ஞாயிறு, 12 நவம்பர், 2017

அறமெனப்படுவது யாதெனின்..

ஆரியப்பட்டா வானத்தை கிழித்தது
அணுகுண்டு பூமியைக் கிழித்தது

அரைக்கைச் சட்டைகள்
கிழிந்தது மட்டுமே
மனதில் நிற்கிறது

பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக் கிழித்தார்கள்
உணவும் எதற்கென்று இனி
இரைப்பையையும் கிழிப்பார்கள்

எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய் கிழிவது மட்டும்
வகை வகையாயிருக்கும்

-கந்தர்வன்

ஒரு நல்ல கலைஞனின் சிந்தனையில் ஆபாசம் கூட அழகாகிவிடுவது சகஜம் தான்..

கடைகளின் திறப்புவிழாவுக்கென அந்த நடிகை வரும்போது போக்குவரத்து சீர்குலையும் அவலங்கள் நிகழ்ந்தபோது இகழ்ந்தவன் நான்...
ஆயின் அவரை நல்ல கதாப்பாத்திரத்தில் ஒட்டவைக்கும் போது வணங்கத்தோன்றுகிறது.

பரந்து விரிந்துகிடக்கும் கடல் ஒரு கிராமத்தின் தண்ணீர்த்தாகத்தை தீர்க்கவில்லை..
ஒட்டியிருக்கும் ஓரிடத்தில் வானத்தை கிழிக்கும் விண்கலமெல்லாம் ஏவும்போது கொண்டாடும் தேசப்பற்றுள்ள கிராமத்து மனிதர்களை இந்த தேசம் வைத்திருக்கும் நிலை தண்ணீருக்காகப் போராடும் அவலம் தான்..

இருந்த மரங்களையெல்லாம் வெட்டி கதவுசெய்துவிட்டு காற்றுக்கு அலையும் நாகரீகத்தை செவிட்டில் அறையும் நாகரீக வளர்ச்சியை பிளாட் கற்களுக்கு வெள்ளையடிக்கும் ஒரு தோழனின் வாயிலிருந்து கேட்கும் போது நம் கன்னங்கள் வலிக்கிறது.

இந்த நாட்டின் கேவலமான தோல்விக்கு அரசியல்வாதிகளின் பங்கு 60சதவீதமென்றால் அதிகாரிகளின் பங்கு மிச்சமிருப்பதெல்லாம்.

கிரானைட் கொள்ளைகளையும்,கேடுகளையும் தடுக்கப்பார்க்கும் நேர்மையான அதிகாரிகளின் தோல்வி சக அதிகாரிகளால் தான் நிகழ்த்தப்படுவது அவலத்தின் முரண்.

முத்தெடுப்பவன் போல் முக்குளித்து மூச்சடக்கும் ஒரு நீச்சல் சிறுவனின் பெயரும் முத்தென்னும் போதே இயக்குனரின் இதயம் தெரிகிறது...
தொலைந்துபோன கபடிக்கனவை சுண்ணாம்படித்து அழிக்கும் ஒரு கிராமத்து மனிதனின் குருவிக்கூட்டில் வெடிவைக்கிறது ஒரு ஆழ்துளைக்கிணறு...

குழிக்குள் விழுந்து கைகளை குறுக்கிக்கிடக்கும் தன்ஷிகாவின் முன்னே நாம் கைகளை மட்டுமல்ல உடம்பையே குறுக்கி மன்னிப்பு கேட்கவேண்டியிருக்கிறது..
ஆயிரக்கணக்கான கோடிகளில் வானத்தை கிழிக்கும் நாட்டில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்ற கயிறு மட்டுமே கண்டுபிடித்திருப்பதை என்ன சொல்லி மறைப்பது...

பரவாயில்லை பட்டர்பிளை முடிச்சிட்ட அந்த கயிற்றில் ஏகப்பட்டபேர் தொங்கவேண்டியிருக்கிறது.


மீட்புப்பணிக்கான வாகனம் கோளாறாகி நிற்கும் போது வண்டியில் மட்டுமா கோளாறு?
வழிகளை மறிப்பதை தள்ளிவிட வேண்டுமெனில் இன்னும் ஆழமான குழிவெட்டி தள்ளிவிட ஏகப்பட்டதிருக்கிறது...

ஜி.எஸ் டி எல்லாம் சேர்த்து டிக்கெட் வாங்கி ஒரு திரைப்படம் பார்க்கவேண்டுமா என்ற எண்ணத்தை மாற்றியிருக்கிறது அறம்...

ஒரு திரைப்பட அரங்கில் இருப்பதை மறந்து....
அலையற்ற அந்த கடற்புரத்தில் நாமும் குளிக்கிறோம்...
முள்மரம் வெட்டும் அந்த கிராமத்து மனிதர்களின் வியர்வை வாடை நமக்கும் அடிக்கிறது..
விழுந்துப்கிடக்கும் சிறுமியின் இருட்டுக்குள் கேமரா வெளிச்சம் படும் போது சிலிர்க்கிறது...
மாவட்ட ஆட்சியராய்ப் பல பெருச்சாளிகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் பதைபதைக்கும் ஒரு மனுஷியை ஆட்சியராய் காட்டிய இயக்குனருக்கு சபாஷ் என்றால் பாத்திரத்தை ஏற்று இருக்கும் நயந்தாராவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

சிறுவர்களின் பெற்றோர்,அவர்களின் கிராமத்து மாந்தர்கள் ..அதிகார தோரணையின் அட்டகாசமான முகங்களின் தேர்வு கச்சிதம்...
நறுக்குத்தெரித்தாற்போன்ற வசனங்கள் ... சுட்டெரிக்கும் ஒளிப்பதிவு..

அதிகாரம் தாண்டிய மனுஷத்தனத்தால் அந்த சிறுமி மீட்கப்படும் போது இந்த தேசத்தில் இவரைப்போன்ற சில அதிகாரிகளேனும் வாய்த்துவிட்டால்  நாமும் எந்தக்கயிற்றிலேனும் ஒரு நாள் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை பிறப்பது இந்த படத்தின் வெற்றி.

பொதுவாய் நான் திரைப்படங்களுக்கு கருத்தெழுத விரும்புவதில்லை..
ஆயினும் அறம் என்னை எழுதவைத்திருக்கிறது...

அதுவும் ஒருவகை அறமும் கூட.








3 கருத்துகள்: