வியாழன், 14 டிசம்பர், 2017

புறப்பாட்டில் ஒரு அகப்பாட்டு...

தாஜ்மகால்
செங்கோட்டை
வெள்ளைமாளிகை,

முகப்புகள்
இப்படியாக
அடிக்கடி
முளைத்துவிடுகிறது
பொருட்காட்சி.

எறும்புகளாய்
இயங்கி
சிருஷ்டித்து
விடுகிறார்கள்
சின்ன
உலகத்தை.

தாலாட்டும்
ஒரு
விளையாட்டு..
தலைசுற்றும்
ராட்டினம்..
தட்டின்
அகலத்திற்கு
அப்பளம்..

கொட்டிக்கிடக்கும்
காய்கறி
சிதறல்கள்..
முகப்பை மட்டும்
மாற்றும்
பொருட்காட்சிகளில்
அகங்கள்
இப்படியேதான்
இருக்க...

காலாண்டோ
அரையாண்டோ
விடுப்புகளை
குறிவைத்துவிடும்
பொருட்காட்சிகள்...

தகரங்களின்
சுற்றுச்சுவர்
விலகலில்
தெரிகிறது
அவர்கள்
உலகத்தை
காலிசெய்யும்
சத்தங்கள்..

நேற்றுடன்
கடைசி
என்றதை
மறந்திருக்கிறேன்..

கோட்டைமதில்களாய்
கும்பங்களாய்
நேற்றிருந்தவை
குவித்துவைத்திருக்கிறது.

நேற்று
வானத்தைத்தொட்டவை
லாரியில்
ஏறியிருக்கிறது..

கொத்தளத்து
மூலையொன்றில்
சிறுநீர் வாடை..

ஓடம்போலாடிய
ஊஞ்சலொன்று
கவிழ்ந்து கிடக்கிறது.

பெரியவர்க்கான
கட்டணத்துடன்
நான்
நேற்றே வந்திருப்பின்..

வாழ்க்கையை
மிக எளிதாய்
விழிகளுக்குத்தந்த
இந்த
பொருட்காட்சியை
நான்
இழந்திருப்பேன்.




















4 கருத்துகள்: