வெள்ளி, 13 ஏப்ரல், 2018

ஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....

மாலை
மிகச்சரியாக 6 மணி
என்றிருந்தால்
புதுமையில்லையென

5.59 என்றிருக்கும்
அழைப்பிதழை
மிகச்சரியாய்
அவதானித்து,
ஏழுமணிக்கு
வரும்போதும்
ஆரம்பமாகாத
கூட்டங்களின்
கடைசி வரிசை
கவலை கொள்ளாது..

மேடையின் பின் திரை..
நடத்துனரின்
வசதியை பறைசாற்ற..

முன்னிருவரிசைகள்
வாரிசு முறைப்படியும்..
வளங்களின்
அடிப்படையிலுமானது...

நடுவின் வரிசைகள்
குடும்பங்களுக்கானது..

இங்கிருந்து
இங்கிலாந்து
வெளியேறிப்
போனாலும்..
இங்கிலாந்தே
இல்லாமல்
போனாலும்
மேரி ரொட்டிகள்
நேர்ந்துவிடப்பட்டவைகள்..

கேன்களில் வந்த தேனீரோ
கோதுமைப்பாலோ
காகிதக்கோப்பைகள்
ஆறிக்கிடைப்பதால்
ஊதாமல் குடிக்கலாம்.

வரவேற்புரைகள்
சிறப்புரை ஆவதும்..
வந்திருப்போர்
உறங்கும் வரை
வாழ்த்துரைகள்
நீளுவதும்
கடைசி வரிசைக்கு
கசப்பதில்லை..

பொன்னாடை போர்த்துவதும்..
புகைப்படங்கள்
எடுப்பவரின்
பின் புறத்தை
பார்ப்பதும்
பின் வரிசைக்கு
அதிகம் உறுத்தாத
தூரதரிசனங்கள்...

அலைபேசி உரசி
அலறும் ஒலிபெருக்கியின்
அகிம்சை கடக்கலாம்...
முன் வரிசைகள்
முகம் சுளிக்காமல்
அவசர வேலை போல்
அகன்று போகலாம்...

பின் வரிசையின்
ஆகப்பெரிய வரம்
மரம் போல்
அமர்ந்திருக்கும்
முன்வரிசை
அப்பாவிகளை
அடையாளம்
கண்டு கொள்ளலாம்..

அமர்ந்திருக்கும்
பெண்களின்
ஆடவர் நிலைமைக்கு
இரங்கலாம்..

பார்வையிடும் விசயத்தில்
மேடைக்கு உள்ள
அத்தனை வசதியும்
பின்வரிசைக்கு
உண்டெனினும்..
வெளிநடப்பு அதிகாரம்
பின் வரிசைக்கானது.

பின் வரிசை
ரசிகர்களை
நீங்கள்
கடந்து தான்
முன்னே
போக வேண்டும்..
பின் வரிசைகள்
அந்த
அவஸ்தைகள்
கொள்வதில்லை...

கடைசி வரிசை தான்
கூட்டத்தின்
அணிகலன்.

கலைவது
கடைசி வரிசைக்கு
எப்போதும் பிடிப்பதில்லை..
இருக்க வைக்கத்தான்
யாருக்கும்
தெரிவதில்லை..


















8 கருத்துகள்:

  1. உண்மை
    தங்களின் பதிவு கண்டு நீண்ட நாட்களாகிவிட்டன நண்பரே

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரிசை....

    நல்ல அவதானிப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. இலக்கிய கூட்டத்தின் அனுபவம் எனக்கில்லை.இருந்தாலும் வரிசைகளின் வேற்றுமை சொன்னவிதம் ரொம்ப அழகு..

    பதிலளிநீக்கு
  4. இப்பொழுது தெரிகிறது…
    நீங்கள் ஏன் கூட்டமே நடத்துவதில்லையென்று!
    கடைசிவரிசையில் இன்னொரு வசதியும் உண்டு செல்வா!- தன் வேலை முடிந்தால் (முடியாவிட்டாலும் வேலை இருப்பதுபோல) போய்விடலாம்(?)

    பதிலளிநீக்கு