வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாபத்துக்கு அப் பால்.....

அன்பின் சக்திக்கு,
            உன்னோடு பேசி மூன்றுநாட்களாகிவிட்டன.சோக உணர்ச்சிகளின் விவரிக்கமுடியா உச்சத்திலிருந்து எழுதுகிறேன்.
பகுத்தறியும் பண்பையும்,கொஞ்சம் சமுதாய அறிவினையும் உனக்கு சொல்லியிருந்தாலும்,
பாச உணர்ச்சியின் முன்னால் எல்லாம் தள்ளிப்போகிறது எனக்கு.

பதினெட்டாம் திருமண நாள் எனக்கும் உன் அம்மாவுக்கும்.

1997 ஒரு அடைமழை காலத்தில் நடந்த திருமணம்.

வாழ்க்கையின் எல்லாச்சோதனைகளிலும் தோள் கொடுத்தவள்.
உங்கள் இருவரையும் உலகின் உன்னத பரிசாய் எனக்குக்கொடுத்தவள்.
இதுமட்டுமே இன்று சொல்லமுடிகிறது.

இன்று உண்டீர்களா தெரியாது...

கற்றுக்கொள் மகளே..
                        உலகம் இன்னும் கொடிய முகம் காட்டும்.
சென்னையின் அத்தனை லட்சம் மக்களில் "ஜெயின்" சமூகத்தின் பரிவும்,மிகக்குறைந்த மக்களின் அர்ப்பணிப்பு  உணர்வும் மறக்கத்தக்கதல்ல.

ஒரு மழை சென்னையின் மனிதர்களுக்கு எத்தனை பாடங்களை படிப்பித்துப்போய் இருக்கிறது?

கோடிகளில் வீடு கட்டியவன் மொட்டைமாடியில் நிற்கிறான்,  தண்ணீருக்கும் சோற்றுக்குமாக.

அருவருத்தும், தள்ளியும் மனதளவில் வைத்திருந்த மீனவச்சகோதரன் மீட்டுக்கொண்டிருக்கிறான் மனிதநேயத்தை.

அரசியல் பாலங்கள் அடித்துப்போய் இருக்கிறது.

உண்டியல் பணங்களின் மதிப்பை ATM காத்திருப்பு கன்னத்தில் அடிக்கிறது.

சென்னைதான் உயர்வென மற்றோரை பார்த்த சுண்ணாம்புக்கண்களுக்கு,
தமிழகத்தின் கடைக்கோடி வரை கண்ணீர் வடிக்கிறது .

இயன்றதை சேர்த்துக்கொண்டு கிடைத்த சாலைகளில் விரைகிறது சென்னை நோக்கி.

மழை பழித்த பதர்களே....
உங்களில் தான் இருக்கிறது  மனிதமனமற்ற மிருகங்கள்.

பாலின் விலையை மாட்டின் விலைக்கு விற்கத்தொடங்கியிருக்கின்றீர்கள்.
காய்கள்,குடிநீர், என கண்ணீர் வரவைக்கிறது உங்கள் கொடூரம்.

சிங்காரச்சென்னைக்கு இப்படி ஒரு மறுமுகமா?

இன்னும் பார்க்கவேண்டியிருக்கும் சக்தி...

பிழைத்துச்சென்ற மக்களின் பொருட்கள் மாயமாகும் பரிதாபம்.

உயிர்காக்கும் உயர்தர(?) மருத்துவமனை பிணங்களாய் மக்களை வெளியேற்றும் பரிதாபம்.

பொருத்தமான போட்டோக்கள் போஸ்டருக்காய் பொறுக்கி வைத்திருப்பார்கள்.

யோசி சக்தி..
நாம் தான் இந்த மனிதப்பிசாசுகளை வாழவைத்திருக்கிறோம்.
பால் ஒன்றும் உயிர்வாழத்தேவையான அதிமுக்கியப் பொருளல்ல...வரிசையில் நிற்கும் எல்லோர்க்கும்.

ஆனாலும் நிற்கிறோம்...அவர்கள் கறக்கிறார்கள்.

சாபங்களில் எனக்கு நம்பிக்கையில்லை.

இதை அறச்சீற்றம் எனக்கொள்.

காலம் எல்லாவற்றையும் கணக்கில் வைக்கும்.

ஆவின் பாலில் பணம் பார்ப்போரே....கவனம்
உங்கள்
சாவின் பாலுக்கும் வழியின்றி பிணமாவீராக.....

உன்,
செல்வக்குமார்.

25 கருத்துகள்:

 1. உலகெங்கும் உதவிக்கரம் நீட்டுகிறது,
  ஆனால் சென்னையில் உள்ள வணிகரோ
  காசு பார்க்க நினைக்கிறார்
  கொடுமை நண்பரே

  பதிலளிநீக்கு
 2. //ஆவின் பாலில் பணம் பார்ப்போரே....கவனம்
  உங்கள்
  சாவின் பாலுக்கும் வழியின்றி பிணமாவீராக//

  தம்மைப் போன்ற மனிதர்களின் துயரத்தில் பங்கு கொள்ளவேண்டியவர்களுக்கு அறிவுரை.

  மாறாக, பரிதாபத்தில் பணம் பார்க்க அவாவுறும் மனிதப் பேய்களுக்கு, அக்னிச் சாட்டையடி!.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உஙகள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்..தொடர்ந்து சொல்லுங்கள்....காத்திருக்கிறேன்

   நீக்கு
 3. சகோதரா !

  எனக்கு எதையும் எழுத தோன்றவில்லை...

  உலகின் மதங்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்த சமூகத்தை கொண்ட மாபெரும் தேசத்தின் நான்காவது பெரிய நகரத்தில் மனிதம் மரித்துவிட்டது !

  உங்களுடன், சென்னை மக்களுடன் நானிருக்கிறேன்... உணர்வாக !

  இதுவும் மாறும் சகோதரா.

  சாமானியன்

  பதிலளிநீக்கு
 4. ஆவின் பாலில் பணம் பார்ப்போரே....கவனம்
  உங்கள்
  சாவின் பாலுக்கும் வழியின்றி பிணமாவீராக...

  இது நடக்கும் நண்பரே தங்களது குடும்பம் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 5. // ஆவின் பாலில் பணம் பார்ப்போரே....கவனம்
  உங்கள்
  சாவின் பாலுக்கும் வழியின்றி பிணமாவீரா//

  சரியான சாட்டையடி. இவர்களெல்லாம் மனித உருவில் நடமாடும் அரக்கர்கள்.

  ஆனாலும் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது சில நல்ல உள்ளங்களின் செயல்களை பார்க்கும்போது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்விப்பட்டபோது பொய்யாயிருக்குமென நினைத்தேன்....உறுதிப்படும் போது குருதி கொதிக்கிறது...

   நீக்கு
 6. சிங்காரச்சென்னைக்கு இப்படி ஒரு மறுமுகம் இருக்கிறது என்று அறைந்து சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலமுகம் பார்க்கிறேன்...சில முககமேனும் கிழிக்கலாம்...

   நீக்கு
 7. சாபங்களில் எனக்கு நம்பிக்கையில்லை.
  இதை அறச்சீற்றம் எனக்கொள்.
  காலம் எல்லாவற்றையும் கணக்கில் வைக்கும்.
  உண்மைதான் தோழா.. உன் கோபத்தின் நியாயம் இப்போது பார்க்கிறேன். சென்னை கடலூரின் பாவப்பட்ட மக்களுக்காக இன்று முழுவதும் அலைந்து திரிந்து பொருள்களைச் சேகரித்து,கிட்டத்தட்ட சக்தி,சூரியாவைத் தூக்கிச் சுமக்கும் அன்புடன் அந்தப் பொருட்களைச் சுமந்து இன்ஃபோடெக் வந்த உன் மனிதாபி மானத்தை அருகிலிருந்து பார்த்து ஆனந்தப்பட்டேன்... உன் அறச்சீற்றமும், அன்பும் தொடர்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் ...மிகவும் உயர்த்துகிறீர்கள் என்னை..
   நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...நீங்கள் வலைப்பூ தொடங்கச்சொல்லவில்லையென்றால் ...நான் புதிதாய் பிறந்திருக்க மாட்டேன்...

   நீக்கு
 8. பதில்கள்
  1. மிக்க நன்ரி செந்தில் சார்...நானும் உங்கள் பதிவுகளின் தீவிர வாசகனாய் மாறியிருக்கிறேன்

   நீக்கு
 9. மாபெரும் படிப்பினையை மழை தந்துள்ளது.
  அதை மக்கள் உணர்வார்களா?
  மறுபடி சருவச் செம்புக்கும் கருகைச் சீலைக்கும் ஓட்டுப் போடாமல் இருந்தால் சரி தான்
  நல்ல உணர்த்தும் பதிவு சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 10. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, ஒரு பக்கம் மக்கள் துயர் துடைக்க துடிக்கும் மனம், மறுபுறம் காசு பார்க்கும் கயமை மனம்.

  எட்டி நிற்கும் மனங்களே துடிக்கும் போது, பக்கத்தில் நின்று பார்க்கும் இவர்களால் எப்படி இப்படி செய்ய முடிகிறது.

  தங்கள் சேவையை முத்துநிலவன் ஐயா பின்னூட்டத்தில் படித்தேன். நல்லது. இன்னும் தொடருங்கள்,

  நல்லோர் ஒருவர் உளரேல்,,,,,,,,
  ஏனோ இப்ப இத சொல்ல முடியல, வேண்டாமே மழை என்கிறோம். ஆனால் அனைவருக்கும் நல்லது நடந்தால் சரி,
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் ..இந்த மழை நம்மை நமக்கு காட்டிப்போய் இருக்கிறது...

   நீக்கு
 11. இயற்கையின் அறச்சீற்றம் ந்ல்லதொரு பாடம். ஆனால் இந்தப் பாடத்திலிருந்து நம் மாண்புமிகுத் தலைவர்கள் பாடம் கற்பார்களா? கற்றால் நல்லது. மனிதம் மரிக்கின்றது ஒரு புறம் மறு புறம் உயிர்த்தெழுகின்றது.

  மகள்களுடன் பேசினீர்களா? இப்போதும் நெட்வொர்க் முழுவதும் சரியாகவில்லை. என்றாலும் பேசினீர்களா? எல்லோரும் நலம் தானே?

  உங்கள் சேவையையும் மனதாரப் பாராட்டுகின்றோம். எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு