புதன், 12 ஜூலை, 2017

எத்தனை நாள் அகதி வாழ்க்கை?

ஒரு மனிதனின் ஆகப்பெரிய சோகம் தனித்திருப்பது.




சொந்த மண்ணை விட்டு அகதியாய் இருப்பது இன்னும் கொடுமை.

ஆம் புலம்பெயர் நம் இன மக்களின் சோகம் சொல்லில் வடிக்க முடியாதது.

வந்தாரையெல்லாம் வாழவைக்கும் தமிழ்நாடாம்...
வான்பார்த்து படுத்து துப்பிக்
கொள்ளவேண்டும் நம்மையே..

ஒரு கடைவீதியில் கணக்கெடுத்துப்
பாருங்கள் தமிழகத்தின் எந்த ஊரிலும்,
எத்தனை மாநிலத்து மக்கள் எத்தனை விதங்களில்.

நம் இனம் ஒன்று கொத்து குண்டுகளில் தப்பித்து தாய் மண்ணுக்கு அகதியாய் வந்து படும் வேதனைகளை தீர்த்திருக்கின்றோமா இன்னும்?

அகதி என்பதை புலம்பெயர்ந்தோர் என சொல்லிக்கொண்டிருப்பதைத் தவிர?

தலை முட்டும் திரைச்சீலைக்கதவுடன் வரிசை வீடுகள்.

படித்தபின்னும் வேலைகிடைக்காமல் வர்ணங்கள் பூசவும் வரும் சில்லரை வேலைகளை செய்தும் வயிறு கழுவும் அவலம்.

இன்னும் எத்தனை காலத்திற்கு அவர்களை அகதிகளாய் வைத்துக்கொண்டு
என்ன அரசியல்  செய்யப்
போகின்றார்கள்..?

வரிசை வீடுகளின் கண்காணிப்புக்கு எந்த நேரமும் இருக்கும் காவல்துறை கண்கள்.

அடிக்கடி அணிவகுப்பு நடத்தி கணக்கெடுக்கும் அவசியம்...

சந்தேகக்கண் கொண்டே அவர்களை அணுகும் அரக்கத்தனம்..

வாழ்க்கை என்னும் கொடிய பாம்பு சுற்றிக்கொண்டே இருக்கிறது அவர்கள் காலை..

இனமென்றும்,
ரட்சகரென்றும் ,
தலைவனென்றும் அரசியல் செய்பவர்கள் இவர்களோடு ஒரு நாள் நின்று பாருங்கள்..

கழிப்பிடமில்லாமல்,
கழிவுநீர் போகாமல் மழைக்கு ஒழுகும் இந்த வாழ்க்கை பிடிக்காமல்தான் கள்ளத்தோணி ஏறத்துணிகிறார்கள்..

குண்டுகள் விழுந்தாலும்,
பங்கர்களில் வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்ந்தவர்கள்..
கோழிக்கூட்டிலும் கொடுமையாய் அடைத்து வைத்து இனமானம் பேசுவது இழுக்கு..

நகரத்து உணவுவிடுதிகளில் பணியாற்றும் வடமாநில மனிதர்கள்..
கட்டட வேலையின் பீகாரிக் குடும்பங்கள்..பானிபூரி விற்கும் இளைஞர்கள், இப்படி எல்லார் முகங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு புன்னகை..
அகதிகள் முகாம்களில் உழன்று கிடக்கும் ஒரு முகத்திலேனும் காணமுடிகிறதா உங்களால்.

ஒருதலைமுறை கூடிவிட்டது புலபெயர்ந்தோர் முகாம்களில்..

பேருந்துகளில் முகாம்களை கடக்கும்போது கவலையாய் இருக்கிறது அந்த முகங்களும் முகாமும்..

வரிசையாய் நீருக்கும் ரேசனுக்கும் நின்றுகொண்டிருக்கும் நைட்டி அணிந்த எம் பெண்கள்..

கவலைகளின்றி டயர் உருட்டித்திரியும் சிறார்கள்...
பயத்துடனே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இளைஞர்கள்..
பரிதாமாய் நினைவுகள் அசைபோட்டுக்
கொண்டிருக்கும் முதியோர்கள்..

என்ன அரசியல் இங்கே நிகழ்ந்து
கொண்டிருக்கிறது..?

ஒரு விலங்கின் இனம் அழிகிறதென்றால் சிறப்பு கவனிப்பு செய்யும் அரசு...
மிச்சமிருக்கும் ஈழத்தின் பிரதிகளை எத்தனைநாள்
கருப்பு படிய வைத்திருக்கப்
போகிறது..?

செத்துக்
கொண்டிருப்பவனுக்கு தண்ணீர் கொடுக்காமல் செத்தவனுக்கு ஏன் பால் தெளிக்கப்
போகின்றீர்கள்..?

உங்கள் அதிகாரக்கனவுகளில் அவர்களின் கண்ணீர் வாழ்க்கையை ஏன் மறந்துபோகின்றீர்கள்..

முகாம்களின் கண்ணீர்த்துளிகள் காத்திரமானது..
ஒரு ஈழத்தாயின் கண்ணீர் கண்ணகியின் கண்ணீருக்கு எந்த அளவிலும் குறைவில்லை.

அரசும் அரசியல்வாதிகளும் இந்த விசயத்திலேனும் விரைந்து முடிவெடுங்கள்..
போதும் அவர்களின் முகாம் வாழ்க்கை..

அவர்களை சுதந்திரமாய் விடுவதால் தமிழகம் ஒன்றும் ஏழையாகிவிடப்
போவதில்லை..
நாட்டின் குற்றங்களில் அவர்களை மட்டும் சந்தேகப்படுவதும் தடுத்துவைப்பதும் நியாயமில்லை...

சொந்த மண்ணின் முகாம் வாழ்க்கை நாம் அவர்களுக்கு செய்யும் அழிக்க முடியாத அவமானம்..

இலங்கையின் யுத்தம் முடிந்ததாய் உணர்வீர்கள் எனில் அவர்களின் விருப்பத்தைக்
கேளுங்கள்..
அவர்களின் பூமிக்கு செல்வதே அவர்கள் விருப்பமெனில் அனுமதியுங்கள்..
இங்கேயே இருப்பது அவர்கள் விருப்பமானால் நம்மில் ஒருவராய் கலந்து வாழ அகதி என்னும் அவப்பெயரை அழித்து சகமனிதனாய் இந்த தேசத்தில் வாழ அனுமதியுங்கள்..

ஊடக,அரசியல்,சமூக பிரக்னை உள்ளவர்கள் இதனை கையில் எடுக்க வேண்டும்.

அகதியாய் வாழ்வது கூட சில சமயங்களில்
பொறுத்துக் கொள்ளலாம்...
ஆனால் அகதியாய் பிறப்பது ரொம்பப் பாவம்..



6 கருத்துகள்:

  1. ஆம்!! அவலம் தான்....வந்தாரை வாழ வைக்கும் காலம் எல்லாம் போய்விட்டது...தமிழ்நாட்டின் முதல்வர் யார்!!!!!?...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் வருத்தமான யாரும் கவனிக்க மறுக்கும் உண்மை

    பதிலளிநீக்கு
  3. ஏதிலியாய் (அகதியாய்) வாழ்வது கூட
    சில சமயங்களில் பொறுத்துக் கொள்ளலாம்...
    ஆனால்
    ஏதிலியாய் (அகதியாய்) பிறப்பது கொடுமை தான்...
    இந்திய, இலங்கைத் தமிழர் நிலை
    மாறவேண்டும்...

    பதிலளிநீக்கு