திங்கள், 16 நவம்பர், 2015

மாமழை போற்றுதும்...

அன்பின் சக்திக்கு,
சென்னையில் உங்களை விட்டுவிட்டு,இங்கே நான் கவலைகளில் மிதக்கிறேன்.
சமீபத்து பதிவு ஒன்றில் அலைபேசி இல்லா ஓர்நாள் கேட்டிருந்தேன். ஆனால் இன்று முழுவதும் உனக்கான தொடர்புகள் முடக்கப்பட்டதில் திணறிப்போனேன்.

என்ன நடக்கிறது சக்தி?

பேருந்துகள் செல்லவேண்டிய சாலையில் படகுகள் மிதக்கின்றன.சாலைக்கு மேல் ஓட வேண்டிய பேருந்து கழுத்துவரை மூழ்கிக்கிடக்கிறது?
வீட்டுக்குள்ளிருந்து வாளிகளில் எடுத்து வெளியில் கொட்டுகிறார்கள் மழைநீருடன் கழிவுநீரையும்.
சின்னஞ்சிறு பிள்ளைகள் குறுகிக்கிடக்கிறார்கள் குளிருக்குள்.

ஒரு பல்கலைக்கழகமே பரிசலில் சென்று பார்வையிடும் பரிதாபம்.

இது இயற்கையின் சீற்றமென எளிதில் விலகிப்போய் விட முடியாது.

இது வருமுன் காவாததன் பரிசா?
வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்பதற்கு தண்டனையா?

ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு இந்த நிலையெனில்,மற்ற எல்லா இடங்களிலும் இப்படி ஒரு மழை பெய்திருந்தால் என்னவாகியிருக்கும்.?

மழையும் புயலும் சென்னைக்கும் கடலூருக்கும் யுகங்களுக்கு ஒருமுறை வந்து போவதல்ல.

பலா மரங்களை வேரோடு சாய்த்தும்,பல மரணங்களையும் தந்து போன தானே புயல் நம் தாத்தாக்கள் காலத்தில் நடந்ததல்ல.

இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கிறோம்.புயலுக்கல்ல,மழைக்கே நாம் போராடிக்கொண்டிருந்தால் எப்போது முன்னெற.?

கட்டடங்களும்,புள்ளிவிவரக்கணக்குகளை விளம்பரமாய் தருவதும் தான் நாட்டின் முன்னேற்றமெனில்?

பேரிடர் மீட்புத்துறையின் பணி பாராட்டத்தக்கது.
பிட்டுக்கு மண் சுமந்த கடவுளின் முதுகையே பதம் பார்க்கும் அளவுக்கு அவசியமானது நீர் மேலாண்மை.
அப்படி ஒரு துறை இருக்கிறதா?இருக்குமெனின் இயங்குகிறதா?

ஒரு நாளில் மூன்றுமுறை மழை பெய்யும் சிங்கப்பூரின் சாலைகள் இப்படி நீர் கண்டதில்லை.

சக்தி இது அரசியலில்லை..

ஒரு குடிமகனாய்,
உன்னை சென்னைக்கு அனுப்பிவிட்டு பரிதவிக்கும் ஒரு அப்பனாய் என் ஆதங்கம்.

பொதுக்கூட்டங்களுக்காகவும்,மாநாடுகளுக்காகவும் சரிசெய்யப்பட்ட திடல்களின் அளவுக்கு ,மழைநீர் கொள்ளும் பரப்புகளை சீர் செய்திருந்தால் இந்த பரிதவிப்பு இருந்திருக்காது தான்.

மக்களை குறை சொல்லக்கூடாது சக்தி.
மன்னன் எவ்வழி,மக்கள் அவ்வழி.

மடைகளையும்,குளங்களையும்,வாரிகளையும்,ஏரிகளையும் புதைத்துவிட்டு...
மழைநீர் உயிர் நீரென்றால்.....?

தாங்கிக்கொள்ள முடியாத எதையும் இயற்கை தருவதில்லை.
அது அமுதாய்த்தான் கொட்டுகிறது..
நாம் தான் அசிங்கப்படுத்தி விடுகிறோம்.

அன்புடன்,
செல்வக்குமார்.

21 கருத்துகள்:

  1. மாமழையை போற்றத்தெரியாதவர்களான நாம் தான் தனக்கான மண்ணைக்காப்பாற்றபோராடிக்கொண்டிருக்கிறோம்...
    ஆறுகளின் ஓட்டம்தான் இப்போது துவங்கியிருக்கிறது கரைகளைமட்டுமல்ல கட்டிடங்களையும் கரைத்து குடித்து தாகம்தீர்த்தும்வரை தணியாது வடியாது அதன் வேகமும் ஈரமும்!

    பதிலளிநீக்கு
  2. சரி தான்... சீரழிவு எல்லாம் நம்மளாலே தான்...

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து மூன்று நாட்களாக இங்கே மின்சாரம் இல்லை. பால், காய்கறி என்று தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை. தரைதளத்தில் இருபோர் அனைவரும் வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டனர். மிகவும் சிரமமான சூழலில் வாழ்ந்தோம்...

