வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்த மழை நமக்கல்ல...

அன்பின் சக்தி,
வான்மழை உனக்கு விடுப்பு தந்ததென்று சிரிக்காதே. அது மேகங்களின் அழுகை.சென்னையின் தீபாவளி என்னை இப்படியெல்லாம் எழுதச்சொல்கிறது.
உலகில் நாளை என்பதே மறந்துபோனது போல கடைவீதிகளில் கொள்முதல் கூட்டங்கள்.
யாதொரு உடையுமின்றி இருந்தார்களோ இதுவரை என்பதுபோல் உடைகளை உரிமையாக்குவதில் ஒரு உற்சாகம்.
இந்தியா ஏழைகளின் நாடென்று இனி சொல்லக்கூடாது..ஏழைகளாய் நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் நாடு.

மாலை ஆறு மணிக்கு தொடங்கிய வெடிகளின் ஓசை இரவு 11மணிவரை காதுகளுக்குள்.
எப்போதும் நான் புகைக்கையில் காதுகளில் புகைவரும் உன் அம்மாவுக்கு,அன்று நான் புகைத்ததே தெரியவில்லை.
இயற்கையும் எவ்வளவோ மன்றாடி கண்ணீர் விட்டுத்தான் பார்த்தது.
மனுசப்பயல்....என்னமாய் ஆடிவிட்டான்.

ஒரு சந்தேகம் சக்தி.. எனக்கு.

சமீப காலமாய் வந்துபோகும் அட்சய திதியின் வரலாறு நமக்குத்தெரியும்...முதலாளிகளின் கைவண்ணம் என்று..அதைப்போலவே தீபாவளி என்ற ஒன்றும் தந்திரமாகவே புகுத்தப்பட்டிருக்கவேண்டும்.
எத்தனை பணங்கள் காகிதங்களாய் சிதறிக்கிடக்கின்றன.?
எத்தனை மனிதர்களை புலம்ப வைத்து...புலம்பெயர வைத்திருக்கிறது.
சாலைகள் தோறும் மிதிபடும் குப்பைகள்..
வேதாளங்களாய் மாறிப்போன இளைஞர் கூட்டம்...

எவன் சொல்லிப்போனது..
இப்படி தீபாவளி கொண்டாடச்சொல்லி?
நடையோர மனிதர்களுக்கு,ஓர் உடையுமில்லா என் மக்களுக்கு யார் கேட்டது இந்த தீபாவளி?
அசுரனைக்கொன்றதால் கடவுள் தந்த வரமெனில்,
பட்டினியிலும்,ஏக்கங்களிலும் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு கடவுள் எத்தனை தீபாவளிகள் வரமளிக்க...?

வேதங்கள்,இதிகாசங்கள் இன்னும் எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டிருப்பவர்கள் நினைத்தது, இப்படி ஒரு தீபாவளியைத்தான் என்றால், வெடிக்க வேண்டியது வெடிகள் அல்ல....வீணான நம்பிக்கைகளை.

பட்டாசுப்புகையில் சிட்டுக்குருவிகளைக் கொன்றுவிட்டு,என்ன சொல்கிறது உங்கள் வேதங்கள் ஜீவகாருண்யம் பற்றி?
தீபாவளி கடந்த நாளில் கிடக்கும் குப்பைகள்... குப்பைகள் அல்ல....மனங்கள்.

என்ன செய்யலாம் சக்தி?
பட்டாசுகள் தவிர்த்து,
ஆடம்பரங்கள் மறந்து,
பட்டிமன்றங்கள் மூடி,
எந்த வனத்திலும்
வேதாளமாய் ஆடாமல்..
முடிந்தவரை சொந்தங்களோடு,
குறந்தபட்சம் குடும்பத்தோடு...
கொண்டாடுவோமா
இனிவரும்
தீபாவளி.?

அன்புடன்.
செல்வக்குமார்

கடவுளைக் கண்டேன் (5)

01. கூட்டுக்குடும்பம்

02. தலைவியாய் என் அம்மா

03. செத்துப்போன என் அப்பா

04. வீதிக்கு ஒரு வெண்ணிலா 

05. குற்றம் சொல்லாத  மனைவி

06. குரங்காய் தாவாத மனசு

07. புகை வாராத சிகரெட்

08. எதிர்பார்க்காத சுற்றம்

09. அலைபேசி இல்லாத ஓர்நாள்

10. வெடிகள் இல்லாத தீபாவளி திருநாள்
   
சொல்லும் 10 பேர்








தமிழ் சாகாதாம்......

கொஞ்சம் எதிர்பார்ப்புடன் தான் இருந்திருப்பாய்.உனக்கு மட்டுமென நான் எழுதத்துணிந்தாலும் இது எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதே என் ஆவல்.
உன்னைச் சாக்கிட்டே எழுதுகிறேன்.இது முதல் என்பதால் ஒருவரை உனக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.

மிகச்சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன்.அரசின் ஆட்சிப்பணியில் இருப்போரும்,பேராசிரியர்களும் அமர்ந்திருந்த அலங்கரிக்கப்பட்டிருந்த மேடை அது.

எல்லோரும் அமர்ந்தபின்னே ஒரு எளிய மனிதர்  ,வயது அறுபது தாண்டியிருக்கும் வெள்ளை வேட்டி,சட்டை ,குளிர்க்கண்ணாடியுடன் வந்தமர்ந்தார்.
கோட்டும் சூட்டும்,மற்றும் நாகரீக உடுப்புகள் நிறைந்த மேடையில் அவர் விதிவிலக்காய் இருந்தார்.
சொல்லொண்ணா கூச்சத்தில் அவர் இருப்பதாய் நான் உணர்ந்தேன்.அடிக்கடி குனிந்துகொண்டார்.

கூட்டத்தலைவர் பேசினார்.
அமைப்பாளர் பேசினார்.
ஆட்சிப்பணியாளர் பாடினார்,பேசினார்.
பேராசிரியர்கள் பேசினார்கள்.
ஒருவித சோம்பலில் நானிருந்தேன்.
இறுதியாக இவர் பேச வந்தார்.

பொதுவாக பாண்டிச்சேரி என்றதும் குடியும்,ஆசிரமும் தானே நினைவில் வரும் எனக்கு ஆனந்தரங்கம் பிள்ளையும்,பாரதியும் வருவார்கள்..ஆனால் சக்தி! இனி உனக்கு தமிழும்,தமிழறி்ஞர்களும் நினைவுக்கு வர வேண்டும்.

என்னுடைய வயதுக்கு இப்படி ஒரு தமிழைக் கேட்டதில்லை.
மனிதனின் உணர்வுகள் முப்பத்திரண்டையும் அவர் ஒரு குளிகையாக்கி சொன்ன விதம்..
பல நாட்டு மொழிகளிலே ஆழங்கால்பட்ட ஞானம்.
தொல்காப்பியம் தொடர்ந்து முத்தமிடும் உதடுகள்.
தமிழ் எந்த நாட்டின் மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய் இருக்கும் என்ற வரலாறு..
தமிழின் சில சொற்களே மருவிய கோலம்..
உலகின் எத்தனை மொழிகளில் தமிழ் உயிராயிருக்கிறது...பேசும் தமிழில் எதுவெல்லாம் தமிழில்லை...
தமிழின் வரலாறு..செய்யவேண்டியது என்ன?செய்தது என்ன?

ஒரு தமிழனாய் அன்று நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் மொழி ஆராய்ச்சி அந்த மனிதரை புடம் போட்டிருக்கிறது.
அந்த அமுதக்குடத்தின் சில துளிகள் ருசித்த நான் இன்னும் ஆனந்த மயக்கத்திலிருக்கிறேன்.

நாசமாய்ப்போன இந்த சமூகம் என்ன செய்துகொண்டிருக்கிறது?
எங்கும் தமிழ்..எதிலும் தமிழ்...தமிழ் வாழ்க! என்னும் வரிகளோடு முடிந்து போவதோ மொழிப்பற்று..?

தனியொரு மனிதனாய் எத்தனை முயன்றிருக்கிறார்?
ஞானச்சுடராய் அவரின் வெளிச்சத்தை அறிந்திருக்க வேண்டாமா இந்த இருட்டு உலகம்?

அத்தனை இருக்கிறது இந்த அறிஞரிடம்.
இந்த அரசும்,சமூகமும் அவரைக்கொண்டாட வேண்டாம்..அவரின் அறிவை,மொழிபற்றிய தெளிவை அள்ளிக்கொள்ளவேணும் வேண்டாமா?

