ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பேருந்தில் வந்த கவிதை...


முக்கால்வாசி
இரவை விழுங்கும்
சொந்த ஊர்
பயணம்.

ஒவ்வொரு தடவையும்
ஏதேனும்
ஓரிடத்தில்
விசிறிப்போகிறது
மழை.

கனத்த ஒலிப்பான்களுக்கிடையே
80 களின் பாடல்கள்.

ஒரு பயணியிடம்
சத்தமிடும்
நடத்துனர்.

குறந்தபட்சம்
ஒரு
கெட்டவார்த்தையேனும்
உதிர்த்துவிடும்
ஓட்டுனர்.

சாலையைவிட்டு
கவிழ்ந்துகிடக்கும்
ஓர் வாகனம்.

சாலையிலேயே
அரைந்துகொண்டிருக்கும்
ஒரு நாயின்
கோர மரணம்.

ஊர்களின்
தொடக்கத்தில்
கண்ணீரஞ்சலிப்
பதாகைகள்.

சூலமும் வேலும்
மாறிமாறி
ஒளிக்கும்
சீரியல் விளக்கு
அம்மன்கள்.

திடீரென
முளைக்கும்
உணவகங்கள்.

சுங்கச்சாவடிகளின்
காத்திருப்பில்
கண்ணாடியூடே
நுழையும்
வளையல்
அணிந்தவர்களின்
வசூல்.

பேசிக்கொண்டேயிருக்கும்
இரண்டு பெண்கள்.

பெருநோய் விரல்களென
முன்னிருக்கை
பெண்ணின்
முதுகு சுரண்ட
மடங்கியிருக்கும்
மத்தியவயது 
மனிதனின்
பொய்த்தவம்.

சோர்ந்துபோனதாய்
மடியில்
படுத்துறங்கும்
புதுக்கணவன்.

விடிந்துவிடும்
விரைவிலென்றாலும்
வீடுவந்து
புரளும் வேளை..

வந்துவிடுகிறது..
கவிதை.

சனி, 26 டிசம்பர், 2015

எங்கள் தோழரை விட்டுவிடுங்கள்....

அன்பின் சக்திக்கு,

உன் சமீப பதிவுகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை சுற்றியே சுழல்வதை பார்க்கிறேன்.

வட்டத்தை தாண்டி சமூக உணர்வோடு எழுதும் எழுத்துக்கள் உன்னை இன்னும் உயிர்ப்போடு இருக்கச்செய்யும் என்பது என் கருத்து.

சக்தி...
இன்று ஒரு மனிதனின் பிறந்தநாள்.
வாழும்நாளெல்லாமிந்த சமூகத்திற்காய் போராடி,போராடி மெருகேறி ஒளிவீசும் ஒரு கருப்புவைரம் வந்துதித்த நாள்.

எதிரிகளாலும் மதிக்கப்படும் ஒரு ஏழைத்தோழரின் பிறந்தநாள்.

ஆனால் சக்தி,

கடந்த நாட்களில் ஊடகங்களில் தோழரை ஏன் முதல்வராக முன்மொழியக்கூடாதெனஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

ஏன் வந்தது இந்த ஞானோதயம்?

அரைநூற்றாண்டுக்கும் மேலாய்களப்பணி,
மரணதண்டனைக்கைதியாய் சிறைக்கோட்டத்தில்,
இழந்த உறவுகள் எத்தனை?
தேர்ந்தவாசிப்பாளர்,
மிகச்சிறந்த ஜனநாயகவாதி.

இத்தனை நாட்களாய் எங்கே போயிருந்தீர்கள் ஊடகங்களே?கட்டுரையாளர்களே?

உங்கள் ஊடகங்களில் இவரை நல்லவர்,வாழும் காமராஜர் என்று எழுதினீர்களே அன்றி...முதல்வராக ஒருபோதும் முணுமுணுத்ததுகூட இல்லையே முன்பெல்லாம்.

கம்யூனிச இயக்கம் ஒன்றும் உங்கள் உரசிப்பார்த்தலில் மயங்கிப்போகாது.

இயக்கத்தின் களப்பணிகளில்,சில தோழர்களின் செயல்பாடுகளில் கருத்துவேறுபாடு இருக்கலாம்.

ஆனால் இயக்கம் காக்கும் விதிகளிலும்,கட்டுப்பாடுகளிலும் எந்த மாச்சர்யங்களும் இருக்க முடியாது.

தோழரை இயக்கம் கண்ணுக்குள் வைத்து காக்கிறது..தோழரும் இயக்கத்தை கண்ணாகவே பார்க்கிறார்.

இத்தனை வயதிலும் ஒரு முழுமையான இயக்கவாதியாக இருப்பவர்..

வெள்ளகாலங்களில் எல்லாரையும் காப்பாற்றிவிட்டு என்னைக்காப்பாறுங்கள் என்றதாய் எழுதி ஈரம் வரவைக்கப்பார்க்கின்றீர்கள்..

ஒற்றைவேட்டியுடன் வாழ்ந்த பேராசான் ஜீவாவின் இயக்கத்தில் வந்தவர் அப்படித்தான் இருப்பார்.

போதும்.. உங்கள் ஊடக
அரசியலை சிம்புவுடனும்,இளையராஜாவுடனும் நிறுத்திக்கொள்ளுங்கள்.

எங்கள் தோழர் முதல்வராக வந்துதான் மக்கள்பணி ஆற்றவேண்டுமென்பதில்லை.
எப்போதும் இயங்குபவர்...

கால்களே சக்கரம்...சக்கர நாற்காலி எப்போதும் வேண்டாம்.

உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி..

கம்யூனிச இயக்கம் ஒன்றும் குடும்பக்கட்சியல்ல..
என்ன,எப்போது செய்யவேண்டும் என்பதை அவர்கள் தீர்க்கமாகச் செய்வார்கள்.

மக்களோடு மக்களாய் பயணிப்பவரை முதல்வர் என்ற மாயக்கோடிழுத்து இடைவெளி ஏற்படுத்தப்பார்க்காதீர்கள்.

அவர் எங்கள் தோழர்..
எங்களுடன் இருக்கட்டும்.

நீங்கள் வேறு ஆளைப்பாருங்கள்.

இன்னும் பல்லாண்டு வாழட்டும் எங்கள் தோழர்.

அன்புடன்,
செல்வக்குமார்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

எமனின் அவுட் சோர்ஸிங்...

அன்பின் சக்திக்கு,
               கடந்த வாரம் முழுவதும் உங்களுடன் இருந்ததால் நல விசாரிப்பை தள்ளிவைத்துவிடலாம்.

கருணையில்லா மழை ,கருணை இல்லத்தை புரட்டிப்போட்டதையும்,
பெருமழை தந்த வாழ்க்கைப் பாடத்துக்கான கேள்வியை "சாய்ஸ்-ல்" விட்டுவிட்ட மாநகர மக்களையும் பார்த்துவிட்டு வந்த என்னை நீதான் நலம் விசாரிக்க வேண்டும்.

உன்னை ஒத்தோரெல்லாம் முகநூலிலும் ,பிற சமூக தளங்களிலும் மூழ்கிக்கிடந்து முத்தெடுப்பதாய் நினைத்து மூச்சடக்கி கிடப்பத்தை காண்கையில் என்னைப்போன்றோர்க்கு கொஞ்சம் வருத்தம் தான்.

தேடல் என்னும் ஆவலில் புல்மேய வரும் எங்களுக்கு முட்களின் கூட்டம் தான் அதிகம் தெரிகிறது.

முகநூல் என்பது தகவல் பரிமாற்றத்திற்காகவும்,எண்ணங்களின் இடம் பெயரலுக்கும் வியாபாரி கண்டுபிடித்த அறிவியல்.

ஆனால் முகநூலில் பகிரப்படும் செய்திகளின் கூட்டத்தைப்பார்க்கும் போது பதற்றம் வந்துவிடுகிறது.

அற்புதமான தளம் அபத்தங்களால் நிரம்பிக்கிடக்கிறது.

காப்பி&பேஸ்ட் வசதி மட்டும் இல்லையெனில் முகநூல் பாரம் அதிகம் குறையும்.

காலை எழுந்ததும் குட்மார்னிங்...தின்ற இட்லிகளின் எண்ணிக்கை...அந்த பதிவுக்கான விருப்பங்களின் எண்ணிக்கை..
தன்னுடைய பதிவை விரும்பச்சொல்லியும்,பகிரச்சொல்லியும் அத்தனை கெஞ்சல்கள்.
தெரிந்தவர் என்ன செய்திருந்தாலும் Like..
பிடித்தவர் செய்திருந்தால் பகிரல்...

நடிகர்களுக்கு கச்சைகட்டி போடும் சண்டைகள்..
நாளுக்குநாள் புகைப்பட மாற்றங்கள்.
அடுத்தவன் எழுதியதை தன் பெயருக்கு மாற்றிக்கொள்தல்...

மனிதனின் மனசுக்குள் எத்தனை கோணங்கள் உண்டோ ...அத்தனையும் காணக்கிடைக்கிறது..

ஒரு சமூகத்தின் கூரிய பார்வையை திசைதிருப்ப ஒரு பதிவு மட்டுமே போதுமென்றாகிப்போகிறது.

பெருமழை சூழ்ந்த நாட்களில் இந்த முகநூல் தந்த பங்களிப்பு அபாரமானதுதான்.
கொட்டிய தகவல்கள்,ஒருங்கிணைத்த கைகள்..உதவி கேட்போர் பட்டியல்,மீட்போர் படங்கள்,மீண்டோர் கதறல்கள்..

முகநூல் ஒரு தேவ தூதனாய் தெரிந்தது.

ஆனாலும் சக்தி..
அளவுக்கு அதிகமாய் இந்த ஊடகம் மக்களை பதட்டப்படுத்தியதாகவே தோன்றியது.

உண்மையின் பக்கத்தை உரச சோம்பேறிப்பட்டு கேள்விப்பட்டதை காது,மூக்கு வைத்து உலவவிட்டதாய் நான் உணர்கிறேன்.

தெரியவேண்டிய பல உண்மைகள் புதைந்துதான் கிடக்கிறது..

யோசி சக்தி...
வந்த படகுகளும்,நடிகர்களும்,தலைவர்களும் படங்களாகவும் செய்திகளாகவும் பதிவாகி இருக்கிறார்கள்.

செத்தவர்களின் கணக்கை யாராலும் எழுத முடிகிறதா துல்லியமாய்.?

அவர் வரவேண்டும்..இவர் ஆளவேண்டும்...
எல்லாம் சரி ...நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்...

புத்தாடை அணிவதையும்,புதுக்காதல் கொண்டதையும்,அம்மாவுக்கு ஒரு கவிதையும்,ஆங்காங்கே எடுத்த செல்பியும் பதிவுசெய்யத்தான் முகநூலெனில் ..
ஒருபோதும் உங்கள் கடவுள் அதற்கு லைக் போடமாட்டார்.

ஒரு கற்பனை கேளேன்..

எமனின் அலுவலகத்தில் கோப்புகள் நிறைந்து கிடந்தன..சித்திரகுப்தன் பார்த்துதீரவில்லை பாவ புண்ணிய கணக்குகளை.

எமன் அமெரிக்கா உட்பட அனைவரிடமும் கலந்துபேசி முடிவுக்கு வந்தான்..

அவுட் சோர்ஸிங் முறையில் வேலையை முகநூலுக்கு கொடுக்கிறான்..

இப்போது அங்கே கோப்புகள் கிடையாது..
சித்திரகுப்தன் கணினியோடு இருக்கிறான்.
அவரவர் வரும்போது...அவர்களின் முகநூல் பக்கங்களை திறந்துபார்த்து சிரிக்கிறான்.

அவர்களின் கணக்கை அவர்களே கைப்பட பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்...

புரிகிறதா சக்தி..
எண்ணங்களை பதிவுசெய்யும் தளத்திற்கு மனநூல் என்றுதானே பெயர்வைத்திருக்கவேண்டும்...எதற்காக முகநூல் என பெயர் வைத்தார்கள் என்று..

ஹா..ஹா..

அன்புடன்,
செல்வக்குமார்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

நல்லா வருவீங்க....

ஆங்காங்கே
தேங்கி நிற்கிறது
வாகனங்கள்.

நீர்க்கோடிட்ட
சுவர்களின்
உயரம்
அளக்கிறார்கள்.

எடுத்துவைத்த
காணொளி
காட்டுகிறார்கள்.

நீர்
வந்த இரவின்
பலமுகம்
படர்கிறது.

தலைக்கவச
பயமின்றி
தடதடக்கிறார்கள்.

பால்
இருநூறுக்கு
விற்றவனிடம்
இப்போதும்
பால்
வாங்குகிறார்கள்.

பணம் ..
வங்கியிலா
நேரிலா...
விசாரிக்கிறார்கள்.

நீ
சின்னபிள்ளையா
இருந்தப்போ...
கதைகளுக்கான
கரு
கிடைத்திருக்கிறது.

மீண்டும் கூவம்
காணக்கிடைக்கிறது

ஆற்றிடை
குடில்களின்
அடுப்பு
புகைகிறது.

வணிக
வளாகங்களில்
நட்சத்திரங்கள்
மின்னத்
தொடங்கிவிட்டன.

படகுகள்
கடலுக்கு
திரும்பிவிட்டன.

சென்னைக்கு
மிக அருகில்...
சீக்கிரம்
கேட்கலாம்.

திருவையாறும்
சென்னை
வந்திருக்கிறது..

குப்பையெறிந்து
போகிறது
ஒரு
கும்பல்.

இனி
வெயில் காலத்தில்
தண்ணீருக்குப்
குடங்கள்
வரிசையாய் வைத்து
போராடினால்
போதும்...

நாம்
மானாட மயிலாட
பார்க்கலாம்.









சனி, 19 டிசம்பர், 2015

ஒரு வார்த்தையுமில்லை....

இது கருணை இல்லத்தின் நிலை..

இந்த படங்களை விடவா சொல்லிவிடப்போகிறேன்...


நானும் இங்கே.....

வியாழன், 17 டிசம்பர், 2015

கடவுள் உள்ளமே....

அன்பின் சக்திக்கு,
                      உனக்கான கடிதங்களின் வீச்சு..நம்மைத் தாண்டியும் பல உள்ளங்களுக்குள் ஊடுருவுவதை பின்னூட்டங்களும்,பக்கப்பார்வைகளும் காட்டுவதில் மகிழ்வு.

வலைப்பதிவு உலகில் ஒரு சிறுவனின் கீற்றல்களுக்கு வரும் குரல் ஆதரவுகளும் குதூகலிக்க வைக்கிறது.

சிலரை அறிமுகப்படுத்தும் போது உள்ளம் எதையோ சாதித்ததாய் பீடு கொள்கிறது.

பீப் பாட்டுகளின் மத்தியில் பல மவுனராகங்களை கேட்காமலே போய்விடுகிறது காதுகளும்,காலமும்.

மனிதத்தன்மையும்,இரக்கமுமற்ற பல நிகழ்வுகளின் கோர்வையில் சமூகத்துக்காய் வியர்வை சிந்தும் பலர் அறியப்படாமலே போகின்றார்கள்.

எனக்கான சென்னையின் புனிதத்தலமாய் ஒரு இடம் இருந்தது..
நீர்மூலம் அது நிர்மூலமாகியிருக்கிறது.

ஆயிரம் அடித்துப்போன வெள்ளத்தின் மேல் சிறு அருவெறுப்பு தோன்றிய இடம்  அதுவே.

சைதாப்பேட்டையின் ஒரு சாலையில் உயிரோடு இருந்த இல்லம்...

ஆண் பெண்ணென நாற்பது குழந்தைகள்...

சாதாரணக்குழந்தைகள் அல்ல...

பெற்றோரும் கவனிக்க சிரமப்படும் "ஆட்டிஸம்" எனும் பாதிப்பில் வளர்ந்த குழந்தைகள்.

படிப்பறையும் கழிப்பறையாக்கும் கள்ளமில்லா சிரிப்புச்செல்வங்கள்..

தாயினும் மேலாய்,தாதியாய் போதிக்கும் சிறப்பு ஆசியர்கள்..

கேள் சக்தி..
எந்த தன்னலமும் இல்லை..
அரசின் ஒரு பைசாவும் கிடைப்பதில்லை.
முழுக்க முழுக்க உதவும் மனிதர்களின் சின்ன சின்ன உதவிகளால் உருண்ட பெருந்தேர்...

இருவேளையும் தரமான உணவுக்காய் அவர்கள் அலையும் அலைச்சல்கள்..
தரத்தயாராய் இருப்போரின் பட்டியல் பார்த்து அழைக்கும் பாங்கு..

உதவும் உள்ளங்கள் அள்ளித்தந்தாலும்,கிள்ளித்தந்தாலும் ஒரு புன்னகையில் சொல்லும் பிள்ளைகளின் நன்றிப்பாட்டு...
காணக்கண் கோடி வேண்டும்.

திறந்துவிட்ட வெள்ளம்
சூறையாடிப்போயிருக்கிறது...

வீதியிலிருந்த வி.ஜி.சந்தோசம் வெளியேறிப்போனார்...
இவர்கள்....?

சுய அறிவில்லாத பிள்ளைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ...
அடித்துக்கொண்டு போகும் உணவுப்பொருட்களையும்,சான்றிதழ்களையும்,சில்லறை சேர்ந்திருந்த உண்டியல்களையும்,பிள்ளைகள் சுமந்த வாகனம் புரண்டு போவதையும் ,,கண்ட அவர்களின் கண்ணீர் இன்னும் நின்றபாடில்லை.

எத்தனை உன்னதமான பிறவிகள்?
பொல்லாப்பெருமழை இந்த நல்லோர்களுக்காகவும் பெய்து தொலைத்திருக்குமோ?

பிறந்தநாளுக்காய் கேக் வாங்கும் உன் தோழமைகளிடம் சொல்..அதில் 10 பிள்ளைகள் சாப்பிடலாமென..

அந்த அன்பின் ஊற்றுக்குள் கண்ணீர் சுரப்பது ஆகாது சக்தி..

உங்களில் யாரேனும் உதவுவீர்கள் சிதுதுளியெனினும்,
உங்கள் பாதங்களில் படர நான் தயாராய் இருக்கிறேன்.

ஒரு துளி உப்பிலிருந்தும்,கழிவறைக் கோபையிலிருந்தும் தொடங்க வேண்டியிருக்கிறார்கள்.

உதவிகளுக்கான வேண்டுதல்கள் கூட வைக்கமுடியாதவர்களாய்
சுருண்டிருக்கிறார்கள்.

நம் குடும்பமும்,காலமும் என்னை அனுமதிக்குமாயின் அவர்கள் கூடவே இருக்க ஆசைப்படுகிறேன்.

இயன்றதைச் செய்வோம் சக்தி...
இங்கு ஸ்டிக்கர்கள் ஒட்டமாட்டார்கள்..
சாப்பாடுக்கணக்கு எழுத மாட்டார்கள்..
உன் உதவிக்கான புண்ணியக்கணக்கின் வரவை அந்தப்பிள்ளைகளின் புன்னகையில் சொல்லவைப்பார்கள்...

நல்ல பாட்டுதான்...
கடவுள் உள்ளமே..
கருணை இல்லமே..

திரு.B.இராதாகிருஷ்ணன்.
கருணை டிரஸ்ட்.
7200012973,
9841359935.

அன்புடன்
செல்வக்குமார்.

புதன், 16 டிசம்பர், 2015

அப்பனின் சாபம்...

பெருமழை தீர்ந்த
பின்னிரவொன்றின்
மீதியில்

அறுந்து
கிடைத்த
இணைப்பில்

அலறுகிறாள்
சின்னவள்.

வாழும் சவமாய்
வார்த்தைகள்
கேட்கிறேன்

ஒருநாள் முழுதும்
உணவில்லை
என்கிறாள்..

எதை
அறுத்து வீச...

எரிந்து
சாம்பலாக
எல்லாம்.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

அன்பின் சலாம்

அன்பின் சக்திக்கு,
               பரபரப்பான உன் நாட்களின் ஊடே நானும் என் எழுத்துக்களை திணிப்பதாய் சோர்ந்து போகாதே.
வாய்க்குள் வரும் சில எழுத்துக்களை வசப்படுத்தி வாக்கியங்களாக்கும் என் பயிற்சியாய் நினைத்துக்கொள்.
மனிதப்பிறவிகள் எல்லோரும் மகத்தானவர்களாய் மாறிவிடுவதில்லை.
நாம் மாறவிடுவதுமில்லை.
ஞானியராய் ,யோகியராய் மாறிய பலரும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அடையாளம் கண்டு சிலர் அழுத்தப்படுகிறார்கள்.
அடையாளம் காணாமல் சிலர் தொலைந்துபோகிறார்கள்.
நமக்குத்தெரிந்த ஒரு சிலரையேனும் நாமும் சொல்லவில்லை என்றால் எழுதும் எழுத்துக்கு குற்றமிழைத்த உணர்வு உறுத்தும்.
நம்மிடையே அப்படி ஒருவர் நடமாடிக்கொண்டிருக்கிறார்.
உலகையே சுற்றிய அனுபவம்..வயதைத்தாண்டிய உற்சாகம்.. கொடுத்துக்கொண்டேயிருக்கும் கைகள்..
தொழுதுகொண்டேயிருக்கும் உள்ளம்..
சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் மாணவர்..
பச்சைரோஜா இதழின் சிறப்பாசிரியர்...
மார்க்க அறிவில் அறிவியல் செலுத்திப்பார்க்கும் சமூக விஞ்ஞானி.
எங்கேனும் உதவிகள் தேவைப்படுமெனில் ஓடோடி நிற்கும் தாய்மை.
எனக்குத்தெரிந்து 1000 பள்ளிக்குழந்தைகளுக்கு மேல் புத்தாடை பரிசளித்திருக்கிறார்.பல அரசுப்பள்ளிகளுக்கு நல்ல குடிநீர் கருவிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஒரு தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.
எப்போதும் சிரிக்கும் முகம்.
பெரிய குடும்பத்தின் தலைவர்.
ஒரு ஊரின் தலைவர்..
அரசுப்பள்ளியின் பெற்றோர்கழக தலைவர்...
சொல்லிக்கொண்டே போகலாம் சக்தி....
அவரின் சேமிப்புகள் வியக்க வைக்கிறது.
175 நாடுகளின் பணத்தாள்கள்..அடுக்கடுக்காய் அஞ்சல் வில்லைகள்.
ஆதிகாலம் தொடங்கி,அந்நிய நாடுகளின் நாணயக்குவியல்கள்..
அத்தனையும் வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தால் இந்த பதிவு இருந்திருக்காது.
எல்லாப்பள்ளிக்கும் தூக்கிச்சுமக்கிறார்..தமிழனின் வரலாறு சொல்லி பூரிக்கவைக்கிறார்.
இது புகழுக்கோ,பொருளுக்கோ அல்ல.
அருளினால் உருளும் சக்கரம்.
நம் கண் முன்னே காணும் பொக்கிஷம்.
கடலூரின் நிவாரணப்பணிகளுக்காக பொருளும் கொடுத்து,சுமந்த தோள்கள் மரியாதை செய்யப்பட வேண்டியவை.
அவரின் லட்சியங்களும், கருணைக்கரங்களும் நீண்டநாள் வாழத்தகுந்தவை.
நனிநட்பாய் எனக்குள்ளும் இருப்பவர்..
காசிம் புதுப்பேட்டை தந்த மாசில் மனிதன்.
UNWOஅமைப்பின் புதுகை ஒருங்கிணைப்பாளர்,
புதுக்கோட்டை மாவட்ட நாணயவியல் சங்க நிறுவனர்&தலைவர்...
இன்னும் இன்னுமாய்...
எஸ்.டி.பஷீர் அலி அவர்கள்.
இப்படி ஒரு பதிவுக்காய்
என்னை கோபிக்கலாம்,சிறு புன்னகையுடன் கடந்து போகலாம், சொல்லிய யாவையும் அறுதியிட்டு மறுக்கலாம்...
ஆனாலும் இதை நான் சொல்லியே ஆக வேண்டும்..
"எல்லாம் அவன் செயல்"
அன்புடன்,
செல்வக்குமார்.

கண்ணாடி டீச்சரும்,மலேயாக்காரர் வீடும்..

அன்பின் சக்திக்கு,
             எண்களாலும் கோடுகளாலும் நிறைந்த கல்வியில் நீ ஆழ்ந்து போனதை உன் பல்கலைகழகத்தின் முதலாய் வந்ததில் அறிந்தேன்.மகிழ்ச்சி.

சக்தி,
வேடிக்கை பார்ப்பதிலும் வெளியூர் பயணங்களிலும் நான் புது மூச்சு பெறுவது நீ அறிவாய்.

சில வேடிக்கைப்பொழுதுகள் எதையேனும் கிளறிவிட்டுப்போவதும் உண்டு.

என் பள்ளிப்பிராயத்தில் ஆசிரியர்களின் பெயரைக்காட்டிலும் அடைமொழிகளால் அறியப்படுவார்கள்.

மூன்றாம் வகுப்பு எடுத்த ஆசிரியையின் பெயரை மறந்துவிட்டேன்.
ஆயினும் அவரை இன்றும் நினைவில் வைத்திருப்பது கண்ணாடி டீச்சர் என்னும் அடைமொழி..

மற்றொன்றாய், அன்றைய மலேசியாவிலிருந்து சொந்த ஊர் வந்துசேர்ந்த குடும்பம்.பெயர்தெரியா அவர்களின் வீடு மலேயாக்காரர்வீடு என்றே அழைக்கப்பட்டது.

என் சமீப பார்வையை
நீயும் கொஞ்சம் கவனி..

அது குழந்தைகள் கூட்டமென்றாலும்,பெரியவர் கூட்டமென்றாலும் பத்து பேரில் குறைந்தது மூன்று பேர் மூக்குக்கண்ணாடி அணிந்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் எந்த கடைக்கோடி கிராமத்திலும் வெளிநாடுகளில் வேலைசெய்பவர்கள் வீடு இருக்கிறது.

எந்த வளர்ச்சியை கொண்டாடுவது?

பிறந்த குழந்தைக்கும் கண்ணாடி வேண்டிய நிலையில் தான் இருக்கிறது மருத்துவ வளர்ச்சி.

"நோய்நாடி நோய்முதல் நாடி" காணாத மருத்துவம் என்பது சவத்தை சிங்காரிக்கும் அவலமில்லையா?

சொல்லொண்ணா மனிததேவைகள் இங்கே கிடக்க கழிவறை பெருக்கவும்,ஒட்டகங்கள் மேய்ப்பதற்கும் என் மக்கள் விமானங்களில் பறப்பதை எப்படி டாடா சொல்லி ரசிக்க?

கிட்டத்தட்ட அகதியின் வாழ்க்கையில் வரும் அந்நியச்செலவாணியில் இந்தியா வளர்கிறது என்றால் அது வளர்ச்சியல்ல ..வீக்கம்.

உலகுக்கு வழிகாட்டிய நம் தேசத்து ஞானிகள் உள்ளூரை ஏனோ மறந்துபோனார்கள்..

சர்க்கரைநோய் இல்லாத சகமனிதனை காண்பது அரிதாய் இருக்கிறது..

இது சாதனையா?

குடித்துவீழவும்,நோய்வந்து சாகவுமே சபிக்கப்பட்டவர்களா நாம்?

தரவுகளுக்காய் நான் நேரங்கள் செலவழிப்பதில்லை.
கைப்புண்களுக்கு கண்ணாடி தேவையா சக்தி?

உலகின் முன்னேறிய நாடுகளுடன் ஆயிரம் கொள்கை வேறுபாடுகள் நமக்கு இருக்கலாம்..ஆனால் அவர்கள் தன் நாட்டுமக்களை காத்து,நேசிக்கும் நேர்த்தியை கேட்கும் பொழுதெல்லாம் வெட்கிச்சாகவேண்டியிருக்கிறது.

நம் நாடு ஒரு தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளியின் நிலையில் தான் இருக்கிறது சக்தி..

உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடு,வேற்றுமையில் ஒற்றுமை,மதச்சார்பற்ற நாடு..
எல்லாம் சரிதான் ..
மக்கள்..?

தேர்தலை சிறப்பாக நடத்தும் நாம் தேர்ந்தெடுப்பதில் தோற்றுப்போகிறோமா..

தூர்வாரப்பட வேண்டியது ஏரிகள் மட்டுமல்ல ..

ஏங்கிக்கொண்டிருக்கும் நாங்கள் மட்டுமல்ல...உன் போன்ற இளைய சக்திகளும் சேர்ந்து செய்ய பல இருக்கிறது..

கனவுகள் விதைக்கிறேன்..
பயிராக வேண்டும்.

உணவுப்பழக்கம் மீட்டெடுக்கபட,
தம் மக்கள் நேசிக்கும் அரசு,
நோய் முதல்நாடி முடிக்கும் மருத்துவம்,
கவலைப்பட வைக்காத கல்வி,
முகம் சுழிக்க வைக்கா கலை..
ஏழைமக்கள் விரல்பிடிக்கும் விஞ்ஞானம்.

யாவும் போராடிப்பெற வேண்டியதில்லை..
புரையோடிப்போன மனங்கள் மாறினால்..
வெளிச்சம் வெகு தொலைவில் இல்லை..

கனவுகளுடன்,
செல்வக்குமார்.

திங்கள், 14 டிசம்பர், 2015

மழை சூழ் மாநகர் ....

கேன்களில் குடிநீர்
தேடியலைந்தோம்
வீட்டுக்குள்
பெரு மழை

××××××

படகினில் தொலையும்
அகதியின் நிலையை
அறிந்திட வந்த மழை

×××××××××

காதலர் புரண்டிடும்
கடற்கரை மணலை
கழுவிப்போன மழை

×××××××××

பாம்புகள் சூழ
பரிசல் பயணம்
பார்த்திட வைத்த மழை

×××××××××

என்ன விலையிலும்
எதையும் விற்கலாம்.
பொல்லார்க்கும்
ஒரு நாளில்
பொசுக்கென
பெய்த மழை

××××××××

சுதந்திர நாடு
சுழன்றிடும் அழகை
சொல்லாமல்
சொன்ன மழை

××××××××

காணுமிடங்களில்
கட்டட மாயங்கள்
கணக்கிட வந்த மழை

×××××××××

தூண்டில் இரையென
உணவுப்பைகளை
வாங்கிட வைத்த மழை

××××××××××

இயற்கையின் பிழையென்று
என்னென்ன சொன்னாலும்,,

பொய்யன்று

பெய்த மழை..

××××××

வழியத்தொடங்கும்
வந்த மழையில்

வல்லரசுக்கனவுகள்
ஒதுங்கிக்கிடக்கலாம்.

தகவல் தாருங்கள்

தேர்தல் வருகிறது.

-மீரா.செல்வக்குமார்.

சனி, 12 டிசம்பர், 2015

கடலூரே..கடலூரே...

அன்பின் சக்திக்கு,
                                    கல்விக்கூடங்கள் திறக்கப்போகும் நாட்கள் தெரிந்துபோய் இருக்கிறது.

மழையின் சுமையினை இறக்கிவைத்துவிட்டு மனப்பாடச்சுமையினை தூக்கத் தயாராயிருப்பாய்.

தலையெழுத்துத்தான்.

முகப்புத்தகங்களும்,முன்னேர் சமூகமும் போட்டிபோட்டுக்கொண்டு உதவிக்கென கிளம்பிய நாளில் நானும் ஒரு களப்பணியாளனாக கடலூர் சென்று வந்தேன்.

அந்த அனுபவங்களை கொட்டிவிட முடியாமல் இத்தனை நாள் உள்ளேயே வைத்திருந்தேன்.

எத்தனை நாள் தூக்கிச்சுமக்க?

பள்ளிப்பிள்ளைகள் சேர்த்துவைத்த காசு,பெயர் தெரியாத பெண்கள் தந்த ஆடைகள்,ஒரு மெழுகுவர்த்தி தயாரிக்கும் தம்பி அள்ளித்தந்த ஒளிச்சுடர்கள்.  இன்னும் இன்னுமாய்
நெகிழ்வும் சொல்லொண்ணா உணர்வுகளுடன் கிளம்பிய பயணம்.

கடலூர் மாவட்ட எல்லை தொடங்கியதும் பரிதாப நிலை மாறி பய உணர்ச்சியில் சூழ்ந்து போனது.

யாரையும் நம்பாமல் ஒரு கடைக்கோடி கிராமத்துக்கு நேரில் சென்று கொடுத்தாகவேண்டும் என்ற ஆவல் அழைத்துக்கொண்டு போனது எங்கெல்லாமோ.

பறந்த மனிதக்கூட்டம்,பதறிப்போன நண்பர்கள் அச்சம்,சிதறிப்போன பொருட்கள்.நெகிழ்ச்சியாய்
பயணம் யாருக்கும் மகிழ்ச்சியாய் முடிந்ததாய் பதிவுகள் அதிகமில்லை...எனக்கும் தான்.

ஒரு நாளில் கண்டதைச்சொல்லவே உனக்கிந்த கடிதம்.

சக்தி...

கடலூர் எந்தவித இயற்கை வளங்களும் இல்லாத பகுதியல்ல.
பணப்பயிர்கள் நிறைந்த பகுதிதான்.
நீராதாரங்களும் ஏரிகளும்,குளங்களும் கொண்ட மாவட்டம் தான்.
படித்த ,பண்பட்ட ஏராளமான அறிவாளிகளை வார்த்தெடுத்த மண்தான்.

என்ன நடந்திருக்கிறது கடலூரில்.

கனமழை பெய்திருக்கிறது.
ஏரி உடைந்திருக்கிறது.
மனிதக்காவுகள் அரங்கேறியிருக்கிறது.
மக்கள் கூட்டம் நிவாரணங்களுக்காய் வீடுவிட்டு வீதி வந்து காத்துக்கிடக்கிறது.

எத்தனை வருடங்கள் இப்படி காத்திருப்பார்கள்?
எத்தனை மழைக்கு வீட்டைப்பறிகொடுப்பார்கள்?

வரும் இடர்க்காலமெல்லாம் நிவாரண பொருட்கள் தேவைப்படுவதும்,கொண்டு ஓடுவதும் உவப்பாய் இருக்கிறதா இருவருக்கும்?

கடலூருக்கு மழை என்ன புதிதாய் வருகிறதா ஒவ்வொரு வருடமும்?
"வருமுன் காவாதான் வாழ்க்கை" தெரியாமல் யார் செய்தது?

உழைக்கத்துடிக்கும்,கள்ளமில்லா வெள்ளை உள்ள மனிதர்களை யார் குலைத்தது?

தட்டி எறிந்துபோன தானே புயலுக்குப்பின்னேனும் தூங்கிவிழித்திருக்க வேண்டாமா மாவட்டமும்,மதிநிறைந்த புத்திசாலிகளும்...

ஒரு மழைக்கும் தாங்காத குண்டுகுழிகளை சாலையெனப்போட்டவன் சட்டை பிடித்திருக்க வேண்டாமா?

ஏரிகளில் மண்ணெடுக்காமல் வாய்காளில் மண் போட்டவர்களை மண்டியிட வைத்திருக்க வேண்டாமா மக்கள் கூட்டம்?

எங்கள் சகோதரக்கூட்டமே...

வருவது அன்பின் நிவாரணம் தான்..
நித்தம் ரணமான வாழ்க்கைக்கு இந்த நிவாரணங்கள் மட்டும் போதுமா?

வழங்கக்காத்திருந்தாலும்,வாங்கக்கூசும் மனங்களுக்கு எந்த நிவாரணம் மருந்து போடும்?

கடலூரில் இல்லாத மனிதவளமா?
சர்வ வல்லமை பெற்ற மக்கள்.

அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன?
அரிசியும் பருப்பும் கொடுத்துவிட்டு அடுத்த மழைக்கும்,தேர்தலுக்கும் தான் தேவையா மக்கள்?

என் கம்யூனிஸ தோழர்களே...
எங்கே போனீர்கள்?
சூரியன் கொதித்த நாட்களில் எங்கே ஒதுங்கினீர்கள்?

மழை வருமெனத்தெரியாதா?மக்கள் ஒவ்வொரு முறையும் சாவது புரியாதா?
அறியாமை அகற்றி மக்கள் மனதில் பாதுகாப்புணர்ச்சி ஊட்ட மறந்துவிட்டு என்ன தேவையிருக்கிறது கம்யூனிஸ அரசியலில்.?

தொலையட்டும்...
இப்போதேனும் செயல்படுங்கள்...

ஓட்டுக்குப்பணம் கொடுக்க துல்லிய கணக்கு எடுப்போரே..
மனசாட்சியுடன் கணக்கெடுங்கள்..
உண்மையில் பாதிதோர்க்கு கரம் கொடுங்கள்.
எங்கிருந்தெல்லாமோ

உதவிகளுடன்  வரும் மனிதர்களிடம் கண்ணியம் காட்டுங்கள்.

மழைமுடிந்த நாட்களில் கூடிப்பேசுங்கள்..
அடுத்த மழைக்குள்ளேனும் பலப்படுத்துங்கள் ஏரிகளையும் சாலைகளையும்..

கடலூருக்கு நிவாரணம் தேவைப்படுவது இந்த வருடமே கடைசியாய் இருக்கட்டும்.

கொண்டுவர எங்களுக்கு வருத்தமில்லை..
வாங்கவேண்டிய நிலையிலேயே நீங்கள் இருப்பது உங்களுக்கு சம்மதமென்றால்.

உன் யோசனைகளையும் சொல் சக்தி..
அன்புடன்,
செல்வக்குமார்.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

திரைகடல் தாண்டி...

அன்பின் சக்திக்கு,
கொதித்த உலையாய் மழையின் தாக்கம் ,உணர்ச்சிகளின் தெளிப்பால் கொஞ்சம் அடங்குதல் உணர்கிறேன்.
இணையம் அதன் மாமுல் வாழ்க்கைக்கு கொஞ்சமாய் திரும்புகிறது.
சமூகப்பாவலன்(?)சிம்பு அதற்கு கட்டியம் கூறியிருக்கிறான்.

விட்டுவிடலாம் சக்தி..
பிளீச்சிங் பவுடர் கொஞ்சம் அதிகமாய் தெளிக்கப்படவேண்டியவை அவர்கள் பகுதிகள்.
ஒரு நல்ல கடிதத்தை உனக்கு எழுத நினைத்தால் விடாது துரத்துகிறது கசப்பு..
"ஆமைகள் முட்டைகளை கரையில் புதைத்துவிட்டு " நினைவுச்சூட்டில் அடைகாப்பதாய் சொல்வார்கள்.
அறிவியலிலும்,நடைமுறையிலும் அது சாத்தியமா அல்லது உண்மையா என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இந்த அடைமழை காலங்களில்,
திரைகடலோடிய நம் சொந்தங்கள் பதைத்த பரிதவிப்பு ...
இணையத்தின் வழியே சிந்திய கண்ணீர்..
நீட்டிய உதவிக்கரங்கள்..
அடையாளம் அதிகமின்றிப்போனாலும்,வணங்கத்தக்கவை.
பல பெயர்களை என்னால் உனக்குச்சொல்ல முடியும்..
சிலரையேனும் உனக்கான கடிதங்களில் அறிமுகப்படுத்த விழைகிறேன்.
அன்பின் நண்பர் விசுவாசம்.
அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் கணக்காயராக பணியாற்றிவரும் தமிழர்.
அவரின் வாழ்க்கை வரலாற்றை உன்னிடம் சொல்ல வரவில்லை.
ஆனால் ,
வாழ்க்கை என்னும் வலிய நதி எப்படியெல்லாம் புரட்டிப்போடும் எல்லாவற்றையும் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்.
எட்டுபிள்ளைகளில் இளைய பிள்ளையாய்..
நான்கு வயதில் தந்தையை இழந்து.
எட்டு பிள்ளை பெற்றதாய் ஊருக்கே தாயாகும் தருணங்கள்...
சகோதரிகளின் தாய்மையில் வளரும் பருவங்கள்...
இது திரைப்படத்தின் கதையல்ல சக்தி...
ஏழு பிள்ளை பெற்ற நல்ல தங்காள் எல்லாரோடும் கிணற்றில் விழ...
நல்ல தாய் பெற்ற பிள்ளைகள்...
நாடே போற்ற நடந்த கதை..
ஆழித்துரும்பென அலைந்த வாழ்க்கை..
ஒவ்வொரு கனுவிலும் போராட்டம்.
"இடுக்கண் வருங்கால் நகைத்தே"
எதிலும் கொஞ்சம் நகைச்சுவை.
வேலூர்,சென்னை,பெங்களூரு,மும்பை,
அரபுநாடுகள்,
ஓடி ஓடித்திரியும் நாட்கள் அமெரிக்காவில் நிலைக்கொள்கிறது.
"காவியத்தில் நாடகத்தில் காதலென்றால் களித்திடுவார்"
"அவள் அழகாய் இல்லாததால் எனக்கு தங்கையானாள்"
காதல் என்னும் உணர்வினை நாம் கொண்டாடும் அழகு இது.
ஈழத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஷெல் அடித்த பொழுதுகளில் பெற்றோர் இழந்த , ஈழத்து இளவரசியை மணக்கிறார்.
விசு வின் எல்லாச்சேட்டைகளுக்கும் அனுசரிக்கும் இரண்டாம் தாயாய்..
அடக்குவதுபோல் அவர் நடிப்பதும்,,அடங்குவதுபோல் இவர் அளப்பதிலும்
எழிலாய் இருக்கிறது ....காட்சிகள்.
அவர் சொல்வது போலவே
இந்திய இலங்கை கூட்டுத்தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள்.
மருத்துவப்பணியில் மனைவி.
யேல் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வாங்கும் மகள்.
எல்லா விதங்களிலும், கருணையிலும் தந்தைக்குப் போட்டியாய் சின்னவள்,

”ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு”

பையும் நிறையும் வாழ்க்கை.
தம் வீடு,தம் மக்கள்..
அமெரிக்காவின் அட்டைவீடுகளில் முடங்கிப்போய் இருக்கலாம்...
முடியவில்லை சக்தி...
தமிழ், தமிழ் மீது கொண்ட நேசம் ..
20 வருடங்களுக்குப்பிறகு பேச வைக்கிறது,,எழுத வைக்கிறது..
முகநூலிலும்,வலைப்பூவிலும் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறார்.
சுருண்டு போய் இருக்கும் அட்டைப்பூச்சியை எழுத்து கொண்டு இழுத்துப் போகிறார்.
எத்தனை ஆவேசம்..
எத்தனை கருணை..
இங்கிருந்து படித்துவிட்டு ஏன் அமெரிக்காவில் இருக்கிறார்?
எவன் கொடுப்பான் இங்கே பாதுகாப்பான வாழ்க்கை?
அங்கேயே தான் இருக்க வேண்டும்.
உலகின் எந்த மூலையில் இருக்கின்றாய் என்பதல்ல ...
என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்பதே இன்றைய உலகம்..
விசு,
நன்றே செய்கிறார்.
அந்த ஆவேசமும்,வேதனையும்,எதைக்கொண்டேனும் இழுத்துப்போக வேண்டாமா தடம் புரண்ட தமிழகத்தேரை என்னும் துடிப்பும் சீர்தூக்க வேண்டியவை.
கருத்துப்போன தமிழக முகத்துக்கு "சகாயம்" செய்ய வருவாரா யாரேனும் என்ற குரல் கடல் பல தாண்டி கேட்க ஆரம்பித்து இருக்கிறது.
எழுத்துச்சூரியன்கள்,கருத்துப்பேழைகள்,வெறும் வாயால் விண்ணையும் சாடும் பேனாப்பித்தர்கள்
மழைக்காலங்களில் பேனாவை மூடிவிட்டு வெள்ளத்தை வேடிக்கை பார்க்கப்போனவர்கள்,
குளிருக்கு இதமாய் கலவிக்கவிதை எழுதியவர்கள் மத்தியில்,
தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் விசுவாசத்தின் பால் விசுவாசம் கொள்ளவேண்டும் சக்தி..
நாம் மனிதர்கள்.
அன்புடன்,
செல்வக்குமார்.

வியாழன், 10 டிசம்பர், 2015

இன்னுமா ...?

அன்பின் சக்திக்கு,
நீண்ட கால கல்விக்கூட விடுப்பு உன்னை சோம்பல் படுத்தியிருக்கும்.
மழைக்கால பகல்வேளைகளில் சில புத்தகங்களேனும் படித்திருப்பாய் என நம்புகிறேன்.
மழை விட்டாலும் தூவானம் விடாத கதை இன்னும் இருக்கிறது.
எந்த ஒன்றும் ஒரே இடத்தில் குவியும் போது அது ஊழலுக்கும்,ஆபத்துக்கும் வழிவகுக்கும் என்பார்கள்.
சென்னையின் சீரழிவுக்கும் அது ஒரு காரணமாய்த்தான் எண்ணத்தோன்றுகிறது.
இயற்கையின் பேரிடருக்கு இட,நேர பேதங்கள் இருக்க முடியாது.
ஆனாலும் பாதிப்புகளை தவிர்க்கமுடியாவிட்டாலும் கணிசமாய் குறைத்திருக்கலாம்.
தமிழகத்தின் வரைபடத்தில் சென்னையின் இடத்தைப்பார்த்தாயெனில் அது தமிழகத்தின் தலைநகராவதற்கு எந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது எனப்புரியவில்லை.
ஆங்கிலேயன் விட்டுப்போன காலடித்தடங்கள் அங்கே இன்னும் பதிந்து போயிருப்பதாலா?
சென்னையின் எல்லா வசதிகளையும் கொண்ட, இயற்கையின் சாதாரண பேரிடர்கள் அண்டமுடியாத இடங்கள் ,அநேகம் உண்டு தமிழகத்தில்.
பாரம்பரியம்,மரபு என பல காரணங்கள் காட்டி,
சென்னையின் பெருமையை நான் குலைப்பதாக எண்ணிவிடாதே..
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் தான்...
அதற்காக உடலின் மற்ற பாகங்களை உதாசீனப்படுத்துவதா?
மண்டை கனமாய் இருக்கும் தலைநகரின் அவலத்தையும் தான் அவிழ்த்துக்காட்டி விட்டதே இந்த மழை...
ஆற்றைப்புதைத்து கட்டட விளைச்சல்.
ஏரிகளுக்குள்ளே வீட்டுமனைக்கொடிகள்..
மருத்துவமனை பிணங்களை மறைத்த கொடூரம்.
நாளிதழ்களும்,ஊடகங்களும் இன்னும் சென்னையின் பாதிப்புகளைச் சரியாக சொல்லவில்லையோ என்னும் பதற்றம் விலகியபாடில்லை.
வடியத்தொடங்கும் தண்ணீர் இன்னும் காட்டலாம் இறந்துபோன பலவற்றை.
எதனால் வந்தது இத்தனையும்?
ஒரு சாமான்யனாய் எனக்குத்தெரிந்து...
சென்னை என்னும் மோகம்..
அரசுகளும்,அதிகாரிகளும் திட்டமிடாத தொலைதூரப்பார்வையும் தான் காரணம்.
ஒரு கடலோர நகரில் எதற்கு இத்தனை மனித சஞ்சாரம்?
ஏரிகளின் நகரமாய் இருந்த சென்னை ஏன் சேரிகளின் குப்பையாய் போனது?
அரசுக்கும் மற்ற அனைத்துக்கும் ஏன் சென்னை மட்டும் மையமாய் போனது?
ஒரு மழைக்கு சிதறிப்போய் ஒரு தெருவிலிருந்து மற்ற தெருவிற்குப் போக முடியாத அவலச்சூழல்.
ஒரு ஊருக்கு இது சகித்துக்கொள்வதாய் இருக்கலாம்.
மாநிலத்தின் தலைநகருக்கு சரியா?
சாதாரண மனிதனின் சான்றிதழ்களையும்,ஆவணங்களையும் அள்ளிப்போன மழை..
இன்னும் கொஞ்சம் வலுத்து அரசின் மடியில் கைவைத்திருந்தால் என்ன ஆவது?
சிறுமிகளின் பாண்டி விளையாட்டுக்கட்டமாய் சென்னைக்குள்ளேயே சுற்றிக்கொண்டு  வெளியே செல்லவே முடியாத அளவுக்கு ஒரு தலைநகரம் இருக்குமெனில் அது சுதந்திர நாட்டின் அவமானம்.
சக்தி,
நான் துக்ளக் அல்ல.
தலைநகரைப் பெயர்த்து எடுத்துப்போகச்சொல்ல..
விஞ்ஞான ,தகவல் தொழில்நுட்ப புரட்சிகாலத்தில் இருக்கிறோம்.
ஆனால் அவற்றை சரியாகப்பயன்படுத்தத் தெரிந்திருக்கின்றோமா என்பதே கேள்வி..
நம் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன...அரசின் ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலகத்தையும் ஏன் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்க வைக்கக்கூடாது?
சென்னையின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் அரசுப்பணியாளர்கள் இருப்பார்கள்.
மாநிலம் முழுவதும் அவர்கள் பரவும்போது...தலைநகர் பாரம் கொஞ்சம் குறைவதுடன் மாவட்டங்கள் கொஞ்சம் வளம் பெறாதா?
ஓய்வுபெறும் ஒவ்வொரு அரசு ஊழியரும் ஓய்வூதியத்தின் ஆரம்பப்பணிகளுக்காக சென்னைப்பயணம் என்பது தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது..
வாழ்க்கை முழுசும் உழைத்த அவர்களை ஓய்வின் போதுமா பிழியவேண்டும்?
மாநிலத்தின் எந்தப்பகுதியிலிருந்தும் எளிதாய் அடையும் ஒரு பகுதிக்கேனும் மாற்றினால் குறைந்து போகுமா கவுரவம்?
வனத்துறை தலைமையை சென்னையில் வைத்து என்ன பயன்..?
தகவல் பரிமாற்றத்திற்கும்,முடிவெடுப்பதற்கும் முகங்கள் தேவையில்லை ,இணையம் போதும் என்கிற காலம்..
காணொளிக்காட்சிகளின் ஆட்சியில் எல்லாம் சுலபமாய் செய்யலாம்.
ஆயிரம் முறை கூவத்தைச் சுத்தம் செய்தாலும் மனிதக்கூட்டம் மண்டும் போது...
கங்கைக்கும் புனிதம் சாத்தியமல்ல.
நீள்கிறது சக்தி....
நிறுத்திக்கொள்கிறேன்.
புரிந்து செயல்கள் நடக்குமெனில் ..
புலம்பெயர்தல் தவிர்க்கலாம்.
என் சிந்தையில் கோளாறுகள் தெரிந்தால் நீயும் எழுது...
அன்புடன்.
செல்வக்குமார்.

புதன், 9 டிசம்பர், 2015

தொடர்பு எல்லைக்குள்..தொலைந்து போனவர்கள்...

அன்பின் சக்திக்கு,
அனுபங்களை உனக்கு எழுத ஆரம்பித்ததிலிருந்து,சந்திக்கும் எல்லாமே நீயும் நானும் சிந்திக்க வேண்டியவைகளாகவே நடந்துகொண்டிருக்கிறது.

பெருமழை தந்த விளைவுகளில் தலையாயதாய் நம்மை பாதித்தது தகவல் தொடர்பே.
நம் முன்னோர்கள் இறைவழிபாட்டிலும் சமூக அக்கறை கொண்டார்கள்.ஆலயக்கும்பங்களில் தானியங்கள் வைத்தனர்.வீட்டுக்கோலங்களிலும் எறும்புகளுக்கு இரை வைத்தனர்.

ரமணன்கள் பிறக்காத காலங்களில் வெட்டப்பட்ட கால்வாய்கள்,கட்டப்பட்ட அணைகள் யாவும் இடர்காலங்களைத்தாண்டி வலிமை கொண்டிருந்தன..
கல்லணை போதுமே காணும் சாட்சியாய்.

வளர்ந்துவிட்ட அறிவியல் யுகத்தில் எத்தனை மாற்றங்கள் கண்டுவிட்டோம்.சாதாரண காலங்களில் அறிவியலின் அத்தனை சுகங்களையும் அனுபவித்துப் பழகிவிட்டோம்.

கிலுகிலுப்பை பிடித்து விளையாடி ஒலிகளின் வகைகள் அறியவேண்டிய குழந்தைகளின் கைகளில் கைபேசி கொடுத்து பழகிவிட்டோம்.

நீளும் பட்டியல் நிறுத்தி விஷயத்திற்கு வருகிறேன்..
      
தகவல் தொடர்பு என்பது இன்றைய யுகத்தில் தவிர்க்கப்பட முடியாதது.
   
பல்லாண்டுகள் நடந்த ஆட்சியை மாற்றும் அளவிற்கு வலிமையும்,ஊழலும் நிறைந்த துறையாக இருக்கும் துறை.
 
ஊழல் என்பது ஊறிப்போன நாட்டில் எப்படியும் தொலைந்து போகட்டும்.

ஊழிகாலங்களில் தகவல்தொடர்பு முறிந்து மாயம் என்ன?

பரதேசிகள்.....

மட்டைப்பந்து விளையாட்டுக்கு மாற்றுவீரர்கள் வைத்திருக்கிறார்கள்.
நாசமாய்ப்போன அரசியலில் மாற்று வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

அத்தியாவசியமாய் மாறிப்போன தகவல் தொடர்பிற்கு ஏனில்லாமல் போனது மாற்று ஏற்பாடு?

சக்தி,
  வந்தது. நிலநடுக்கமோ,சுனாமியோ அல்ல..
மழை..மழை..மழை மட்டுமே...அளவில் கொஞ்சம் கூடுதலாய்..

∆இலவச பேசும் நேரம்
∆இலவச காலர் டியூன்கள்
∆அவளிடம் பேசுங்கள்...

இன்னும் இன்னும்...

வாழும் காலங்களில் வலைவிரித்து காசு புடுங்கிவிட்டு.
சிரமப்படும் காலங்களில் எங்கே தொலைந்தீர்கள்..

உடல்களை விற்று வயிறு வளர்க்கும் எங்கள் பெண்கள் பட்டினி கிடந்து பணம் அனுப்பி இருக்கிறார்களே...
அவர்களினும் நீங்கள் கீழோர்.

நாம் பேசிய காசுகளில் வயிறு வளர்த்து,உயிர் போன காலங்களில் ஒளிந்து கொண்டவர்கள்...

இனி வேறு வேலை செய்து பிழைக்கட்டும்.

ஆயிரம் தொழில் நுட்ப காரணங்கள் அவர்கள் சொல்லலாம்.

ஏற்க முடியாது எதுவும்.

இந்த நாட்களில் தகவல் தொடர்பின்றி எத்தனை சாவுகள் நடந்திருக்கும்..
உறவுகளிடம் உள்ளது சொல்லாமல் எத்தனை மன வேதனைகள்..

இதற்கெல்லாம் என்ன விலை.?

மேலும் சக்தி...
இந்திய நாட்டின் எல்லைப்புறங்களிலும் இப்படித்தான் இருக்கும் இவர்களின் சேவையெனில் ...? சிந்திக்கவும் முடியவில்லை.

எளிதில் கடந்துவிட முடியாது இந்த பிழைகளை...
அரசும்,ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும்.

சக்தி,
உனக்கு என் எண்ணங்களைச்சொல்கிகின்றேன்.

இப்படியே நாம் இருந்தோமானால் ...
இந்த பதிவை பத்திரப்படுத்தி வை.
உன் காலங்களில் உன் பிள்ளைகளுக்கும் அனுப்ப வேண்டியிருக்கும்..

அன்புடன்,
செல்வக்குமார்.