திங்கள், 27 நவம்பர், 2017

மீண்டும் சரியும் இமயங்கள்...

பின்னிரவு கடந்து
நடுங்கும் குளிரில் நகரம்
உறங்கிக்கொண்டிருக்கிறது.


நகரும் என் ஸ்கூட்டியின்
மார்பில் மோதி அடித்தழுகிறது
வாடை..

நெடுநல்வாடையின் கூதிர்காலத்து
மங்கிய கருத்த வானின்
மார்புக்குள்ளிருந்து
வழிந்துகொண்டிருக்கிறது பனிப்பால்..

ஒதுங்கியிருக்கும்
குடியிருப்பொன்றின்
சாலையோர வீட்டில்
சாவு சம்பவித்திருக்கிறது...

மாலை அல்லது முன்னிரவில்
நின்றிருக்கும் மூச்சு..

அழுகையின்  முட்டல்கள்
ஊதுவத்திப்புகையோடு
உத்தரமெங்கும்  ஒட்டிக்கிடக்க..
பதனப்பெட்டியில்
படுத்திருக்கிறான்
மனிதனாயிருந்தவன்..

மனைவியோ மகளோ
மங்கையொருத்தி
குனிந்திருக்கிறாள்...

வெளியூர் போன பிள்ளைகளோ...
பஞ்சம் பிழைக்க சுற்றமோ
வந்துசேரும் வரை
அவனோடு காத்திருக்கவேண்டும்...

வாடகைக்கெடுத்த இருக்கைகள்
அடுக்கியிருக்கும் வாசலில்
ஆடவரிருவர்
புகைத்துக்கொண்டே
மௌனமாய்  இருக்கிறார்கள்..

நாளை
இந்த முற்றம் சுற்றங்கள்
சூழ அழுதும் கதறியுமிருக்கும்..

இமயம் சரிந்த பதாகையொன்றில்
அன்னாரின் பளிச்சிடும்
முகத்தில்  மாலையிருக்கும்..

மரணம் கழிந்த மாலையில்
பூக்கள் சிதறிக்கிடக்கும்
இதே சாலையை
எல்லாரையும்
போலவே நானும் கடப்பேன்...

சக்கரமாய்  சுழலும் நாட்களில்
முதலாம் நினைவாண்டுப்
பதாகையில்
அந்த முகம்
மீண்டும் தெரிகையில்
கடக்கும்  இரவில்
மீண்டுமொரு கவிதை
எழுதவேண்டும்....








3 கருத்துகள்:

  1. அட்டகாசம் அட்டகாசம். வரிகள் தானாக வந்து விழுகின்றனவா? உண்மையின் உண்மை இத்தனை கற்பனை கலந்த கவிதைவாடையாய் மனத்தைக் குளிர்விப்பதன் புல்லரிப்பை என்னவென்றுரைப்பது!!

    "நெடுநல்வாடையின் கூதிர்காலத்து மங்கிய கருத்த வானின் மார்புக்குள்ளிருந்து வழிந்துகொண்டிருக்கிறது பனிப்பால்" அட கற்பனையின் உச்சம்!! ஒவ்வொரு வரியும் தனியாக வர மறுத்து, உவமையாய்ப் பிரசவமாகிறது;அதுவும் வலியற்ற சுகப்பிரசவம். வாசித்ததும் எங்கள் இதயம் சரிந்தது. வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா!

    பதிலளிநீக்கு
  2. மனிதனாயிருந்தவன் என்று வரவேண்டுமோ?

    முகத்தில் மோதும் உண்மைகள். நீரில் முழுகி நினைப்பொழியும் எண்ணங்களின் நீட்சி. அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள்
    பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு