திங்கள், 15 ஆகஸ்ட், 2016

போடா ...நானொன்றும் அழவில்லை.

போடா..
நானொன்றும்
அழவில்லை...

பொல்லாக்கவிஞர்கள்
பொசுக்கென்று
போவது
புதிதல்ல..

போடா
நானொன்றும்
அழவில்லை..

அருந்துவதால்
கவி
வருமென்றால்
வருந்துவதால்
ஒன்றும்
வருவதில்லை

போடா
நானொன்றும்
அழவில்லை

சுதந்திரமாவதிலும்
அவசரம் தான்...
தனக்கே
விடுதலை
கொடுத்துக்கொண்டாய்.

போடா
நானொன்றும்
அழவில்லை

வார்த்தைக்கு
உயிரெல்லாம்
தந்துவிட்டு
காற்றோடு
கலந்தவனே..

போடா
நானொன்றும்
அழவில்லை

ஆயிரமாய்
பாயிரங்கள்
அத்தனையும்
காவியங்கள்.
ஈரமில்லை
எந்தன்
கண்ணில்...

போடா
நானொன்றும்
அழவில்லை

இத்தனை
பேர்
அழுதோமே
எழுந்துவர
இரக்கமில்லை

போடா
நானொன்றும்
அழவில்லை

வரிகளிலே
சிலை செய்தாய்..
தமிழ் கெஞ்ச
கவி செய்தாய்..
வாழ்க்கையில்
தான்
வஞ்சம் செய்தாய்...

போடா
நானொன்றும்
அழவில்லை

புல்லுக்கும்
கல்லுக்கும்
யாழுக்கும்
எழுதியென்ன
பால் மறக்கா
உன்
பிள்ளை
தேடுமடா
உன் வாசம்..

போடா
நானொன்றும்
அழவில்லை

பேனாவோ
மைசிந்தி
கவி சொல்லும்..
போனாயே
அந்தப் பாட்டெல்லாம்
என்ன செய்யும்..

போடா
நானொன்றும்
அழவில்லை

காயம்பட்டு
இறந்திருந்தால்
கண்ணீர்க்கடல்
ஒன்று
பிறந்திருக்கும்.

காணாமல்
போயிருந்தால்
தேடி
அந்த
தெய்வம் வந்திருக்கும்...

காலம் உன்னை
அழைக்கவில்லை..
காலன் வந்து
சாகவில்லை..
நாடித்தான்
போய்த்தொலைந்தாய்..

நல்லதமிழ்ப் பாட்டு..
உலகம்
உள்ளவரை
கேட்டிருக்கும்..

குமரா!!
உன்
கவிதை
எப்போதும்
வாழ்ந்திருக்கும்...

தண்ணீரின்
சுழல்
வீழ்ந்த
என்
தோழா...

உன் பெண்டு
உன்
பிள்ளை
நீயின்றி
வாழ்வாரே...

அதற்கெனவே
அழுகின்றேன்...

போய்வா..

போடா
நானொன்றும்
உனக்காக
அழவில்லை...

13 கருத்துகள்:

  1. Meera Selvakumar Ayya, 'poda naan ondrum azhavillai, azhavillai' endru sollikondey neengalum azhudhu engalaiyum azhavaithu irukireergal. "kaanamal poyirundhal thedi andha theivam vandhirukkum"-unmaiyaana varigal. Andha dheivamum tholaika virumbadha kavidhai thannai thaane tholaithadhu vedhanaiyilum vedhanai. Kadaisiyil penndu pillaigalin yeakka kanneerukkaay neengal vaditha kanneer varigal engal manadhai kanakka vaikiradhu. Nenjellam baaramum, valiyum......,,

    பதிலளிநீக்கு
  2. அருந்துவதால்
    கவி
    வருமென்றால்
    வருந்துவதால்
    ஒன்றும்
    வருவதில்லை.....

    அறுமை... தோழா...

    பதிலளிநீக்கு
  3. வலி....

    போடா நானொன்றும் அழவில்லை...
    நானும் அந்தக் குழந்தைகளுக்காகவே அழுதேன் அண்ணா....

    பதிலளிநீக்கு
  4. வேதனை தந்த இழப்பு....

    அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  5. 'அழகே அழகே'

    'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'

    ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க

    பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்

    நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!

    ஆதலால்,

    ஒரு பாவலன் / கவிஞன்

    சாவடைந்ததாக வரலாறு இல்லையே!

    ஆயினும்

    நாமும்

    துயர் பகிருகிறோம்!

    பதிலளிநீக்கு
  6. போடா
    நானொன்றும்
    அழவில்லை

    கண்களில்தான் வியர்த்தது.
    த ம 3

    பதிலளிநீக்கு
  7. அருமை, வலி மிகுந்த வரிகள்!
    கவியுலகத்திற்கு இழப்பு.

    பதிலளிநீக்கு
  8. ஆம் நல்ல தமிழ் இறந்துவிட்டது.
    நாம் தமிழ் செய்வோம்.
    அவராத்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  9. அருந்துவதால்
    கவி
    வருமென்றால்
    வருந்துவதால்
    ஒன்றும்
    வருவதில்லை.....//

    அருமையான வரிகள். இதை ரசித்தாலும் அவரது மரணத்தை ரசிக்க முடியவில்லை...

    பதிலளிநீக்கு