    பதிலளிநீக்கு
  4. நேற்றையப் பொழுதும், முந்தின நாள் பொழுதும் இங்கே என்ன நடக்கிறது என்று எதுவுமே புரியாத அளவுக்கு நடந்து விட்டது டாடி. என் பதிவைப் பாருங்கள் புரியும். ரொம்பவும் கஷ்டப்பட்டோம். நானும் பாப்பாவும் பயத்தில் இருந்து மீளவில்லை.. அம்மா தான் ரொம்பவும் பயந்து போனார்கள்.

    பதிலளிநீக்கு
  5. இயற்கைக்கு எதிராய்
    இருப்பதே மணித நாகரீகமாகவும்
    இயல்பாகவும் மாறி விட்டதன் விளைவே
    இந்த சோகம்..

    இயற்கை அது தன்
    இயல்பை வெகு
    இயல்பாய் வெளிப்படுத்திக்கொண்டு தானியங்குவதுடன் எளிய மொழியில்
    இயற்கையின் மழலைகளுக்கு பல எச்சரிக்கைகளை தந்தே வந்திருக்கிறது.

    அந்த எச்சரிக்கைகளை..,
    அலட்சியப்படுத்தியதன் விளைவே இத்தனை
    அவலங்களுக்கு மூலம் இனியாவது மாறட்டும் நம்
    அலட்சியங்களும் அவலமும்.

    இனியாவது கவனமாய் செயல்பட்டு
    இனியது செய்வோம்.
    இது....................?

    நமக்காக...! அல்ல..
    நம்மை
    நம்பி வந்துள்ள
    நம் அடுத்த தலைமுறைகளுக்காக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாசிப்பும் என் எழுத்தின் மீதான நேசிப்பும் என் வரமென்பேன்...

      நீக்கு
  6. இது இயற்கையின் சீற்றமென எளிதில் விலகிப்போய் விட முடியாது.

    இது வருமுன் காவாததன் பரிசா?
    வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்பதற்கு தண்டனையா?// உண்மை இதுதான். சிங்கப்பூர் மட்டுமல்ல அமெரிக்காவும், நமது அண்டை வளர்ந்த நாடுகளிலும் இது போன்று இல்லை. இது இயற்கைச் சீற்றமே இல்லை. இந்தப் பெருமழையையே தாங்க முடியாத நம்மால், அமெரிக்காவிலும், இந்தோனேசியாவிலும், ஜப்பானிலும் வருவது போன்று வந்தால் ????

    எல்லாமே சுயநலத்தினால் விளைவதே அருமையான கடிதம்

    பதிலளிநீக்கு
  7. பொதுக்கூட்டங்களுக்காகவும்,மாநாடுகளுக்காகவும் சரிசெய்யப்பட்ட திடல்களின் அளவுக்கு ,மழைநீர் கொள்ளும் பரப்புகளை சீர் செய்திருந்தால் இந்த பரிதவிப்பு இருந்திருக்காது தான்.

    அருமை நண்பரே அருமை இதற்க்குமேல் சவுக்கடி கொடுக்க முடியாது

    பதிலளிநீக்கு
  8. ஒரு அப்பாவின் கவலையை உணர்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  9. //பொதுக்கூட்டங்களுக்காகவும்,மாநாடுகளுக்காகவும் சரிசெய்யப்பட்ட திடல்களின் அளவுக்கு ,மழைநீர் கொள்ளும் பரப்புகளை சீர் செய்திருந்தால் இந்த பரிதவிப்பு இருந்திருக்காது தான்.//
    உண்மை ! உண்மை ! உண்மை !
    உங்கள் கவலையும் சுவாதி மற்றும் குழந்தைகளின் பயமும் புரிகிறது.
    மக்கள் விழிக்க வேண்டும், அரசைச் செயல்பட வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த சில நாட்களாக..வேதனை தான் ...எழுதத்தூண்டியது தோழி

      நீக்கு
  10. விழிப்புணர்வு இல்லா தமிழகம்
    சுயநல மிகு மக்கள்

    பதிலளிநீக்கு
  11. இன்னும் எங்கள் பகுதியில் வெள்ளநீர் வடியவில்லை நண்பரே...( தாம்பரம்) எங்கள் பகுதியைப் போலவே உங்கள் பகுதியும் மிக மோசமாக பாதிக்கப்பட்டோம்...கிரவுண்ட் புளோர் முற்றிலும் மழைநீர். அதோடு நாற்றம், குப்பை,,,நான் இப்போது திண்டிவனம் வந்துவிட்டேன். இனி தான் பையனின் கல்வி, மனையாளின் வேலை பற்றி யோசிக்க வேண்டும். நீண்ட விடுப்பு எடுத்தால் அடுப்பு புகையாது...(உங்கள் மகள் பதிவையும் படித்தேன்.) இதை விட அது தான் நன்று என்று தோன்றுகிறது. எங்கள் வலி அதில் தெரிகிறது மன்னிக்க

    பதிலளிநீக்கு
  12. சுயநலத்தினால் விளைந்த கேடுகள்....

    இனிமேலாவது திருந்துவோமா.... சந்தேகம் தான்.

    பதிலளிநீக்கு