செவ்வாய், 20 செப்டம்பர், 2016

இணைய விரத பலன்கள்..

இதை நான் எழுதியே ஆகனும்.




தீவிர வாசிப்பாளன் நான்.
மிக ஆழமாக இல்லாவிட்டாலும் கண்கள் புத்தகத்தைக் காணா நாட்கள் அத்தனை வருத்தமாய் இருக்கும்.

என்னை யாரேனும் உனக்கு என்ன பிடிக்குமென்றால்...
புத்தகங்ளோடு என்னை வைத்து பூட்டிவிடுங்கள் என்பேன்.

பதினைந்து வருடங்களுக்கு மேலாக எங்கள் வீட்டில் தொலைகாட்சி கிடையாது...
பிள்ளைகளும் சேர்ந்து எடுத்த முடிவுதான்.
எங்களுக்கான செய்தி எங்களை அடைந்தே தீரும் என்பதில் அத்தனை உறுதி.

நூலகத்தில் குடும்பமே உறுப்பினர் என்பதால் ஆறு புத்தகங்கள் எடுக்கலாம்..
வாரம் ஒரு முறை புத்தகங்கள் மாற்றும் போது நூலகர் மனதில் திட்டிக்கொண்டுதான் இருப்பார்.

நூல் சூழ் உலகில் பார்க்குமிடமெல்லாம் புத்தகங்களோடு இருந்தது என் அறை...

இணையத்துடன் அலைபேசி வந்தபோது இப்படி ஆகுமெனத் தெரியாது.
பேசுவதற்கென்று மட்டும் ஒரு அலைபேசி இருந்தவரை ஒன்றுமில்லை.
அதைத்தாண்டி தடவ ஆரம்பித்த போதுதான் ஆபத்து ஆரம்பமானது.

சுற்றிக்கொண்டிருந்த இணைய வேகம் ஓட ஆரம்பித்தபோது நான் தேங்கிப்போனேன்.

அலைபேசி இன்னொரு தலையணை ஆனது. நடக்கையில்,யாரோடும் இருக்கையில் எல்லாம் தடவச்சொன்னது அலைபேசி..
கார் ஓட்டும்போது வரும் ஒரு நோட்டிபிக்கேசனுக்காக போனை எடுக்கையில்,
கூடவருபவரின் ரத்த அழுத்தம் அதிகமாவதை உணர மறந்தேன்.

என்னவோ நம்மை யாரோ இழுத்துவந்து கருத்துச்சொல்ல சொன்னதுபோல ஒரு கற்பனையில் எழுத ஆரம்பிக்கிறேன் முகநூலில்..
எழுதிவிட்டு வரும் விருப்பங்களையும்,
கருத்துகளையும் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
உள்டப்பியில் உரையாடல் கூடுகிறது.
சிலரை வலியப்போய் பேசுகிறேன்.
நல்ல நட்புகள் கிடைத்ததையும் மறுப்பதற்கில்லை.

வாட்ஸ் அப் குழுக்களில் வந்துசேர்கிறது ஊர்வம்புகள்.
புத்தகங்கள் வாசிக்காமலே நிறைய ஆரம்பிக்கிறது..
நூலக புத்தகங்கள் அபராதத்துடன் திரும்புகின்றன.
இணையம் கிடைக்காத ஒரு நாளில் சீட்டு விளையாடுகிறேன். என்ன செய்கிறாய் என வினவும்போது பொய் சொல்லிப்பழகுகிறேன்.

விட்டுவிடலாம் என ஆரம்பித்த புகைப்பழக்கத்தை விட போதையாகி இருக்கிறது இணைய உலா.

முகநூலின் பதிவுகளில் தெறித்துவிடும் சில வரிகள் ஆச்சர்யத்தின் எல்லைவரை இழுத்துப் போய்விடுகிறது.
அற்புத சிந்தனைகள் என சிலாகிக்கும் போது ஜாதீய,மத,அரசியல் கலந்த துர்நாற்றம் வீசுவதை நுகரும் போது வருத்தமாகி விடுகிறது.

பரிசோதனை முயற்சியாய் ஒரு முழுநாள் இணையமில்லாமல் இருக்கலாமென முடிவெடுத்து இருந்துபார்த்தேன்..

600 பக்கங்களுக்கு மிக்க ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடித்தாயிற்று.
கார் மிகச்சீராக வழுக்கியது..
சுங்கம் வசூலிப்பவரிடம் சண்டை போடவில்லை.
எந்த நிறுவன பேசியாக இருந்தாலும் குறைந்து போன சார்ஜ் தீர்ந்து சார்ஜரோடு அலையவில்லை..

மனதோடு பேசமுடிந்தது. முக்கியமாக உடன் பயணித்தவர் தூங்க முயற்சி செய்தது உச்ச மகிழ்ச்சி.

மறுபடியும் இணையத்துக்குள் வந்துவிட்டேன்.ஆனால் முன்போல அத்தனை கவர்ச்சியில்லை.
ஒருநாள் இணையமில்லாத வாழ்வு உண்மையில் அற்புதமாய் இருந்தது.

நண்பர்களுக்கு..
இதை ஒரு வேண்டுதலாய் வைக்கிறேன்.
எப்போதும் இணையத்தில் இருப்பதை ஒருநாள் நிறுத்திப்பாருங்கள்.
முகநூலோடு ஒரு நாள் பேசாதிருங்கள்.
நல்ல தியான அமைதிக்கு வாய்ப்பிருக்கிறது..
வெட்டி விவாதங்களில் இணையக்காரர்களே பிழைக்கிறார்கள். தேனீர்,மது,சினிமா என அடிமைப்படுத்திய நம்மை இணையத்தின் மூலம் அடிமைப்படுத்தவே விழைகிறார்கள்.

அதிகாரங்களின் கரங்கள் இங்கும் உண்டு..நம்மைத்தூண்டும் செய்திகளை கிளப்பி மற்றதை மறக்க வைக்கப்பார்ப்பார்கள்.

ஆங்கிலப்படத்தின் ஜட்டியும்,பிரேசியருடன் பெண்ணைப்பார்த்துப் பெருமூச்சு விட்ட காலம் கடந்து இணையத்தில் அவிழ்த்துப்போடும்  ஆபாசம் அரசால் தடுக்க முடியாததல்ல..

போராட்ட குணத்தின் முனைகளைக்கிள்ள அவர்களின் மறைமுக ஆயுதம் அந்த ஆபாசத் தளங்கள்.
இன்னும் இன்னுமாய்..

இணையத்தின் பயன்களைக்காட்டிலும் செய்யும் வினைகள் அதிகமாய்த்தெரிகின்றது.

மாற்றும் இருக்கிறது..
வலைப்பூவில் எழுதுங்கள்..
அது உங்களுக்கான நிரந்தர நண்பர்களைத்தருகிறது.
உங்கள்எழுத்து,உண்மையான
பின்னூட்டங்களைத் தருகிறது..

வாரம் ஒருநாள் போய் வாரத்தில் சில மணிகள் என முகநூல் உலாவும், வெட்டிப்பேச்சுகளும் குறையுமானால்..

எது குறைகிறதோ இல்லையோ...
இணையத்துக்கான செலவும்,கண்களுக்கு வரும் நோயும் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கிறது.




17 கருத்துகள்:

  1. உண்மைதான் செல்வா, இணையம் பக்கம் வராமல் சில வாரங்கள் கூட இருந்ததுண்டு.....பல காத்துக்கிடந்த வேலைகள் திருப்தி அடைந்தன...தன் எச்மான எச்மானி கண்டு கொண்டார்களே என்று.....ஹ்ஹா

    பதிலளிநீக்கு
  2. டும் டும் டும் இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...
    கூட வந்து நிம்மதியாகத் தூங்கியவன் நான்
    என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்ன்ன்ன்னன்.

    இதனை என் ஜி+இல் பகிர்கிறேன் செல்வா!
    கூடவே என் முகநூல் பக்கத்திலும்.
    அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு. த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஜி+ஐக் காணவில்லை.
      எனவே எனது வலைப்பக்கத்திலேயே பகிர்ந்துவிட்டேன்.
      பார்க்க - http://valarumkavithai.blogspot.com/2016/09/blog-post_20.html

      நீக்கு
  3. அருமை! அருமை! தனக்குத்தானே ஆன உங்கள் சோதனை முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் கருத்துகள் அனைத்துமே நான் ஒப்புக் கொள்கிறேன் ஐயா.நானும் இதனை இன்றே செய்கிறேன் ஐயா.நன்றி

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. நாங்களும் சுய பரிசோதனை
    செய்து கொள்ளவெண்டும்
    அற்புதமான பயனுள்ள பகிர்வுக்கு
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் ஐயா வணக்கம். எப்போதும் இணையத்திலேயே உலாவும் உங்களைப் போன்றவர்களுக்கு இந்த விரதம் அவசியம் தான். நான் எப்போதாவது எட்டிப்பார்ப்பவன்.
    உங்கள் விரதத்தினால் எங்களுக்கு ஒரு நல்ல விருந்து கிடைத்தது..மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. நான் பலநாட்கள் இப்படி இருந்து விட்டேன்.(இங்கு அரசே சில சமயங்களில் இரண்டு மூன்று நாட்கள் இணையத்தை முடக்கி வைத்திருக்கிறது. - ) ஓரிரு முறை நானே இணையம் இன்றி இருந்திருக்கிறேன்.
    நல்ல யோசனை

    பதிலளிநீக்கு
  9. இணையத்திற்கு விரதம் வேண்டாம் ஆனால் கட்டுப்பாடு வேண்டும் எதைபடிப்பது யாரின் எழுத்தை படிப்பது என்று அது போலத்தான் போனில் பேசுவது என்பதும் அவசியம் என்றால் சுருக்கமாக பேசிவிட வேண்டும் எனது வேலை நேரத்தில் இணையத்தில் உலாவர அதிகம் நேரம் கிடைக்கும் என்றாலும் அங்கு நான் பேஸ்புக்பக்கமே வருவதில்லை. அது போல காரை ஒட்டும் போது தப்பி தவறியும் உபயோகிப்பதில்லை ஆனால் வீட்டிற்கு வந்ததும் முதலில் ஒரு காபி தயார் செய்துவிட்டு அதன்பின் பேஸ்புக்கிலும் வலைதளத்திலும் செய்தி நாளிதழ்களையும் படித்து கொண்டே டிவி செய்திகளையும் கேட்பேன் அப்படி கேட்கும் போது மனதில் என்ன எழுகிறதோ அதுவே என் பதிவாக வந்துவிழும்.. இது எனது பொழுது போக்கு இந்தியாவில் இருந்த வரை நான் ஒரு புத்தக்புழு பாடப் புத்தங்கள் அல்ல அதைதவிர தமிழில் ப்ரிண்ட் செய்து இருக்கும் அனைத்து புத்தகங்களையும் படித்து வந்தேன் படிக்க்கும் சமயத்தில் கல்லூரி லைப்ரேயில் எனது உறுப்பினருகான புத்தகங்களையு எனது நண்பர்களின் உறுப்பினர்கள் அட்டைகளையும் பெற்று அதிக புத்தகங்களையும் எடுத்து வருவேன் அதுமட்டுமல்ல பல்கலைகழகத்திலும் உறுப்பினாரக சேர்ந்து அங்கு இருந்தும் மற்றும் நான் வசித்த ரயில்வே காலனியில் உள்ள புத்தக லைப்ரேரியிலும் புத்தகங்களை எடுத்து படித்து வந்தேன் ஆனால் அவை அனைத்தும் அமெரிக்கா வந்ததும் மாறி போய்விட்டன. அமெரிக்க வந்ததில் இருந்து இணையத்தின் மூலம்தான் அனைத்தையும் படித்து வருகிறேன் எனக்கு பிடித்தது இரண்டே இரண்டுதான் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவை நானே தயாரித்து கொடுத்து மகிழ்வது ஒன்று மற்றொன்று இணையத்தில் படிப்பது இது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை பைத்தியம் பிடித்தது போல ஆகிவிடும். இணையத்தில் பலரும் மிக அருமையாக எழுதிவருகிறார்கள் அதில் நீங்களும் ஒருவர். உங்களை போல இணைய விரதம் எடுத்தால் உங்களை போல எழுதும் பலரின் அருமையான் எழுத்துகளை தவறவிட்டுவிடுவோம் அல்லவா

    பதிலளிநீக்கு
  10. பயனுள்ள்ள சிந்தனை
    மிகப்பயனுள்ள செயல்

    பதிவு மட்டுமே போதும் என்று நானும் எண்ணுகின்றேன் நண்பரே
    முக நூலில் இருந்தும், வாட்ஸ்அப்பில் இருந்தும் விரைவில் வெளியேற வேண்டும் என்று மனம் கூறிக் கொண்டே இருக்கிறது

    பதிலளிநீக்கு
  11. வலைப்பூவில் எழுதுவது சரியாகத் தெரிகிறது. எனவே அதில் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பகிர்வு செல்வா. பல சமயங்கள் இப்படி இணையம், அலைபேசி/தொலைபேசி, தொலைக்காட்சி என ஒன்றும் இல்லாமல் இருக்கத் தோன்றும் எனக்கும். சில சமயங்களில் இருப்பதும் உண்டு!

    பதிலளிநீக்கு
  13. நல்ல பகிர்வு செல்வா. பல சமயங்கள் இப்படி இணையம், அலைபேசி/தொலைபேசி, தொலைக்காட்சி என ஒன்றும் இல்லாமல் இருக்கத் தோன்றும் எனக்கும். சில சமயங்களில் இருப்பதும் உண்டு!

    பதிலளிநீக்கு