செவ்வாய், 31 அக்டோபர், 2017

பெய்யெனப் பெய்யும் மழை!!!

இதோ மின்சாரத்தை
தொலைத்திருக்கிறோம்..

எத்தனை நேரம்
மின்னூட்டினாலும்
இணைப்பிருக்குமா
தெரியாது
அலைபேசி..

மதிப்பிழப்புச் சுனாமிக்கு
பின்னே
இல்லாத
கணக்கில்
எத்தனை சுரண்டி எடுக்க..

பால்வாங்கி
வைக்கவேண்டும்
சாகவும்
வாழவும்..

தண்ணீரோடு
பாம்புவருமா
படகுக்கு
காத்திருக்கவேண்டும்..

முகநூலில்
சொல்லி அழ
படங்களோடு
வார்த்தைகள்
பொறுக்கி சேர்த்துவைக்கவேண்டும்..

சொந்த ஊர்
போகலாமா
தீபாவளிக்கடனே
தீரவில்லை
என்றாலும்
தாம்பரம்
தாண்டுவதே
தள்ளாட்டமென 
செய்திகள்..

நடிகன்
எவனும்
வேட்டிகட்டி
சோற்றுப்பொட்டலம்
தர இன்னுமேன்
வரவில்லைக்
கவலை...

நதிகளைக்
கற்பழித்து
கட்டடப்பிள்ளைகள்
யார்
பெற்றதென
பேசத்தொடங்கிவிட்டார்கள்
தொலைகாட்சி
வல்லுனர்கள்..

நகரின்
சிறப்பை
வடிகால்
அமைப்பை
சிலாகிக்கிறார்கள்
வல்லுநர்கள்.

அண்ணாச்சிகள்
கடைகளில்
யானைவிலையில்
ஜி.எஸ்.டி
சேர்த்து
காய்கறி
கிடைத்தால்
ஊர்க்கோயிலில்
தேங்காய்
சூறைவிடவேண்டும்...

சின்னம்
கிடைச்சிருந்தா
இந்நேரம்
சிங்காரம்
அடைஞ்சிருக்கும்.
பாவம்
அவங்களத்தான்
என்ன
குத்தம் சொல்லித்திட்ட..

இப்ப என்ன
ஸ்டிக்கர் ஒட்ட?
இருக்குமில்ல
போராட்டம்..

நாதியத்த
சென்னையில
காலமெல்லாம்
நடப்பதுதான்.

கவலையெல்லாம்
போன மழை போல
கிடைக்குமா
கருணைத்தொகை..

எந்தக்கவலையும்
உனக்கில்லை
மாமழையே..
பெய்யெனப்பெய்யும்
மழை..


















7 கருத்துகள்:

  1. மழை, கவிதை மழையைக் கொண்டுவந்துவிட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான வரிகள் ..

    என பாராட்டக்கூடிய நிலையில் இல்லை அதன் கருத்துகளின் தாக்கம்...

    எளிய வார்த்தைகளில் ...

    கூறும் ஒவ்வொன்றும் உண்மை...


    நதிகளை கற்பழித்து ..கட்டட பிள்ளைகள்...

    பதிலளிநீக்கு
  3. பெய்யெனப் பெய்யும் மழை...
    அருமை அண்ணா...
    நாதியத்த சென்னையில் பெய்யும் மழை விவசாயத்தை நம்பியிருக்கும் நம் பக்கம் பெய்யலையே...

    பதிலளிநீக்கு