ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

சென்னையில் என்னை மோதின......!

எத்தனை கண்டங்கள் என டீச்சர் கேட்ட பொழுது ஏழு என்று  ஈஸியாக சொல்லிவிட்டேன் பள்ளி நாட்களில். நாஸா குறைந்தது வருடத்திற்கு ஒரு கண்டமேனும் கண்டுபிடிப்பதாக அறிந்து கொள்கிறேன்........
          அவையெல்லாம் தயவுசெய்து சாதனைகளின் பட்டியலில் சேர்க்காதீர்கள்.....
         எனக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் கண்டங்கள் தாண்டுவதே நித்யானுபவம்......
         ஏழு கடல்,ஏழுமலை,ஏழு கண்டங்கள் தாண்டியிருக்கும் ஒரு பூவைப்பறிக்க என்னிடம் நீங்கள் என்னிடம் கூறினால் நானெல்லாம் அப்படிப்பட்ட பூக்களால் ஒரு மாலையே செய்து தினந்தோறும் உங்கள் பாதாரவிந்தங்களில் சம்ர்ப்பிப்பேன்.

சிறிதுமில்லாத, பெரிதுமில்லாத ஒரு சாலையின் மேல் தான் வீடு இருக்கிறது.
எப்போதும் சாலையை எளிதாய் கடக்க முடிவதில்லை.
இந்த மனிதர்கள் ஏன் இப்படிப் பறக்கிறார்கள்?
காலை ஏழுமணிக்கும் இப்படித்தான் இருக்கிறது..
இரவு இரண்டு மணிக்கும் இப்படித்தான் இடம்பெயர்கிறார்கள்.
இவர்களின் வேகத்தில் பயணித்தால் முருகனெல்லாம் உலகத்தை சுற்றும் போட்டியில் மூன்றாமிடம் கூட பிடிக்க முடியாது.

இவர்கள் சாலையை கடக்கும் லாவகமும், கிடைக்கும் சந்துகளில் சீறிப்பாயும் வேகமும்,
இந்தியா முன்னேற 2020 எல்லாம் தேவைப்படாது.

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையுள்ள நாய்களைக்கூட(எந்த பூடகமுமில்லை)இங்கே தான் பார்க்கிறேன்.

தாயின் நினைவிலேயே நாளெல்லாம் வாழும் மாந்தர்.
எந்த வார்த்தை பேசும் முன்பும் தாயின் மறுபெயர் சொல்லியே ஆரம்பிக்கின்றனர்.

ஒரு மொழி விளங்காத தேசத்தில் பாஸ்போர்ட் தொலைத்தவனாய் நடந்து கொண்டிருக்கின்றேன் சாலையில்..
விரையும் கார்கள்..
ஆணும் பெண்ணுமாய் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் சாகசம் செய்யும் மோட்டார் வாகனங்கள்..
சரிக்குசரி மல்லுகட்டும் மாநகரப்பேருந்துகள்...

ஒருவேளை இங்கு வந்துதான் நான் ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டி இருந்திருக்குமெனில்.
எனக்கு வாழ்நாள் முழுவதும் வாகனப்பிராப்தம் வாய்த்திருக்காது.

மிகக்கவனமாகத்தான் நடக்கிறேன்.
சர்க்கஸ் காட்சிகளில் வலையிலிருந்து மேழெலும் சாகசக்காரியென உச்சந்தலையில் கால்களை அழுத்தி பறந்து போகிறது ஒரு காகம்.
மேலே பார்க்கிறேன்.
சாந்தமாய் மின்கம்பியில் அமர்ந்து என்னைப்பார்த்து சிரிக்கிறது.

அட..அற்பப் பறவையே.. உனக்கு அவ்வளவு திமிரா?
மனிதனென்றும் பாராமல் இது என்ன விளையாட்டு?

நான் பாரதியுமில்லை..
நீ என் ஜாதியுமில்லை...

இன்னொரு முறை இப்படி செய்தால்.. தொலைத்துவிடுவேன் ஜாக்கிரதை..

பத்தடி நடந்திருப்பேன்...

இந்தமுறை மிக அழுத்தமாக கால்களை அழுத்திவிட்டு பறந்து போகிறது அதே காகம்.

ஒன்னும் புடுங்க முடியாது... இது சென்னையின் காகம்..


சரி வாங்க  பார்ப்போம்..

இனி சாலைகளில் நடக்கும் போது சனியின் வாகனத்தையும் கவனித்து நடக்க வேண்டியிருக்கும்..

ஆக... சென்னையில் என் மீதான முதல் மோதல்.....

4 கருத்துகள்:

  1. பட்டனத்தில் இதுபோல பல காகங்களின் மோதல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். கடக்க...கடக்க.. படைப்பாற்றல் பட..பட.. வெற்றியை நோக்கி நட...நட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தமைக்கு நன்றி....தங்கள் மேலான வாழ்த்துக்கும்...

      நீக்கு