புதன், 9 டிசம்பர், 2015

தொடர்பு எல்லைக்குள்..தொலைந்து போனவர்கள்...

அன்பின் சக்திக்கு,
அனுபங்களை உனக்கு எழுத ஆரம்பித்ததிலிருந்து,சந்திக்கும் எல்லாமே நீயும் நானும் சிந்திக்க வேண்டியவைகளாகவே நடந்துகொண்டிருக்கிறது.

பெருமழை தந்த விளைவுகளில் தலையாயதாய் நம்மை பாதித்தது தகவல் தொடர்பே.
நம் முன்னோர்கள் இறைவழிபாட்டிலும் சமூக அக்கறை கொண்டார்கள்.ஆலயக்கும்பங்களில் தானியங்கள் வைத்தனர்.வீட்டுக்கோலங்களிலும் எறும்புகளுக்கு இரை வைத்தனர்.

ரமணன்கள் பிறக்காத காலங்களில் வெட்டப்பட்ட கால்வாய்கள்,கட்டப்பட்ட அணைகள் யாவும் இடர்காலங்களைத்தாண்டி வலிமை கொண்டிருந்தன..
கல்லணை போதுமே காணும் சாட்சியாய்.

வளர்ந்துவிட்ட அறிவியல் யுகத்தில் எத்தனை மாற்றங்கள் கண்டுவிட்டோம்.சாதாரண காலங்களில் அறிவியலின் அத்தனை சுகங்களையும் அனுபவித்துப் பழகிவிட்டோம்.

கிலுகிலுப்பை பிடித்து விளையாடி ஒலிகளின் வகைகள் அறியவேண்டிய குழந்தைகளின் கைகளில் கைபேசி கொடுத்து பழகிவிட்டோம்.

நீளும் பட்டியல் நிறுத்தி விஷயத்திற்கு வருகிறேன்..
      
தகவல் தொடர்பு என்பது இன்றைய யுகத்தில் தவிர்க்கப்பட முடியாதது.
   
பல்லாண்டுகள் நடந்த ஆட்சியை மாற்றும் அளவிற்கு வலிமையும்,ஊழலும் நிறைந்த துறையாக இருக்கும் துறை.
 
ஊழல் என்பது ஊறிப்போன நாட்டில் எப்படியும் தொலைந்து போகட்டும்.

ஊழிகாலங்களில் தகவல்தொடர்பு முறிந்து மாயம் என்ன?

பரதேசிகள்.....

மட்டைப்பந்து விளையாட்டுக்கு மாற்றுவீரர்கள் வைத்திருக்கிறார்கள்.
நாசமாய்ப்போன அரசியலில் மாற்று வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

அத்தியாவசியமாய் மாறிப்போன தகவல் தொடர்பிற்கு ஏனில்லாமல் போனது மாற்று ஏற்பாடு?

சக்தி,
  வந்தது. நிலநடுக்கமோ,சுனாமியோ அல்ல..
மழை..மழை..மழை மட்டுமே...அளவில் கொஞ்சம் கூடுதலாய்..

∆இலவச பேசும் நேரம்
∆இலவச காலர் டியூன்கள்
∆அவளிடம் பேசுங்கள்...

இன்னும் இன்னும்...

வாழும் காலங்களில் வலைவிரித்து காசு புடுங்கிவிட்டு.
சிரமப்படும் காலங்களில் எங்கே தொலைந்தீர்கள்..

உடல்களை விற்று வயிறு வளர்க்கும் எங்கள் பெண்கள் பட்டினி கிடந்து பணம் அனுப்பி இருக்கிறார்களே...
அவர்களினும் நீங்கள் கீழோர்.

நாம் பேசிய காசுகளில் வயிறு வளர்த்து,உயிர் போன காலங்களில் ஒளிந்து கொண்டவர்கள்...

இனி வேறு வேலை செய்து பிழைக்கட்டும்.

ஆயிரம் தொழில் நுட்ப காரணங்கள் அவர்கள் சொல்லலாம்.

ஏற்க முடியாது எதுவும்.

இந்த நாட்களில் தகவல் தொடர்பின்றி எத்தனை சாவுகள் நடந்திருக்கும்..
உறவுகளிடம் உள்ளது சொல்லாமல் எத்தனை மன வேதனைகள்..

இதற்கெல்லாம் என்ன விலை.?

மேலும் சக்தி...
இந்திய நாட்டின் எல்லைப்புறங்களிலும் இப்படித்தான் இருக்கும் இவர்களின் சேவையெனில் ...? சிந்திக்கவும் முடியவில்லை.

எளிதில் கடந்துவிட முடியாது இந்த பிழைகளை...
அரசும்,ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும்.

சக்தி,
உனக்கு என் எண்ணங்களைச்சொல்கிகின்றேன்.

இப்படியே நாம் இருந்தோமானால் ...
இந்த பதிவை பத்திரப்படுத்தி வை.
உன் காலங்களில் உன் பிள்ளைகளுக்கும் அனுப்ப வேண்டியிருக்கும்..

அன்புடன்,
செல்வக்குமார்.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மழைச்சூடு....

அன்பின் சக்திக்கு,
இத்தனை நாட்கள் நீ கல்விக்கூடங்களில் கல்லாத பல பாடங்களை வீதிகளில் படித்திருப்பாய் என்ற நம்பிக்கையில் நான்.

மதங்களாலும்,கட்சிகளாலும் நம்பிக்கைகொண்டிருந்த நம்மின் வேதனையும் களைந்தெறிந்திருக்கிறது காலம்.

ஆயிரம் சமூக நல்லிணக்க மாநாடுகள் செய்யமுடியாத வேலையை விண்ணும் மண்ணும் புகட்டியிருக்கிறது.

மசூதிகள் தீவிரவாதிகளின் கூடாரமல்ல,மனிதநேயத்தின் மற்றொரு வீடு என நிரூபித்திருக்கிறார்கள் சகோதரர்கள்.

சக்தி,

இஸ்லாமியர்கள் யாவரும் நபிகள் பிறந்தநாட்டிலிருந்து நமது ஊருக்குள் வந்தவர்களல்ல.
அரசனும், அரசும், ஆண்டைகளும் அடித்த அடிகளுக்கு வடிகால் தேடி தொப்பிவைத்துக்கொண்ட நம் ரத்த உறவுகளே.

தீவிரவாதிகள் என்பவர்கள் எல்லா மதங்களிலும் இருப்பார்கள்...
பிப்ரவரி14ல் பேசிக்கொண்டுந்தவர்களை எல்லாம் தாலிகட்டிக்கொள்ளச்செய்த,

மாட்டுக்கறி வைத்திருந்ததாய் கொன்றுபோட்ட,
மிருகங்களை என்ன சொல்லித்திட்டுவது?

பிஞ்சுகள் மனதிலும்,
தொப்பியும் தாடியும் வைத்துக்கொண்டோரெல்லாம் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தைப் பதியவைத்த மனிதப்பதர்களை அவர்களின் கடவுளேனும் மன்னிப்பாரா?

நாம் ஒரு மதத்தில் பிறப்பது நம் கைகளில் இல்லை. ஆனால் எந்த மதத்தில் பிறந்தாலும் அதன் எல்லாக்கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.

நாம் மதங்களை நம்பவேண்டாம்..
மனிதர்களை நம்புவோம்.
உன் அம்மாவிடம்
கடவுளின் கதைகள் கேட்டு வளர்ந்தவள் தான் நீயும்.

காலம் உனக்கு சொல்லித்தரும்...
மனசாட்சி தவிர கடவுள் வேறொன்றுமில்லை.
"தன் நெஞ்சே தன்னைச்சுடும்" என்பதைத்தாண்டியா தண்டனை கொடுத்துவிட முடியும்...கூட்டல் கணக்கும் சரியாகத் தெரியாத நீதிமன்றங்களால்?

இறைவன் என்பவன் எப்படியிருக்கவேண்டும் சக்தி?

மனிதர்களை நேசிப்பவராய்..
எந்த சூழ்நிலையிலும் வன்முறை விரும்பாதவராய்,
அவமானங்களைத்தாண்டியும் அகிலம் காப்பவராய்,
தன்னுயிர் ஈந்தும் கொள்கை பிறழாதவராய்..

சொல் சக்தி..
மனித வதம் செய்யாத உன் கடவுள்கள் எத்தனை?

அற்புதமான ஆற்றல் நிறைந்த உன் கடவுள்கள்..
கேவலம் தான் படைத்த மனிதர்களின் குணங்களை மாற்றமுடியாமல்,
பிணமாக்கப் பிறக்கும் போது..

எப்படிச்சொல்வாய் அதனைக்கடவுள் என?

உன் இறை ஏற்பு...மறுப்பு என்பது உலகம் உனக்குக்கொடுத்த உரிமை...
ஆனாலும் அறிவியல் துணை கொள்.

இறைமறுப்பு பிரச்சாரம் என் நோக்கமல்ல..

நாம் மனிதம் காப்போம்,
மதங்களை கடவுள் காப்பாற்றிக்கொள்ளட்டும்.

அன்புடன்,
செல்வக்குமார்.

வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாபத்துக்கு அப் பால்.....

அன்பின் சக்திக்கு,
            உன்னோடு பேசி மூன்றுநாட்களாகிவிட்டன.சோக உணர்ச்சிகளின் விவரிக்கமுடியா உச்சத்திலிருந்து எழுதுகிறேன்.
பகுத்தறியும் பண்பையும்,கொஞ்சம் சமுதாய அறிவினையும் உனக்கு சொல்லியிருந்தாலும்,
பாச உணர்ச்சியின் முன்னால் எல்லாம் தள்ளிப்போகிறது எனக்கு.

பதினெட்டாம் திருமண நாள் எனக்கும் உன் அம்மாவுக்கும்.

1997 ஒரு அடைமழை காலத்தில் நடந்த திருமணம்.

வாழ்க்கையின் எல்லாச்சோதனைகளிலும் தோள் கொடுத்தவள்.
உங்கள் இருவரையும் உலகின் உன்னத பரிசாய் எனக்குக்கொடுத்தவள்.
இதுமட்டுமே இன்று சொல்லமுடிகிறது.

இன்று உண்டீர்களா தெரியாது...

கற்றுக்கொள் மகளே..
                        உலகம் இன்னும் கொடிய முகம் காட்டும்.
சென்னையின் அத்தனை லட்சம் மக்களில் "ஜெயின்" சமூகத்தின் பரிவும்,மிகக்குறைந்த மக்களின் அர்ப்பணிப்பு  உணர்வும் மறக்கத்தக்கதல்ல.

ஒரு மழை சென்னையின் மனிதர்களுக்கு எத்தனை பாடங்களை படிப்பித்துப்போய் இருக்கிறது?

கோடிகளில் வீடு கட்டியவன் மொட்டைமாடியில் நிற்கிறான்,  தண்ணீருக்கும் சோற்றுக்குமாக.

அருவருத்தும், தள்ளியும் மனதளவில் வைத்திருந்த மீனவச்சகோதரன் மீட்டுக்கொண்டிருக்கிறான் மனிதநேயத்தை.

அரசியல் பாலங்கள் அடித்துப்போய் இருக்கிறது.

உண்டியல் பணங்களின் மதிப்பை ATM காத்திருப்பு கன்னத்தில் அடிக்கிறது.

சென்னைதான் உயர்வென மற்றோரை பார்த்த சுண்ணாம்புக்கண்களுக்கு,
தமிழகத்தின் கடைக்கோடி வரை கண்ணீர் வடிக்கிறது .

இயன்றதை சேர்த்துக்கொண்டு கிடைத்த சாலைகளில் விரைகிறது சென்னை நோக்கி.

மழை பழித்த பதர்களே....
உங்களில் தான் இருக்கிறது  மனிதமனமற்ற மிருகங்கள்.

பாலின் விலையை மாட்டின் விலைக்கு விற்கத்தொடங்கியிருக்கின்றீர்கள்.
காய்கள்,குடிநீர், என கண்ணீர் வரவைக்கிறது உங்கள் கொடூரம்.

சிங்காரச்சென்னைக்கு இப்படி ஒரு மறுமுகமா?

இன்னும் பார்க்கவேண்டியிருக்கும் சக்தி...

பிழைத்துச்சென்ற மக்களின் பொருட்கள் மாயமாகும் பரிதாபம்.

உயிர்காக்கும் உயர்தர(?) மருத்துவமனை பிணங்களாய் மக்களை வெளியேற்றும் பரிதாபம்.

பொருத்தமான போட்டோக்கள் போஸ்டருக்காய் பொறுக்கி வைத்திருப்பார்கள்.

யோசி சக்தி..
நாம் தான் இந்த மனிதப்பிசாசுகளை வாழவைத்திருக்கிறோம்.
பால் ஒன்றும் உயிர்வாழத்தேவையான அதிமுக்கியப் பொருளல்ல...வரிசையில் நிற்கும் எல்லோர்க்கும்.

ஆனாலும் நிற்கிறோம்...அவர்கள் கறக்கிறார்கள்.

சாபங்களில் எனக்கு நம்பிக்கையில்லை.

இதை அறச்சீற்றம் எனக்கொள்.

காலம் எல்லாவற்றையும் கணக்கில் வைக்கும்.

ஆவின் பாலில் பணம் பார்ப்போரே....கவனம்
உங்கள்
சாவின் பாலுக்கும் வழியின்றி பிணமாவீராக.....

உன்,
செல்வக்குமார்.

புதன், 2 டிசம்பர், 2015

அடிமையின் மோகம்...

அன்பின் சக்திக்கு,
                                    கண்டிப்பாய் மழைபற்றி எழுதப்போவதில்லை என்றிருந்தேன். மழையின் தாக்கத்தில் நீயும் சென்னையின் தீவுக்கூட்டம் ஒன்றில் இருப்பதை எண்ணி நானும் கவலை கொள்கிறேன் தான்...
என்ன செய்ய ?
சராசரி இந்தியனாய் வாக்குகளில் தான் காட்டமுடிகிறது...

இந்த முறை வாக்களிக்கும் போது நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது..

நீரின் தேக்கத்திலிருந்து நீயும் சென்னையும் சீக்கிரம் மீண்டுவிடுவீர்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது..
உதவிக்கான கரங்கள் நீள்வதைப் பார்ப்பதில்.

உணவாய்,பொருளாய்,படகாய்,அலைபேசியின் மதிப்புக்கூட்டலால்,பிரார்த்தனைகளால் என விரிகிறது உதவும் கரங்கள்...

கேலிகள் தாண்டி ,மத,இன,வேறுபாடெனும் வேலியையும் உடைத்திருக்கிறது மழை.

மசூதிகளில்,தேவாலயங்களில்,கோவில்களில் மக்கள் நிறைந்திருப்பதை பார்க்கும் போது மனம் மகிழத்தான் செய்கிறது...
இது மழையின் மறுபக்கம்....

எல்லாம் ஒருபக்கம் வைத்துவிட்டு வா...இன்னொன்று பேசுவோம்.

மழைக்காக விடப்பட்ட விடுப்புகளில் எவ்வளவு உற்சாகம் இளைய சமுதாயத்திற்கு...இனி வரும் சனிக்கிழமைகளிலும்,கூடுதல் வகுப்புகளிலும் தான். தெரியும் அந்த சந்தோசத்தின் விலை.

சக்தி,

ஆங்கில வருட துவக்கம் ஜனவரி என்பதே உலகம் முழுமையும் கிட்டத்தட்ட ஒத்துக்கொண்ட ஒன்று...
ஆனால் கல்விக்கூடங்கள்,நிறுவனங்கள் ,இன்னும் சில மட்டும் ஏப்ரலில் தொடங்கி மார்ச்சில் ஒரு வருடத்தை முடிக்கிறார்கள்..

அதற்கென பல காரணங்களைச் சொன்னாலும் ,எல்லாக்காரணங்களிலும் அவர்கள் மாற்றத்தை விரும்பாததே தெரிகிறது. ஒரு மரபு என்பதே மாறக்கூடாதது என்னும் மாயை...

யார் இதனைக்கொண்டுவந்தது?
ஆங்கிலேயர் காலத்தில் வெய்யில் தாங்காத பரங்கிமேனி அந்த காலத்தில் விடுப்பைத்தொடக்கியிருக்கிறான்...

அவன் தொலைந்து பலவருடங்கள் ஆகியும் இன்னும் வைத்துக்கொண்டிருப்பதில் இதுவும் ஒன்று..

பள்ளிக்கல்வியில் மெக்காலே வகுத்த முறை.
நீதி மன்றங்களிலே மைலார்ட் என்னும் வாசகம்,
இப்படி இன்னும் ஆங்கிலேயன் நம்மிடம் அரூபமாக இருந்துகொண்டுதான் இருக்கிறான்.

மற்றதை அப்புறம் எழுதுகிறேன்..

உன் கல்விக்கு வருகிறேன்.
ஆண்டில் சில நாட்களேனும் மழைக்கென விடுப்பு தந்துவிட்டு சனிக்கிழமைகளையும் பள்ளியில் உங்களைப்படுத்தும் நிலைமை வருடம் தோறும் வருகிறது...

கல்வி வருடத்தின் ஆரம்பம் ஆண்டின் ஆரம்பம் போலவே ஜனவரியில் இருந்துவிட்டால் மழைக்காலம் வரும் நாட்களில் இறுதித்தேர்வு விடுப்பில் இருப்பாய்..
ரமணனைக்கொண்டாட வேண்டிய அவசியம் இருக்காது உன் போன்றோர்க்கு.

இப்போதும் என்னைப்போல் சிலருக்கு
படித்த கல்வி ஆண்டுகளில் குழப்பம் வரத்தான் செய்கிறது..

இதை மாற்றுவதில் என்ன சிரமம் இருக்கிறது..அரசும் ஆர்வலர்களும் இந்த நேரத்திலாவது இதனை யோசிக்கவேண்டும்..
மரபு மட்டும் தான் இதுவெனில், மாற்றுவதில் தயங்கவேண்டியதில்லை.

கல்வியாகட்டும்,கலாச்சாரமாகட்டும்,அது நம் நாட்டின் சூழ்நிலைகளைப்பொறுத்தே அமைவதில் என்ன சிரமம்..?
மாற்றுவதில் யாருக்கு என்ன நட்டம்?

கல்விமுறைகளையே மாற்றவேண்டித்தான் இருக்கிறது...

முதலில் இதனில் ஆரம்பிக்கட்டும்..

அத்தனை சிரமங்கள் தந்தாலும்,
நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது மழை..
அடடா...
மழையை தவிர்க்க முடியவில்லையம்மா...

அன்புடன்,
செல்வக்குமார்


செவ்வாய், 1 டிசம்பர், 2015

மழை வேண்டும்

அன்பின் சக்திக்கு,
நேரலை முழுவதும் நீரலைக்க்காட்சிகள். வானம் கண்திறக்கும் முன்னே விழித்துக்கொள்ளும் ஊடகப்பார்வைகள்.
குளிர்ந்த மழையை சூடாக்கும் விவாதங்கள்.வாட்ஸ் அப்,முகப்புத்தகம்,வலைத்தளம் யாவிலும் பெய்துகொண்டேயிருக்கிறது மழை.

பகடிகள்,பரிந்துரைகள்,குமுறல்கள்,கோபம் என எல்லாத்தரப்பையும் பேசவைத்துவிட்டது மழை.

கவலைப்படாதே சக்தி,
     நானும் உன்னிடம் மழைபற்றி இனி எழுதப்போவதில்லை.

இந்ததேசம்  எப்போதும் கையில் இருப்பதை கொண்டாடுவதில்லை. பறிகொடுத்த பின்போ கிடைக்காது இனிமேல் என்ற நிலையில் தான் உணரத்தொடங்குவார்கள்.

அது மழைக்கு மட்டுமல்ல...மனிதருக்கும் உண்டுதான்.

பாரதியே கலந்துகொண்ட ஒரு கவிதைப்போட்டியில் அவருக்கு இர்ண்டாம் பரிசு கொடுத்தவர்கள் நாம். அதுவும் என்ன பாட்டுக்குத் தெரியுமா?

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே".

அன்னையை முதியோர் இல்லத்தில் கொன்றுவிட்டு ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பார்கள்.
வாழும்போது தண்ணீர் கொடுக்காமல் செத்தபின் பால் தெளிப்பார்கள்.

இன்னுமாய் ஏகப்பட்டது இருக்கிறது.
துரித உணவுக்காலத்தில் இருக்கிறாய். நானும் முடிந்தவரை சுருக்கித்தான் தருகிறேன்.

ஓடும் நீரைக் காணும் வாய்ப்பு இன்னும் சில தலைமுறைகளோடு முடிந்துபோகுமென சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நீர் மட்டுமே நிர்ணயிக்கப்போகிறது எதிர்காலம் என்கிறார்கள்.

கொஞ்சம் கூடுதலாய் பொழிவதற்கு கோபப்படாதே..

மழை என்பது உன் தாய் தந்த பாலுக்கு சற்றும் குறையில்லாதது.

நீரில் எத்தனை அரசியலும்,அரசுகளும் மாட்டிக்கொண்டிருக்கிறது தெரியுமா?
பெட்ரோலியம் போலவே முன்னேறிய நாடுகள் தண்ணீரின் பால் பார்வையைத்திருப்பி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்நிய நாட்டின் நிறுவனங்கள் சும்மா வந்து கடைவிரிக்கவில்லை நம் நாட்டுக்குள்.
ஒரு காரை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது பல்லாயிரம் லிட்டர் நீரையும் தான் பறிகொடுக்கிறது பாரதம்.

இந்தியா ஒன்றும் கட்டாந்தரைகளின் நாடன்று...உலகநாடுகள் வந்து முன்னேற்றிவிட்டுப்போக..
அவர்கள் நாடுகளும் பூத்துக்குழுங்கிக்கொண்டிருக்கும் பூந்தோட்டங்கள் மட்டும் நிறைந்ததல்ல.
அங்கும் வறண்டுபோன நிலங்கள் உண்டு. வேலையில்லா தொழிலாளர்கள் உண்டு...
ஆனால்,    தண்ணீர் செலவழிக்க மனம் இல்லை...

இயற்கைக்கு ஒரு விதியிருப்பதாக சொல்கிறார்கள்.
இல்லாத இடத்தை இட்டு நிரப்புமென..
அது காற்றுக்கும் நீருக்கும் பொருந்தும் தானே.?

கொள்ளைபோகும் தண்ணீரை சமப்படுத்தவே வந்திருக்கும் மழை.

மனிதர்களின் சிரமம் உணரக்கூடியது தான்.மறுப்பில்லை.

கவலைப்படாதே...சக்தி.
மழை சரியாகும் அல்லது மக்கள் மழைக்கு பழகிவிடுவார்கள்.

சிரபுஞ்சியிலும் மனிதர்கள் வசிக்கிறார்கள் தானே?

ஆம் சக்தி..
  இந்த முறை மழையை அதிகம் திட்டி கண்ணீரோடு தண்ணீரையும் வீணடித்துவிட்டோம்.

யாரையும் திட்டவேண்டாம்.
நாமே தயாராகி்க்கொள்வோம்.
வரும் மழை காப்போம்.தண்ணீர்  தாங்குவோம்.
பெய்யட்டும் மழை.

அன்புடன்,
செல்வக்குமார்.

திங்கள், 30 நவம்பர், 2015

சப்பாத்தி என் உணவல்ல...

சின்னவளும்
நானும்
திரும்பிய சாலையில்..

சிதறிய
குல்மொஹர் மரத்தின்
பச்சைக்காய்களை
ஊதித்தின்கிறேன்.

நுழைந்ததும்
பரபரக்கிறாள்..
விஷமாயிருக்குமோ
என
விழிகள் நனைக்க

பற்பசை நீட்டி
தாதியாகிறாள்.

சொல்லவே
போவதில்லை..

சப்பாத்திக்கள்ளிப்
பழங்களும்
என்
சாப்பாடான
இளமையை...

சீப்பில் சிக்கிய வரிகள்...

அவள்
அன்னை
இல்லா
ஓர்
நாளில்
பின்னச்சொன்னாள்
என்னை.

எண்ணெய் தடவி
இழைகளாய் பிரித்து
சீப்புக்கும் வலிக்காமல்
சீவி..
ரிப்பனில்
ஓர்
பூ
முடித்து..

சின்னவள்
சிரித்தாள்.

நான் சீப்பில்
சிக்கிய
முடிகள் பொறுக்கியும்

ஒரு
கவிதை
நெய்திருந்தேன்.