திங்கள், 6 மார்ச், 2017

சாறும் சக்கையும்...

வெய்யிலோடும் நகரத்து
அண்மைச்சாலையில்

நீளும் பகல்
யாவும்
நின்று கொண்டிருக்கிறாள்..

சற்றே வளைந்த
நான்குசக்கர
வாகனமொன்றில்
குவிந்துகிடக்கிறது
நீர்தெளித்த
சாத்துக்குடி குறுமலை..

வியர்வை காய்ந்த
ஆடைகளுடன்
பிழிந்து நிரப்பி
கையளிக்கிறாள்..

தாகத்துக்கு
சிலரும்..
மோகத்துக்கு சிலரும்..

மொய்த்துக்கிடக்கிறது
பெருவனத்துக்கான விதைகள்.

சற்றே கருப்பினும்
மேகத்தை
வணங்கித் துதிப்பதைப்
போலவே
அச்சமுறுக்கிறாள்
அதட்டும் குரல்களுக்கும்.

பழத்துக்கான தவணை..
வண்டிக்கொரு வாடகை..
வயிறுக்குக் கொஞ்சம்
காசென
மெல்லிருள் கவிழும்
அந்தியில்
வண்டிநிறைந்து
கிடக்கிறது
சக்கைகள்...

6 கருத்துகள்: