வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அப்பாவின் கார்....

1975 களில் அப்பா லாட்டரிச்சீட்டுகள் வாங்குவார்.

நிலா வந்து திரியும்  ஏதோ ஒருநாளில் வாசலில் பாய்விரித்து  மடியில் ஒன்று,தோளில் ஒன்றென தொற்றிக்கொள்வதுண்டு
அவர் தோள்களில்.

உணவுப்பாத்திரங்கள் எல்லாம் வாசலுக்கு வர,அப்பா எல்லாவற்றையும் கலந்து அவர் கைகளின் அளவிற்கு உருண்டையாய் தரும் உணவின் ருசி..?
உருண்டையை முழுசாய் சாப்பிடவும் முடியாது..கீழே வைக்கவும் மனசு வராது.

நாளை லாட்டரியில் பரிசு விழுந்தால் என ஆரம்பித்துவிடும் ஒரு கற்பனை உலகம்.

அந்த வசீகர உலகம் அவரின் கவலைகளை மறக்க உதவியிருக்கக்கூடும் என்பதை இப்போது உணர்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் அம்மாவைப்பிடிப்பதற்கு பலகாரணங்கள் இருக்கும்..
ஆனால் அப்பாக்கள் பிடித்துப்போவதற்கு காரணங்கள் தேவையில்லை.

ஷேவிங் செய்த சில நாட்களில் முள்ளெனக்குத்தும் கன்னங்கள் வருடும் போது..அவர் இருக்கும் நிலை..கன்றொன்று தாய்ப்பசுவை உரசுவது போலிருக்கும்..

அப்பாவின் வாசம் பிடிப்பதில் அத்தனை அலாதி...

நள்ளிரவு ரயில் பயணத்தில்,தூரத்தில் தெரியும் ஒரு ஒளிப்புள்ளியைக்காட்டி,
விமானம் கிளம்புகிறது பார்..பார் என்னும் போது..அப்பாவே பறப்பதுபோல் இருக்கும்.

விரல்பிடித்து அழைத்துப்போய் பள்ளியில் சேர்த்துவிட்டு அவர்மட்டும் கிளம்பும்போது நான் அழுதிருக்கிறேன்.
அப்பா திரும்பிப்பார்க்காமலே போனார்..
கண்டிப்பாய் அவர் திரும்பியிருந்தால் அவரின் கலங்கிய விழிகளை நான் பார்த்திருக்கலாம்.

அப்பாவை ஒரு பதிவில் அடைத்துவிட முடியாது..

பதிவு பரிதவிக்கிறது..

அப்பா எப்போதேனும் எங்களை அழைத்துப்போகும் கற்பனை உலகில் எப்போதும் ஒரு
" செவர்லே" காரை வரவைத்துவிடுவார்..
சிவப்பு வண்ணத்தில்.

அப்பாவே கற்பனையாகி பதினாறு வருடங்கள் ஆகப்போகிறது.

நானும் அப்பாவானபோது கார்க்கனவு உண்மையானது...

உரிமம் பெறுவதற்காகமட்டுமே பழகிய உரிமையில் ஒரு பழைய காரை வாங்கி..ஓட்டத்தெரியாமல் தினமும் கழுவி,கை பிரேக்,கால் பிரேக் எல்லாம் அழுத்திக்கொண்டு ஸ்டார்ட் செய்து ஒரு நிமிடத்தில் அணைத்துவிடுவேன்.

பிள்ளைகள் தந்த உற்சாகத்தில் ஆறு மாதங்களில் கொஞ்சமாய் ஓட்டப்பழகிவிட்டேன்.
ஆனாலும் பதட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

மனிதன் மீது மோதியதில்லை...ஆனால் ஒருமுறை சப்பரத்தில் போன சாமியை நான் மோதியதில் அந்தரத்தில் சில நொடிகள் பறக்க வைத்திருக்கிறேன்.

அடுத்து  செவர்லே சிவப்பு வண்ணத்தில்..

அப்படி இப்படியென ஐந்து கார்கள் மாற்றிவிட்டேன்.

பணம் நம் தேவைகளை நிறைவேற்றுவதில்லை..
தேவைகளை அதிகரிக்கவே செய்கிறது என்பார்கள்...
கட்டாயம் எனக்கு கார் விசயத்தில் அது தான் நடந்தது..

கார் நின்றிருந்த இடத்தில் பூச்செடிகள் வந்துவிட்டது..

எனக்கும் ஒரு கற்பனை உலகம் வளர்ந்து விட்டது...

நள்ளிரவு..
நான் ஒரு சிவப்பு வண்ணக் காரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
பக்கத்து இருக்கையில் அப்பா என்னோடு..

பேசிக்கொண்டே வருகிறார்..

நீளமாகிறது சாலை.

புதன், 3 பிப்ரவரி, 2016

சுவாசமே...








அன்பின் சக்திக்கு,
நேற்று தொடங்கியது போல் இருக்கிறது..
இது 100 வது பதிவு.
எனக்குத்தெரிந்ததை எழுதுகிறேன்.
தெரியாதது தேடி ஓடுகிறேன்.
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் என்னை எழுதத்தூண்டியது இணையத்தில்.
ஆரம்பத்தில் என்னை எழுதவைத்த கலை இலக்கியப்பெருமன்றம்.
எப்போதும் எழுது எழுது என தூண்டிக்கொண்டிருக்கும் உன் அம்மா..கவிஞர் சுவாதி.
என் எழுத்துக்களை சிலாகிக்கும் நட்பு வட்டம். வலைப்பூ எழுத ஆரம்பித்தபின் கிடைத்த அபூர்வ தோழமைகள்.
நீ, சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
இந்த 100இல்  நான் முடிந்தவரை வீணான பதிவுகளை எழுதவில்லை என்ற திருப்தி இருக்கிறது.
எழுதியே ஆகவேண்டிய கட்டாயம் இல்லை..ஆனால் பின்னூட்டங்கள் மீண்டும் எழுதத்தூண்டுகிறது..
பின்னூட்டமிட்டு என்னை வளர்த்தெடுக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் தனி அன்பு..
இருக்கட்டும் சக்தி..
பள்ளிவாழ்க்கை மட்டுமேயான என் கல்வி முடிந்தபின்..
பாடங்கள் தாண்டியும் எது என்னை துடிப்புடன் வைத்திருக்கிறது.?
எல்லாப்பிரச்சனைகளையும் தாண்டி எது என்னை மூச்சுவிடச்செய்து கொண்டிருக்கிறது?
கொஞ்சமேனும் தமிழ் வார்த்தைகளை எது வழங்கியது?
எந்த சந்தேகமும் வேண்டாம்.
வாசிப்பு மட்டுமே என்னை வசிக்கவைத்திருக்கிறது.
புத்தகங்கள் பாராத நாள்...
துக்கநாள்.
வாசிக்கவேண்டும் சக்தி..
என்ன வேண்டுமானாலும் வாசி.
நீ வாசிக்கும் புத்தகங்கள் தான் உன்னை யோசிக்க வைக்கும்.
நூல்கள் இல்லாத வீட்டை கற்பனை செய்தும் பார்க்காதே.
புத்தகம் படிப்பது பற்றிய ஆயிரம் கருத்துகள் இருக்கலாம்.
மிக எளிமையாய் இதையும் சேர்த்துக்கொள்.
வாசிப்பு இல்லாமல் சுவாசிப்பதும் பயனில்லை..
முதலில் படி..
பின்
தேர்ந்து படி.
உங்கள் தலைமுறைக்கு படிக்க நிறைய இருக்கிறது..
பள்ளிப்பாடங்கள் தாண்டியும் படியுங்கள்.
படிப்பொன்றே
காணும் கடவுள்..


அன்புடன்.
செல்வக்குமார்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கொய்யாவுல....

அன்பின் சக்திக்கு,

கலப்படம் பற்றி நிறைய எழுத நினைத்தேன்.
எதை தொடுவது..எதை விடுவது..திகைத்து நிற்கிறேன்.

எதைத்தேடி அலைந்ததில் இப்படி நாம் வீணாய் போனோம்?

அபரிதமான அறிவாற்றலை நாம் ஏனிப்படி போலிகளில் தொலைத்து நிற்கிறோம்?

விற்பனைக்கு என்றே வந்து கொள்ளையடித்துப்போன வெள்ளையன் கூட இந்த அளவு கொலை எண்ணம் கொண்டு அலைந்ததில்லை.

கலப்புகளின் சேர்க்கையில் தான் புதுப்புது பரிணாமங்கள் கிடைக்கின்றன எனினும் கலைகளின் கலப்புபோல் அல்லாமல் உணவுகளின் கலப்பு உயிரை அல்லவா காவு கேட்கிறது.

வியபாரம் என்பது கண்ணியமிக்க செயல் என்பது போய்விட்டது...
காசு மட்டும் போதுமென சுருங்கிக்கொண்டது.

இந்த நாட்டின் ஆசிரியர்கள் அறிவின் கடவுள் என்றால் ..வியபாரிகள் வயிற்றுப்பசி போக்கும் தெய்வங்கள் அல்லவா?

வெள்ளகாலங்களில் பால் 200 ரூபாய்க்கு விற்றபோதே கீழிறங்கி விட்டீர்கள்.

போதைப்பாக்கு விற்காத பெட்டிக்கடைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

கண்ணுக்குத்தெரியும் பல போலிகளை அவர்கள் தடுத்துவிட்டாலே...பாதி மருத்துவமனைகளை மூடிவிடலாம்.

போலிகள் எதுவென்று தெரியாமல் எதையும் விற்குமளவிற்கு முட்டாள்களல்ல அவர்கள்.

கொளுத்தினால் எரியும் "குர்குர்ரே" போன்ற பல சரங்களை தொங்கவிட்டு பிள்ளைகள் பிடிப்பதை அவர்கள் மனசுவைத்தால் மட்டுமே முடியும்.

காந்தியடிகள் சொன்னதுபோல் வாடிக்கையாளர்கள் இப்போது கடவுளல்ல..
விற்கும் அவர்கள் தான் கடவுளாக வேண்டியிருக்கிறது.

எத்தனை சீனப்பொருட்கள். ஈனப்பொருட்களாய் சந்தையில்?
வீதிக்கு ஏழு எஞ்சினீயர்கள் இருக்கும் இந்தியாவிற்கு கொசு மட்டை அங்கிருந்துதான் வருகிறது.

செருப்பிலிருந்து,பொம்மை, செல்போன் என சீனத்து டிராகன் நம் வீட்டுக்குள் வந்தே விட்டது.

உங்கள் வீட்டை ஒருமுறை சுற்றிப்பாருங்கள்..
அந்நிய தேசத்தில் தயாரான, குறைந்தபட்சம் பத்து பொருட்களை கண்டுபிடித்துவிடலாம்.

எந்தவித குற்றமனப்பாண்மையும் இல்லாமல் இந்த சந்தையை திறந்துவிட்டவர்களை என்ன சொல்லித்திட்டுவது?

இந்த வருடம் சிவகாசிக்கு வேட்டுவைத்துவிட்டார்கள்.

பாலில் "மெலமைன்" என்ற நச்சு கலந்ததற்காக மிகக்கடுமையான தண்டனை விதித்தார்கள் சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில்....

ஆனால் சக்தி..
இன்றைய இந்திய பெட்டிக்கடைகளில் "கொய்யா" என்னும் மிட்டாய் சீன எழுத்துக்களோடு குழந்தைகளும்,குடிகாரர்களும் விரும்பி வாங்கும் மிட்டாயாய் வந்திருக்கிறது.

இரண்டு தின்றால் நாக்கு மரத்துவிடும்..
ஒருநாள் முழுதும் திறந்துவைத்தாலும் எறும்பு சீண்டாது.

எப்படி வந்தது எங்கள் பெட்டிக்கடை ஜாடிகளுக்குள் இவை?

உணவுக்கட்டுப்பாடு,
தரக்கட்டுப்பாட்டு அலுவலகங்கள் இயங்குகின்றனவா?

அனுமதியுடன் தான் விற்கப்படுகிறதெனில் அதன் உள்ளிருக்கும் பொருட்களின் விவரமென்ன?

இந்தியாவின் வல்லரசுக்கனவு இளைஞர்களை பெரிதும் நம்பியிருக்கிறது..
உலகின் வேறெங்கும் இத்தனை இளைஞர் கூட்டமில்லை..

இந்த குழந்தைகளை குறிவைத்து குழிதோண்டத்
தொடங்கியிருப்பதாய் நான் சந்தேகிக்கிறேன்.

அத்தியாவசியங்களின் இறக்குமதி தவிர்க்க முடியாததுதான்..
அநாவசியங்கள் தவிர்க்கப்படவேண்டும்.
ஆபத்துகள் தடுக்கப்படவேண்டும்.

நீ பார்க்கும் கடைகளில் கொய்யாமிட்டாய் இருந்தால் எடுத்துச்சொல்..

கொய்யாமிட்டாய் யாரேனும் தின்றால்..

துப்பச்சொல்..

அன்புடன்.
செல்வக்குமார்.

திங்கள், 1 பிப்ரவரி, 2016

அடக் கடவுளே....

அன்பின் சக்திக்கு,

ஒருமுறை கிருபானந்த வாரியாரிடம் ஒரு கடைக்காரர் கடையில் என்ன படம் மாட்டலாம் என்றாராம்...
அதற்கு வாரியார்..
என்ன படம் வேண்டுமானாலும் மாட்டு ..
ஆனால் கலப்படம் செய்துமட்டும் மாட்டாதே என்றாராம்.

ஆனால் சக்தி..
இன்று கடைக்காரர் நினைத்தாலும் கலப்படம் இல்லா ஒரு பொருளையும் விற்க முடியாது.

மிகவும் கேவலமான,
அருவருக்கத்தக்க மனித விலங்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மிளகின் ஊடே அந்திமந்தாரை விதைகள்..
கடுகோடு நாயுருவி நஞ்சு விதைகள்..

எதிலெல்லாம் கலப்படம் என ஆராயப்புகுந்தால்,

அம்மா...

இந்த தேசத்தில் கலப்படம் இல்லாத எந்தப்பொருளும் இல்லை.

என்ன ஒரு மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?

நல்லகுடிநீர் என வாங்கும் அடைக்கப்பட்ட நீர் சுத்தமானது கிடையாதாம்.

அரிசியில் பிளாஸ்டிக் கலக்கிறார்கள் என்றபின் சோற்றைப்பார்க்கும் போதெல்லாம்..பயமாய் இருக்கிறது.

கலப்படங்கள் ஒருபுறம் என்றால்... கலப்படமிலாத விஷங்களும் தான் விற்கிறார்கள்..
கொய்யமிட்டாய் என்னும் விஷம் குழந்தைகளை குறிவைத்தே விற்கப்படுகிறது..

ஓராயிரம் நம்மாழ்வார்கள் வந்தாலும் முடியாது போலிருக்கிறது.

எத்தனை விஷ உரங்களில் விளைவதைத்தின்றுகொண்டிருக்கிறோம்.

விழிப்புணர்வு வந்ததாய் நாம் நம்மை ஏமாற்றிக்கொள்கிறோம்.
நாளுக்கு நாள் பெருகும் வீதியோர,விரைவு உணவுகளை என்ன சொல்வது.?

கண்முன்னே கண்டதைப்போட்டு வறுத்துத்தருவதை தின்றுவிட்டு...
என்ன பேசுவது விழிப்புணர்வு பற்றி.?

சின்னவயதில் ,என் காலத்தில் எல்லாம் மாறிவிடும் என்ற பேராசை இருந்தது.
இப்போதெல்லாம் அது நடக்காது என்றே சுய இரக்கம் கொல்கிறது சக்தி.

என்ன வாழ்க்கை?
என்ன சமுதாயம்?

கண்ணுக்கு முன்னே ..நம் தேசம்..கண்ணிருந்தும் குருடராய் மக்கள்..

புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் போராட்டங்களால் ஒரு மயிரும் விளையப்போவதில்லை.

எங்கே போய்க்கொண்டிருக்கிறது தேசம்...?
சூரியகாந்தி எண்ணெயிலிருந்து,மருந்து வரை மக்கள் நலத்தை நாசமாக்கும் கும்பல்,துணை போகும் அரசிலிருந்து,அதிகாரிகள் வரை..

எது தடுத்துக்கொண்டிருக்கிறது..
நம் வாழ்வை மீட்கும் போராட்டத்தை.?

கூட்டணிக்காகவும்,ஆட்சிக்காகவும் அலைந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகளே...
அடுத்தடுத்த தேர்தல்களில் செத்தவர்களின் வாக்குகளை நீங்கள் நிறைய போட்டுக்கொள்ளலாம்...

முடியாது சக்தி,கடவுள் என்ற ஒருவன் நினைத்தாலும் ,அவனும் இறந்துதான் படுவான்.

இனி கடவுளையும்,கட்சிகளையும் நம்பக்கூடாது?

நமக்கான உணவையும்,உரிமையும் நாமேதான் அடைய வேண்டும்.

உரமில்லா ஒரு முருங்கை வளர்த்து ஆரம்பிக்கலாம்.
மாற்றவேண்டியது மண்ணிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.

அரசு வேண்டுமானால் வின்கலம் அனுப்பட்டும்..
நாம் மண் கலங்களுக்குத்திரும்புவோம்.

அரசியல்,கட்சி,மொழி, எல்லாம் பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம்.

ஆம் சக்தி..உங்கள் இளைஞர் கண்கள் விழிக்க வேண்டும்.

இப்போது சீனாவில் காற்று விற்கிறார்களாம்.
நாமும் அதை காசுகொடுத்து வாங்கவேண்டிவரும்.

அடக் கடவுளே..

அன்புடன்.
செல்வக்குமார்.

வெள்ளி, 29 ஜனவரி, 2016

இதனால்...நான்

பூக்களைப்பறிப்போர்
புல்மீது நடப்போர்.

கிறுக்கலில்லா
வெள்ளைச்சுவர்.
நுனி கடிக்கா
வெல்லக்கட்டி.

மழலைக்கு
ஊசியிடும்
மருத்துவன்..

டயப்பர்
வைத்த
சிறுகுண்டி.
பிள்ளை வைத்துத்
தள்ளும் வண்டி.

புடலைக்கு
கல் கட்டாத
புறத்தோட்டம்.

குளம்
நனைக்கா
குதிக்கால்கள்.

கேள்வி கேட்கும்
பள்ளிக்கூடம்.

புகையில்லா
புகைவண்டி..
புரியாத
கவிதை சொல்லி..

சிரிக்காத
அறிவாளி..
சிந்திக்கா
முழு மூடன்..

தோல்வியில்லா
ஓர்
வெற்றி..

இருக்கையில்லாப்
பேருந்து..
இருகை கொண்டு
வாங்கும்
பிச்சை.

ஆடறுக்கும்
கத்தி..
ஆலை கொண்டு
போகும்
கரும்பு..

மாடேற்றிச்செல்லும்
லாரி..
சூடின்றிப்போன
தேனீர்.

மேட்டுப்பாதை
சைக்கிள் பயணம்.

பன்னீர்ப்பூ
மரமில்லா
தெருவின் சாலை..

நீர் தெளித்துக்
கோலமிடா
சிறுவாசல்..

திண்ணையில்லா
பெரியவீடு..
எண்ணையில்லா
ஒர் விளக்கு.

நாயொன்று
துரத்தாத
நள்ளிரவுத்தேடல்.

விலக்கமுடியா
ஓர் பார்வை..
விடியலில்
விலகும்
போர்வை.

கனவினிலும்
வந்து கொல்லும்
ஒரு வார்த்தை..

அழுது முடியா
சோகம்..
எழுதி முடியா
கவிதை.

பட்டாம் பூச்சி
துரத்தா
விழிகள்..

பொன்வண்டு
சிறைசெய்யும்
தீப்பெட்டி..

நிலவில்லா வானம்..
நிலையில்லா
குடிகாரன்..

கவிதை சொல்லா
காதல்..

காதலில்லா
பருவம்.

காதோடு
பேசாத
ரகசியங்கள்.
கண்பார்த்துச்
சொல்லாத
வார்த்தை.

இளைத்ததாய்
சொல்லாத
அம்மா...

பிழையொன்றும்
பொறுக்காத
நட்பு..

நினைவிலுண்டு,
வரியில்லை..
இன்னுமுண்டு
எதிரிகள்.

உண்மையிது..

எப்போதும்
இவைகளுடன்..

ஒட்டுமில்லை.
உறவுமில்லை..

நாணயம் போற்றுவோம்.

தமிழன் என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ள எத்தனையோ உண்மைகள் உள்ளன.தமிழின் மரபு,சிந்துசமவெளியைக்
காட்டிலும் முந்தைய நாகரீகம்.

பண்பாடு,மொழிவளம்,இலக்கியங்கள் எனப்பல இருந்தாலும்,  எல்லையில்லாமல் பரந்துபட்ட அவன் காலடித்தடங்களின் சாட்சியாக இன்னும் கிடைப்பது அவன் நாணயங்களேயாகும்.

பண்டமாற்று தாண்டி ஒரு பொதுப்பணத்தை உருவாக்கும் போது அதற்கு "நாணயம்" எனப்பெயர் வைத்ததே போதும் தமிழனின் தலைசிறந்த வாழ்வின் சாட்சிக்கு.

சங்ககால வரலாறுகளே இலக்கியங்களின் அதீத கற்பனை என்ற கூற்றும் இங்கே நெடுநாள் இருந்தது.

அந்த அறிவுமிக்கோர் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் பெயர்கூட கற்பனையாக இருக்கலாம் என்றே பிதற்றிக்கொண்டிருந்தனர்.

ஆனால் மிகச்சமீபத்தில் தினமலர் திரு.இரா.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் "பெருவழுதி " எனப்பெயரிடப்பட்ட நாணயத்தை எடுத்து இயம்பியதன் மூலம் இரட்டைச்சாதனைகள் செய்திருக்கிறார்.

பழந்தமிழர் வாழ்வொன்றும் கற்பனைகளின் கூடாரமல்ல,தமிழின் ஆதிப்பெருமைகளில் எந்த மொழிக்கும் இல்லாத "ழு" உம் ஒன்றென.

பண்டைத்தமிழன் ரோமாபுரியிலும் காலூன்றி இருந்த வரலாறு தோண்டியெடுக்கப்படும் நாணயங்கள் பறைசாற்றுகின்றன.

புதுக்கோட்டையின் புகழ்க்கொடிகளில் ஒன்று அதன் "அம்மன்" காசுமாகும்.
பொதுவாய் நாணயங்கள் என்பது பரிமாற்றம் என்பதற்கு மட்டுமல்ல.
நாணயங்களின் பரிணாமம் என்பது ஒரு தேசத்தின் ,மொழியின், சமூகத்தின் வரலாற்றையும் சுமந்தே வந்திருக்கிறது.

நாணயங்கள் சேகரிக்கும் ஒவ்வொருவரும் ஒரு வரலாற்றுக்கடமையை செய்கின்றனர்.

நாணயங்கள் மருவி பணத்தாள்கள் ஆனாலும் வரலாற்றை வரைந்துகொண்டிருக்கும் பணியை துறந்துவிடவில்லை அவைகள்.

பணத்தாள்களின் ஒவ்வொரு வண்ணமும் ஒரு கதை சொல்லும்.

ஒரு மொழியின் வளர்ச்சியும்,கீழ்நோக்கி இறங்கும் அவலத்தையும் கூடச்சொல்லும்.

சுதந்திர இந்தியாவின் பணத்தாள்களில் பத்துக்குள் இருந்த தமிழ், பதின்மூன்றாம் இடத்தில் வந்ததை இதன் உதாரணமாய்ச் சொல்லலாம்.
உற்றுப்பார்த்தால் இது போன்ற பல உண்மைகள் இருக்கும்.

ஓட்டைக்காசுகள் தொடங்கி பிளாஸ்டிக் தாள்களில் பயணிக்கத்தொடங்கியிருக்கிறது நாணயத்தின் பயணம்..

உலகின் ஒவ்வொரு தேசத்தின் பணத்தாள்களும் அந்தந்த நாட்டின் வரலாற்றையும்,வளத்தையும்,போராட்டங்களையும் சொல்லாமல் சொல்பவை.

நாணயங்களை ஒவ்வொரு நாடும் எந்த பெயர்களில் அழைக்கின்றன?
அதன் மதிப்பு முன்பு எப்படியிருந்தது?
இன்றைய மதிப்பு என்ன?
உலகின் எந்த நாடுகள் பணத்தை "ரூபாய்" என்று அழைக்கின்றன?
ரூபாய் என்பதன் பாரம்பரியம் என்ன?

ரூபாய் என்றழைக்கப்படும் நாடுகளில் எல்லாம் தமிழனின் ஆட்சி நடைபெற்றதாய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய ஜப்பானின் நாணயத்தின் பெயர் "யென்".. அது ஆதியில் ரூபாய் என்றிருந்திருக்கிறது.

தமிழ் எழுத்துக்களை மட்டுமல்ல,தமிழ் எண்களை நாணயங்களில் பயன்படுத்தும் தேசங்களும் உண்டு இன்னும்.

இந்தோனேசிய பணத்தாள்களில் பிள்ளையார் உட்கார்ந்திருக்கிறார்.

நாணயங்களும்,பணத்தாள்களும் வரலாறு சொல்கிறதென்றால் ,
அஞ்சல் தலைகள் அன்றாட மாற்றத்தை அறிவிக்கின்றன.

வரலாறு மறந்தவர்களாய்த்தான் நாம் அவசர உலகில் மாறிப்போனோம்.

நமக்குள்ள பாரம்பரியம் உலகில் யாருக்கும் கிடைக்காத பெரும்பேறு நம்மிடம் உள்ளது.
இதைக்கட்டிக்காப்பது ஒருபுறம் என்றால்,
அறிந்து கொள்வதே முதல அவசியம்.

இனி உங்கள் கரங்களில் புழங்கும் நாணயங்களை,
பணத்தாள்களை வெறும் எண்களாய் பார்க்காமல் ,வரலாறாய் உணருங்கள்.



31.01.2016 ல் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில் காலை 10 மணி முதல் 5 மணி வரை 175 நாடுகளின் நாணயம்,பணத்தாள்கள்,மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறுகிறது...
வாய்ப்பிருப்போர் வந்து
ஒருநாள் வரலாற்றோடு வாழ்ந்துவிட்டுப்போகலாம்.

புதன், 27 ஜனவரி, 2016

முதலுதவி...

அன்பின் சக்திக்கு,
கவிதைகளின் பக்கம் கொஞ்சம் காலாற நடந்ததனால்,உனக்கான கடிதங்களை மறந்துவிடவில்லை நான்.

வாழ்க்கை என்னும் வலிய போராட்ட நதியில் எதிர்நீச்சல் போடும்போதெல்லாம் சிந்தனைகளும்,எழுத்தும் மட்டுமே சிறுதுண்டுமரமாய் என்னை கொஞ்சம் மிதக்கவைக்கிறது.

எழுதச்சொல்லி உனக்கு ஆயிரம் தூண்டுதல்கள் உண்டு எனக்குள்.

காண்பவை,கேட்பவை,வாசிப்பவை எல்லாமே எழுதத்தூண்டுவதைவிட,
அழத்தூண்டுகிறது.
கண்ணின் ஈரம் காய்ந்தபின் எழுதலாம் என்றால்,அது இந்த மனிதநாளில் முடியாது போலிருக்கிறது.

படிக்கும் பிள்ளைகள் தற்கொலை,அடிக்கும் கொள்ளைகள், ஊடக தர்மங்கள், தலைமறைவு வாழ்வு நடத்தும் ஆய்ந்த தமிழறிஞர்கள், விதியென கடந்துபோகும் மனிதர்கள்..அடுத்த ஆட்சிக்காய் ஆயுதங்கள் தேடும் அரசியல் கட்சிகள்..

நிறைய இருக்கின்றன எழுத..

சக்தி...

அரசியல்கட்சிகளின் அரிதாரப்பெட்டியில் புதிதாய் ஒரு அலங்கார சாமான் வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.....வந்தால்...?

பூரண மதுவிலக்கு..

அரசும் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டது, அது சாத்தியமில்லையென...

ஆனாலும் போராடுகிறார்கள்,
கூடுகிறார்கள்,பாடுகிறார்கள்..குடிக்கும் மக்களுக்காய் வெடித்து அழுகிறார்கள்.

அரசியல் வாதிகளின் வாய்களில் மதுவிலக்கு என்னும் வாடை எல்லாக்கேள்விகளுக்குமான பதிலாய் வருகிறது.

தம்மையும்,மக்களையும் மிக எளிதாக ஏமாற்றும் அளவிற்கு அறிவுமிக்க அரசியல் கட்சிகளிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எனக்குள் இருப்பதை உனக்கு அனுப்பிவைக்கிறேன்.

1)அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தமிழ்நாடு தவிர்த்துத்தான் வேறு இடங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்களா?

2)அய்யோ,மக்கள் குடித்து பாழாய் போகின்றார்கள் என அழும் என் தலைவர்களே! இந்த மக்கள் கூட்டத்தில் உங்கள் தொண்டர்கள் யாருமில்லையா?

3) நீங்கள் அழைத்ததும் வேலைமறந்து ஓடிவரும் தொண்டர்கள் உங்கள் மற்ற கட்டளைகளை மதிக்கமாட்டார்களா?

சரி ...நேரடியாகவே கேட்கலாம்..

உங்கள் கட்சிகளின் மற்ற தலைவர்கள்,தொண்டர்கள் யாரும் குடிப்பதில்லையா?

மதுவை ஒழித்தே தீருவேன் என சவுக்கு எடுக்கும் ஒரு கட்சியின் மாநாட்டு நாளில் மதுக்கடை கல்லா நிறைந்ததாய் சொன்னார்களே,
அது சரிதானா?

ஊருக்காய் மதுவிலக்கு வேண்டும் நல்ல மனசுக்காரர்களே..
முதலில் உங்கள் கட்சி கூட்டுங்கள்...

தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் யாவரும் இனி குடிக்கக்கூடாதென முடிவெடுங்கள்..
அப்படி குடித்தால் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும்,அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்தும் பிடுங்கப்படும் என அறிவியுங்கள்.

முதலமைச்சர் கனவுகளில் மூழ்கிக்கிடக்கும் தியாகிகளே..
நீங்கள் சொல்லியும் திருந்தாமல் குடிக்கும் ஒரு தொண்டர் ஒருவரையேனும் நீக்கிவிட்டு ஓட்டுகேட்க வாருங்கள்.

வெற்று கோஷங்களிலும்,
வாய்ச்சவடால்களிலும் மக்களை ஏமாற்றியதும்,ஏமாந்ததும் போதும்.

அவரவர் கட்சிகள் சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கைக் கணக்கிற்கு ..நீங்கள் கட்சிக்குள் மதுவிலக்கு முடிவெடுத்தாலே போதும்..

ஆளும் கட்சி மட்டும் குடித்து டாஸ்மாக் வாழ்ந்துவிடாது..

தன்னைத்திருத்திக்கொண்டுதான்"இனிப்பு தின்னாதே" என நபிகள் நாயகம் சொன்ன கதை உண்டு.

உங்கள் கட்சியையும்,
தொண்டர்களையும் கட்டுப்படுத்திவிட்டு..
பாலாறும்,தேனாறும் ஓட ஆட்சிக்கு வாருங்கள்.

திறந்திருப்பதால் குடிக்கிறார்கள் என்பதெல்லாம் போதை தரும் வாதம்..
சாக்கடைகள் கூடத்தான் திறந்தே கிடக்கிறது...

குடிப்பதென்பது இங்கொரு கலாச்சாரமாய் மாறவிட்டுவிட்டு..... தும்பைப்பிடித்து என்ன செய்ய..?

போதைமனிதன் தெளிவாய்த்தான் இருக்கிறான்.
பேருந்தை மறிக்கும் அவன்..புகைவண்டி மறித்த செய்தியில்லை...

நீங்கள் தான் மதுவிலக்கென்னும் போதையில் இருக்கின்றீர்கள்..

தங்கள் அமைப்புக்குள்ளேயே...
மதுவிலக்கில் வென்றால்...
நீங்கள் ஓட்டுக்கேட்டு வரவே வேண்டாம்.
வாக்குகளே வந்து சேரும்.

மதுவைத்தாண்டியும் சீரழிந்து கொண்டிருக்கிறது சமூகம்..
லஞ்சப்பேய்கள் தலைவிரித்தாடும் காட்சிகள் அறியவில்லையா?
கல்விக் கொள்ளையர் யாரும் கண்ணில் படவில்லையா?
பெருமழை சோகம் தீர்ந்தே போனதா?
எல்லார்க்கும் கல்வி போய் சேர்ந்துவிட்டதா?
நீதித்துறைகளில் நீதி கிடைக்கிறதா?

எல்லாம் பாருங்கள்..எங்கள் தலைவர்களே...

செய்வார்களா சக்தி?

அன்புடன்.
செல்வக்குமார்.