திங்கள், 16 ஏப்ரல், 2018

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அவள் உறங்கட்டும்..

அவளை விட்டு விடுங்கள்..
அமைதிப்பள்ளத்தாக்கின்
புல் படுக்கையில்
அவள் ஆன்மாவேனும்
அமைதியாய் தூங்கட்டும்..

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

நீதிமன்றமே....நீதியில்லையா?

ஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்திய அரசியலமைப்புச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீதி மன்றங்களே நாட்டின் ஆகப்பெரிய வழிநடத்துவதாய் இருக்கும் நாட்டில் அந்த துறை இப்போது எப்படி இருக்கிறது என்பதை அடிப்படை அறிவு உள்ள யாவரும் அறிவார்கள்..

உள்ளூர் நீதி மன்றங்களில் கிடைக்கும் தீர்ப்புகளும்,மாநில அளவில் நடைபெறும் மாற்றங்களும்,உச்ச நீதிமன்றம் என்னும் அதன் தலைமைப்பீடம் பற்றிய செய்திகளும் அந்த தூண் பற்றிய நல்ல எண்ணத்தை யாருக்கும் தருவதாயில்லை.

அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் அமைப்பானது காவல்துறைகளை மட்டுமே இத்தனை நாள் வைத்திருந்தது போல, நீதித்துறையும் வந்துவிட்டதைப்போலவே நடக்கும் நிகழ்வுகள் அத்தனை உவப்பாய் இல்லை...

மிகச்சமீபமாய் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குள் உண்டான உரசல் நீதிமன்றத்தையே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் இடிபோலத்தான் விழுந்திருக்கிறது...

தன்னலம் கருதாத மிக உயர்ந்த நீதிபதிகள் பரிபாலனம் செய்த நீதிமன்றங்களில் அரசியல் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியதே அதன் ஆக முதற் காரியமாக இருக்கவேண்டும்...

நம்மைப் பொறுத்த வரை..
முன்னாள் முதல்வர்க்கு தரப்பட்ட இரண்டு நீதிபதிகளின் முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பு அத்தனை பகடிகளை உருவாக்கியதென்றால்...
எப்போதோ முடிந்த ஒரு வழக்கின் தீர்ப்பு  மிகச்சரியான நேரத்தில் வெளியாகி தமிழகம் கேலிக்கூத்தாகிக்கொண்டிருக்கும் நிலை அறிவோம்...

ஆண்டாண்டு காலமாய் சுங்கச்சாவடியில் செத்துக்கொண்டிருக்கும் பலர் தொடுக்கும் வழக்குகள் இழுத்துக்கொண்டிருக்க..
ஒரு நீதிபதியின் வாகனம் தாமதப்படுத்தப்படும் போது வீறுகொண்டு எழுவதை என்ன சொல்வது?
காவேரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் செயல்படுத்த முடியாத மத்திய அரசுக்கு உற்ற தோழனாய் செயல்படுவது நீதிமன்றங்களன்றி வேறில்லை எனத்தான் தோன்றுகிறது.

மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் ஓடிப்போய் பதுங்கிப்பாதுகாத்துக்கொள்ளும் இடமாகத்தான் நீதிமன்றங்கள் தெரிகிறது..
அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தீவிரமாய் இருந்த போது நீதிமன்றம் உதித்த முத்துகள் கல்லில் பொறித்து வைக்கவேண்டியவை...

நீதிமன்றங்களைப் பற்றியும்...தீர்ப்புகளைப்பற்றியும் எந்த ஒரு வார்த்தையும் பேச துணிவில்லாத ஒரு காலம் இருந்ததை மறுப்பதற்கில்லை...ஆனால் இன்று மீம்ஸ் உருவாக்குபவர்கள் மிக எளிதாக நீதிமன்றங்களை பகடிக்குள்ளாவதையும்,உச்ச நீதிமன்றத்தையே கலாய்ப்பதும் சமூகத்தின் குற்றமாய் நான் கருதவில்லை...
நீதியின் தரத்தின் மேல் தான் கேள்விக்குறிகள்?

அளவுக்கு மீறி வீங்கிக்கிடக்கும் வழக்குகளின் கோப்புகள்...
புதிது புதிதாய் வந்து குவியும் வழக்குகள்...
எப்படியோ நிகழும் இழுத்தடிப்புத்தாமதங்கள்...

சட்டம் பற்றிய பெருமிதங்களில்
"பல குற்றவாளிகள் தப்பிக்கலாம்..ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது"

என்பதும் ஒன்று..
எல்லாம் சரிதான்.. ஆனால் வழங்கப்படும் நீதியில் வழக்காடியவர்களின் மகிழ்ச்சி எந்த அளவில் உள்ளது என்பதை நீதிமன்றங்கள் எப்போதேனும் உணர்ந்திருக்குமா?

தாமதப்படுத்தப்படும் நீதி குற்றம் என்பதை நீதிமன்றத்திற்கு யார் உரத்துச்சொல்வது?

அரசையே காப்பதும் நேர்வழியில் வழிநடத்துமாக சொல்லும் நீதிமன்றம் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை என்ன செய்வதாக உத்தேசித்துள்ளது..

வேடிக்கையாய் கூட சொல்லலாம்..
நம் சமூகத்தில் ஒரு காலத்தில் கணவன் மனைவி சிரிப்புகள்,டாக்டர் சிரிப்புகள்,மன்னர் சிரிப்புகள்,நீதிமன்ற சிரிப்புகள் என பல வகைகள் உண்டு...
அவற்றில் நீதிமன்ற சிரிப்புகள் தவிர மற்ற எல்லா சிரிப்புகளும் அப்டேட் ஆகி உள்ளன...
நீதிமன்றம் போனால் வழக்கறிஞர் குடும்பம் பிழைப்பதும்,
வயலுக்கான சண்டையில் வரப்பும் மிஞ்சாது போவதும்...
இன்னும் மாறாமல் தொடரும் அவலச்சிரிப்புகள்..

நாட்டில் நடக்கும் எல்லாக்குழப்பங்களுக்கும்...நாளும் நடக்கும் போராட்டங்களுக்கும்,
வல்லரசுக்கான படிக்கல்லாக இல்லாமல் ஆகப்பெரிய தடைக்கல்லாக இருப்பதும் நீதித்துறை மட்டுமே என நான் நம்புகிறேன்.

நம் மக்கள்  மருத்துவரை தம் உயிருக்கு கடவுளாக கருதும் வேளையில் நாட்டுக்கான கடவுளாக நீதிமன்ற தேவன்களையே நம்புவது வாடிக்கை...

நீதிபதியானவர் கடவுளுக்கு ஒப்பானவராகவும்...தன் முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் தராசின் நடுமுள்ளாய் துல்லியமான தீர்ப்பு வழங்குபவர்களாகவும்,
இடையிடையே வந்து போதும் அதிகார வர்க்கத்திற்கு மறைமுகமாகவேனும் ஆதராவாய் இல்லாதவராகவும், சட்டத்தின் படி நடப்பவராக இருந்துவிட்டால் எல்லாம் சரியாகும்...

அதிகாரத்தின் எந்த மிரட்டலுக்கும் பணியாத
நீதிமன்றமே நாட்டின் ஆகக்கடைசியான இந்தியாவின் நம்பிக்கை...

அந்த பொன்னான வேளை வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான்
வாழ்ந்து தொலைக்கவேண்டும்..ம்ம்ம்
சனி, 31 மார்ச், 2018

நந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்?

மிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்..
சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு உண்மையான பிரச்சனைகளைப்பற்றிய பிரக்கினையை காலிசெய்துவிடுவதை உணர்கிறேன்...

அதிகார அமைப்பும் அப்படி ஒரு மனோநிலையிலேயே நம்மை வைத்திருக்க விரும்பிகிறது போலும்..

ஜல்லிக்கட்டுப்பிரச்சனையை கூட,அதிகாரம் அமைப்பானது போனால் போகிறது என கொடுத்துவிட்டு ரொம்பவும் எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை அந்த போராட்டத்தை முடித்துவைத்த விதத்தில் அறிகிறோம்...

மற்றபடி எந்த போராட்டங்களும் அதிகாரத்திற்கெதிராய் வென்றிருப்பதை காணமுடியவில்லை..
1500 நாட்களுக்கு மேலாய் போராடிய கூடங்குளமாகட்டும்,கெயில் ,நெடுவாசல்,கதிராமங்களம்,காவேரி...இப்படி அத்தனை பிரச்சனைகளிலும் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நோக்கியே பயணிக்கிறார்கள்..
நியூட்ரினோ போகும் பாதையும் அப்படியாகத்தான் இருக்கிறது...

போராட்ட விசயத்தில் எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை என்னைப்பொறுத்தவரை வரவே இல்லை...

ஊடகங்களைப் பற்றி நானொன்றும் புதிதாய் பேசப்போவதில்லை...

ஆனால், எதிர்க்கட்சிகளாய் செய்யும் போராட்டங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காய்த் தெரியவில்லை.மாறாக அதன் கூரை மழுக்குவதாகவே தெரிகிறது..
வரலாறு காணாத அளவில் பேருந்து கட்டணம் உயர்ந்த போது ஆ...ஊ எனக்குதித்தார்கள்..சிறை நிறைப்புவோம் என்றார்கள்...
அதெல்லாம் சரி ..அவர்களின் போராட்டம் எத்தகைய வெற்றியை சமூகத்திற்கு கொடுத்தது..?

காவேரி பிரச்சனைக்கு இன்னும் பதினைந்து நாட்களுக்குப்பின் கருப்புக்கொடி காட்டி ...ம்ம்ம்.

கழுவத்தண்ணீர் இல்லை.. நூற்றுக்கு மேலான ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்து சாதனை..?

செத்து விழும் மனிதர்களின் போராட்டம் பெரிதாய் இருக்க 1500 மாடுகளுடன் ஜல்லிக்கட்டு..

ஆட்சியும் அதிகாரமும் செய்யும் காட்சிகள் பரமார்த்த குரு கதைகளின் அப்டேட் வெர்சன் தான்..

300 கிலோமீட்டர் நெடுஞ்சாலையில் செல்ல எத்தனை சுங்கச் சாவடிகள்?
எந்தப்பள்ளத்தில் நிறைகிறது இந்தப்பணங்கள்?
எத்தனை எதிர்க்கட்சிகள் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்...
எந்த அரசியல்வாதியிடமும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில்லை அவர்கள்...

வரிசையில் காத்திருந்து காசை அழுதுவிட்டுவரும் நம்மில் எத்தனைபேர் அதைப்பற்றி எழுதியிருக்கிறோம்..

1960/70 களில் கம்யூனிய இயக்கத்தலைவர்களின் போராட்ட வரலாறு அனல் பறப்பதாய் இருக்கும்..கூலி உயர்வுக்கும் அதிகாரத்திமிருக்கும் எதிராய் நெஞ்சை நிமிர்த்திய தோழர்கள் எங்கோ மறைந்து போனார்கள்...இப்போதெல்லாம் நெஞ்சை துண்டு வைத்து மூடிக்கொண்டிருக்கின்றார்கள்..
(அதெல்லாம் சரி...இந்த துண்டு போடும் சமாச்சாரத்தை எவன் கண்டுபிடித்தான்?)
இணைய ஊடகங்களில் நாளுக்கொரு பிரச்சனையை ஊதிப்பெருக்கி விளையாடிவிட்டு அடுத்த பிரச்சனைக்கு அலைகிறார்கள்...
ஊரே தீப்பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோவைப்பற்றி பேச  இனி எந்த அருகதையும் இருப்பதாய்த்தெரியவில்லை..பத்தாண்டு ,இருபதாண்டுக்கு முன் எடுத்த படம் போடும் நமக்கு...

நல்ல தலைவர்களை இனி நாமே தான் கண்டுபிடிக்கவேண்டும்..
காலைவணக்கம்,
மாலைவணக்கம்,என வணக்கங்களைப்போட்டு விட்டு விருப்பக்குறிகளுக்கு ஏங்குவதும்,சுயமிகளை பதிவேற்றிவிட்டு கருத்துக்களுக்கு பிச்சை எடுப்பதும்,தமிழனின் பெருமையென பிதற்றிக்கொண்டிருப்பதும் இன்னும் எத்தனை நாள்களுக்கு?

நேற்றைய, தோழர் ஒருவரின் ஆதங்கம்  அழிந்து வரும் தாய்மண்ணில் கொஞ்சம் சொகுசாய் வாழ்ந்த மனிதர்களாய் நாம் மட்டுமே கடைசியாய் இருக்குமோ என்று சொல்லும் போது நெஞ்சு முட்டுகிறது..
நம்மின் அடுத்தடுத்த சமூகம் தண்ணீருக்கும் காற்றுக்கும் வழியின்றி மருந்துகளில் வாழும் போது நமக்கு விடப்போகும் சாபங்களை நினைத்துப்பார்க்கவும் அச்சமாய் இருக்கிறது..
பஞ்சாங்கம் மட்டுமே இருந்த காலங்களில் நம் முன்னோர்கள் செய்த சில முயற்சிகளைக்கூட விஞ்ஞான காலத்தில் செய்யாமல் இருப்பது என்ன சாபக்கேடு?
நொடிக்குள் பரவும் இணைய வேகத்தில் ஐந்துதலைப்பாம்பின் படத்தையா பகிர்வது?

வாழ்ந்து கொண்டிருக்கும் நான் உள்பட்ட இந்த  சமுதாயத்தின் மீது மிகுந்த கவலையும் அருவருப்புமாய் இருக்கிறது...
மூச்சு முட்ட பதிந்துகொண்டிருக்கும் தகவல் மற்றும் பதிவுகளில் ஆயிரத்தில் ஒன்றாய் காணக்கிடைக்கும் அந்த ஒற்றை நம்பிக்கை வெளிச்சங்களையே விடிவெள்ளியாய் மனசு நம்பித்தொலைக்கிறது..

காலம் இன்னும் நம்மைக்கடந்து போய்விடவில்லை..
நல்ல தலைவர்களைத்தான் தேர்ந்தெடுக்க மறந்துவிட்டோம்...இப்போதேனும் நமக்கு அவசியமான நல்ல தகவல்களால் பிரச்சனைகளின் வேரறுக்க ஆராய்வோம்...
சமூகம், பண்பாடு பற்றிய செய்திகளை மட்டுமே இணைய ஊடகங்களில் பரப்புவோம்...
இடையில் சில புல்லுருவிகள் நம் பொறுமையை சோதிக்கத்தான் செய்வார்கள்..
கண்டும் காணாமல் கடந்துபோவோம்...
உங்களுக்குத்தெரியுமா? அவர்களும் அந்தப்பதிவுகளை போட்டுவிட்டு அடுத்தபதிவுக்கு போய்விடுகிறார்கள்...
அவர்களின் பதிவுகளுக்கு வந்து குவியும் ஆபாச பின்னூட்டங்களையும் ஒரு மனிதன் அநாயசமாக கடக்கிறான் எனில் ..புரிந்து கொள்ளுங்கள் எதிரி அவன் குறிக்கோளில் எவ்வளவு கவனமாய் இருக்கிறான்..?  நாம்???சனி, 17 மார்ச், 2018

முன்றிலாடும் பூக்கள்

தமிழைத்தாண்டியும் எனக்கொரு மொழி பிடிக்குமெனில் அது மலையாளமாய் இருக்கும்..
தட்டுத்தடுமாறி மலையாள மொழிபெயர்ப்புக்கதைகளை வாசிப்பதும்,கவிதைகளை தடவிக்கொண்டிருப்பதும் வாடிக்கை...

ஆனால், நாகர்கோவில் சுபா ரவீந்திரன் அக்கா மிகச்சிறந்த பல்கலை வித்தகி. சமையலாகட்டும்.
சமஸ்கிருதம்,பூ வேலை,சித்திரங்கள் என எது செய்தாலும் அற்புதமாய் அமைந்துவிடும் அவர்களின் இல்லமே கோவிலைப்போல் இருக்கும்...
அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை 50℅ மலையாளமும் 50℅ தமிழும் கலந்து சொன்னபோதே எனக்கும் அப்படியொன்று நடந்திருப்பதும்,படைப்புகளுக்கு மொழியும் இடமும் ஒரு பொருட்டல்ல என்பதும் தெரிந்தது..
எழுதி முடித்து வாசிக்கும் போது.. வரிகளில் பெரிய கவித்துவமோ,நாம் இதுவரை காணாத எந்த காட்சியும் புதிதாகவோ சொல்லிவிடவில்லை..
ஆனால் மெல்லிய பாரிஜாத வாசமும்,அதையும் தாண்டி மனசுக்குள் ஒருவிதமான உணர்வு அலைமோதியதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது...
இனி அந்த கவிதை...

வியாழன், 15 மார்ச், 2018

இடைத்தேர்தலில் மோடிக்கு வெற்றி...

அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில்

மனக்குரங்கு பல சந்தேகங்களை கீறுகிறது...

நம்ப மறுத்தாலும் ஆளும் கட்சி இன்றைய இந்தியாவின் மற்ற கட்சிகளை விட கட்டமைப்பும்,
சரியோ தவறோ ஒரு இலக்கை நோக்கி சீரான செயல்களை செய்வதில் வல்லமை மிக்கது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்...

ஒருமுறை ஆளூர் ஷாநவாஸ் சொன்னதுபோல் நாம் நமக்குள் விவாதங்கள் செய்துகொண்டிருந்த போது அவர்கள் சமூகத்துள் ஊடோடி விட்டார்கள்...
மக்களோடு மிக இயல்பாக கலந்துவிட முடிவு செய்துவிட்டார்கள்.

எடுத்துக்கொண்ட லட்சியத்துக்காக எந்தவித சமரசமும் செய்யாமல் எல்லாவித முயற்சிகளையும் செய்வதை நாம் பலமுறை பார்த்தும் இருக்கிறோம்.
மூன்றாமிடத்தில் இருக்கும் மாநிலங்களில் கூட ஆட்சி அமைப்பதை விடவா சாதுர்யம் இருக்கப்போகிறது?

பலவருடங்களில் வாக்கு சதவீதம் புள்ளிகளின் அளவே இல்லாத திரிபுராவையும் வென்றெடுக்க வெறும் அமைதியான ஜனநாயக முறையிலான தேர்தல் என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்கள் எனில் இந்த பதிவை இந்த இடத்திலேயே நீங்கள் மூடிவிடலாம்..

வாக்காளர்களின் மூளை நரம்புகளைக்கூட கணிக்கும் அளவிற்கு சாத்தியக்கூறுகள் அவர்களிடம் உண்டு.
எந்த பிரச்சனையை எதைக்கிளப்பி மறைக்கலாம் என்பதை நம்மிலும் அவர்கள் அறிவார்கள்...

ஒற்றை தேசம் ஒற்றை மதம் என்ற நெ(கொ)டுங்கனவில் இருக்கும் அவர்கள் மிக எளிதாக தோற்றுவிட மாட்டார்கள்.
மாநிலத்தேர்தல்களில் எப்படியேனும் வென்றுவிடும் அவர்கள் இடைத்தேர்தல்களில் தோற்பதிலும்..
நம்புங்கள்.. திட்டங்கள் இருக்கும்.
சில நாள்களின் முன் பார்த்த மோடி அத்வானி சம்பத்தப்பட்ட காணொளி ஒன்று போதாதா அவர்களின் அரசியல் புரிய?
ராணா அய்யூப் எழுதிய குஜராத் பற்றிய நூலிலேயே தொடங்கிவிடுகிறது அவர்களின் திட்டங்கள்.
ஏகப்பட்ட செலவுகளாலும் கனவுகளாலும் கட்டப்பட்டது அவரின் தலைமைத்திட்டங்கள்.
ஏற்றிய ஏணியை மறக்கும் அவர் எதிர்காலப்போட்டி என கருதும் அல்லது முன்னெடுக்கப்படும் இன்னொருவரை எப்படி வளரவிடுவார்.?
ராணா அய்யூப்பில் படித்த நினைவு..
என்றோ ஒருநாள் அவரிடம் நாட்டின் தலைமை வேண்டுமா அல்லது உங்கள் கொள்கை வேண்டுமா என்றால் மிக நேர்மையாக அவர் தலைமையை தேர்ந்தெடுப்பார்..

ஆக...இந்த தோல்வி பா.ஜ.க வின் தோல்வி என நாம் மகிழ்ந்தாலும் அது மோடியின் வெற்றி தான்..
சாதாரண இந்த இடைத்தேர்தலின் தோல்வி யோகிக்குதான் பாவம்..மாநிலம் தாண்டி முயற்சிக்க முடியாத அயற்சியை கொடுத்திருக்கும்..

என்னடா..இவன் நமது மகிழ்ச்சியை கெடுக்கின்றானே..
இவனுக்கு இதில் ஒரு சந்தோஷமும் இல்லையா எனக் கேட்டால் ..எனக்கும் இருக்கிறது..
எதிரும் புதிருமான மாநிலக்கட்சிகளை கொஞ்சமேனும் இணக்கமாய்ப் போக வைத்திருக்கிறது..
இங்கேயே பாருங்களேன் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது...
தொலைபேசியில் பேசிக்கொள்கிறார்கள்..
சந்தித்துக்கொள்கிறார்கள்..
பேருந்துக்கட்டண உயர்வுபற்றிய போராட்டத்தை மறந்திருக்கிறார்கள்..
இதற்காகவேணும் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும்..ம்ம்ம்