வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக்....

அன்பின் சக்திக்கு,

ஆற்றின் வழியெல்லாம் மணற்கொள்ளை நடத்திவிட்டு ஆகாயத்தாமரைகளும் ,
சீமைக்கருவேல் மரங்களும் அடைந்திருக்க ஆற்றுநீர் வரவில்லை என புலம்புவதற்கும்
ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கவில்லை என்பதற்கும் வேறுபாடில்லை.

கிரிக்கெட்டின் தாய்வீடு இங்கிலாந்தென்றால் பாட்டி வீடு நம் பாரதம்.
சதுரங்கம்,சடுகுடு என பல விளையாட்டுகளின் விதை இங்கே விளைந்தது தான்..

120 கோடி தாண்டிய மக்கள் பேறு..
அத்தனை மொழிகள்.
வெவ்வேறு கலாச்ச்சாரங்கள்..
வேற்றுமையில் ஒற்றுமை..

நான்காண்டுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறவில்லை என்பதற்காக படும் பரிகாசங்கள் பதைக்க வைக்கிறது.

இத்தனை மனிதர்களில் வீரர்களில்லையா?
ஊழல் நிறைந்ததாய் போய்விட்டது விளையாட்டுத்துறை?

சின்னச்சின்ன நாடெல்லாம் பதக்கப்பட்டியலில் இருக்கும் போது வெங்கலத்திற்கும் விளங்காமல் போனேமே என்னும் போது வலிக்கத்தான் செய்கிறது..

சரி சக்தி...
நோயெல்லாம் முற்ற விட்டுவிட்டு மருத்துவமனையினை திட்டுவதால் என்ன பயன்.

பதக்கங்கள் பெறாமல் திரும்புவது நமக்குப் புதிதல்லவே..

புரிதல் இன்னும் இல்லாமல் இருப்பதே ஆதங்கம்.

விளையாட்டென்பது தொடர் பயிற்சியால் விளைவது.. பதக்கக்கனவுகள் இளமையிலேயே ஊட்டப்படவேண்டும்.

மண்ணில் புரண்டு விளையாடவேண்டிய வயதில் புத்தகமூட்டை சுமக்கவைத்து வேன்களுக்குள் அடைத்துவிட்டு பதக்கங்கள் வேண்டுமெனில் பறித்துக்கொண்டா வரமுடியும்.

வல்லரசு நாடுகளின் கல்விமுறையில் விளையாட்டுக்கென செய்யப்படும் வசதிகளை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

சந்து பொந்துகளில் பள்ளிகளை கட்டிவிட்டு..
பள்ளியின் ஆரம்பக்காலங்களில் விளையாட்டு மைதானமாய் இருக்கும் திடல்களில் முளைத்துவிடுகிறது கட்டடங்கள்..

பள்ளிகளை விட்டுவிடலாம்..

வீட்டுமனைப்பிரிவுகளுக்கான ஒப்புதல் பெறும்போது விளையாட்டு மைதானம் ,
வழிபாட்டிற்கான இடமென விட்டால் தான் கிடைக்கும்..

மனசாட்சியுடன் சொல்லுங்கள்  வழிபாட்டு இடத்தில் ஆலயம் கட்டிய நாம் விளையாட்டு மைதானங்களை விட்டுவைத்தோமா?

பதக்கங்கள் ஒன்றும் நம்மை நிமிர்த்திவிடப்போவதில்லை.

அவர்கள் பதக்கம் பெறக்கூடாதென்பதும் என் தனிப்பட்ட ஆசைகூட.

உலகமெங்கும் பறந்து முகம்காட்டும் தலைமைக்கு இதைவிட பரிசளித்துவிட முடியும்.?

சஞ்சீவி மூலிகை தேடுவதும், ராமர் பாலத்தை போற்றுவதும் இருக்கட்டும். விளையாட்டுக்கும் கொஞ்சம் மனம் திரும்பட்டும்.

கணக்கற்ற மக்கள் கூட்டத்தில் ஊழல் நடப்பதும்,பரிந்துரைகள் நடப்பதும்,குழிபறிப்பதும் நினைத்தாலும் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது...

ஏமாற்றம் தவிர்க்க என்ன செய்யலாம்.?

மேற்படிப்புக்கு செல்லவேண்டுமெனில் கட்டாயமாய் ஒரு விளையாட்டில் சிறப்படைந்திருக்க
வேண்டுமென்ற விதிவைக்கலாம்.
சர்வதேச விதிகளை பின்பற்றலாம்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் சென்று தலையை தொங்கப்போட்டு வரும் முன்பே ..

அந்தப்பிரிவுகளில் மற்ற தேசத்து வீரர்களின் தரம் ,மற்றும் கால அளவுகளின் பக்கத்திலேனும் வருபவர்களை மட்டுமே அனுப்பலாம்.

பத்துபேர் கலந்துகொள்ளும் போட்டியில் பத்தாவதாய் வரும் தகுதிமட்டுமே கொண்டவர்களை இங்கேயே இருந்து தொலைகாட்சியில் ஒலிம்பிக் பார்க்க சொல்லலாம்..

ஆகச்சிறந்த மாற்று யோசனையாய்..

அடுத்தமுறை ஒலிம்பிக்கிற்கு வீரர்களை அனுப்புவதற்குப் பதிலாய் நம் அரசியல்வாதிகளையும், விளையாட்டுத்துறை பெரியவர்களையும் மட்டும் அனுப்பலாம்...
கண்டிப்பாய் பலன் இருக்கும்..

ஒன்று விளையாட்டை மேம்படுத்த ஒருவழி...
அல்லது வேறெப்படி பயனடயலாம் என...

விடு சக்தி...

ஒலிம்பிக் சென்ற நம் வீரர்கள் பிரேசிலின் அழகினை கண்களில் நிரப்பி பத்திரமாக ஊர்வந்து சேரட்டும்...

அன்புடன்.
செல்வக்குமார்.

7 கருத்துகள்:

  1. Arumai arumai Selvakumar ayya. Indha naatil thagudhi illavittalum arasiyal thalaivargalin uravinaraga alladhu perum panakararaga irudhal matume indha pottigalil kalandhu kolla vaaypu kidaikiradhu. Endraiku thagudhi konda vilaiyatu veerargalai kuripaga gramathu veerargalai num naadu therndhu edukiradho andru thangapadhakkam nichayam, adhuvarai verum thangappppa thakkam dhan. Arpudhamana mozhi nadaiyil kavidhai malai thodukkum ungal viralgal arasukku vazhikaatiyaay ulladhu. 🙆🙆🙆

    பதிலளிநீக்கு
  2. சரியான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் இன்றி இருந்த இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கு பெற்றதே ஒரு சாதனைதான் அதை பாராட்டாமல் அவர்களை கேலி செய்கிறது இணையத்தில் தங்களை அறிவுஜீவிகளாக கருதும் மூடர்கள்

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. இங்கே கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டு எதற்கும் அத்தனை முக்கியத்துவம் தருவதில்லை. எத்தனை வீரர்கள் திறமை இருந்தும் போதிய வழிகாட்டல் இல்லாது இருக்கிறார்கள் என்பது பரிதாபம். விளையாட்டுத் துறையிலும் ஊழலும் நம்பிக்கைத் துரோகங்களும்.... என்னவோ போங்க!

    பதிலளிநீக்கு
  5. //பத்துபேர் கலந்துகொள்ளும் போட்டியில் பத்தாவதாய் வரும் தகுதிமட்டுமே கொண்டவர்களை இங்கேயே இருந்து தொலைகாட்சியில் ஒலிம்பிக் பார்க்க சொல்லலாம்..//
    //
    ஒலிம்பிக் சென்ற நம் வீரர்கள் பிரேசிலின் அழகினை கண்களில் நிரப்பி பத்திரமாக ஊர்வந்து சேரட்டும்//
    பதிவின் உங்கள் மற்ற கருத்துகளோடு ஒத்துப்போனாலும் இவற்றை மட்டும் ஏற்கவில்லை சகோ. அடிப்படை வசதிகூட இல்லாமல் பயிற்சியெடுத்துப் பங்கெடுக்கும் வீரர்களை வணங்குகிறேன்.
    நிர்வாகம் சரியானால் நம் வீரர்கள் சாதிப்பார்கள்..

    பதிலளிநீக்கு