செவ்வாய், 15 டிசம்பர், 2015

கண்ணாடி டீச்சரும்,மலேயாக்காரர் வீடும்..

அன்பின் சக்திக்கு,
             எண்களாலும் கோடுகளாலும் நிறைந்த கல்வியில் நீ ஆழ்ந்து போனதை உன் பல்கலைகழகத்தின் முதலாய் வந்ததில் அறிந்தேன்.மகிழ்ச்சி.

சக்தி,
வேடிக்கை பார்ப்பதிலும் வெளியூர் பயணங்களிலும் நான் புது மூச்சு பெறுவது நீ அறிவாய்.

சில வேடிக்கைப்பொழுதுகள் எதையேனும் கிளறிவிட்டுப்போவதும் உண்டு.

என் பள்ளிப்பிராயத்தில் ஆசிரியர்களின் பெயரைக்காட்டிலும் அடைமொழிகளால் அறியப்படுவார்கள்.

மூன்றாம் வகுப்பு எடுத்த ஆசிரியையின் பெயரை மறந்துவிட்டேன்.
ஆயினும் அவரை இன்றும் நினைவில் வைத்திருப்பது கண்ணாடி டீச்சர் என்னும் அடைமொழி..

மற்றொன்றாய், அன்றைய மலேசியாவிலிருந்து சொந்த ஊர் வந்துசேர்ந்த குடும்பம்.பெயர்தெரியா அவர்களின் வீடு மலேயாக்காரர்வீடு என்றே அழைக்கப்பட்டது.

என் சமீப பார்வையை
நீயும் கொஞ்சம் கவனி..

அது குழந்தைகள் கூட்டமென்றாலும்,பெரியவர் கூட்டமென்றாலும் பத்து பேரில் குறைந்தது மூன்று பேர் மூக்குக்கண்ணாடி அணிந்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் எந்த கடைக்கோடி கிராமத்திலும் வெளிநாடுகளில் வேலைசெய்பவர்கள் வீடு இருக்கிறது.

எந்த வளர்ச்சியை கொண்டாடுவது?

பிறந்த குழந்தைக்கும் கண்ணாடி வேண்டிய நிலையில் தான் இருக்கிறது மருத்துவ வளர்ச்சி.

"நோய்நாடி நோய்முதல் நாடி" காணாத மருத்துவம் என்பது சவத்தை சிங்காரிக்கும் அவலமில்லையா?

சொல்லொண்ணா மனிததேவைகள் இங்கே கிடக்க கழிவறை பெருக்கவும்,ஒட்டகங்கள் மேய்ப்பதற்கும் என் மக்கள் விமானங்களில் பறப்பதை எப்படி டாடா சொல்லி ரசிக்க?

கிட்டத்தட்ட அகதியின் வாழ்க்கையில் வரும் அந்நியச்செலவாணியில் இந்தியா வளர்கிறது என்றால் அது வளர்ச்சியல்ல ..வீக்கம்.

உலகுக்கு வழிகாட்டிய நம் தேசத்து ஞானிகள் உள்ளூரை ஏனோ மறந்துபோனார்கள்..

சர்க்கரைநோய் இல்லாத சகமனிதனை காண்பது அரிதாய் இருக்கிறது..

இது சாதனையா?

குடித்துவீழவும்,நோய்வந்து சாகவுமே சபிக்கப்பட்டவர்களா நாம்?

தரவுகளுக்காய் நான் நேரங்கள் செலவழிப்பதில்லை.
கைப்புண்களுக்கு கண்ணாடி தேவையா சக்தி?

உலகின் முன்னேறிய நாடுகளுடன் ஆயிரம் கொள்கை வேறுபாடுகள் நமக்கு இருக்கலாம்..ஆனால் அவர்கள் தன் நாட்டுமக்களை காத்து,நேசிக்கும் நேர்த்தியை கேட்கும் பொழுதெல்லாம் வெட்கிச்சாகவேண்டியிருக்கிறது.

நம் நாடு ஒரு தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளியின் நிலையில் தான் இருக்கிறது சக்தி..

உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடு,வேற்றுமையில் ஒற்றுமை,மதச்சார்பற்ற நாடு..
எல்லாம் சரிதான் ..
மக்கள்..?

தேர்தலை சிறப்பாக நடத்தும் நாம் தேர்ந்தெடுப்பதில் தோற்றுப்போகிறோமா..

தூர்வாரப்பட வேண்டியது ஏரிகள் மட்டுமல்ல ..

ஏங்கிக்கொண்டிருக்கும் நாங்கள் மட்டுமல்ல...உன் போன்ற இளைய சக்திகளும் சேர்ந்து செய்ய பல இருக்கிறது..

கனவுகள் விதைக்கிறேன்..
பயிராக வேண்டும்.

உணவுப்பழக்கம் மீட்டெடுக்கபட,
தம் மக்கள் நேசிக்கும் அரசு,
நோய் முதல்நாடி முடிக்கும் மருத்துவம்,
கவலைப்பட வைக்காத கல்வி,
முகம் சுழிக்க வைக்கா கலை..
ஏழைமக்கள் விரல்பிடிக்கும் விஞ்ஞானம்.

யாவும் போராடிப்பெற வேண்டியதில்லை..
புரையோடிப்போன மனங்கள் மாறினால்..
வெளிச்சம் வெகு தொலைவில் இல்லை..

கனவுகளுடன்,
செல்வக்குமார்.

14 கருத்துகள்:

  1. மனங்கள் மாறிடும் நிலை வரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. அழகு..நன்று..யாவும் போராட வேண்டியதுல்லை எனில் ஆசிரியர்.அரசு ஊழியர் போராட்டம் ஏன்??சரியக சொன்னீர்கள் டாடி.புரையோடி...மாற்றுவேன்.என்ற நம்பிக்கையில் நனைந்து..

    பதிலளிநீக்கு
  3. என் வகுப்பில் எல்லோரும் கண்ணாடி..தேர்தல் எவ்வளவு செலவு??ஆனால் அதை மீண்டும் நடத்தி விளையாடுறாங்களே..

    பதிலளிநீக்கு
  4. மிக நல்ல ஆக்கம் ஆனால்
    மிக நீண்டு விட்டதை உணருகிறேன்.
    வேதாவின் வலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைகள் போல் வளர்கிறது அம்மா...என்ன செய்ய ? நாட்டுச்செடி வளர்ப்பவன் நான்...போன்சாய் வளர்க்க பயிற்சி எடுக்கவேண்டும்...மேலான கருத்துக்கு என் கனிவான நன்றிகள்...

      நீக்கு
  5. மனிதன் நடத்தும் பாடங்களை மனிதன் மதிப்பதில்லை. இயற்கை நடத்திய பாடங்களில் பீதியுற்று மாறினால் உண்டு. முன்பெல்லாம் 'வெளிநாட்டில் வேலை செய்பவர் வீடு எங்கிருக்கு' என்று ஊரில் கேட்டால் ஓரிரு வீடுகளைக் காட்டுவார்கள். இப்போதோ திருப்பதியில் மொட்டை போட்டவரைத் தேடுவது போல!

    பதிலளிநீக்கு
  6. சென்னையில் வந்த வெள்ளம் இளைய சக்தியை மிக நன்றாக சிந்திக்க வைத்திருக்கிறது...மாற்றத்திற்கான விதை விதைக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன்,,,

    பதிலளிநீக்கு
  7. பல்கலைகழகத்தில் முதலாய் வந்ததற்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான சிந்தனை.....

    பல்கலைக் கழகத்தில் முதலாம் இடம் - பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு
  9. சக்திக்கு முதலாவது எங்கள் மனம் கனிந்த பாராட்டுகள். மேலும் மேலும் வெற்றிகள் பல பெற வாழ்த்துகளுடன்...

    செல்வா உங்கள் கடிதம் அருமையாகப் போய்க்கொண்டிருக்கின்றது. ஏட்டுக் கல்வியை விட அனுபவங்களும், இயற்கையும் கற்றுத் தரும் பாடங்கள் எத்தனை எத்தனை! பறவைகளும் விலங்குகளும் மனிதன் 6 அறிவு படைத்திருந்தாலும் கற்றிராத பல பாடங்களைக் கற்றுத் தருகின்றன.

    உங்கள் கருத்து சரியே..//உலகின் முன்னேறிய நாடுகளுடன் ஆயிரம் கொள்கை வேறுபாடுகள் நமக்கு இருக்கலாம்..ஆனால் அவர்கள் தன் நாட்டுமக்களை காத்து,நேசிக்கும் நேர்த்தியை கேட்கும் பொழுதெல்லாம் வெட்கிச்சாகவேண்டியிருக்கிறது.

    நம் நாடு ஒரு தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளியின் நிலையில் தான் இருக்கிறது சக்தி..//

    நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
  10. இதுதான் அந்தச் சுட்டி...http://rajamelaiyur.blogspot.com/2015/12/blog-post.html

    தரவிறக்கம் செய்யும் சுட்டி http://downloads.ziddu.com/download/23551564/AYEESHA_tamil.pdf.html

    பதிலளிநீக்கு
  11. “தூர்வாரப்பட வேண்டியது ஏரிகள் மட்டுமல்ல” என்னும் சிலச்சில சொற்களுக்குள்தான் பலப்பல தீர்வுகள் உள்ளன செல்வா. மகளுக்கு எழுதும் கடிதத்தை மக்களுக்கே எழுதுவதாக மாற்றிய வரிசையில் உங்கள் புத்தகம் வரப்போகிறது (நேரு தொடங்கி நீங்கள் வரை..இடையில் நானும் வருவேன்ல..? பல்கலைக் கழகத்தில் முதலாய் வந்த சக்தி, பலகலையிலும் முதலாய் வருவாளென்ற நம்பிக்கை தருவது மகிழ்ச்சி (ஆமா அந்த டாடிய மாத்தி அப்பா ன்னு சொல்லச் சொல்லி ஒரு கடிதம் எழுதுங்க)

    பதிலளிநீக்கு