வியாழன், 10 டிசம்பர், 2015

இன்னுமா ...?

அன்பின் சக்திக்கு,
நீண்ட கால கல்விக்கூட விடுப்பு உன்னை சோம்பல் படுத்தியிருக்கும்.
மழைக்கால பகல்வேளைகளில் சில புத்தகங்களேனும் படித்திருப்பாய் என நம்புகிறேன்.
மழை விட்டாலும் தூவானம் விடாத கதை இன்னும் இருக்கிறது.
எந்த ஒன்றும் ஒரே இடத்தில் குவியும் போது அது ஊழலுக்கும்,ஆபத்துக்கும் வழிவகுக்கும் என்பார்கள்.
சென்னையின் சீரழிவுக்கும் அது ஒரு காரணமாய்த்தான் எண்ணத்தோன்றுகிறது.
இயற்கையின் பேரிடருக்கு இட,நேர பேதங்கள் இருக்க முடியாது.
ஆனாலும் பாதிப்புகளை தவிர்க்கமுடியாவிட்டாலும் கணிசமாய் குறைத்திருக்கலாம்.
தமிழகத்தின் வரைபடத்தில் சென்னையின் இடத்தைப்பார்த்தாயெனில் அது தமிழகத்தின் தலைநகராவதற்கு எந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது எனப்புரியவில்லை.
ஆங்கிலேயன் விட்டுப்போன காலடித்தடங்கள் அங்கே இன்னும் பதிந்து போயிருப்பதாலா?
சென்னையின் எல்லா வசதிகளையும் கொண்ட, இயற்கையின் சாதாரண பேரிடர்கள் அண்டமுடியாத இடங்கள் ,அநேகம் உண்டு தமிழகத்தில்.
பாரம்பரியம்,மரபு என பல காரணங்கள் காட்டி,
சென்னையின் பெருமையை நான் குலைப்பதாக எண்ணிவிடாதே..
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் தான்...
அதற்காக உடலின் மற்ற பாகங்களை உதாசீனப்படுத்துவதா?
மண்டை கனமாய் இருக்கும் தலைநகரின் அவலத்தையும் தான் அவிழ்த்துக்காட்டி விட்டதே இந்த மழை...
ஆற்றைப்புதைத்து கட்டட விளைச்சல்.
ஏரிகளுக்குள்ளே வீட்டுமனைக்கொடிகள்..
மருத்துவமனை பிணங்களை மறைத்த கொடூரம்.
நாளிதழ்களும்,ஊடகங்களும் இன்னும் சென்னையின் பாதிப்புகளைச் சரியாக சொல்லவில்லையோ என்னும் பதற்றம் விலகியபாடில்லை.
வடியத்தொடங்கும் தண்ணீர் இன்னும் காட்டலாம் இறந்துபோன பலவற்றை.
எதனால் வந்தது இத்தனையும்?
ஒரு சாமான்யனாய் எனக்குத்தெரிந்து...
சென்னை என்னும் மோகம்..
அரசுகளும்,அதிகாரிகளும் திட்டமிடாத தொலைதூரப்பார்வையும் தான் காரணம்.
ஒரு கடலோர நகரில் எதற்கு இத்தனை மனித சஞ்சாரம்?
ஏரிகளின் நகரமாய் இருந்த சென்னை ஏன் சேரிகளின் குப்பையாய் போனது?
அரசுக்கும் மற்ற அனைத்துக்கும் ஏன் சென்னை மட்டும் மையமாய் போனது?
ஒரு மழைக்கு சிதறிப்போய் ஒரு தெருவிலிருந்து மற்ற தெருவிற்குப் போக முடியாத அவலச்சூழல்.
ஒரு ஊருக்கு இது சகித்துக்கொள்வதாய் இருக்கலாம்.
மாநிலத்தின் தலைநகருக்கு சரியா?
சாதாரண மனிதனின் சான்றிதழ்களையும்,ஆவணங்களையும் அள்ளிப்போன மழை..
இன்னும் கொஞ்சம் வலுத்து அரசின் மடியில் கைவைத்திருந்தால் என்ன ஆவது?
சிறுமிகளின் பாண்டி விளையாட்டுக்கட்டமாய் சென்னைக்குள்ளேயே சுற்றிக்கொண்டு  வெளியே செல்லவே முடியாத அளவுக்கு ஒரு தலைநகரம் இருக்குமெனில் அது சுதந்திர நாட்டின் அவமானம்.
சக்தி,
நான் துக்ளக் அல்ல.
தலைநகரைப் பெயர்த்து எடுத்துப்போகச்சொல்ல..
விஞ்ஞான ,தகவல் தொழில்நுட்ப புரட்சிகாலத்தில் இருக்கிறோம்.
ஆனால் அவற்றை சரியாகப்பயன்படுத்தத் தெரிந்திருக்கின்றோமா என்பதே கேள்வி..
நம் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன...அரசின் ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலகத்தையும் ஏன் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்க வைக்கக்கூடாது?
சென்னையின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் அரசுப்பணியாளர்கள் இருப்பார்கள்.
மாநிலம் முழுவதும் அவர்கள் பரவும்போது...தலைநகர் பாரம் கொஞ்சம் குறைவதுடன் மாவட்டங்கள் கொஞ்சம் வளம் பெறாதா?
ஓய்வுபெறும் ஒவ்வொரு அரசு ஊழியரும் ஓய்வூதியத்தின் ஆரம்பப்பணிகளுக்காக சென்னைப்பயணம் என்பது தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது..
வாழ்க்கை முழுசும் உழைத்த அவர்களை ஓய்வின் போதுமா பிழியவேண்டும்?
மாநிலத்தின் எந்தப்பகுதியிலிருந்தும் எளிதாய் அடையும் ஒரு பகுதிக்கேனும் மாற்றினால் குறைந்து போகுமா கவுரவம்?
வனத்துறை தலைமையை சென்னையில் வைத்து என்ன பயன்..?
தகவல் பரிமாற்றத்திற்கும்,முடிவெடுப்பதற்கும் முகங்கள் தேவையில்லை ,இணையம் போதும் என்கிற காலம்..
காணொளிக்காட்சிகளின் ஆட்சியில் எல்லாம் சுலபமாய் செய்யலாம்.
ஆயிரம் முறை கூவத்தைச் சுத்தம் செய்தாலும் மனிதக்கூட்டம் மண்டும் போது...
கங்கைக்கும் புனிதம் சாத்தியமல்ல.
நீள்கிறது சக்தி....
நிறுத்திக்கொள்கிறேன்.
புரிந்து செயல்கள் நடக்குமெனில் ..
புலம்பெயர்தல் தவிர்க்கலாம்.
என் சிந்தையில் கோளாறுகள் தெரிந்தால் நீயும் எழுது...
அன்புடன்.
செல்வக்குமார்.

9 கருத்துகள்:

  1. //சாதாரண மனிதனின் சான்றிதழ்களையும்,ஆவணங்களையும் அள்ளிப்போன மழை..
    இன்னும் கொஞ்சம் வலுத்து அரசின் மடியில் கைவைத்திருந்தால் என்ன ஆவது?///
    தங்களின் ஐயம் உண்மைதான் நண்பரே
    எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது
    திருச்சியினைத் தலைநகராக மாற்றும் முயற்சினைத்
    தொடங்கினார்,ஏனோ முயற்சி முழுமை பெறவில்லை

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே !

    சாதாரண மனிதனின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது உங்கள் கடிதத்தின் ஆதங்கம் சரியான வழிகாட்டல் அரசுக்கும் தேவையை இருக்கிறது இன்றை அழிவின் பின்னர் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் உலகமே அழுத இந்தத் துயரம் இனியும் சென்னைக்கு வேண்டாம்....!

    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  3. மாநிலம் முழுவதும் அவர்கள் பரவும்போது...தலைநகர் பாரம் கொஞ்சம் குறைவதுடன் மாவட்டங்கள் கொஞ்சம் வளம் பெறாதா ?

    உண்மை நண்பரே சிந்திக்க வேண்டிய விடயமே...

    பதிலளிநீக்கு
  4. அருமையான கடிதம்.

    சென்னையின் பழைய வரைபடத்தைப் பார்த்தால் சென்னையில் இருந்த நீர்நிலைகள் எவ்வளவு என்று தெரிந்துவிடும். பார்த்தீர்கள் என்றாலிந்த நீர்நிலைகளை பராமரித்து இருந்தால் இப்போது வெள்ளம் வந்திருந்தாலும் அது நீர்நிலைகளோடு நின்றிருக்கும் அப்பாவி மக்களைப் பாதித்திருக்காது. இது நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நல்லதொரு எச்சரிக்கை.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான கடிதம் அண்ணா. மருமகளுக்கு எழுதிய கடிதம் என்றாலும் நானும் படித்துவிட்டேன். jokes apart.

    எம்.ஜி.யார் திருச்சியை தலைநகர் ஆகலாம் என கருத்து தெரிவித்ததாக சிறுவயதில் கேள்விப்பட்டேன்,

    நானும் தில்லையகம் கீதாவும் பேசிகொண்டிருக்கும் போது இதேபோல தான் புலம்பினேன். தலைநகரை வேண்டுமானால் சென்னையிலேயே கட்டிக்கொண்டு அழட்டும்.

    வேறு முக்கியமான துறை, தொழில்களை பகிர்ந்து கொடுத்தால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், இதுபோல தொல்லைகளும் குறையும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது.

    அருமையான கடிதம் அண்ணா. தொகுத்து நிலவன் அண்ணாவின் "முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே" போல ஒரு புத்தகமாக போடுங்கள். நிறைய பெற்றோர்க்கு அது சிறந்த வழிகாட்டியாக இருக்கும்:)

    பதிலளிநீக்கு
  6. அறிவிப்பு செய்தவர்கள் ஒரு இடத்தில் அதாவது சைதாப்பேட்டை பாலத்திற்கு மறுபுறம் 9 மணிக்கும் பாலத்திற்க்கு மறுபுறம் 11 மணிக்கும் அறிவித்தது இன்னும் கொடூரம்..அதனாலும் ஏற்பட்டது பெரும் அழிவு

    பதிலளிநீக்கு
  7. மாநிலம் முழுவதும் அவர்கள் பரவும்போது...தலைநகர் பாரம் கொஞ்சம் குறையத்தான் செய்யும் சந்தேகமில்லை..ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது......

    பதிலளிநீக்கு
  8. மாநிலம் முழுவதும் அவர்கள் பரவும்போது...தலைநகர் பாரம் கொஞ்சம் குறையத்தான் செய்யும் சந்தேகமில்லை..ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது......

    பதிலளிநீக்கு
  9. புலம் பெயர்தலைத் தவிர்க்க வேண்டாம்..இப்படி நதியை வீடுகளாக்குவதைத் தவிர்க்கலாம்

    பதிலளிநீக்கு