புதன், 28 டிசம்பர், 2016

அரசியல் குப்பைகள்..

மாறிவிடும் என்ற ஒரே நம்பிக்கைதான் மனித வாழ்வின் அச்சாரம்..
அரசியலுக்கும் இது பொருந்தும் அதிசயம்.




காலம்காலமாய் காலில் விழுந்துகிடக்கும் அரசியல் அவமானம் கொஞ்சமேனும் நிமிரும் என்ற நம்பிக்கையை சென்ற தேர்தல் காலங்கள் மின்மினியாய் வந்து போயே விட்டது.

மக்கள் நலக்கூட்டணி என்ற ஒன்று உருவான போதே திருமாவளவன் தவிர்த்த மற்றவரின் வருகை கொஞ்சம் நெருடலாகவே இருந்தது..
பரப்புரையின் ஆரம்ப கூட்டங்களுக்கான மக்கள் ஆதரவு அதனை மறக்கச்செய்த நேரத்தில் விஜய்காந்துக்காகவும்,வாசனுக்காகவும் தூதுபோன போதே இவர்கள் வென்றாகக்கூடாது என வேண்ட ஆரம்பித்துவிட்டேன்...

அரசியல் களம் என்பது கொண்ட கொள்கையில் உள்ள உறுதியே ஒவ்வொரு அணிக்குமான அஸ்திவாரம்.

தனக்கென ஒரு இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து எந்த ஒரு கொள்கையிலும் நிலையில்லாத அவசரப்பட்டு வார்த்தைகளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் ஒருவரை அமைப்பாளர்களாக நியமித்த நீண்ட பொதுநோக்குத்திட்டத்தின் அறியாமை ..இதோ வெளியே வந்துவிட்டது..

எத்தனை அவமான ச் செயல்கள்..மகாபாரதக் கதைகள்..சாதி பற்றிய சாடல்கள்,தொலைகாட்சி பேட்டியில் நடந்துகொண்ட விதம்...
இன்னும் இன்னும்....
ஒரு மர்மப்படம் போல கடைசி நேரத்தில் வேட்பாளரை மாற்றியது..

இங்கே இப்படி என்றால்
லட்சக்கணக்கான தோழர்களின் ரத்தமும்,வியர்வையும் சிந்திய தோளேறிய சிவப்புத் துண்டு காலில் விழுந்து கிடக்கிறது..
நீண்ட நெடிய இயக்க வரலாற்றில் வலது இடது என பிரிந்தபின்னே மீண்டுமொருமுறை இயக்கத்தின் இதயத்தில் இவரைப்போன்றவர்கள் ஏற்படித்திய பிளவுக்காயங்களை அவ்வளவு எளிதாய் யாரும் மறந்திருக்க முடியாது...
ஜனநாயகம்,பொது எனப்பேசும் இவர்கள் பற்றிய நடவடிக்கைகளை பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் கூட ஜனநாயகம் இல்லாத இவர்களைப்பற்றி என்ன இருக்கிறது பேச...
பொது இயக்கத்தின் ஒரு தலைவரைப்பற்றிய இத்தனை செய்திகளுக்கு உயர்மட்டக் குழு என்ன பதில் சொல்லப்போகிறது?
உள்கட்சி விவகாரம் என மறுத்தால் உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு..

வெறும் வாய்ச்சொல் மட்டும் கொண்டு தான் வளர்ந்துவிட்டு இயக்கத்தை இழிநிலைக்குத்தள்ளும் இவரைப்போன்றவர்களை எதற்காக வைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்...மாபெரும் தொண்டர்படை இவர் பின்னே போய்விடும் என்றா?
நீங்களும் மாட்டிக்கொள்வீர்கள் என்றா?

நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து வங்கிவாசல்களில் செத்து மடியும்போது
தோள்களின் துண்டு கீழிறங்க இழவுகேட்கப்போவது தான் இயக்கப்பணியா?

தினம் தினம்  டெல்டாக்களின் விவசாயி செத்து மடிகிறான்...
நாலு பேர் ரோட்டில் நின்று ஒரு ஒலிபெருக்கி உதவியுடன் கோஷம் போட்டுவிட்டு..மாபெரும் மக்கள் கடலில் முழங்கியதாய் கட்சிப் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பிவிட்டு டீக்குடித்து கலைவதுதான் கட்சியும் இயக்கமும் எனில் தயவுசெய்து கட்சியின் பெயரையும் கொடியையும் மாற்றிக்கொள்ளுங்கள்...ஒரு இயக்கவாதி நான் என்று கம்பீரமாய் சொல்லித்திரிந்த என் போன்றோர் நாக்கை அறுத்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது...

உலகம் மாறி உள்ளங்கைகளுக்குள் வந்துகொண்டிருக்கிறது...நீங்கள் நாலு போஸ்டர் அடித்து நாட்டை மீட்டுவிடலாமென நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்...

பல நாட்களாய் புகைந்துகொண்டிருந்த மன நெருப்பைத்தான் நான் அடக்கமுடியாமல் கொட்டிவிட்டேன்...யாரேனும் மணி கட்டுவார்கள் என்றால் எல்லாம் மவுனமாய் இருக்கிறார்கள்.

இந்த தேசமும் மக்களும் மிக மோசமான ஒரு காலகட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பது தெரிந்தும் இப்படி மௌனமாய் இருப்பது புத்திசாலித்தனமல்ல..
அது கொடும் பாவம்.

கொள்ளைபோகும் பொதுத்துறை நிறுவனங்கள்..தனியார் மயமாகும் அவலங்கள்..
மாநிலத்துக்கு மாநிலம் தண்ணீர்த்தாவாக்கள்..
செல்லும் செல்லாதென ரூபாய்க்குழப்பங்கள்..
முகநூலில்,வாட்ஸ் அப்பில் கொதிக்கும் அளவில் சில சதவீதம் கூட இல்லாதிருப்பது கேள்விக்கும்,கேலிக்கும் உரியது...

இல்லை நாங்கள் போராடுகிறோம்..செயல்படுகிறோம் நீங்கள் அறியவில்லை என்றால்.. அது உடல்முழுதும் எரிந்து கிடக்கும் ஒரு ஜீவனுக்கு மயிலிறகு கொண்டு வீசுவது போலத்தான்...
உடனடித்தேவை மருந்து மட்டும்...
உங்கள் போராட்ட ..தீர்மான வடிவங்கள் உங்களுக்கே போதுமானதாக இருந்தால் தயவு செய்து முடிவெடுக்க வேண்டிய ,செயல்படுத்தவேண்டிய பொறுப்புகளை இளைஞர்களிடம் விட்டுவிட்டு வீட்டிலிருங்கள்...

ஆயிரம் வரலாறுகள்,நீங்கள் கடந்துவந்த தலைமறைவு வாழ்க்கை எல்லாம் கதைகளாக எத்தனை நாட்கள் கேட்பது?
நாளை வரும் தலைமுறை உங்கள் கதையை படித்தால் துப்பாதா?

அரசியல்,கூட்டணி,போராட்டம்,தீர்மானம், உயர்மட்டக்குழு,எல்லாவற்றையும் மறந்துவிட்டு மக்களுக்காய் மக்களாய்,தொழிலாளியுடன் தொழிலாளியாய் வாழப்பழகுங்கள்...

இல்லையெனில் வரும்காலங்களில் வரலாறு உங்களையும் அரசியல் குப்பைகள் எனவே கடந்துபோகும் அபாயம் இருக்கிறது...

10 கருத்துகள்:

  1. செமையா பிச்சு உதறிவிட்டீர்கள் செல்வா...

    பதிலளிநீக்கு
  2. உண்மையான கோபம் நண்பரே
    ஒவ்வாருவர் உள்ளத்தும் குமைந்து கொண்டிருப்பதை எழுத்தில்
    இறக்கி வைத்துவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு நண்பரே....

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. மன நெருப்பை கொஞ்சமாக தான் கொட்டி உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. உங்களின் இந்த் குரல் அவர்களின் காதில் விழவேண்டும்

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க வேண்டிய ஒன்று தான் ஐயா.

    பதிலளிநீக்கு