சனி, 12 டிசம்பர், 2015

கடலூரே..கடலூரே...

அன்பின் சக்திக்கு,
                                    கல்விக்கூடங்கள் திறக்கப்போகும் நாட்கள் தெரிந்துபோய் இருக்கிறது.

மழையின் சுமையினை இறக்கிவைத்துவிட்டு மனப்பாடச்சுமையினை தூக்கத் தயாராயிருப்பாய்.

தலையெழுத்துத்தான்.

முகப்புத்தகங்களும்,முன்னேர் சமூகமும் போட்டிபோட்டுக்கொண்டு உதவிக்கென கிளம்பிய நாளில் நானும் ஒரு களப்பணியாளனாக கடலூர் சென்று வந்தேன்.

அந்த அனுபவங்களை கொட்டிவிட முடியாமல் இத்தனை நாள் உள்ளேயே வைத்திருந்தேன்.

எத்தனை நாள் தூக்கிச்சுமக்க?

பள்ளிப்பிள்ளைகள் சேர்த்துவைத்த காசு,பெயர் தெரியாத பெண்கள் தந்த ஆடைகள்,ஒரு மெழுகுவர்த்தி தயாரிக்கும் தம்பி அள்ளித்தந்த ஒளிச்சுடர்கள்.  இன்னும் இன்னுமாய்
நெகிழ்வும் சொல்லொண்ணா உணர்வுகளுடன் கிளம்பிய பயணம்.

கடலூர் மாவட்ட எல்லை தொடங்கியதும் பரிதாப நிலை மாறி பய உணர்ச்சியில் சூழ்ந்து போனது.

யாரையும் நம்பாமல் ஒரு கடைக்கோடி கிராமத்துக்கு நேரில் சென்று கொடுத்தாகவேண்டும் என்ற ஆவல் அழைத்துக்கொண்டு போனது எங்கெல்லாமோ.

பறந்த மனிதக்கூட்டம்,பதறிப்போன நண்பர்கள் அச்சம்,சிதறிப்போன பொருட்கள்.நெகிழ்ச்சியாய்
பயணம் யாருக்கும் மகிழ்ச்சியாய் முடிந்ததாய் பதிவுகள் அதிகமில்லை...எனக்கும் தான்.

ஒரு நாளில் கண்டதைச்சொல்லவே உனக்கிந்த கடிதம்.

சக்தி...

கடலூர் எந்தவித இயற்கை வளங்களும் இல்லாத பகுதியல்ல.
பணப்பயிர்கள் நிறைந்த பகுதிதான்.
நீராதாரங்களும் ஏரிகளும்,குளங்களும் கொண்ட மாவட்டம் தான்.
படித்த ,பண்பட்ட ஏராளமான அறிவாளிகளை வார்த்தெடுத்த மண்தான்.

என்ன நடந்திருக்கிறது கடலூரில்.

கனமழை பெய்திருக்கிறது.
ஏரி உடைந்திருக்கிறது.
மனிதக்காவுகள் அரங்கேறியிருக்கிறது.
மக்கள் கூட்டம் நிவாரணங்களுக்காய் வீடுவிட்டு வீதி வந்து காத்துக்கிடக்கிறது.

எத்தனை வருடங்கள் இப்படி காத்திருப்பார்கள்?
எத்தனை மழைக்கு வீட்டைப்பறிகொடுப்பார்கள்?

வரும் இடர்க்காலமெல்லாம் நிவாரண பொருட்கள் தேவைப்படுவதும்,கொண்டு ஓடுவதும் உவப்பாய் இருக்கிறதா இருவருக்கும்?

கடலூருக்கு மழை என்ன புதிதாய் வருகிறதா ஒவ்வொரு வருடமும்?
"வருமுன் காவாதான் வாழ்க்கை" தெரியாமல் யார் செய்தது?

உழைக்கத்துடிக்கும்,கள்ளமில்லா வெள்ளை உள்ள மனிதர்களை யார் குலைத்தது?

தட்டி எறிந்துபோன தானே புயலுக்குப்பின்னேனும் தூங்கிவிழித்திருக்க வேண்டாமா மாவட்டமும்,மதிநிறைந்த புத்திசாலிகளும்...

ஒரு மழைக்கும் தாங்காத குண்டுகுழிகளை சாலையெனப்போட்டவன் சட்டை பிடித்திருக்க வேண்டாமா?

ஏரிகளில் மண்ணெடுக்காமல் வாய்காளில் மண் போட்டவர்களை மண்டியிட வைத்திருக்க வேண்டாமா மக்கள் கூட்டம்?

எங்கள் சகோதரக்கூட்டமே...

வருவது அன்பின் நிவாரணம் தான்..
நித்தம் ரணமான வாழ்க்கைக்கு இந்த நிவாரணங்கள் மட்டும் போதுமா?

வழங்கக்காத்திருந்தாலும்,வாங்கக்கூசும் மனங்களுக்கு எந்த நிவாரணம் மருந்து போடும்?

கடலூரில் இல்லாத மனிதவளமா?
சர்வ வல்லமை பெற்ற மக்கள்.

அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன?
அரிசியும் பருப்பும் கொடுத்துவிட்டு அடுத்த மழைக்கும்,தேர்தலுக்கும் தான் தேவையா மக்கள்?

என் கம்யூனிஸ தோழர்களே...
எங்கே போனீர்கள்?
சூரியன் கொதித்த நாட்களில் எங்கே ஒதுங்கினீர்கள்?

மழை வருமெனத்தெரியாதா?மக்கள் ஒவ்வொரு முறையும் சாவது புரியாதா?
அறியாமை அகற்றி மக்கள் மனதில் பாதுகாப்புணர்ச்சி ஊட்ட மறந்துவிட்டு என்ன தேவையிருக்கிறது கம்யூனிஸ அரசியலில்.?

தொலையட்டும்...
இப்போதேனும் செயல்படுங்கள்...

ஓட்டுக்குப்பணம் கொடுக்க துல்லிய கணக்கு எடுப்போரே..
மனசாட்சியுடன் கணக்கெடுங்கள்..
உண்மையில் பாதிதோர்க்கு கரம் கொடுங்கள்.
எங்கிருந்தெல்லாமோ

உதவிகளுடன்  வரும் மனிதர்களிடம் கண்ணியம் காட்டுங்கள்.

மழைமுடிந்த நாட்களில் கூடிப்பேசுங்கள்..
அடுத்த மழைக்குள்ளேனும் பலப்படுத்துங்கள் ஏரிகளையும் சாலைகளையும்..

கடலூருக்கு நிவாரணம் தேவைப்படுவது இந்த வருடமே கடைசியாய் இருக்கட்டும்.

கொண்டுவர எங்களுக்கு வருத்தமில்லை..
வாங்கவேண்டிய நிலையிலேயே நீங்கள் இருப்பது உங்களுக்கு சம்மதமென்றால்.

உன் யோசனைகளையும் சொல் சக்தி..
அன்புடன்,
செல்வக்குமார்.

14 கருத்துகள்:

 1. கடலூருக்கு நிவாரணம் தேவைப்படுவது இந்த வருடமே கடைசியாய் இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 2. கடலூருக்கு மட்டுமல்ல
  தமிழகத்திற்கே கடைசி நிவாரணமாய் இது இருக்கட்டும்

  பதிலளிநீக்கு
 3. நண்பர் கரந்தையாரின் கருத்துடன் உடன் படுகிறேன் நண்பரே..

  பதிலளிநீக்கு
 4. எங்குமே நிவாரணம் அளிக்கும் அளவிற்கு சூழல் வராதிருக்கட்டும்.... அதற்கு தேவையான பணிகளை செவ்வனே செய்ய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்....... பணி செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. உதவி வரைத்தன்று உதவி, உதவி
  செயப்பட்டார் சால்பின் வரைத்து. - திருக்குறள்
  (நாம் செய்யும் உதவியின் மேன்மை, யாருக்குச் செய்கிறோம் என்பதில் இருக்கிறது)

  பதிலளிநீக்கு
 6. கடலூருக்கு நிவாரணம் தேவைப்படுவது இந்த வருடமே கடைசியாய் இருக்கட்டும்.//
  உண்மைதான் செல்வா. ஆனால் கூட ஒரு வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளலாம் தமிழ்நாட்டிற்கே. நம்மை ஆள்பவர்கள்தான் காரணம் இதற்கு எல்லாம். மக்கள் விழித்தெழுந்து தங்களுக்கு ஒரு நல்ல ஆளுமை உடைய நல்லாட்சி தரும் தலைமையத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்து விட்டது. இல்லையேல் கடலூர் மட்டுமல்ல தமிழகமே நட்டாற்றில்தான் என்பது உறுதி. இப்போது இரு தண்ணீர் வெள்ளம் மட்டுமல்ல நிரந்தர தண்ணீராகிய டாஸ்மாக்கும்....

  பதிலளிநீக்கு
 7. நல்ல ஒரு சவுக்கடி .. எங்கே போய் இருந்தார்கள். மீண்டும் மீண்டும் கணகெடுத்து.. இலவசத்திற்கு அடிமையாக்கி..

  ஏன் .. நண்பா.. குடும்பமா சேர்ந்து இப்படி தாக்குனா எப்படி ?

  பதிலளிநீக்கு
 8. அனுபவங்களில் இருந்து இனிமேலும் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

  “ புது சக்தி பிறக்குது உங்கள் கடிதத்திலே!”

  தொடர்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 9. இனிமேலாவது மக்களும் ஆள்பவர்களும் மாறவேண்டும். இயற்கையை பாழ் படுத்தாமல் இருக்க வேண்டும். மீண்டும் பழைய நீர்நிலைகளை உயிர்பிக்க வேண்டும். அதை செய்தாலே கடலூரும் சென்னையும் இத்தனை பாதிப்புக்கு உள்ளாகாது.
  அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு
 10. உண்மைகளை
  உரக்க சொல்லி
  இழவு வீட்டிலும்
  அரசியல் நடத்து பவர்களின்
  முகத்தில் அறையும் வரிகள்.

  பதிலளிநீக்கு
 11. தோழரே இன்று நீங்கள் தோழர் செம்பை மணவளர் அமேரிக்க பயணம் குறித்த நிகழ்வில் இன்னு கனத்த இதயத்துடனே எழுதியிருந்திர்கள் வருத்தம்தான். ஒரு மதக் கலவரம் அல்லது சாதிக் கலவரம் நடக்குமானால் மொத்த சமுகமும் இதில் ஈடுபடுவதில்லை ஆனால் ஒரு சிலரே மொத்த சமுகத்தையும் தனது அறியமை மற்றும் சுயநலத்திற்காக பலிகொடுத்துவிடுகின்றனர். இவர்களே மொத்த சமுகத்தையும் அவலத்திற்குள்ளக்குகின்றனர். நான் டிக்கெட் எடுக்கமால் இரயிலில் சென்று விட்டு திருட்டு இரயிலில் சென்றேன் என்பேன். என்னை தவிர்த்த பலர் பயணசீட்டு எடுத்துதான் செல்கின்றனர். ஆகையால் மொத்த மக்களையும் அப்படி புரிந்துகொள்ள வேண்டாம் என்பது ....

  பதிலளிநீக்கு
 12. நமக்கே 5000 தரப்போறாங்களாம்.கணக்கெடுத்துட்டுப் போய்ருக்காங்க

  பதிலளிநீக்கு