ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அவள் உறங்கட்டும்..

அவளை விட்டு விடுங்கள்..
அமைதிப்பள்ளத்தாக்கின்
புல் படுக்கையில்
அவள் ஆன்மாவேனும்
அமைதியாய் தூங்கட்டும்..


கருவறைக்குள்ளே
கடவுளைக் காணாதவளை
வெளியே காட்டாதீர்கள்..
கடவுள் தேடிச்சாகட்டும்.

வன்முறை வரைந்த
அந்த ரத்தக்கறைகளை..
அதிகார வர்க்கங்கள்
நக்கி துடைக்கட்டும்
நாம் அவளை
அழகாகவே வைத்திருப்போம்..

தால் ஏரிக்கரைகளில்
அவள் முகம்
ஆயிரம் பூக்களாய்
மலர்ந்து குலுங்கட்டும்..
சுற்றுலாக்கும்பல்
பார்த்து சிரிக்கட்டும்.

குங்குமப்பூவின்
சிவந்த பூமியில்
கொட்டியதெல்லாம்
பனித்துளியல்ல...
சிச்ச்சீயென..
வானத்தின்
துப்பல்..

சுட்டுவிடும்
எதிரிகளின் துப்பாக்கி..
துயரம் அதிகமில்லை..
அய்யோ..
அவளைப் பார்க்கையில்
சுடும் நெஞ்சம்
பொறுக்கவில்லை..

மதங்களின் சாயங்களை
ஏற்கனவே
சிவந்த அவள்மீது
பூசவேண்டாம்..

அவளை
கலைந்த ஆடைகளுடன்
இனி பதிவேற்றாதீர்கள்..
நினைவு நாடாக்களின்
ரத்தவாடை
சகிக்க முடியவில்லை..

அழுகிய பிள்ளையை
அப்படிப் பார்க்கையில்
அழகிய காஷ்மீர்
பிடிக்கவில்லை..

எட்டு குறிகள்
பட்டு சிதைத்த
சிட்டுக்குருவி
மறைந்ததாகவே
போகட்டும்..

ஈரமொட்டிய மணலில்
கிடப்பவள்..
கீறிக்கிழிக்கிறாள்..
அப்பாக்கள் பாவம்.









































9 கருத்துகள்:

  1. கொடூரர்களின் சிதைப்பு,சகித்துக்கொள்ள முடியவில்லை!உணர்ச்சி மேலிட்ட வார்த்தைகள், ஆஸிபாவிற்கு அஞ்சலி!

    பதிலளிநீக்கு
  2. ஒரு தந்தையாக கொட்டி விட்டீர்கள் அப்பா. ஆனால் ஒரு மகளாக அதும் பெண்ணாக எனது வலிகளை சொல்ல முடியவில்லையே பா... யார் மீது குற்றம் என்று தெரியாமல் தவிக்கின்றோம்..

    எங்களின் எதிர்கால கனவுகள் இதனால் சிதைந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது பா.. வயது முதிர்ந்து போனவர்களின் அட்டூழியம் தான் இவைகள் பா..

    பதிலளிநீக்கு

  3. ஆண்கள் என்று சொல்லுவதற்கே வெட்கபட வேண்டிய நிலை வந்துவிட்டது

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


    பதிலளிநீக்கு
  5. இந்த கொடூரங்களுக்கு என்று தான் முடிவு காலம்...சட்டத்தின் பிழையா, அதோ அழிந்து கொண்டிருக்கம் நாகரிகத்தின் அடையாளமா...இனி மேலும் இப்படி நடக்காமல் இருப்பதற்க்கு மத வாடை கலராமல் யோசியங்கள் சகோதரங்களே...

    பதிலளிநீக்கு
  6. கொடூர செயல் புரிந்தவர்களை இந்நேரம் தூக்கிலிட்டுருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. என்று மாயும் இந்த வன்கொடுமை.

    பதிலளிநீக்கு