வியாழன், 6 ஜூலை, 2017

முத்தமே...

முத்தங்களைப்பற்றி
எழுதவில்லையெனில்



கவிதைகளுக்கு
இறக்கை
முளைப்பதில்லை.

அம்மாவின்
முத்தங்கள்
நினைவிலில்லை.

அப்பா
ஒருவேளை
என் தொட்டில்
பருவத்தில்
பதித்திருக்கலாம்.

சிசர் சிகரெட்
தொங்கித்திரிந்த
அப்பாவின்
உதடுகள்
அத்தனை வாசமானது..
வசப்பட்டதில்லை
உயிரோடிருக்கும் வரை..

சிதையில்
அடுக்கிய
விறகுகளின்
மேலிருந்த
அப்பாவின்
முன்னெற்றியிலிட்ட
என் உதடுகளில்
மருந்துகளின்
வாடை..

உதடுகள் இழுத்து...
கன்னங்கள் கிள்ளிய
அத்தையின் முத்தங்கள்
ஈரமாயிருக்கிறது
இப்போதும்.

கிழப்பருவமெய்திய
அத்தையின்
கண்களில் போய்
தங்கிவிட்டது
முத்தங்களின்
சுருக்கங்கள்..

முத்தங்கள்
பெற வேண்டிய
பருவத்தில்
மூட்டை
சுமந்துகொண்டிருந்தது
முதுகு..

வாய்த்தவள்
வழங்கியவற்றை
வரிசைப்படுத்தினால்
கைமாற்றுக்
கடனாய்த்தான்
இருக்கிறது..

பிள்ளைகளிட்ட
முத்தங்களில்
அழுத்தமிருந்ததில்லை.

ஆழ மூச்சிழுக்கும்
ஆங்கில முத்தங்கள்
கருத்த என் இதழ்களின்
எட்டாக்கனி..

நாற்றங்கள் தொலைக்க
நறுமணமிட்டாலும்
சேறென விலகும்
சேருமிடங்கள்.

முத்தங்களின் மீதான
பேராசை இருந்தாலும்..

முக்கிமுக்கி
எழுதுவதெல்லாம்
கண்களின் முத்தமேனும்
காற்றின் வழி
வருமெனத்தான்..


















7 கருத்துகள்:

  1. ஆஹா... முத்தங்களுக்கான ஒரு தினத்தில் முத்தம் பற்றிய கவிதை! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

  2. ​முத்தங்களைப் பற்றிய எண்ணங்களின் மொத்தத் தொகுப்பா?!! அருமை.

    பதிலளிநீக்கு
  3. எப்புடிப்பா தம்பி இப்புடியெல்லாம்...அழகு!

    பதிலளிநீக்கு
  4. வாவ்!!! செல்வா!! செம! முத்தங்களின் தொகுப்பும் சத்தமில்லாமல் வார்த்தைகளின் வழி இனிக்கிறது!!!

    பதிலளிநீக்கு