திங்கள், 5 மார்ச், 2018

கவிஞன் யானோர்...

இலக்கிய
அமைப்பொன்று
நடாத்தும்
கவிதைப்போட்டியின்
முதல்பரிசு
ஆயிரம்
உரூபாயாம்.

முகநூல்
குழுமமொன்று
முடிவுசொல்லுமுன்
போடக்கூடாதென
இறுபத்து ஐந்து
வரிகளில்
மரபோ
புதுசோ
கவிதையை
நள்ளிரவுக்குள்
அனுப்பி
தேர்வானால்...
போட்டோஷாப்பில்
புகைப்படத்துடன்
வாழ்த்துமாம்..

செத்துப்போன
படைப்பாளியின்
சீமையிலிருக்கும்
பிள்ளைகள்
கருமாதிச் செலவை
கவிதைப்போட்டி
நடத்தி
கழிப்பதுமுண்டு..

சித்திரை
தொடங்கி
பங்குனி
வரைக்கும்
தமிழாய்ந்த
அமைப்புகளின்
பெயர்கள்
இரண்டு
படிகளோடு
மார்பளவு
புகைப்படமும்
அனுப்பச்சொல்கிறது..

பி.டி.எப்
அமைப்பில்
எழுத்துருப்
பெயரோடு
போட்டிக்கழைப்பார்கள்
இணையம்
சார்ந்த
பாரிவள்ளல்கள்...

பணமும்
பதிவும்
போடும்
பத்திரிக்கைகளில்
எடிட்டரின்
சொந்த
மின்னஞ்சல்
முகவரி
எல்லோருக்கும்
கிடைப்பதில்லை..

சிற்றிதழ்
தொடங்கி
சிங்கை,
இலங்கை
மலேய
நாடுவரை
அறிவிக்கும்..
போட்டிகளை
அவதானிக்க
வேண்டும்..

தொகுப்பென்று
ஒன்றுபோட
கவிதையைக்காட்டிலும்
தலைப்பிற்குத்தான்
தகறாறுகள்.

செருப்புகள்
தேய்ந்தாலும்
தேறாது,
வாழ்த்துரைக்கென
வல்லிய
கவிஞனுக்கு
வைத்திட்ட
வந்தனங்கள்..

கண்ணீர் அஞ்சலி
மட்டும் போடும்
பத்திரிக்கை முதலாய்..
கையெழுத்தில் வரும்
ஈறாய்
இரண்டிரண்டு
அனுப்பினாலும்..
இதழின்
கடைசி
மூலையில்
வந்து சேர்ந்தது
என்ற
வார்த்தையும்
வருடம் தாண்டி
வந்தால் நிச்சயம்..

சிறப்புப்பரிசென்ற
பரிசு
வாங்க
சீக்கிரமே
கிளம்பிப்போனால்
கிடைப்பதெல்லாம்
முனை நீட்டிய
ஷீல்டொன்றும்
மினுமினுவென
சால்வையொன்றும்..

அச்சச்சோ
கவிஞனென
அச்சத்தால்
கடப்பார்கள்...

கவிதை எழுதி
தகுதியேதும்
உயரவில்லை
வீட்டுக்குள்..
வீதியன்றி
என்ன வழி...
விழி பிதுங்கித்
திரிகின்றோம்..
தெரியுமோ

எங்கள் வலி??










































9 கருத்துகள்:

  1. நெடுங்கவியானாலும் கோர்த்தவை அருமை

    பதிலளிநீக்கு
  2. தெரியுமோ எங்கள் வலி.....

    உண்மை தான்......

    பதிலளிநீக்கு
  3. நிஜம்....

    அருமையான வரிகள்..

    பதிலளிநீக்கு
  4. நிறைவான வரிகள் - நெஞ்சின் ஆழத்திலிருந்து.

    பதிலளிநீக்கு