செவ்வாய், 1 டிசம்பர், 2015

மழை வேண்டும்

அன்பின் சக்திக்கு,
நேரலை முழுவதும் நீரலைக்க்காட்சிகள். வானம் கண்திறக்கும் முன்னே விழித்துக்கொள்ளும் ஊடகப்பார்வைகள்.
குளிர்ந்த மழையை சூடாக்கும் விவாதங்கள்.வாட்ஸ் அப்,முகப்புத்தகம்,வலைத்தளம் யாவிலும் பெய்துகொண்டேயிருக்கிறது மழை.

பகடிகள்,பரிந்துரைகள்,குமுறல்கள்,கோபம் என எல்லாத்தரப்பையும் பேசவைத்துவிட்டது மழை.

கவலைப்படாதே சக்தி,
     நானும் உன்னிடம் மழைபற்றி இனி எழுதப்போவதில்லை.

இந்ததேசம்  எப்போதும் கையில் இருப்பதை கொண்டாடுவதில்லை. பறிகொடுத்த பின்போ கிடைக்காது இனிமேல் என்ற நிலையில் தான் உணரத்தொடங்குவார்கள்.

அது மழைக்கு மட்டுமல்ல...மனிதருக்கும் உண்டுதான்.

பாரதியே கலந்துகொண்ட ஒரு கவிதைப்போட்டியில் அவருக்கு இர்ண்டாம் பரிசு கொடுத்தவர்கள் நாம். அதுவும் என்ன பாட்டுக்குத் தெரியுமா?

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே".

அன்னையை முதியோர் இல்லத்தில் கொன்றுவிட்டு ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பார்கள்.
வாழும்போது தண்ணீர் கொடுக்காமல் செத்தபின் பால் தெளிப்பார்கள்.

இன்னுமாய் ஏகப்பட்டது இருக்கிறது.
துரித உணவுக்காலத்தில் இருக்கிறாய். நானும் முடிந்தவரை சுருக்கித்தான் தருகிறேன்.

ஓடும் நீரைக் காணும் வாய்ப்பு இன்னும் சில தலைமுறைகளோடு முடிந்துபோகுமென சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நீர் மட்டுமே நிர்ணயிக்கப்போகிறது எதிர்காலம் என்கிறார்கள்.

கொஞ்சம் கூடுதலாய் பொழிவதற்கு கோபப்படாதே..

மழை என்பது உன் தாய் தந்த பாலுக்கு சற்றும் குறையில்லாதது.

நீரில் எத்தனை அரசியலும்,அரசுகளும் மாட்டிக்கொண்டிருக்கிறது தெரியுமா?
பெட்ரோலியம் போலவே முன்னேறிய நாடுகள் தண்ணீரின் பால் பார்வையைத்திருப்பி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்நிய நாட்டின் நிறுவனங்கள் சும்மா வந்து கடைவிரிக்கவில்லை நம் நாட்டுக்குள்.
ஒரு காரை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது பல்லாயிரம் லிட்டர் நீரையும் தான் பறிகொடுக்கிறது பாரதம்.

இந்தியா ஒன்றும் கட்டாந்தரைகளின் நாடன்று...உலகநாடுகள் வந்து முன்னேற்றிவிட்டுப்போக..
அவர்கள் நாடுகளும் பூத்துக்குழுங்கிக்கொண்டிருக்கும் பூந்தோட்டங்கள் மட்டும் நிறைந்ததல்ல.
அங்கும் வறண்டுபோன நிலங்கள் உண்டு. வேலையில்லா தொழிலாளர்கள் உண்டு...
ஆனால்,    தண்ணீர் செலவழிக்க மனம் இல்லை...

இயற்கைக்கு ஒரு விதியிருப்பதாக சொல்கிறார்கள்.
இல்லாத இடத்தை இட்டு நிரப்புமென..
அது காற்றுக்கும் நீருக்கும் பொருந்தும் தானே.?

கொள்ளைபோகும் தண்ணீரை சமப்படுத்தவே வந்திருக்கும் மழை.

மனிதர்களின் சிரமம் உணரக்கூடியது தான்.மறுப்பில்லை.

கவலைப்படாதே...சக்தி.
மழை சரியாகும் அல்லது மக்கள் மழைக்கு பழகிவிடுவார்கள்.

சிரபுஞ்சியிலும் மனிதர்கள் வசிக்கிறார்கள் தானே?

ஆம் சக்தி..
  இந்த முறை மழையை அதிகம் திட்டி கண்ணீரோடு தண்ணீரையும் வீணடித்துவிட்டோம்.

யாரையும் திட்டவேண்டாம்.
நாமே தயாராகி்க்கொள்வோம்.
வரும் மழை காப்போம்.தண்ணீர்  தாங்குவோம்.
பெய்யட்டும் மழை.

அன்புடன்,
செல்வக்குமார்.

14 கருத்துகள்:

 1. மழை வேண்டும் மனம் செழிக்க
  இந்த மழை இன்னும் வேண்டும் எம் உழவனின் உயிர்பிழைக்க!

  பதிலளிநீக்கு
 2. பெய்யென நெஞ்சுள்ளும் பெய்தது சொல் மழை.

  இது போன்ற கடித இலக்கியம் சமீபத்தில் கண்டதில்லை.

  தொடரவேண்டும்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி..உங்கள் பெருமைகள் நான்றிவேன்...வாழ்த்தும் உங்கள் வருகைக்கு நன்றிகள்...

   நீக்கு
 3. மழை பொழியட்டும்
  தங்களின்
  கடிதங்கள் தொடரட்டும்
  மழையால்
  நாடும்
  கடிதங்களால்
  இலக்கியமும்
  செழிக்கட்டும்

  பதிலளிநீக்கு
 4. உண்மை தான்... நீர் மட்டுமே அனைத்தையும் நிர்ணயிக்கப்போகிறது...

  பதிலளிநீக்கு
 5. கடிதம் சக்திக்கு மட்டுமல்ல.... இது அனைவருக்கும்தான் நண்பரே,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சக்தி என்பவள்..நான் எழுதத் தூண்டுபவள்...புத்திசாலி .
   அவள் அறிவாள்...
   உங்கள் பின்னுட்டங்கள் மகிழ்வூட்டுகின்றன...நன்றி ஜி

   நீக்கு
 6. அழகான, அருமையான கடிதம் செல்வா. தாங்கள் கவிதை எழுதினாலும், கடிதம் எழுதினாலும் அழகியல்...

  ஹும் எத்தனை மழை பெய்தாலும் நம்மூர் மக்கள் திருந்தப் போவதில்லை. நீரிலும் அரசியல்தான். நீரினால் அரசியல். உள் நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும்தானே. நிச்சயமாக நீரினால்தான் எதிர்காலமே வேதனைப்படப் போகின்றது.

  அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழமையே..உங்கள் சந்திப்பின் போதும் மனம் குடும்பத்தின் பால் இருந்ததால் சரியாக பேச முடியவில்லை..மன்னியுங்கள்...மீண்டுமொருமுறை பேசுவோம்.

   நீக்கு
 7. எவ்வளவு மழை பெய்தாலும் அதை பலிக்கும் எண்ணம் நமக்கு எப்போதுமே வராது... சூப்பர்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகை மகிழ்ச்சி சீலன்...உங்கள் கருத்துகளைச்சொல்லுங்கள்...

   நீக்கு