செவ்வாய், 10 அக்டோபர், 2017

கடலளவும் மனசும்- கையளவு கடலும்..

விமர்சன மனோநிலையிலிருந்து கொஞ்சம் விலகி படைப்புகளுக்குபோகலாம் என்ற உறுதி..
பிரசவ வைக்கிராயம் போல ஆகிவிடுவதை எப்படி சொல்வது?

ஐநூறிலிருந்து ஆயிரம் பக்கங்களுக்கும் மிகுந்திருக்கும் புத்தகங்களைப் பார்த்தால்..
மனசு என்னவோ ஒரு பேரழகி என்னை இருகரம் நீட்டி அழைப்பதுபோலவே உணர்ந்து வாசிக்க ஆரம்பித்துவிடுவதுண்டு..

பெரிய படிப்பாளி என்ற அறிமுகம் வேண்டுமெனில் இப்படி புத்தகங்களை பின்னாலும்,
படிப்பது. போலவும் படமெடுத்துப் போடுவதும் தற்பெருமைதான்...

சின்ன அளவிலான..
குறைந்த பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை மிகவும் அலட்சியமாக எடுத்து படபடவென படித்துவிட்டு நகர்ந்து விடுவேன்...

ஆயிரமாயிரம் பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகம் செய்யமுடியாத வசீகரத்தை அளவில் சிறிய புத்தகங்கள் கொடுத்துவிடுவதென்பது..
அக்கினி நடத்திர நாளில் பெய்யும் மழை போல அதிர்ஷ்டமானது...

அப்படியாக மிகச்சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்களை சொல்லவேண்டும்...
முதலில் மறுவாசிப்புக்கு எடுத்த சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்..
மிகச்சிறிய நூலெனினும் ஜல்லிக்கட்டு பற்றிய அந்த குறுநாவல்...புரட்டிப்புரட்டி எடுத்துவிட்டது.

அந்த மயக்கமே தீருமுன்னே மற்றொரு புத்தகம் என்னை கையை பிடித்ததோடு இல்லாமல் அலேக்காக தூக்கிக்கொண்டு பால்யத்திற்கு பறந்து போய்விட்டது...

அருமைத்தோழர்..
மதுக்கூர்.ராமலிங்கம் அவர்களின் கையளவு கடல் என்னும் பாரதி புத்தகாலய பதிப்பு, என்னை இந்த அளவுக்கு பேச வைக்கிறது...

பிறப்பு தொட்டு சமகாலம் வரை எண்ணங்களை மிக எளிமையான வரிகளில் வன்முறை இல்லாத நகைச்சுவைகளில் அவ்வப்போது தீக்கதிர் இதழில் எழுதிய பதிவுகளை தொகுத்து வந்திருக்கும் அமைப்பு.

நாற்பத்து ஏழு தலைப்புகளில்  எத்தனையோ சாகரங்களின் அடர்த்தி நிரம்பிக்கிடக்கிறது...கையளவுக்கடல்.

தலைப்புகளில் மின்னிக்கொண்டிருக்கிறது முத்துகளென அலங்காரம்..

கரையின் அலைகளாய் எந்த பரபரப்பும் இல்லாமல் நடுக்கடலின் அமையாய்க் கிடக்கிறது இந்த கையளவுக் கடல்..

தந்தையை பால்குடி மறக்கும் முன்னே இழந்த ஒரு கிராமத்துச் சிறுவன்...தாய் மற்றும் சகோதரர்களோடு விளையாடித்திரிந்த ஊரின் நினைவுகளை குழைத்து...நகரத்து அண்மைய அவலங்கள் என்னும் கசப்பை தரும் லாவகத்தில் இவர் ஒரு சமூக மருத்துவராய் பரிணமிக்கும் பாங்கு...   அழகு..

சீனி டப்பா தேடி..புள்ளியாய் உதடு ஒட்டிக்கிடந்த வாய்...பல் வலிக்கென டாக்டரிடம் திறக்கும் போது...
உலகம் விரிகிறது.

காயில்லாத சாம்பார் பானையில் எழுத்துகள் எழுந்து வந்திருக்கிறது..

மணல் குவித்து வைத்திருந்த உள்ளூர் திரையரங்கத்தை,
நாலுமுறை இடைவேளை விடும் வாய்ப்பை..சட்டை கசங்க...அடுத்தவர் தோள்களில் நடந்து சீட்டுவாங்கி பார்த்த அனுபவம் நமக்கும் இருக்கும்..
ஆனால் அவைகள் காலக்கொடுமையில் குடான்களாகும் கட்டுரைக்கு அப்படி ஒரு தலைப்புதான் கொடுக்கமுடியும்.

நகைச்சுவைகள்,,கிராமத்து பாயாசத்தின் ஊடே கிடக்கும் உடைத்துப்போட்ட முந்திரியாய் அதிகம் கிடந்தாலும் அவலச்சுவை என்பது தட்டுப்படத்தான் செய்கிறது.

