ஞாயிறு, 5 மார்ச், 2017

எத்தனை காலம் தான்?

எல்லாவற்றையும்
பகடியாக்கிப்பார்க்க வைத்திருக்கிறது காலம்.


இணையத்தின் பிடியிலிருந்து சற்று வெளியே வந்தால் இறுக்கிப்பிடித்துக் கொள்கிறது பிரேக்கிங் செய்திகள்.

செய்திகளுக்காக செலவிடும் நேரம் பொன்னைவிட மதிப்பானதென்பதை மறக்கடித்து விடுகிறது மூளை.

பரபரப்பாகவே வைத்துக்கொள்கின்றன நாள்முழுவதும் நம்மை அரசும் அதிகாரமும்.

நெடுவாசலும்,தாமிரபரணியும் நம்மை திசை திருப்பும் விஷயங்கள் என்பதை நன்கே அறிந்துதான் நடத்துகிறார்கள்.

நிலையற்ற ஒரு கூழைக்கும்பிடு போடும் சத்தற்ற அரசை ஆட்டுவிக்கும் கயிறு எங்கிருந்தெல்லாமோ இயக்குகிறது..

விவாதங்கள் என்ற பெயரில் சில குரல்கள் ஒட்டியும் வெட்டியும் பேசும்போது ஆர்ப்பரிக்கும் மக்களின் மனசை ஊடக அநியாயங்கள் விளம்பரங்களால் விற்றுத்தீர்க்கின்றன.

மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தின் இடையே தான் அரசு தன் வேலையைக் காட்டுகிறது.
பெட்ரோல் விலையும், தாமிரபரணித்தண்ணீரும்,நெடுவாசலும், சேலம் உருக்காலையின் பங்குகள் தொலைவதும்,சொல்லொண்ணாத் துயரில் விவசாயி சாவதும்,எல்லை தாண்டி மீன் பிடித்ததாய் வலையறுப்பதும்,குலையறுப்பதும், இவர்கள் கடிதம் எழுதி பண்பாடு வளர்ப்பதும்..
இது நாடுதானா என்பதில் அடிப்படை சந்தேகம் வந்து தொலைக்கிறது..

போராட்ட வடிவத்தின் அழகை மாற்றிய மெரினாவின் முடிவு இன்னும் நெஞ்சு வலிக்கிறது.

எங்கேனும் போராட்டங்கள் தொடங்கும்போது எப்படி முடியப்போகிறதோ என்ற அச்சம் ஆரம்பித்துவிடுகிறது..

தண்ணீருக்கும்,உயிருக்கும்,பயிருக்கும், போராடிப் போராடியே அடையவேண்டுமெனில் நாசமாய்ப் போன நாட்டில் ஓட்டெதற்கு...
மந்திரிகள் என்னும் அமைப்பெதற்கு...

மிக மிக கேவலமான அரசியல் செய்கைகளில் நாற்றமெடுத்துக்கிடக்கிறது கூவத்தைவிட கூவத்தூர்.

எதையோ எழுத வந்து இழுத்துக்கொண்டு போகிறது எண்ணங்கள் என்னை..

மாதக்கணக்கில் போராட்டங்கள் தொடரும்போதும் மனம் இரங்காத அதிகாரம் மக்கள் தந்ததென்பதை மறப்பது மன்னிக்கமுடியாத செயல்கள்...
பணத்துக்கு வாங்கிய வாக்குகள் என்றாலும் காலாவதியாகும் காலமுண்டு...

ஊடக,இணைய தொடர்புகள் மக்களை பேசவைத்திருக்கிறது..
அதிலும் எம் பெண்கள் பேசும் விவரங்கள் ஆச்சர்யமூட்டுகின்றன.

போராட்டங்களுக்கு உலக அளவில் தமிழர்களின் ஆதரவு ஆறுதல் அளிக்கிறது..

இப்படி சின்ன சின்ன விளைவுகள் தவிர..

பாலிலிருந்து,பச்சை மிளகாய் வரை விலை உயரும் விலைவாசி கழுத்தை நெரிக்கும் காலங்களில் எதையும் நகைச்சுவையாய் பார்க்கும் பார்வை..
"இடுக்கண் வருங்கால் நகுக" என இருந்தாலும்.
தினம் தினம் சாகும் வாழ்க்கையில் எப்படி சிரிக்க?

சுதந்திரமடைந்த இத்தனை காலங்களில் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் அவலத்தை ஆவணப்படமெடுத்தால் மிகக்கவனமாக தடை செய்துவிடும் ஜாக்கிரதையில் இருக்கிறார்கள்..

சமூகத்தின் முடைநாற்றம் மூச்சுமுட்ட ஆவணப்படத்தை தடை செய்தால் மாறிவிடும் என நினைப்பது அயோக்கியத்தனம்.

நெடுவாசல் போராட்டம்,தாமிரபரணிப் போராட்டமெல்லாம் மக்களுடையது என நீங்கள் நினைக்கின்றீர்கள்..
நான் அதிகாரத்தின் மற்றொரு நாடகம் என்கின்றேன்..

பச்சை வயல்களில் தீப்பற்ற வைத்தால் பற்றி எரியும் என்ற சின்ன விசயமும் அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது..
நெடுவாசல் கோஷங்களில் நாம் ரேஷன் கடையை,பெட்ரோல் விலையை,நிலையற்ற ஒரு அரசை,தீபாவை,சேலம் உருக்காலையை,செத்துவிழும் விவசாயியை, நீட் என்னும் கொடுமையை,காலியாகும் கஜானாவை இன்னும் பல விசயங்களை மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம்...

ஆசிரமம் வைத்திருக்கும் ஒருவர்
கட்டைப் பஞ்சாயத்து பற்றி பேசுகிறார்..
தன் இடத்தை ஜமீன் என்கிறார்..
ஊடக தர்மவான்கள் நேரே போய் அவரிடம் பேசி உண்மையை உலகுக்கு அறிவிக்கிறார்களாம்.

தமிழகமும் இந்தியாவும் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது.
தனக்கான வாழ்க்கையை...தலைமையை தானே வடிவமைத்துக்கொள்ளவேண்டிய தவிர்க்க முடியாத கட்டம்..
அரசியல் கட்சிகளின்..அது தோழர்கள் என்றாலும் அவர்களின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசிய காலம்..

செய்தி ஊடகங்களை மக்களே மறுதலிக்க வேண்டிய அத்யாவசிய காலம்...

ஆம்...
வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம்..
வாழ்க்கையே போராட்டமெனில்
இப்படி எழுதித்தான் தீர்க்கவேண்டியிருக்கிறது...













9 கருத்துகள்:

  1. அருமை என்று உம்மை பாராடிவிட்டு யாரை கடிந்து கொள்ள??. என்னை சுற்றிலும் பின்னப்பட்ட வலைகளை உடந்தெறிந்து ஒதுங்கினால் சுயநலம் எனப்படும்..என் கையறு நிலை களைய பொறுத்திருக்கிறேன். மனக் குமுறலை கொட்டித்தீர்க்க இன்னுமொரு உயிர்...

    பதிலளிநீக்கு
  2. நம்மைச் சுற்றி மாயவலை பிண்ணப்பட்டிருக்கிறது அண்ணா...
    அறுத்து எரியத் தெரியாமல் நாம் வாட அவர்கள் வாழ்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. காலச்சுழலில் நாம்! சுழி இழுக்கும் திசையில் இழுக்கப்படுகிறோம். நெடுவாசலும், தாமிரபரணியும் மட்டுமா திசைதிருப்பல்கள்? சுசித்ரா அனிருத்துகளும்தான்!

    பதிலளிநீக்கு
  4. தண்ணீருக்கும்,உயிருக்கும்,பயிருக்கும், போராடிப் போராடியே அடையவேண்டுமெனில் நாசமாய்ப் போன நாட்டில் ஓட்டெதற்கு...
    மந்திரிகள் என்னும் அமைப்பெதற்கு...

    உண்மை நண்பரே உண்மை
    நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து
    பெற்ற சுதந்திரம் இதற்காகத்தானா?

    பதிலளிநீக்கு
  5. வாழ்க்கையில்
    போராட்டம் இருக்கலாம்...
    ஆனால்,
    வாழ்க்கையே போராட்டமாக
    மாறிவிடக்கூடாதே!

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான். அதே சமயம் வேதனைப்படவேண்டியதும்கூட.

    பதிலளிநீக்கு
  7. எல்லா பிரச்சனைகளையும் ஒரு பதிவிற்குள் கொண்டு வந்து சிந்திக்க வைத்து இருக்கிறீர்கள் ஆனால் சிலர் மட்டும் சிந்திக்கின்றனர் பலர் சிந்த்தித்தாலும் தங்கள் சுயநலத்திற்காக அதற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் நல்ல முடிவை அடையமுடியாமல் போகிறது

    பதிலளிநீக்கு
  8. ஆதியோகிக்கு வணக்கம் போட்டுட்டு ஈஸாவில் தியானப் பயிற்சியில் சேருங்க ,இப்படியெல்லாம் கொதிக்க மாட்டீங்க !

    பதிலளிநீக்கு