ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கூழாங்கற்கள்...என் பார்வைப்படுகையில்..

தண்ணீர்
செதுக்கிய
சிற்பங்கள்.

ஆற்றுக்காரியின்
ஆயிரம் கண்கள்.

கனவுப்பிரியனும்
நெஞ்சப்படுகையில்
கூழாங்கற்கள்
பொறுக்கி..
ஞாபக நதிகளில்
எறிந்திருக்கிறார்.

சிந்தனைச்
சிற்பங்களுக்கு
சிறுகதை
என்னும்
சிற்றாடை கட்டி
விளையாட
வைத்திருக்கிறார்.

சில இடங்களில்
சினிமாக்காரிகளின்
சிறிய ஆடையாய்
அது
மாறியிருப்பதை
மறுப்பதற்கில்லை.

பாம்பு பிடிக்கும்
கதையில் தொடங்கி
வர்மப்பிடி நடக்கும்
கதையில்
முடித்திருக்கிறார்.

மர்மங்கள்
அதிகமில்லை...
அந்த குறையை
தர்மங்கள்
நிறைந்து
தீர்த்து வைக்கின்றன.

கதைமாந்தர்
பெயர்களின்
கவனம் தெரிகிறது.

கல்மனம்
கொண்டவனுக்கு
செங்கராஜ்...

மற்ற கதைகளின்
கதாநாயகனாய்
கனவுப்பிரியனே
உட்கார்ந்து
கொள்கிறார்.

பிஞ்சுக்கால்கள்
மிதித்து..
களத்தில்
களிமண் வீடுகட்டி..

கதை முடித்துவிட்டு
கடந்து
போய்விடுகிறார்.
சாரலென.

பெருமழைக்கும்
பெயராத
பெருவீடாய்
மனசுக்குள்
வளர்ந்துவிட்ட
மாயத்தை
என்ன சொல்ல.?

அருவருத்த
குண்டு பாகிஸ்தானியின்
உதவிகளில்
நாமும்
நடனமாடலாம்
மணல் தேறிகளில்.
அவனிருந்த
இருக்கையில்
ஒரு
மலையாளியை
வைத்து முடிப்பது..
கொலைவாளினும்
கூரான
அங்கதம்.

ஆடு வளர்த்த வடிவு.

மச்சினிக்கு கிடைத்ததா
அழகுவிலாஸ்
கருப்பட்டி மிட்டாய்.

உப்பளத்து
தட்டாம்பூச்சி.

ஊர்ப்புறத்து
பெட்ரோமாக்ஸ்.

உருமாறும்
பனங்கொட்டை.

உள்ளம் விரும்பும்
குத்தாட்டம்.

மட்டைப்பந்தின்
தப்பாட்டம்.

அயலக
வேலையெனில்
அள்ளுக்கிறார்
பணத்தை
என்போம்.

தள்ளும்
இளமையை,
கொல்லும்
தனிமையை,

கொண்டவன்
ஒட்டகத்தோடு காய..
உள்ளூரில்
அவள் பாடு..

ஒரு
ஈ மெயிலென
டெலிட்
செய்துவிட்டு
கடந்துவிட
முடியவில்லை.

விக்கிரமன்
படங்களென
நான்கு பக்கங்களில்
வளர்ந்து விடுகிறது
வாழ்க்கை.

மத்திய
கிழக்காசியாவின்
அமீரகங்கள்.

தேம்ஸ் நதியிலும்
பயணிக்கும்
கதைப்படகு..

துருக்கியின்
இஸ்தான்புல்..

சத்தமில்லாமல்
சங்கர் படம்
பார்த்த நிறைவு..

போதைகடத்தல்,
இயந்திரங்கள்
திருடுதல்.
சாமர்த்தியமாய்
சம்பாதிக்கும்
மதிப்பெண்கள்.

ஒரு
புத்தகத்துக்குள் தான்
எத்தனை
படங்கள்.

சிறுகதையின்
சீரிய இலக்கணங்கள்..

சிரிக்காதீர்கள்.
எனக்கும்
தெரியாது.

நான்
வாசித்த உணர்வை
மட்டுமே
வார்த்தைகளில்
தருகிறேன்.

கனவுப்பிரியனின்
கதைகளை
நான்
கதைகளாகப்
பார்க்கவில்லை.

கடல்கடந்து
பேய்
போகாதென்பார்கள்.

எத்தனை
கடல் கடந்தும்
மூளையின்
மூலையில்
சிலும்பிக்கொண்டே
இருக்கும்
சின்னவயசுக்
கனவுகள்
ஒருபோதும்
உறங்காது.

அரபிப்பெண்களின்
கல்லூரி என்றாலும்,

பாலஸ்தீனனின்
வேலைக்கூடம்
என்றாலும்,

நெற்றித்தழும்பை
தடவுமிடம்
என்றாலும்..

அப்பாவுக்கு
பார்த்த பெண்
தன்னைப்பார்த்தழும்
கொழும்பாய்
இருந்தாலும்,

வந்து வந்து
குந்திக்கொள்கிறது.

சொந்த ஊர்
நினைவுகள்.

சந்தித்த
மனிதர்களின்
கதையை
சிந்தித்து
எழுதி
இருப்பதாய்த்தான்
உணர்கிறேன்.

கதையென்ன?
கருத்தென்ன?
கண்டனங்கள்
சொல்வோர்கள்
கடைசிவரிசைக்கு
போய்விடுங்கள்.

அடுத்தவர்
டயரி
வாசிப்பதில்
ஆனந்தமடைபவர்
நீங்களெனில்
வாருங்கள்..

கூழாங்கற்களை
பட்டைதீட்டிய
கனவுப்பிரியனின்
கரங்கள் பிடித்து
முத்தம் தரலாம்..

தடையொன்றுமில்லை
சபாஷ்
எனும்
சத்தம் கூட
வரலாம்..









5 கருத்துகள்:

  1. கனவுப் பிரியனின் கூழாங் கற்கள் நூலினை கவிதை வடிவில்
    விமர்சனம் செய்து அசத்தி விட்டீர்கள் சகோ. இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. புதுக்கவியால்
    அற்புத விமர்சனம் நண்பரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. கவிதை வடிவில் நூல் விமர்சனம். அருமை.
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. அட!!! என்ன ஒரு விமர்சனம்! கவி வடிவில்! வித்தியாசமான நூல் விமர்சனம்..அருமை! அசத்திவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  5. அருமையான விமர்சனம் ....
    இந்த விமர்சனமே புத்தகம்
    வாங்க படிக்கத் தூண்டுகிறதே....

    பதிலளிநீக்கு