சமர்ப்பணத்தில் தெரியும் படைப்பாளரின் நன்றியுணர்ச்சி...அழுத அவரின் விழிகளின் கண்ணீர் துடைத்தற்கு நிகழும் போது மனசு பார்வையை மறைக்கிறது...

காலத்தின் அசுர வேகத்தில் கடந்து வந்த வருடங்களை நினைக்கவுமா வாய்த்துவிடுகிறது எல்லா மனிதர்க்கும்...
அது காட்டாற்று வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவதாய் அல்லவா அமைந்துவிடும்..
அசராமல் மனிதர் நீச்சல் அடித்திருக்கிறார்.

பட்டிமன்றங்களில்,மக்கள் மேடைகளில்,தனது அமைப்புக்கான இதழ்களில் ,தொலைகாட்சி ஊடக விவாதங்களில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துவைத்திருக்கும் தோழர்.மதுக்கூர் ராமலிங்கம்.. 
புத்தக உலகத்தில்  அசைக்கமுடியாத
இடமும் பிடித்திருப்பது சாதனைதான்.

மனோரமா ஆச்சியின் சிரிப்புக்குப் பின் இருக்கும் சோகத்தை இவர் இறக்கிவைத்திருக்கும் ஒவ்வொரு வரிக்கும் ரத்தமும் சதையுமாய் உயிர் இருக்கிறது.

சொல்லிக்கொண்டே போக நூல் முழுவதும் மின்னும் பொற்துகள்கள்    இருக்கும் போது எதை விட்டுவிட்டு நகர..புரண்டு புரண்டு கண்கள் பூசிக்கொள்கிறது.

இவ்வளவெல்லாம் சொல்லிவிட்டு..ஏதேனும் குறைகளை சொல்லாமல் விட்டால் விமர்சனப்பார்வைக்கு ஏதேனும் விக்கினம் வந்துவிட்டதென பதறப்போகும் நண்பர்களுக்காக ஒன்று மட்டும்.

கனமான எழுத்துகள் தாங்கிவந்திருக்கும் நூலின்
அட்டையை இன்னும் கொஞ்சம் கனமாக்கி இருக்கலாம்.

படைப்பாளர் ஒரு அமைப்பில் இருக்கிறார் என்பதற்காகவே இவர் என்ன எழுதியிருக்கப்போகிறார் என எளிதில் கடந்து போகாமல்
தமிழகத்தின் எல்லா திசைகளிலும் எடுத்து போய் வாசிக்கலாம்...நம் கடந்தகாலங்களையும்...இன்றைய பொழுதுகளையும் நாமும் யோசிக்கலாம்.

படைப்பாளரின் கையளவு கடல்...நெஞ்சுக்குள் கடலாய் புகுந்துகொண்டு தளும்பும் மாயம் என்னைப்போலவே வாசிக்கப்போகும் உங்களுக்கும் நேரலாம்..

நடக்க ஆரம்பித்திருக்கும் சில அறிமுக விழாக்கள் அதற்கான நம்பிக்கையை விதைக்கின்றன...



























7 கருத்துகள்:

  1. அவசியம் வாங்கிப் படிப்பேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு

  2. படிக்க ஆசைதான் ஆனால் புத்தகம் எளிதில் இங்கே கிடைக்குமாறு இருந்தால்தானே படிக்க முடியும் அதனால் ஆசைகள் நிராசைகளாகிவிடுகின்றன

    பதிலளிநீக்கு
  3. படிப்பதில் ஒரு சுகம். அதனைப் பகிரும்போது இன்னும் சுகம்.

    பதிலளிநீக்கு
  4. பசித்தவனுக்கு அவன் விரும்பும் உணவை ஒரேயொரு வாய் மட்டும் ஊட்டிவிட்டால்....இருந்த பசியோடு மேலும் ஆசைப்பசி எவ்வாறு கவ்விக்கொள்ளுமோ, அவ்வாறு விகற்பமில்லா ரசிகனாய், தோழரின் "கையளவு கடல்" பற்றிய தங்களது விமர்சனப் பார்வை மிகமிக நாகரிகப் போக்கில், ரசனை மொழியில் விருந்தாகப் அமைந்தவிதம் அப்புத்தகத்தை உடனே வாங்கி வாசிக்கும் ஆசையைத் தூண்டிவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. பெரிய புத்தகங்கள் - சிறிய புத்தகங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ரசனை. வாடிவாசல் என்னிடமும் இருக்கிறது. நல்லதொரு அறிமுகப் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  6. விமர்ச்சனமே அருகையாக உள்ளது த ம 5

    பதிலளிநீக்கு
  7. சரியான விமர்சனம். தற்போது தான் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். சிறப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு