல்ல?
மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனைகட்டி
போரடித்த
அழகான தென்மதுரை..
தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை..
சுழலும் ஏர் பின்னது உலகம்..
தமிழகம் தான் எத்தனை செல்வங்களை உடையது?
காந்தியிலிருந்து கலாம் வரைக்கும் வியந்து போற்றிய தமிழகம்..
நேற்று முன்தினம் விவசாயிகளின் போராட்டம்..
இந்த தேசத்தில் தான் போராட்டங்களுக்கு அளவும் அழகும் கிடையாதே?
சுட்டெறிக்கும் வெயிலில் முதிர்ந்த விவசாயிகள் போராட்ட அனுமதிக்காக சாலையில் நெடுஞ்சான் கிடையாக விழுந்துவணங்கும் படம் ஒன்று பார்க்க நேர்ந்தது...
பதறிப்போனது இதயம்..
பிறர் உண்டு கொழுக்க
உழுது களைத்தவன் அழவும் போராடும் அவலம்.
அரைநிர்வாணமாய் தொடரும் பட்டினிப்போராட்டம்..
சாலைகளுக்காய் நிலங்கள் பிடுங்கினோம்..
மீத்தேன் வருமென்று
கண்ணீர் தோண்டினோம்..
ஆற்றின் அடிமடிவரை லாரிகள் வைத்து கற்பழித்தோம்.
தண்ணீர் வேண்டி அவர்களை வீதிக்கு வரவைத்துவிட்டோம்..
யார் வேண்டுமானாலும் போராடலாம் சக்தி..
இந்தியாவில் விவசாயிகளை மட்டும் போராடவிடக்கூடாது..
அவன் அழுதால் நாம் நாசமாய்ப் போவோம்..
ஆயிரம் செயற்கைக்கோள், அணுகுண்டு சோதனைகள்..
எல்லாம் சரிதான்..
நதிகளின் நீரை சரிசெய்ய முடியவில்லை இவர்களால்..
வரலாறு முழுவதும் கடிதங்கள் எழுதுவதும்,
பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் செலவழித்தால் பின்னொருநாளில் சிரிக்கும் சரித்திரம் நம்மைப்பார்த்து.
கடந்த வருடங்களில் விவசாயிகளின் தற்கொலைப்புள்ளிவிவரங்கள் நாட்டின் அவமானம்.
நாங்களும் ஆதரித்தோம் என்பதாய் கொடிகளைத்தூக்கிவந்து அவரவர் தொலைகாட்சிகளில் பொங்கிவிட்டுப்போய், மாலையில் விடுதலையாகிப்போவதால் முடிந்துவிடாது வேதனை..
வட்டிக்கும்,தாலிவிற்றும் நட்ட பயிர்கள் குடங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் விவசாயி அழுதானெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு சோறும் பாவத்தின் அப்பம்.
ஆயிரக்கணக்காய் நெல்வகை தொலைத்தோம்.
பாரம்பரியத்தின் பலவற்றை இழந்தோம்,
சிறுதானியம்,
விவசாயச் சொல்மணிகள், சரியாகச்சொன்னால் ..கிராமங்களையே இழந்தோம்..
இன்னுமிருப்பது மிச்சசொச்சம் விவசாயிகளையும் இழந்தால்..
கே.எப்.சி யில் சிக்கன் கடித்து,கொக்ககோலா குடித்துச்சாவோம்.
ரஜினியின் அடுத்த படம் யாருக்கு,
அவள் படுத்தது யாரோடு?
அவனா இவனா?
படத்துக்கு பாலூற்ற,
நள்ளிரவிலும் கூடிய திரையரங்கக்கூட்டம்,
பேச்சு அரசியல், வெளிநடப்பு, 110ல் 1008
எல்லாம் செய்யலாம் நாம்..
அதற்கு அவர்கள் உ(ப)யிரோடு இருக்கவேண்டும்..
ஊடக வெளிச்சம் பச்சமுத்து தாண்டி பச்சைப்பயிர்களின் மீதும் படவேண்டும்.
முகநூலும்,வலைத்தளமும் இவர்களையும் பேசவேண்டும்.
அன்புடன்.
செல்வக்குமார்.
புதன், 31 ஆகஸ்ட், 2016
பெண்ணின் பெருந்தக்க... வெற்றுக்கூச்சல்...
கல்வி என்பது விலை அதிகமாகிப்போன சூழலில் நீ எப்படி படிக்கிறாய் என்பதை விட, என்ன பாதுகாப்பில் இருக்கிறாய் என்பதே இப்போது கவலையாய் இருக்கிறது.
என்ன நடக்கிறது இந்த தேசத்தில்?
ஒரு மரக்கட்டையில் அடிவாங்கிச் சாகவோ..
சீவிச்சிங்காரித்து கனவுகள் வளர்த்து கல்லூரி அனுப்புகிறோம்?
காதலெனும் மயக்கத்தில் கத்தியெடுத்து வெட்டவும், அமிலங்களை வீசவும் எப்படி முடிகிறது..
வெட்டினார்களா தெரியாது.. செம்மரம் வெட்டியதாய் சுட்டுக்கொள்கிறார்கள்.
மகளே..
இந்த நாட்டில் மரங்களுக்கு உள்ள பாதுகாப்பு மகள்களுக்கு இல்லையா?
என்ன சட்டங்கள்..
இருப்பவனுக்கு ஒன்றும் இல்லாதவனுக்கு ஒன்றுமாய்?
மரண தண்டனை எனக்கு உடன்பாடில்லை என்றாலும்..
இவர்களைக் கொன்றாலும் தீராது ஆற்றாமை...
பூக்களையா பொசுக்குவது..?
காதலிக்க மறுத்ததாய்
கத்தி எடுப்பவன் எப்படி காதல் அறிவான்?
வார்த்தைகள் தேடிச்சலிக்கிறேன்..
வரவே இல்லை..
சிந்திக்கிடக்கும் ரத்தம் உறைகிறது நெஞ்சுக்குள்..
எப்படிப்பார்ப்பான் உயிர் ஓடிக்கிடக்கும் கோரத்தை?
பெண்ணின்
பெருந்தக்க யாவுள?
நாசமாய்ப் போக...
இந்தப்பெருமைகளில் அணுவளவேனும் வந்து அணைத்துக்
கொண்டிருக்குமா அவள் கட்டைகளில் அடிவாங்கும் போது.?
பேராலயத்துக்குள் கொல்லப்படுகிறாள்.
ரயில் நிலையத்தில்..
கல்லூரி வளாகத்துள்..
அவள் நடக்கும் போது,
படுத்திருக்கும் போது,
கழிப்பறை போகும் போது?
இனி அவளை எங்கெல்லாம் கொல்லுவது?
செத்துப் புதைத்தாலும்
கல்லறை விடுவார்களா தெரியாது..?
மேசைகள் தட்டுவதும்,
வெளியே போய் உள்ளே வருவதும்,
வீதியின் முனைகளில் இருந்து வியட்னாம் வெற்றியை கொண்டாடுபவர்களும்,
தமிழன்,தெலுங்கன்,வந்தேறி என நீட்டி முழக்குவோரும் மூட்டைகட்டி வைய்யுங்கள்..
பெற்றபிள்ளைகள் பெட்டியில் வைத்து சவமாக்கிப் பார்த்து நிற்கையில் வெட்டியாய் இருந்து விட்டு...
நாடு என்ன?
அரசு என்ன?
முழங்கி என்ன?
ஒன்றுமில்லை..
ஒன்றுமில்லை..
அன்புடன்.
செல்வக்குமார்.
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016
பற்றும் விரல் நீயெனக்கு...
உப்புச்சட்டி
கழுவிய தண்ணீர்.
ஒடிந்து விழுந்த
முருங்கையின் கீரை..
என் பட்டினி
கொன்றவளே...
எப்போதும்
பசியள்ளித்
தின்றவளே...
அறியாத
என் தாயே!
உன் விரல்
பட்டு
படர்ந்ததுதான்
என்
தலையெழுத்து..
ஆறு பெறும்
பேறு பெற்றாய்..
அழக்கூட
சூழலின்றி
அழகு கெட்டாய்.
புகைப்படத்தில்
நீ
சிரிப்பாய்..
அம்மாவே
அப்புறமாய்
எப்போ
நீ
புன்னகைத்தாய்.
கரண்ட் அடுப்பு..
காலமில்லை.
அம்மா
நீ வெந்ததெல்லாம்
முள்ளெரிந்த
மண் அடுப்பு..
புகைசூழும்...
உன்
ஊதாங்குழல்
மூச்சும்
ராகமிடும்..
குடியிருப்பில்
கதவிடுக்கில்
குளிரடிக்கும்..
கந்தலான
உன் சேலை
எனை மூடும்.
அரிசிகளில்
கல்பொறுக்கி
ஓய்ந்தவளே..
உணர்வாகத்
ஈந்தவளே...
ஓர் தினத்தை
அன்னையர்க்கு
வைத்தவனை
வெகுகாலம்
தேடுகின்றேன்..
நான்
தூங்க
விழுந்தாலும்
சொல்லுவது
உன்னைத்தான்
இருந்தாலும்..
கவிதை
கேட்டால்..
பற்றுவதும்
உன்னைத்தான்.
வியாழன், 25 ஆகஸ்ட், 2016
காணாமல் போன (வி)மானம்..
மனிதர்களை மறந்தே போனது.
அரங்கேறும் ஆணவக்கொலைகள்.
கண்ணுக்கெதிரே காணாமல் போக்கிவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருப்பதுதான் அறிவியலின் வளர்ச்சியா?
வேண்டியது விமானமல்ல.
தேசத்தின் மானம்.
இதற்கான தூண்டுதல்களை?
பரஸ்பரம் குற்றங்கள் சொல்லுமிடமாகவும் மாறிவிட்ட மையங்கள் பேசவேண்டாமா இதை?
இன்னும் கண்டுபிடிக்க முடியாத அளவில்தான் இருக்கிறதா உங்கள் முன்னேற்றம்?
நாட்டைக்காக்கும் இன்னும் பல பணிகளில் இன்னும் எத்தனை விமானங்களை தொலைக்கப்போகிறீர்கள்?
அநாதையாகி நிற்கும் காணாமல் போனவர்களின் நிம்மதியை எங்கு தேடிக்கொடுப்பீர்கள்..
மக்கள் நலம் பேணும் நல்லரசு ஆவது அவசியம்.
செல்வக்குமார்.
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016
ஜக்கிக்கு....ஒரு விண்ணப்பம்...
அன்பின் சக்திக்கு,
சமீபத்தில் புதிதாய் சில விதிகள் வந்திருக்கிறதாம்.
அரசு நிர்ணயம் செய்த வயதைத் தாண்டியிருந்தாலும் இருவர் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டுமெனில் பெற்றோர்கள் ஒப்புதல் வேண்டுமாம்.
அறிவார்ந்த பெரியவர்கள் போடும் சட்டம்...
அதனை அப்புறம் பார்க்கலாம்.
ஆனால் திருமணத்திற்கு விதி செய்யும் அரசு..
துறவறம் எடுப்பதற்கு ஒரு விதியும் செய்யவில்லை என்பதுதான் தலைவிதி.
பங்குனி சித்திரைகளில் ஆலந்துறை தாண்டிய வெள்ளியங்கிரி மலைச்சாரலில் மனிதர்கள் பயணம் செய்யும் காலம்.
ஏழுமுறை அந்த மலைகளில் நான் நடந்திருக்கிறேன்.
வெள்ளை விநாயகர் கோயில்,பீமன் களியுருண்டை,
சீதா வனம்,திருநீற்று மலை,ஆண்டி சுனை ,இன்னுமென கடந்து உச்சியை அடையும்போது செத்து சொர்க்கம் வந்த உணர்விருக்கும்.
அடரிருள்சூழ் மலையில் ஒருபுறம் நட்சத்திரங்களென கொட்டிக்கிடக்கும் கோவையும்,
ஆங்காங்கே ஒன்றென கேரளாவும் காணக்கிடைக்கும்.
காட்டுநெல்லி,மருந்துகளென ஆதிவாசிகளின் சிறுகடைகள் அத்தனை அழகு.
1990 ஐ தாண்டிய நாள்களில் ஆசிரமம் ஒன்று முளைக்க ஆரம்பித்தது.
அதன் ஆரம்ப காலங்களிலிருந்து வதந்திகளோடே வளர்ந்தது.
ஜக்கி மனைவியின் திடீர் மரணம் அவ்வளவு பரபரப்பாய் இருந்தது.
சித்தர்களும்,யோகியரும் வளர்த்த தியானங்களும்,யோகங்களும் புதுவாழ்வு பெற்றதாய் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினோம்.
இதழ்கள் எல்லாம் நிழல் எழுத்தாளர்கள் இவர்களின் பெயரில் எழுதிக்குவித்தார்கள்.
சக்தி!
யோகம்,தியானம் இவற்றில் நாம் உட்புக வேண்டாம்.
ஆனால் ,அண்மைகளில் ஆசிரமங்கள் பற்றி வரும் செய்திகள் ஆரோக்கியமானதாயில்லை.
படித்த,பணக்கார பெற்றோர்கள் பிரச்சனைகளுக்காக பிள்ளைகளுடன் ஆசிரமம் போக,
பிள்ளைகளைப் பறிகொடுக்கும் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சிவன் திருவிளையாடல் காலத்திலேயே பிட்டுக்கு மண்சுமக்க வீட்டுக்கு ஒருவர் போதும் என்றிருக்கிறார்கள்.
பெற்ற இரு பெண்களையும் மொட்டையாய் பார்க்கும் அவலம் பெற்றோரால் தாங்கக்கூடியதல்ல.
மீண்டும் ஒற்றைப்பெண்ணைப் பெற்றவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு பெற்றோராய் இதுவே என் வேண்டுகோள்.
அய்யா...ஜக்கி வாசுதேவ் அவர்களே.
உங்கள் தியானம்,யோகா பயிற்சிகளுக்குள் நான் வரவில்லை..
பெற்ற தாயும் தகப்பனும் வெளியே கதறியழ,
அதைத்தாண்டியுமா யோகமும்,தியானமும் செய்துவிட முடியும்.?
மூளைச்சலவை,மனமாற்றுதல்,போதை போன்ற பழக்கங்கள், எது பற்றியும் பேசவில்லை.
வாயையும் வயிற்றையும் கட்டி பெண்ணைப்பெற்று வளர்த்து படிக்க வைப்பதைக்காட்டிலுமா தியானம் பெரிது?
வனங்களை அழித்து கட்டடமாக்கினீர்கள் நல்லது...
குடும்பங்களை அழித்து வனமாக்காதீர்கள்..நல்லதல்ல.
கருவறை தாங்கி பாலூட்டி வளர்த்த தாயின் கண்ணீர் எல்லா ஆயுதங்களிலும் கூரானது.
சட்டங்களும்,அரசுகளும் உங்களுக்கு ஆதரவாய் இருக்கலாம்.
ஜக்கி அவர்களே...
சட்டங்கள் சிவன் செய்ததல்ல..
அரசுகளும் ஆண்டவனுடையதல்ல.
உங்கள் ஆசிரமத்தை எப்படிவேண்டுமானாலும் வளர்த்துவிட்டுப் போங்கள்.
வணங்க வரும் எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்.
இஞ்சினியரிங் சொல்லிக்கொடுத்த எங்கள் பிள்ளைகளின் லட்சணம் எப்படியிருந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
தன்னிச்சையான முடிவெடுக்கும் சட்டப்படியான வயதுதான்..
ஒத்துக்கொள்கிறோம்.
ஜக்கி அவர்களே...
இது அமெரிக்கா அல்ல.
இந்தியா..
குடும்பம் என்னும் அமைப்பு இன்னும் சிதையாமலிருப்பது பிள்ளைகள் மேல்கொண்ட பாசத்தால் தான்.
பெற்றோர்களும்,பிள்ளைகளும் ஒப்புக்கொண்டால் மட்டும் உங்கள் சேவைக்கு அனுமதித்து எதை வேண்டுமானாலும் வளருங்கள்.
அன்பான , அறிவான,
ஐ.நா வரை போய் யோகக்கலை வளர்க்கும் ஜக்கி அவர்களே...
பெற்றோர்களின் கதறல் சத்தம் கேட்டுத்தான் இவையெல்லாம் நிகழுமெனில்
மன்னிக்கவும்...
எனக்கு உங்களின் எதிலும் உடன்பாடில்லை.
அன்புடன்.
செல்வக்குமார்.
வியாழன், 18 ஆகஸ்ட், 2016
ஜோக்கர்...சிரிக்கமுடியவில்லை
நீண்டநாள் புண்ணின் மேல் படரும் மென்தோலை அரிப்புக்காய் சொரியும் போது அப்படி ஒரு சுகமும்...
முடிந்தபின் வரும் எரிச்சலும் எப்படியோ
அப்படித்தான் இருக்கிறது ஜோக்கர் படம் பார்த்த எனக்கு.
கன்னங்கள் பழுக்க பழுக்க பளார் பளார் என வசனங்கள் விழும்போது உற்சாகம் குதியாட்டம் போடுகிறது... வெளியே வந்தால் அடப்பாவமே..
எல்லாமே நம் மீதே விழுந்த அடிகளாய் வலிக்கத்தொடங்குகிறது.
புரையோடிப்போய் சமூகத்தின் ஒரு அடையாளமாய் மாறிப்போன ஊழல்,சாதி,மதம்,அரசியல் பற்றிய கேலிகளை மிக இலாவகமாக கையாண்டிருக்கிறார் வசனங்களில்.
கண்களின் அருகே மெல்லிய சுருக்கங்கள் தெரியும் தர்மபுரி மாவட்டத்துக்கேயான முகம் நாயகனுக்கு நச்சென பொருத்தம்...
அழும் காட்சிகள் நிறைந்த படத்துக்கு ஜோக்கரென பெயர்,
வறண்ட பிரதேசத்தின் தண்ணீர் விற்கும் நிறுவனம், மணக்கா வாழ்வின் பெண்ணுக்கு ரோஜாத்தோட்டமென அழகிய முரண்.
மக்கள் ஜனாதிபதியாய் மனசால் வாழும் நாயகன் பப்பிரெட்டி பவனாய் பேசுவது ராஜுமுருகனின் லூசுப்பையன் சாயல்.
திரைப்படம் நம் வாழ்வில் நாம் செய்ய முடியாததை யாரேனும் செய்வதாய்க்காட்டி சிறிதுநேர மயக்கமூட்டுவது.
ஒரு தனிமனிதன் 10 பேரை அடிப்பதும்...துப்பாக்கி குண்டின் சுழற்சியைக் காட்டுவதும்,
சுற்றிலும் ஆட காதல் செய்வதும் காலம் காலமாய் தொடர்வது இப்படித்தான்.
ஜோக்கரும் கூட அப்படித்தான் நம் கவனம் ஈர்க்கிறது.
குண்டும் குழியுமான சமீபத்திய சாலையில் நாம் பயணித்துக்கொண்டே மனசுக்குள் திட்டுவதை திரையில் காணும் போது அத்தனை மகிழ்ச்சி.
மருத்துவமனைகளின் அலட்சியம்,
விலங்குகளின் மேல் செலுத்தப்படவேண்டிய கருணை,
போராட்டங்களுக்கான புதிய யுத்திகள் என விரிந்திருக்கிறது திரைப்பூ...
கழிப்பறை மட்டுமே முழுசுமாய் இயங்கியிருக்க வேண்டிய படம்..
கட்சிக்கூட்டம் தொடங்கி காந்திவேடப்போராட்டமென கதம்பாயிருக்கிறது.
உண்மைக்கதாநாயகனாய் சித்தரிக்கப்பட வேண்டிய பொன்னூஞ்சல் கதாப்பாத்திரம் உருவத்தில் ஏதோ ஒரு ஒற்றுமை தேடியிருப்பதால் முழக்கமிடுபவராகவும்,
கதையை முடித்துவைப்பவருமாக இருந்துவிடுகிறார்.
மக்கள் ஜனாதிபதி முகநூலில் போராட்டம் அறிவிப்பது வரமா சாபமா தெரியவில்லை.
வசனங்களில் தெறிக்கும் தீ கதையினில் எரியவில்லை....
காட்சிப்படுத்தலில் இருந்த முனைப்பும் அழகும் கதைப்படுத்துதலில் இருந்திருந்தால் ஆட்டத்தின் சீட்டுகளில் 13ம் ஜோக்கராகவே இருந்திருக்கும்.
தர்மபுரியின் குக்கிராமத்திற்கு உண்மை ஜனாதிபதி வருவது உள்ளூர் அமைச்சர் வருவதினும் குறைந்த அளவில் காட்டப்படுவது,
நாயகனின் போராட்ட காலத்திற்கான பொருளாதாரப் பிண்ணனி,
நாயகனின் துணைக்கு வரும் ஒரு பெண்ணின் மற்றொரு முகம், காவல் துறையின் முகத்தை காட்டியதில் முரண்பாடு. (அவ்வளவு எளிதாகவா போராட விட்டுவிடுவார்கள் போலிஸ்காரர்கள்.?)
என்ன சொன்னாலும்
வசனங்கள் நம்மை வசப்படுத்திவிடுவது மறுக்க முடியாது..
சகல கட்சிகளையும் சகல காட்சிகளிலும் வறுத்தெடுப்பதும் புரிகிறது.
பாத்திரப்படைப்புகளில் நாயகனுக்கு அடுத்ததாய்
பவா வின் தேர்வு.
பொதுவாய் படைப்பாளிகள் திரைக்கு வரும்போது கோமாளிகள் போல் பார்த்துப்பழகிய கண்களுக்கு பவாவின் இயல்பான பேச்சு,உடல்மொழி அற்புதம்,
பொன்னுஞ்சலாய் வரும் ராமசாமியின் வசனங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாகிறது.