முன்னர் எனக்கு பயமாய் இருந்தது சக்தி..
தமிழ் குறித்து.

ஆனால் நம் தமிழுக்கு எந்த நாளும் அழிவு வாராது..எத்தனை வந்தாலும் தமிழ் வாழும் என்ற மந்திரவாரத்தைகள் அவரிடம் கேட்டபிறகு அந்த பயம் போய்விட்டது.

ஏறக்குறைய ஒருமணி நேரம் அந்த தமிழ் மழையில் நனைந்திருந்தேன்.

தமிழுக்காய் வாழும் அந்த மனிதரை உலகிற்கே அறிமுகப்படுத்தவேண்டும்.
அதுவும் அவருக்காக அல்ல..தமிழுக்காக.

இனி நீ தமிழ் பற்றிய எந்த வினாவிற்கும் அவரைத்தேடலாம்.வாய்ப்பு கிடைத்தால் அவர் பேசக்கேள்.
நீ கேட்ட பல தமிழ் உரைகள் குறைகுடங்களின் தழும்பல் என்பதை உணர்வாய்..

இவ்வளவும் எனக்கருளிய மனிதர் யாரென அறிவாயா சக்தி...
அவர்
ப.அருளி.

அன்புடன்.
செல்வக்குமார்.

வியாழன், 12 நவம்பர், 2015

அன்பின் சக்திக்கு....

அன்பின் சக்தி,
சின்னவள் பற்றிய தொடர்பதிவுகளைப் பற்றி இதுவரை நீ எதுவும் சொல்லவில்லை என்றாலும் ,பதிவுகளை படிக்கும் நண்பர்களில் சிலர் பெரியவளை மறந்து போனீர்களா எனும்போது எனக்குள்ளும் ஒரு குறுகுறுப்பு வந்து போவது உண்மைதான்.

புதன், 11 நவம்பர், 2015

காலக்கடிகாரம்....


எண்ணாய் தெரிவது
தவிர்த்து
முட்கள் திரியும்
கடிகாரங்கள்
பிடிக்கும்
சின்னவளுக்கு..

ஐந்து ஐந்தாய் கூட்டி 
நிமிடங்கள்
சொல்லிவிட்டு
நொடிகளின்
பின்னே ஓடுவாள்.

காதுகளில் வைத்து
அதன்
துடிப்புகளுக்கு சிரிப்பாள்.

சின்னவயது கடிகாரம்
ஒன்றை
நேற்று
காண நேர்கையில்,

காட்டத்தொடங்கியது 
காலத்தை....

செவ்வாய், 10 நவம்பர், 2015

ஒரு ஊர்ல....ஒரு ராஜாவாம்...


நம்ப முடியாத
ராஜாக்கள் கதை
கேட்டதில்லை.
நிலவோடமர்ந்து
உண்டதில்லை. கோலமிடக்கற்றாளில்லை,
தாயம்,
பல்லாங்குழியென
பயிலவில்லை.
இறைவணக்கம் இல்லை,
தாவணி தரித்ததில்லை.

தாத்தாக்கள்
இருந்திருந்தால்...
எல்லாம்
தெரிந்திருக்குமோ
என்கிறாள்
சின்னவள்.

யாரும்
நமக்குள்  வேண்டாம்
என்கிறேன்.

சொர்க்கம்
உன்னைத்
தொலைத்தவர்கள்..

நரகத்தில்
இருப்பார்கள்...

திங்கள், 9 நவம்பர், 2015

தினம்தோறும்....

ஈரம் நெளியும்
சாலைகள் தோறும் மனிதக்கால்களின்
நடமாட்டம்.

எட்டி இருந்து
பார்க்கலாமா?...
இருட்டைக்கிழிக்கும்
மத்தாப்பு?

எண்ணெய்க் குளியல்..
சரசரக்கும் புத்தாடை..
குறைந்த பட்சம்
அதிகாலை விழித்தல்...

எதுவுமில்லை.

தீபாவளி
என்கிறேன்.
சின்னவள்
சிரித்துவிட்டுப்
போகிறாள்.

அட,
தேவதையின்
வீட்டில்
தினந்தோறும்
தீபாவளி.