வெள்ளி, 6 ஏப்ரல், 2018

நீதிமன்றமே....நீதியில்லையா?

ஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்திய அரசியலமைப்புச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீதி மன்றங்களே நாட்டின் ஆகப்பெரிய வழிநடத்துவதாய் இருக்கும் நாட்டில் அந்த துறை இப்போது எப்படி இருக்கிறது என்பதை அடிப்படை அறிவு உள்ள யாவரும் அறிவார்கள்..

உள்ளூர் நீதி மன்றங்களில் கிடைக்கும் தீர்ப்புகளும்,மாநில அளவில் நடைபெறும் மாற்றங்களும்,உச்ச நீதிமன்றம் என்னும் அதன் தலைமைப்பீடம் பற்றிய செய்திகளும் அந்த தூண் பற்றிய நல்ல எண்ணத்தை யாருக்கும் தருவதாயில்லை.

அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் அமைப்பானது காவல்துறைகளை மட்டுமே இத்தனை நாள் வைத்திருந்தது போல, நீதித்துறையும் வந்துவிட்டதைப்போலவே நடக்கும் நிகழ்வுகள் அத்தனை உவப்பாய் இல்லை...

மிகச்சமீபமாய் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குள் உண்டான உரசல் நீதிமன்றத்தையே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் இடிபோலத்தான் விழுந்திருக்கிறது...

தன்னலம் கருதாத மிக உயர்ந்த நீதிபதிகள் பரிபாலனம் செய்த நீதிமன்றங்களில் அரசியல் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியதே அதன் ஆக முதற் காரியமாக இருக்கவேண்டும்...

நம்மைப் பொறுத்த வரை..
முன்னாள் முதல்வர்க்கு தரப்பட்ட இரண்டு நீதிபதிகளின் முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பு அத்தனை பகடிகளை உருவாக்கியதென்றால்...
எப்போதோ முடிந்த ஒரு வழக்கின் தீர்ப்பு  மிகச்சரியான நேரத்தில் வெளியாகி தமிழகம் கேலிக்கூத்தாகிக்கொண்டிருக்கும் நிலை அறிவோம்...

ஆண்டாண்டு காலமாய் சுங்கச்சாவடியில் செத்துக்கொண்டிருக்கும் பலர் தொடுக்கும் வழக்குகள் இழுத்துக்கொண்டிருக்க..
ஒரு நீதிபதியின் வாகனம் தாமதப்படுத்தப்படும் போது வீறுகொண்டு எழுவதை என்ன சொல்வது?
காவேரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் செயல்படுத்த முடியாத மத்திய அரசுக்கு உற்ற தோழனாய் செயல்படுவது நீதிமன்றங்களன்றி வேறில்லை எனத்தான் தோன்றுகிறது.

மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் ஓடிப்போய் பதுங்கிப்பாதுகாத்துக்கொள்ளும் இடமாகத்தான் நீதிமன்றங்கள் தெரிகிறது..
அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தீவிரமாய் இருந்த போது நீதிமன்றம் உதித்த முத்துகள் கல்லில் பொறித்து வைக்கவேண்டியவை...

நீதிமன்றங்களைப் பற்றியும்...தீர்ப்புகளைப்பற்றியும் எந்த ஒரு வார்த்தையும் பேச துணிவில்லாத ஒரு காலம் இருந்ததை மறுப்பதற்கில்லை...ஆனால் இன்று மீம்ஸ் உருவாக்குபவர்கள் மிக எளிதாக நீதிமன்றங்களை பகடிக்குள்ளாவதையும்,உச்ச நீதிமன்றத்தையே கலாய்ப்பதும் சமூகத்தின் குற்றமாய் நான் கருதவில்லை...
நீதியின் தரத்தின் மேல் தான் கேள்விக்குறிகள்?

அளவுக்கு மீறி வீங்கிக்கிடக்கும் வழக்குகளின் கோப்புகள்...
புதிது புதிதாய் வந்து குவியும் வழக்குகள்...
எப்படியோ நிகழும் இழுத்தடிப்புத்தாமதங்கள்...

சட்டம் பற்றிய பெருமிதங்களில்
"பல குற்றவாளிகள் தப்பிக்கலாம்..ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது"

என்பதும் ஒன்று..
எல்லாம் சரிதான்.. ஆனால் வழங்கப்படும் நீதியில் வழக்காடியவர்களின் மகிழ்ச்சி எந்த அளவில் உள்ளது என்பதை நீதிமன்றங்கள் எப்போதேனும் உணர்ந்திருக்குமா?

தாமதப்படுத்தப்படும் நீதி குற்றம் என்பதை நீதிமன்றத்திற்கு யார் உரத்துச்சொல்வது?

அரசையே காப்பதும் நேர்வழியில் வழிநடத்துமாக சொல்லும் நீதிமன்றம் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை என்ன செய்வதாக உத்தேசித்துள்ளது..

வேடிக்கையாய் கூட சொல்லலாம்..
நம் சமூகத்தில் ஒரு காலத்தில் கணவன் மனைவி சிரிப்புகள்,டாக்டர் சிரிப்புகள்,மன்னர் சிரிப்புகள்,நீதிமன்ற சிரிப்புகள் என பல வகைகள் உண்டு...
அவற்றில் நீதிமன்ற சிரிப்புகள் தவிர மற்ற எல்லா சிரிப்புகளும் அப்டேட் ஆகி உள்ளன...
நீதிமன்றம் போனால் வழக்கறிஞர் குடும்பம் பிழைப்பதும்,
வயலுக்கான சண்டையில் வரப்பும் மிஞ்சாது போவதும்...
இன்னும் மாறாமல் தொடரும் அவலச்சிரிப்புகள்..

நாட்டில் நடக்கும் எல்லாக்குழப்பங்களுக்கும்...நாளும் நடக்கும் போராட்டங்களுக்கும்,
வல்லரசுக்கான படிக்கல்லாக இல்லாமல் ஆகப்பெரிய தடைக்கல்லாக இருப்பதும் நீதித்துறை மட்டுமே என நான் நம்புகிறேன்.

நம் மக்கள்  மருத்துவரை தம் உயிருக்கு கடவுளாக கருதும் வேளையில் நாட்டுக்கான கடவுளாக நீதிமன்ற தேவன்களையே நம்புவது வாடிக்கை...

நீதிபதியானவர் கடவுளுக்கு ஒப்பானவராகவும்...தன் முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் தராசின் நடுமுள்ளாய் துல்லியமான தீர்ப்பு வழங்குபவர்களாகவும்,
இடையிடையே வந்து போதும் அதிகார வர்க்கத்திற்கு மறைமுகமாகவேனும் ஆதராவாய் இல்லாதவராகவும், சட்டத்தின் படி நடப்பவராக இருந்துவிட்டால் எல்லாம் சரியாகும்...

அதிகாரத்தின் எந்த மிரட்டலுக்கும் பணியாத
நீதிமன்றமே நாட்டின் ஆகக்கடைசியான இந்தியாவின் நம்பிக்கை...

அந்த பொன்னான வேளை வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான்
வாழ்ந்து தொலைக்கவேண்டும்..ம்ம்ம்








7 கருத்துகள்:

  1. எங்கும் சுலபமாக கிடைக்கக் கூடியது

    அநீதி

    பதிலளிநீக்கு
  2. நம்பிக்கையை மட்டுமே நாம் கொண்டிருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. எல்லா இடங்களிலும் லஞ்சம் புரையோடிக் கிடக்கிறது - என்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
  4. காலம் கனியும். நம்பிக் காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு