ஞாயிறு, 22 அக்டோபர், 2017

விவாத வெங்காயங்கள்..

என் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...
கடந்த பதினெட்டு வருடங்களாக நாங்கள் தொலைகாட்சி பார்ப்பதில்லை...அந்த விசயத்தில் என் பிள்ளைகளும் ஒத்துழைத்ததோடு புரிந்துகொண்டதும் எனக்கான வரம்...

பிள்ளைகள் கல்விக்காக கடலோரம் சென்றதும்..
அலுவலக இடமாற்றத்தால்...தவிர்க்க முடியாமல் ஒரு தொலைகாட்சிப் பெட்டி என் வீட்டுச்சுவரில் ஆணியடித்து மாட்டிக்கொண்டது..

காய்ந்தமாடாய் விளம்பரங்களில் தொடங்கி நள்ளிரவு மருத்துவ ஆலோசனை வரை பார்க்கத்தொடங்கினேன்..

சமூகத்தின் தவிர்க்க முடியாத ஆர்வலனாய் தொலைகாட்சி விவாதங்களில் தொலையத்தொடங்கினேன்..

தொலைகாட்சியின் விளம்பரங்களையும்,பாடல்களையும்,சிலர் பேட்டிகளையும் அபத்தம் என்றால்..இது போன்ற விவாதங்கள் அபத்தங்களின் பெரும் தலைவன் என தைரியமாகச்சொல்லலாம்.

வெளிநாடுகளின் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை அட்லியின் வேலை செய்யும் உள்ளூர் ஊடகங்கள் இவற்றையும் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்..

பொதுவாய் நாம் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச்செல்லும் போது அந்த  நாளின் சந்தையில் மிக மலிவான காய்கறி என்ன என்பதை எளிதாய் அறியலாம்...போலவே...

நாள் முழுசும் பிரேக்கிங் செய்தி என அலற விடும் அய்யாக்கள்..இரவு தொடங்கியதும் அவர்கள் அமைதியாகி அடுத்தவர்களை அலற விடுகிறார்கள்...

அன்றைய தினம்..வசதிக்கேற்ப நடிகனின் அறிக்கையோ..அணிகளின் சேர்க்கையோ சிக்கிவிடுகிறது..

ஜல்லிக்கட்டு காலங்களில் இருந்துதான் இவர்களின் சமூக அக்கறை பீறிட்டு பொங்க ஆரம்பித்தது...

தமிழகம் மட்டுமல்லாமல் உலகமே உற்றுப்பார்த்த ஒரு நிகழ்வை திட்டமிட்டது போல் செய்ததில் ஊடக தர்மம் மறக்க முடியாதது...காலைவரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாய் நிற்பதுபோல காட்டி விட்டு ஹிப்ஹாப் ஆதியின் பேட்டியை பலமுறை தேவையில்லாமல் ஒளிபரப்பி சேவை செய்தார்கள்..
ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு சார்பு உள்ளதை கடைசி வரை அவர்கள் மறைக்கப்பார்க்கும் சாகசம் அபாரம்...

கட்சியில் இதுவரை சரியான வெளிச்சம் படாத குறிப்பிட்ட பத்து இருபதுபேரை ஏலமெடுத்து வைத்திருப்பார்கள் போலும்..

நெறியாளர்கள் மட்டுமே இந்த நாட்டின் ஆகப்பெரிய நடுநிலையாளர்களாய் மாறிவிடும் அவல நிலை.

ஒரே மனிதர் சமூக செயல்பாட்டாளர்,கல்வியாளர்,பத்திரிக்கையாளர்,எழுத்தாளர்,மற்றும் ஒருகட்சியின் சார்பாகவும் கலந்துகொள்வது காலத்தின் கோலமே..

இவர்கள் எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு கருத்துக்கும் சம்பந்தமில்லாத அதிகார வர்க்கத்தின் நேரடியான ஒருநபர்...மற்றும் அவர்களுக்கான சிலீப்பர் செல் ஒருவர்...ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர்கள் சிலர் என வரவேற்பறைக்கு வந்துவிடுகிறார்கள்..
எல்லாவற்றிலும் கொடுமையாய் யாருக்காக இவர்களின் விவாதப்பொருள் இருக்கிறதோ அவர்களில் ஒருவருக்கு இவர்கள் தரும் அடைமொழி "சாமானியர்".

நீண்ட இடைவெளி விளம்பரங்களுடன் தொடரும் விவாதங்கள் எந்த காலமும் சரியான முடிவுகளுடன் முடிந்ததாய் இல்லை..

ஜி.எஸ்.டி பற்றிய பேச்சை தொடர்வார்கள்...பதில் சொல்லவேண்டியவர் காந்தியை யார் சுட்டது என ஆரம்பிப்பார்..

