ஞாயிறு, 18 ஜூன், 2017

மாயவலையொன்று...

மாயவலையொன்று
மனசோடு ..

காயத்தின் ரணங்களில்
மயிற்பீலி கொண்ட
வருடல்..

கொசுக்கடி
இரவுகளில்
கொள்ளை நட்சத்திரம்..

தலையணையோடு
ஒட்டிக்கொண்ட நிலா..
திரைகளின் வழி ஒழுகும் வார்த்தைப் பெருநதி...
நனைத்து விட்டுப்போகும்
வெக்கை

இரவின் இருள் துளைத்து
வெளிச்சமிடுகிறது
கண்கள்..
விட்டிலென தாவித்தாவி
பிடிக்கவுமின்றி
எரிந்து போகவுமன்றி
தோற்றுக்கொண்டே
இருக்கிறது..

விரல்களுக்குள்
வந்து சேர்கிறது
ரத்தமும்..கவிதையும்.

எழுத்து தடவி
எழுத்து தடவி
இறங்குகிறது
இதயம்...

மூளைச்சுரப்பியின்
முனைகள் தோறும்
ஊற்றெடுக்கின்றன
விநோத ஆசைகள்..
உடல் விடும் காற்றில்
உலர்கின்றன ஓசைகள்..

மிதிபடும் சருகென
சத்தமிடும்
உள்ளம்..
சட்டெனப் பாய்கிறது
காய்ந்த ஓர் நிலத்தில் வெள்ளம்..

நித்திய இரவுகள்..
கடக்கும் மல்லிகை
வாசத்தில்
மோசம் போகின்றன..
நீரில் மட்டுமா கானல்..
பூவிலும் உண்டெனெ
புரிந்தது பெண்ணே

முட்களின் அடுப்பென
மூள்கிறது தீ...

நீளும் பகலும்
நீளா இரவும்
வரமாகிறது வாழ்க்கை

சாபங்களே சூழும் என் பாதையில் சட்டெனப் பூக்கிறது ஒரு பூ...

வறட்டுப் பாலையில்
வந்தமர்கிறது
ஒர்
வண்ணத்துப் பூச்சி..

நான்
சோர்ந்து கிடைக்கையில்
தொட்டுப் படர்கிறது
சூரியச் சிறுகதிர்..

முடியாக் கவிதைக்கு
முற்றுப்புள்ளி
வைக்கிறது
ஒர் விரல்..

என் மௌன சங்கீதத்திற்கு
முன்னே
வந்தமர்கிறது
ஒரு ரசிக்கும் தலை

எங்கிருந்தோ
கிளம்பி வருகிறது
ஒரு
ரயில்..
கடந்து போகையில்
இழந்து போகிறது என் பாதை

8 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பரே
  உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
  வாழ்த்துக்கள்
  discount coupons

  பதிலளிநீக்கு
 2. நல்ல கருத்தாக்கம் மிக்க கவிதை,வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு