ஞாயிறு, 12 ஜூன், 2016

புத்தகக்கண்காட்சி தேவையா?

அன்பின் சக்திக்கு,
உன்னைப்பார்க்கவேண்டிய ஆசை இருந்ததென்றாலும்,
புத்தகக்கண்காட்சி என்னும் ஆவலும் இந்த முறை எனக்கு சென்னைப்பயணத்தின் நோக்கமாய் இருந்தது.

வாசிப்பவர் யாவருக்கும் புத்தகக்கண்காட்சிப்பயணம் என்பது புனிதப்பயணம் தான்..

புத்தகக்குழந்தைகள் அடுக்கிவைத்திருக்கும் அழகும்,வாங்கவேண்டும் என வருடமெல்லாம் நினைத்திருந்த புத்தகத்தை காணும் போது ஓடிச்சென்று அணைத்துக்கொள்ளும் ஆவலும், நமக்கு தெரிந்த எழுத்தாளர் ஒருவரிடம் சென்று சுய அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பும் அலாதியானது தான்.

இந்த முறையும் கனவுகள் சுமந்தே கிளம்பினேன். பேருந்தின் ஒருமணிநேரப்பயணம்... கடற்கரைச்சாலை கடந்து கூவத்து வாடைகொஞ்சும் ஒரு சாலையில் இறங்கினேன்.

குல்பி ஐஸ்,மசாலா பொரி விற்கும் கூட்டம் தாண்டி நுழைவுச்சீட்டுடன் அரங்கம் நுழையும் போது அனல்காற்று முகத்தில் அடித்தது.

ஆவல் மேலிட பார்வைகள் பறந்தன.
சுற்றிய களைப்பில் ஆங்காங்கே தரையில் உட்கார்ந்திருந்த மக்கள்.

கடைகளின் தந்திரமா அல்லது இன்னும் மக்கள் தாண்டிவரவில்லையா..
பொன்னியின் செல்வன்,
அலை ஓசை என கல்கியே இருக்கிறார் எல்லா இடங்களிலும்.

வார இதழ்களும்,நாளிதழ்களும் வசதியாக பிடித்துக்கொண்ட கடைகள் தவிர தமிழக பதிப்பாளர்களின் கடைகள் இருக்கின்றன.
புத்தகங்களை குறித்துக்கொண்டு போகாதவர்கள் சுற்றித்தான் ஆகவேண்டும்.
சுயமுன்னேற்ற நூல்கள்,சமையல் குறிப்புகள் தாண்டி இந்தமுறை குழந்தைகளுக்கான நூலகள் அதிகம் கிடைத்தன..

சினிமாவாகட்டும்,மருத்துவமாகட்டும், கல்வியாகட்டும் குழந்தைகளை முன்வைத்து செய்வது தோற்பதில்லை...
இந்த முறை புத்தகங்களும்.

எல்லாம் சரி..
புத்தககண்காட்சிக்கு எதற்கு நுழைவுக்கட்டணம்?
அடித்த வெயிலில் வடித்த வியர்வைக்கு அவர்கள் அல்லவா கட்டணம் தந்திருக்க வேண்டும்.

அனல்காற்றடிக்கும் அரங்கங்கள், புத்தகங்கள் தாண்டி நான் பார்த்தது காய்கறி வெட்டும் சிறுகத்தி விற்றவர்கள்,தியானம் சொல்லித்தந்தவர்கள்,
சின்ன கப்பில் 20 ரூபாய்க்கு காப்பி விற்றவர்கள்..

பொதுவாய் புத்தகங்கள் என்பதை எனக்குத்தெரிந்து எவரும் மட்டமாய் சொன்னதில்லை..
அப்படிப்பட்ட புத்தகத்தை வாங்கும் சூழல் எப்படியிருக்கவேண்டும்? அமைதியான, பொறுமையான,யாரும் நம்மை இடித்துக்கொண்டு நகராத சூழல் வேண்டாமா?
அது அங்கே கிடைத்ததென யாரும் சொல்ல முடியாது...

டெல்லி அப்பளங்களும், வங்கியின்  ஏ.டி.எம் களும் சூழ்ந்த வெளியில் தின்றுதீர்க்க அத்தனையும் கிடைக்கிறது கொள்ளை விலைகளில்.

மொட்டைவெயிலில் புத்தகவெளியீட்டு விழா நடக்கிறது...32 எழுத்தாளர்களின் நூலை வெளியிடுகிறார்கள்..
அநேகமாய் எனக்கு ஒரு பெயரும் நினைவிலில்லை..
ஏற்புரையும்,வாழ்த்துரைகளும் சொல்லமுடியவில்லை..
ஆனால் அது மனம்கவரும் விழாவாக இல்லை...

மொத்தத்தில் அங்கே போகும்போது இருந்த மகிழ்ச்சி வரும்போது இல்லவே இல்லை.

முன்தினம் கணினிக்காய் ஒரு பாகம் வாங்க ஒரு பிரதான கடைவீதி சென்றிருந்தேன்.
எலக்ட்ரானிக்ஸ் சம்பத்தப்பட்ட சின்ன ஸ்குரூவிலிருந்து முந்தினம் வந்த கருவிவரை கிடைக்கிறது வருடம் முழுவதும்..
மாநிலத்தின் எல்லாப்பகுதியிலிருந்தும் அந்தவீதியின் அடையாளம் தெரிந்து வந்து போகிறார்கள்..

புத்தகங்களை விட கணினிப்பொருட்கள் உயர்ந்தவை அல்ல..
ஆனால் சென்னையில் புத்தகங்களுக்கென ஒரு வீதியில்லை..

வருடத்தின் ஒருசில நாட்களில் மட்டும் சாக்கடை நாற்றத்தில், வெந்து ,வியர்த்து, புத்தகம் விற்றுவிட்டு போனால் போதுமா?
புத்தக விற்பனையாளர்கள் எல்லாரும் பரமஏழைகள் கிடையாது..

வருடத்துக்கு ஒரு இடமென அரசிடம் வேண்டி காட்சிநடத்தும் நீங்கள் ஏன்
உங்களுக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக கொண்டு நல்ல காற்றோட்டமான வசதியுடன் புத்தக விற்பனையை செய்யக்கூடாது?

சிலநாள் கூத்துக்கு நீங்கள் செய்யும் செலவுகளைத்தாண்டி 10% தள்ளுபடி தரமுடியும் உங்களால் ,
நிரந்தரமான இடமெனில் இன்னும் அதிகமான தள்ளுபடி கொடுக்கமுடியுமே?

மொத்தத்தில் புத்தககண்காட்சி என்பது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் ஒரு இடமாகவும்,செல்பி எடுத்து முகநூலில் போட்டு நானும் போய்வந்தேன் எனச் சொல்லி அடையாளம் தேடும் இடமாக மட்டுமில்லாது..

புத்தகம் வாங்குவதென்பது ,கோவிலுக்குச்செல்வதிலும் எந்தவகைக்கும் குறைந்ததில்லை என்னும் வகையில் அமைதியாகவும், மகிழ்வாகவும் அமையவேண்டும் என்பதே...என் ஆசை..

அன்புடன்,
செல்வக்குமார்.

7 கருத்துகள்:

  1. ஒ.. கதை அப்படி போதா? நல்லா வேளை சொன்னீங்க...

    பதிலளிநீக்கு
  2. சென்னையில் அவசியம் ஓர் புத்தகச் சாலை தேவைதான் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு. நிரந்தரமாக ஒரு இடம் நிச்சயம் தேவை தான்....

    பதிலளிநீக்கு
  4. நன்றாக விவரமாகவே சொன்னீர்கள். எங்கே புத்தகக் கண்காட்சியே தேவை இல்லை என்று சொல்லி விடுவீர்களோ என்று பயந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு சார் .. http://ethilumpudhumai.blogspot.in

    பதிலளிநீக்கு
  6. சரியான நெத்தியடி ஐயா. உங்களைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே உண்மைகளை உரக்கச் சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் செல்வா. உங்கள் ஆலோசனை வரவேற்கத்தக்கது.

    பதிலளிநீக்கு