ஞாயிறு, 13 மார்ச், 2016

யாதொன்றுமில்லை.

எப்படியும்
ஒரு கவிதை
எழுதிவிட
வேண்டும்.

அலைபேசி
அணைத்துப்போட்டு
அமைதியற்றிருந்த
நேற்று பற்றி?

கொடும்பசி
கிளம்பிய
நள்ளிரவில்
கனவுகள்
மென்று
கண்மூடிக்கிடந்தது?

பிறந்தநாள்
சண்டையிட்ட
சின்னவளின்
சாபம் பெற்ற
ஒற்றைவரி?

ஓடிக்கொண்டிருக்கும்
நகர் நதியை
உற்றுப்பார்த்து
சோம்பல்கொள்ளும்
வெயிலேறிய
மதியம்?

காயத்தொடங்கிய
காய்கறிகளின்
எறிதலுக்காய்
காத்துக்கொண்டிருக்கும்
மூதாட்டி?

தீவிரப்பேச்சினில்
தீராத
விடுமுறைப்பகல்?

வாசிக்கத்தொடங்கிய
நூலொன்றின்
வரிகள்
மறைந்து..
யோசனைகள்
மரம்தாவிய
மாயம்?

எத்தனை பேர்
என்னை
தேடியிருப்பார்கள்..

மறுசுழற்சியில்
வாட்ஸ் அப்
செய்திகள்.

தவணைக்கான
குறுஞ்செய்திகள்.

ஏழுநாளில்
நல்லது நடக்க..
பகிரச்சொல்லி
முகநூல்
வேண்டல்கள்.

பதிமூன்று
காதல்
கவிதைகள்.

நான்
மீண்டும்
தூங்கப்போகிறேன்.

அதற்குள்..

எப்படியும்
ஒரு
கவிதை
எழுதிவிட வேண்டும்.

12 கருத்துகள்:

  1. எப்படியும் கவிதை எழுதி விட வேண்டும்
    என்கிற நினைவே ஒரு நீள் கவிதைதானே,,,?

    பதிலளிநீக்கு
  2. நினைத்ததே கவிதையாகிவிட்டதே!!! அருமை ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான கவிதை ..அருமை

    பதிலளிநீக்கு
  4. எண்ணங்கள் எழுத்தாய் பர்ணமிக்கின்றதோ? அருமை

    பதிலளிநீக்கு
  5. எப்படியும் ஒரு கவிதை எழுத வேண்டும் என்று
    சொல்லியே அருமையான கவிதை படைத்தீரே...

    பதிலளிநீக்கு
  6. இப்படியெல்லாம் சமாளிக்கக் கூடாது.. நல்லதாய் வேறொரு கவிதை வேண்டும். (இந்தச் சமூகம் கவிஞனின் கவலை பற்றியெல்லாம் கவலைப்படாது நண்பா! எப்படியாவது ஒரு நல்ல கவிதை வேண்டும் அவ்வளவுதான்! என்னத்தச் சொல்ல?)

    பதிலளிநீக்கு
  7. ஆஹா முத்துநிலவன் ஐயா சொன்னது தான்.நல்ல கவிதையை தாங்கள் சொல்ல வேண்டும் ஐயா.

    பதிலளிநீக்கு