வெள்ளி, 22 ஜூன், 2018

ஊர் நீங்கல்



இருட்டத்துவங்கும் மாலை
குட்டியானை வாகனத்தில்
இறுக்கிக் கட்டியிருக்கிறது
சுமைகள்..
இரும்பாலான கட்டிலொன்று
நீர் சுமக்க
வரிகளிட்ட பிளாஸ்டிக்
குடங்கள்.
சுருட்டிய மெத்தை.
உறைகளில்லா தலையணை
சிலவும்.
மூட்டைகளில் துணிகள்.
இலவச காற்றாடி.
இற்றுவிட ஆரம்பித்திருக்கும்
மரமேசை..
பிள்ளைகள்
கட்டிப்பிடித்துறங்கிய
கரடி பொம்மை.

ஓட்டுநர் அருகில்
ஒருவன்
சுமைகளின் மீதொரு
பெண்ணும்
இரு பிள்ளைகளும்.

பிரிந்த சிறுதுவாரமொன்றின்
வழியே சிதறுகிறது
தலையணையின்
பஞ்சுப்பூக்கள்
சாலையில்.

அரவம் சூழ் சாலையில்
அமைதியாய்
கடக்கிறது ஒரு வீட்டின்
இறுதி ஊர்வலம்.

புதைக்குமா
எரிக்குமா
தெரியாது.
வரவேற்கும்
பிளாட்பாரங்கள் நிறைந்த
ஒரு
மாநகராட்சிப்பதாகை.

5 கருத்துகள்:

  1. பல ஆயிரம் குடும்பங்களின் கண்ணீர் கதையை ஒரு சில வரிகளில் வார்த்தெடுத்து விட்டீர்கள். மனதை ஒரு நொடி ஸ்தம்பிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. மனதைக் கலங்கடித்த கவிதை. இப்படி எத்தனை குடும்பங்கள்...

    பதிலளிநீக்கு
  3. ஈழத்தமிழர்
    இப்படித் தான் அடிக்கடி இடம் பெயர்ந்தனர்.
    நல்ல கவிதை
    எந்த நாட்டவருக்கும் பொருந்தும்
    தங்கள் கவிதைக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  4. குடும்பத்துடன் பயணிக்கும் வீட்டு சாமான்களின் கவித்துவமான வர்ணனை மனதைப் பிசைகிறது.

    பதிலளிநீக்கு