செவ்வாய், 15 டிசம்பர், 2015

அன்பின் சலாம்

அன்பின் சக்திக்கு,
               பரபரப்பான உன் நாட்களின் ஊடே நானும் என் எழுத்துக்களை திணிப்பதாய் சோர்ந்து போகாதே.
வாய்க்குள் வரும் சில எழுத்துக்களை வசப்படுத்தி வாக்கியங்களாக்கும் என் பயிற்சியாய் நினைத்துக்கொள்.
மனிதப்பிறவிகள் எல்லோரும் மகத்தானவர்களாய் மாறிவிடுவதில்லை.
நாம் மாறவிடுவதுமில்லை.
ஞானியராய் ,யோகியராய் மாறிய பலரும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அடையாளம் கண்டு சிலர் அழுத்தப்படுகிறார்கள்.
அடையாளம் காணாமல் சிலர் தொலைந்துபோகிறார்கள்.
நமக்குத்தெரிந்த ஒரு சிலரையேனும் நாமும் சொல்லவில்லை என்றால் எழுதும் எழுத்துக்கு குற்றமிழைத்த உணர்வு உறுத்தும்.
நம்மிடையே அப்படி ஒருவர் நடமாடிக்கொண்டிருக்கிறார்.
உலகையே சுற்றிய அனுபவம்..வயதைத்தாண்டிய உற்சாகம்.. கொடுத்துக்கொண்டேயிருக்கும் கைகள்..
தொழுதுகொண்டேயிருக்கும் உள்ளம்..
சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் மாணவர்..
பச்சைரோஜா இதழின் சிறப்பாசிரியர்...
மார்க்க அறிவில் அறிவியல் செலுத்திப்பார்க்கும் சமூக விஞ்ஞானி.
எங்கேனும் உதவிகள் தேவைப்படுமெனில் ஓடோடி நிற்கும் தாய்மை.
எனக்குத்தெரிந்து 1000 பள்ளிக்குழந்தைகளுக்கு மேல் புத்தாடை பரிசளித்திருக்கிறார்.பல அரசுப்பள்ளிகளுக்கு நல்ல குடிநீர் கருவிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஒரு தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.
எப்போதும் சிரிக்கும் முகம்.
பெரிய குடும்பத்தின் தலைவர்.
ஒரு ஊரின் தலைவர்..
அரசுப்பள்ளியின் பெற்றோர்கழக தலைவர்...
சொல்லிக்கொண்டே போகலாம் சக்தி....
அவரின் சேமிப்புகள் வியக்க வைக்கிறது.
175 நாடுகளின் பணத்தாள்கள்..அடுக்கடுக்காய் அஞ்சல் வில்லைகள்.
ஆதிகாலம் தொடங்கி,அந்நிய நாடுகளின் நாணயக்குவியல்கள்..
அத்தனையும் வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தால் இந்த பதிவு இருந்திருக்காது.
எல்லாப்பள்ளிக்கும் தூக்கிச்சுமக்கிறார்..தமிழனின் வரலாறு சொல்லி பூரிக்கவைக்கிறார்.
இது புகழுக்கோ,பொருளுக்கோ அல்ல.
அருளினால் உருளும் சக்கரம்.
நம் கண் முன்னே காணும் பொக்கிஷம்.
கடலூரின் நிவாரணப்பணிகளுக்காக பொருளும் கொடுத்து,சுமந்த தோள்கள் மரியாதை செய்யப்பட வேண்டியவை.
அவரின் லட்சியங்களும், கருணைக்கரங்களும் நீண்டநாள் வாழத்தகுந்தவை.
நனிநட்பாய் எனக்குள்ளும் இருப்பவர்..
காசிம் புதுப்பேட்டை தந்த மாசில் மனிதன்.
UNWOஅமைப்பின் புதுகை ஒருங்கிணைப்பாளர்,
புதுக்கோட்டை மாவட்ட நாணயவியல் சங்க நிறுவனர்&தலைவர்...
இன்னும் இன்னுமாய்...
எஸ்.டி.பஷீர் அலி அவர்கள்.
இப்படி ஒரு பதிவுக்காய்
என்னை கோபிக்கலாம்,சிறு புன்னகையுடன் கடந்து போகலாம், சொல்லிய யாவையும் அறுதியிட்டு மறுக்கலாம்...
ஆனாலும் இதை நான் சொல்லியே ஆக வேண்டும்..
"எல்லாம் அவன் செயல்"
அன்புடன்,
செல்வக்குமார்.

9 கருத்துகள்:

  1. திருமிகு எஸ்.டி.பஷீர் அலி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. ஐயாவினுடைய நாணய சேமிப்பு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிறந்த மனிதரைப் பற்றிய பதிவிற்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய பள்ளித் தோழர் செல்வாவுக்கு முதற்கண் நன்றி,
    அன்பின் சலாம் என்ற பதிவு படித்துப் பார்தேன்,நானும் UNWO அலுவலகத்தில் அவர்களோடு இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வருகின்றேன்,எப்பொழுதும் சமுதாய சிந்தனையோடு உழைத்துக்கொண்டு இருக்கும் என்னுடைய ஒருங்கிணைப்பாளர் என்றென்றும் சிறப்போடு பணிபுரிய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன், -மொய்தீன் S (UNWO)

    பதிலளிநீக்கு
  4. அன்பின் பிழிவு அவர். யாருக்கு என்றெல்லாம் கேட்காமலே நான் தகுதியானவர்க்கே சொல்வேன் என்னும் நம்பிக்கையோடு, கடந்த தீபாவளிக்கு 5செட் உடையெடுத்துக் கொடுத்தார். உரியவர்களிடம் ஒபப்டைத்தபோதுதான் அவரை அழைத்துச் சென்றேன். கடந்த வெள்ளத்தைக் கடந்து, பெருந்தொகை வசூலித்து, நிவாரணப் பொருள்களை வாங்க, யார் கழிவுதருவார்கள் என்று அசராமல் கடைதேடி ஓடி, சுயஉதவிப் பெண்கள் குழுவில் வாங்குவது இருபக்கமும் உதவியாகும் என்று நான் சொன்னவுடன், எந்தவிதக் கேள்வியும் கேட்காமல் பணத்தை எடுத்துக் கொடுத்து.. அவர்கள் அலுவலக நண்பர்களையும் அவர்போலவே பண்புகளுடன் பழகி.. கொஞ்ச நாளிலேயே நெஞ்சில் நிறைந்துவிட்ட அண்ணன் பஷீர் அலி அவர்களுக்கு என் அன்பான சலாம்! மிகையின்றி அழகாக எழுதிய உங்கள் கைகளுக்கு ஒரு அன்பான முத்தம் செல்வா!

    பதிலளிநீக்கு
  5. எஸ்.டி.பஷீர் அலி அவர்களைப்பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன் நண்பரே... நானும் இவரைப் போலவே சிறு வயது முதலே நாணய சேமிப்பாளனே...

    பதிலளிநீக்கு
  6. பஷீர் ஐயா அவர்களின் நாணயம் சேமிப்பு பற்றியும், (தென்றல் கீதா சகோவின் பதிவு) சேவைகள் பற்றியும் அறிந்திருந்தாலும் நீங்கள் கூடுதல் தகவல்கள் தந்து அவரையும் போற்றி உங்களையும் போற்றச் செய்துவிட்டீர்கள்!! அருமையான மனிதரைப் பற்றிச் சொன்னதற்கு மிக்க நன்றி.

    கீதா: நானும் மகனும் கூட சேமித்துவைத்திருக்கின்றோம். இவர் அளவிற்கு இல்லைதான்...

    நன்றி

    பதிலளிநீக்கு