காட்சிப்படுத்தலில் செழியனின் கேமரா கண்களுக்குள்ளேயே காட்சிகளைக் கடத்துகிறது...
நோய்வாய்ப்பட்ட நாயகியின் பராமரிப்பு,நீதிபதியின் ராசி பற்றிய விசாரிப்பு,
கதையின் முடிப்பில் மட்டும் வலிந்து வரும் தோழர் என ஒட்டாததாய் நிறைய..
குக்கூ என்னும் மெல்லிய உணர்வைத்தூண்டிய படமெடுத்த ராஜுமுருகன் நீண்ட ஆலோசனைகளுக்கும்,
ஆவலோடும் படமாக்கியிருக்கும் இந்த ஜோக்கர் வசனங்களுக்காகவும்,
காட்சிப்படுத்தலுக்காகவும் பார்க்கலாம்.
பொதுவாய் நான் இசை,.மற்றும் பாடல்களை கூர்ந்து கவனிப்பதில்லை..
வழக்கமான விமர்சகர்கள் போல அதைப்பற்றி எழுதவும் தெரியவில்லை..
என் விமர்சனங்கள் உங்களில் யாரையேனும் வருத்தப்பட வைக்குமெனில் மன்னிக்கவும்...
நான்.
செல்வக்குமார்.
திங்கள், 15 ஆகஸ்ட், 2016
போடா ...நானொன்றும் அழவில்லை.
போடா..
நானொன்றும்
அழவில்லை...
பொல்லாக்கவிஞர்கள்
பொசுக்கென்று
போவது
புதிதல்ல..
போடா
நானொன்றும்
அழவில்லை..
அருந்துவதால்
கவி
வருமென்றால்
வருந்துவதால்
ஒன்றும்
வருவதில்லை
போடா
நானொன்றும்
அழவில்லை
சுதந்திரமாவதிலும்
அவசரம் தான்...
தனக்கே
விடுதலை
கொடுத்துக்கொண்டாய்.
போடா
நானொன்றும்
அழவில்லை
வார்த்தைக்கு
உயிரெல்லாம்
தந்துவிட்டு
காற்றோடு
கலந்தவனே..
போடா
நானொன்றும்
அழவில்லை
ஆயிரமாய்
பாயிரங்கள்
அத்தனையும்
காவியங்கள்.
ஈரமில்லை
எந்தன்
கண்ணில்...
போடா
நானொன்றும்
அழவில்லை
இத்தனை
பேர்
அழுதோமே
எழுந்துவர
இரக்கமில்லை
போடா
நானொன்றும்
அழவில்லை
வரிகளிலே
சிலை செய்தாய்..
தமிழ் கெஞ்ச
கவி செய்தாய்..
வாழ்க்கையில்
தான்
வஞ்சம் செய்தாய்...
போடா
நானொன்றும்
அழவில்லை
புல்லுக்கும்
கல்லுக்கும்
யாழுக்கும்
எழுதியென்ன
பால் மறக்கா
உன்
பிள்ளை
தேடுமடா
உன் வாசம்..
போடா
நானொன்றும்
அழவில்லை
பேனாவோ
மைசிந்தி
கவி சொல்லும்..
போனாயே
அந்தப் பாட்டெல்லாம்
என்ன செய்யும்..
போடா
நானொன்றும்
அழவில்லை
காயம்பட்டு
இறந்திருந்தால்
கண்ணீர்க்கடல்
ஒன்று
பிறந்திருக்கும்.
காணாமல்
போயிருந்தால்
தேடி
அந்த
தெய்வம் வந்திருக்கும்...
காலம் உன்னை
அழைக்கவில்லை..
காலன் வந்து
சாகவில்லை..
நாடித்தான்
போய்த்தொலைந்தாய்..
நல்லதமிழ்ப் பாட்டு..
உலகம்
உள்ளவரை
கேட்டிருக்கும்..
குமரா!!
உன்
கவிதை
எப்போதும்
வாழ்ந்திருக்கும்...
தண்ணீரின்
சுழல்
வீழ்ந்த
என்
தோழா...
உன் பெண்டு
உன்
பிள்ளை
நீயின்றி
வாழ்வாரே...
அதற்கெனவே
அழுகின்றேன்...
போய்வா..
போடா
நானொன்றும்
உனக்காக
அழவில்லை...