சின்னம்மா என்பார்கள்...எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் தெரியுமா என்பார்கள்...
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் நடந்த கொடுமையை ஒரு காவல்துறை ஓய்வுபெற்ற அதிகாரி நியாயப்படுத்தி பேசினார்...அத்தனை ஆதங்கம்..

நெடுவாசலாகட்டும்,கதிராமங்கலம் ஆகட்டும் விவாதப்பொருள் நேரடியாக இருக்கும் போது அதை ஆதரிப்பவரையும் பேசவைப்பது சரிதான் என்றாலும் அது நியாயமான ஒரு போராட்டத்தில் மறைமுகமாக பிளவை ஏற்படுத்தும் செயல் அன்றி வேறென்ன?

ஆளும்,எதிர்க் கட்சிகளோடு தோழர்களும் சில விவாதங்களில் கலந்துகொண்டு பேசுகிறோம் என நெறியாளர்களால் முழுமையாக பேசவிடப்படாமலும்  சக விவாதிப்பவர்களால் ஏளனப்படுத்தப்படுவதும் வாடிக்கையாய்த்தான் போனது..

தொடர்ந்து சில நாட்கள் இவை போன்ற விவாதங்களை பார்க்கும்போது சலிப்பும் கோபமும் எனக்குமட்டும்தான் வருகிறதா என்ற ஆர்வத்தின் பொருட்டே இதனை எழுதுகிறேன்...

ஊடக விவாதங்களின் ஒட்டுமொத்தத்தில் அவர்களுக்கு பின்னே ஒரு அழுத்தம் இருப்பதை உணரமுடிகிறது..அவர்களின் பிரதிநிதி இல்லாமல் விவாதங்கள் இருப்பதில்லை..

கேட்கும் எந்த கேள்விக்கும் நேரடியாக இதுவரை எந்த பேச்சாளரும் பதில் சொல்வதில்லை..
தோளில் துண்டுபோட்டு பேசும் அறிவாளிகளின் விவாதத்தை எந்த நேயர்கள் விருப்பபட்டு கேட்கிறார்கள் என்ற விவரமும் கிடையாது..

ஊடகம்..ஊடக தர்மம் எல்லாம் கேட்பதற்கு மிக இனிப்பானவை..ஆயின் அவற்றுக்குப்பின் இருக்கும் முதலாளித்துவ சார்புப்பார்வைகள் மறைக்கமுடியாதவை..
சமூகத்தின் மிக அவசியமான பல செய்திகளை மூடிவைக்க ஊடகங்களே உலைமூடியாகின்றன..

டெங்கு என்னும் கொசுக்களின் வாயை மெர்சல் என்னும் திரைப்படச்சர்ச்சையால் மூடப்பார்ப்பதும் அப்படித்தான்.

முகவரி இல்லாத பலவற்றிற்கு முகவரி பெற்றுத்தரும் மறைமுக வேலையைத்தான் விவாதங்கள் செய்கின்றன...
மிக நேர்மையாக கேள்விகள் கேட்பதாய் சொல்லிவிட்டு இவர்கள் நைச்சியமாக செய்யும் வேலைகள் சமூக ஆபத்து..

ஆளுநர் ஊரிலிருந்து கிளம்புவது முதல் விமானநிலையம் வந்து அலுவலகம் நுழைவது வரை பிரேக்கிங் செய்தியை எவனும் இங்கே கேட்கவில்லை..

வாய் பார்த்து வாழ்க்கையை தொலைப்பதும்..அடுத்தவர் பிரச்சனைகளை கேட்டு தன் கிழிசல் மறப்பதும் தொன்றுதொட்டு வரும் தமிழனின் பெருமையை மிகச்சரியாக புரிந்துகொண்டு விவாதமென்ற பெயரில் இவர்கள் செய்வது கார்ப்பரேட் தந்திரம்..

மற்றவர்களுக்கு எப்படியோ..
அறிவார்ந்த இடது,வலது சாரித்தலைவர்கள் இது போன்ற விவாதங்களில் பங்குபெறுவதை தவிர்க்கலாம் அல்லது குறைந்த பட்ச நிபந்தனைகளோடு குறுக்கீடு இல்லாமல் பேசுவதற்கேனும் போட்டுவிட்டு பங்கேற்கலாம்..

நேயர்களாகிய நமது பங்காக..தொலைகாட்சி பார்த்தே ஆகவேண்டுமெனில் நல்ல பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் என பார்த்து பசியாறலாம்...
உள்ள நாளிலேயே தில்லைநாயகமாய் தடுமாறிக்கிடக்கும் நாள்களில் இவர்களின் விவாதத்தையும் பார்த்து துக்கப்படவேண்டாம் என்பதே என் அவா.



















5 கருத்துகள்: