வெள்ளி, 10 மார்ச், 2017

கர்ணப் போர்வை

எங்களுக்கொரு
போர்வை இருந்தது..




ஓரத்தில் முடிச்சுகளிட்ட.
பெரிய பறவையொன்றும்
சிறிய பலவுமாக
ஓடையொன்றில்
விளையாடும்
சித்திரம் வரைந்த..

எங்களுக்கொரு
போர்வை இருந்தது..

சீதனமாய் வந்த
அம்மாவின்
நீலவண்ண
தகரப்பெட்டியில்
வருடத்தின்
பலநாட்கள்
மடிந்து கிடக்கும்...

மலேயாத் தாத்தாவுக்கென..
ஒருமுறையும்
அத்தையை
பெண்பார்க்க வந்தபோது
மறுபடியும்
என
ஒற்றைக்கையின்
விரல்களில்
எண்ணிவிடமுடியும்
அது விரிந்து கிடந்த
வேளைகளை...

எங்களுக்கொரு
போர்வை இருந்தது..

குந்திக்கு
கர்ணன் கொண்டிருந்த
போர்வை
இப்படித்தான்
இருக்குமென
நாங்கள்
வரிந்திருந்த...

எங்களுக்கொரு
போர்வை இருந்தது..

மடிப்புகள்
வெள்ளையாய்
கோடுகளிட்டபோதும்
வெளுக்கப்பட்டது
கிடையாது..

பெட்டிகளுக்குள்
வாச உருண்டைகள்
போடும்போதெல்லாம்
அம்மா
அந்த போர்வைக்குள்
இரண்டு
திணித்து வைப்பாள்..

எப்போதோ
ஒருமுறை
அதன்மேல்
காப்பி சிதறியபோதுதான்
அம்மாவுக்கு
கோபம் வந்ததை
பார்த்தோம்..

பெரியவனானதும்
இந்தப் போர்வையில்
படுத்து
கைகால்களை
யெல்லாம் பரப்பிப்
புரளவேண்டும்
என்பதில்
எப்போதும் சண்டை
எங்களுக்குள்..

எங்களின்
பாகப்பிரிவினைக்குள்
எப்போதும்
முதலாய் இருந்த..

எங்களுக்கொரு
போர்வை இருந்தது

வீடுகள்
ஆளுக்கொன்றானபோது
அந்தப்போர்வை பற்றிய
நினைவை
எப்படியோ
தொலைத்திருந்தோம்..

வருடமொருமுறை
தீபாவளிச் சந்தையில்
வாங்கிய
எந்தப் போர்வையும்
அதுபோலிருக்கவில்லை..
வண்ணமும் வாசமும்..

அந்திமக்கால
என்
நினைவுப்
பதிவுகளுக்காய்
குறிப்புகள்
எழுதிக்கொண்டிருந்தேன்...

அம்மாவுக்கு
அடுத்ததாய்
அந்தப் போர்வை
வந்துவிட்டது..

விலக்கி விலக்கி
நகர்கிறேன்..
அந்தப்போர்வை
என்னை
எழுது எழுது
என்கிறது...

எத்தனை இருந்தும்
எழுதிடக் கிடந்தும்...
நான் அதனை
எழுதுவேன் என...

எங்களுக்கொரு
போர்வை இருந்தது..






























10 கருத்துகள்:

  1. .....வித்தியாசமான சிந்தனை.....

    எப்படிங்க இப்படி..!

    பதிலளிநீக்கு
  2. அழகான நினைவுப் போர்வை. பலருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  3. நினைவலைகளில் அழிக்க இயலாமல் மிஞ்சி நிற்பதை
    எழுதுவதும் ஒரு சுகம்தான்
    அருமை

    பதிலளிநீக்கு
  4. Indha ninaivugalai endha porvaiyalum porthi maraika mudiyadhu. Arumai ayya. Vasikum enakullum idhu pola maraka mudiyadha siru vayadhu gnabagangal thiraiyidugindrana......... Arumai

    பதிலளிநீக்கு
  5. "எத்தனை இருந்தும்
    எழுதிடக் கிடந்தும்...
    நான்
    அதனை எழுதுவேன் என...

    எங்களுக்கொரு
    போர்வை இருந்தது..." என்பதில்
    புரிந்துகொள்கின்றேன்
    பதிவின் சிறப்பையே

    பதிலளிநீக்கு
  6. அட! போர்வைக்குள் எத்தனை நினைவுகளின் அடக்கம்!!

    பதிலளிநீக்கு