வியாழன், 15 பிப்ரவரி, 2018

ஐ லவ் யூ டா....

தலைப்பே ஒரு மாதிரி இருக்குல்ல...

நேற்று முகநூல்,வாட்ஸ் அப்,ஊடகம்னு எல்லா இடமும் காதல் காதல்ன்னு படிச்சு,பார்த்து,
கேட்டு "ங்கே" ந்னு ஆயிடுச்சு..
சமூகத்துல நாமளும் காதலைப்பற்றி ரெண்டு வரி எழுதலன்னா ஊர்கூடி விலக்கி எதும் வச்சுட்டா என்ன செய்றதுன்னு தான் யோசனையில ஒரு நாளே போயிடுச்சு..

எல்லாரும் அப்பால போனா ..நாம ஒரு வழில போவோம்..

என்ன பண்ணித்தொலைக்க.. என்னத்த எழுதனும்னாலும் பால்யம் வந்து மொத ஆளா நின்னுக்குது...
எழுதுடா என்னை எழுதுடான்னு..

பனிரெண்டாம் வகுப்பு முடிச்சுட்டு பஸ் ஸ்டாண்ட்ல லாட்டரி சீட்டு விற்க போய்ட்டேன்..
ஒவ்வொரு பஸ்ஸா ஏறி கூவி கூவி விற்கனும்...ஒரு நாளைக்கு பத்து ரூவா சம்பளம்..

திருச்சி பஸ்ல ஏறுனா கொஞ்சம் யாவாரம் நடக்கும்..
பழனி பஸ்ல எல்லாம் ஒன்னும் ஓடாது...
அதனால திருச்சி பஸ் நிற்கும் இடத்துலதான் சுத்தி சுத்தி வாறது..
அதாச்சு முப்பது வருஷம்..

அந்த காலத்துல பஸ்ஸ்டாண்ட் மூலைல ஒருத்தர் கட்டையா குட்டையா சுண்டல் வண்டி தள்ளிட்டு வருவாரு..
பதினோரு மணிக்கு வந்தா ரெண்டு இல்லன்னா மூனு மணிக்கு வித்துட்டு போயிடுவாரு...
வெள்ளைப்பட்டாணி சுண்டல்தான்...
தேவலோகத்துலயே மாங்காய் இல்லன்னாலும் மனுஷன் மாங்காய் இல்லாமல் சுண்டல் இருக்காது..தேங்காயை சின்ன சின்னதாய் கீறி தொன்னைல போட ஆரம்பிச்சுட்டா..
பஸ்ஸ்டாண்ட்ல வழக்கமா இருக்குற சாக்கடை வாடையெல்லாம் ஓடிடும்..
கட்டைக்குரலில் " சுண்டேல்" ந்னு ஒரு சத்தம் கொடுத்தாருன்னா கிடுகிடுன்னு இருக்கும்..
நடத்துனர்,ஓட்டுனர்ன்னு அவசர அவசரமா வாங்கிட்டு ஓடுவாங்க..
கொஞ்ச நெருக்கமா இருந்து கேட்டா..அவர் உலகத்துல இல்லாத கெட்டவார்த்தையும் சுண்டல விட வாசமா பேசுவாரு...
யாரையும் மரியாதன்னு கொடுத்து பேசுனதில்லை...
அவன் இவன் தான்...
அதிலயும் என்னைப் பார்த்தா
இன்னும் நாலுவார்த்தை கூடவரும்...
வாடா...இந்தா போய் திண்ணு...காச நீயே வச்சுக்கடா..நீ என்ன பெரிய ....த்தியா?  போடா போடான்னுவார்...

காலம் ஓடிக்கொண்டிருந்த சக்கர நாள்களில் எப்போது பஸ் ஸ்டாண்ட் போனாலும் போய் சுண்டலோட அவர்ட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு..மன்னிக்கவும் வாங்கிட்டு..வரலன்னா திருப்தி இருக்காது...

ஒருவருடத்தின் முன்னே அவரைப் பார்த்த பொழுது...அதே விபூதிப் பட்டை...விசாரிப்புக்குப் பின்..மகன் சிங்கப்பூரில் இருப்பதாகவும்...போனா போய் பாருடா..என்றார்.

பனை மட்டைக்குப் பதிலாய் சின்னதாய் பிளாஸ்டிக் கரண்டி கொடுத்த போது..
நான் எனக்கு மட்டையே போதுமென சொல்லிவிட்டேன்...

நேற்று காதலர் தின கொண்டாட்டத்தில் உலகமே இருக்க...
நான் பேருந்து நிலையம் சென்றிருந்தேன்..
வழக்கமான சுண்டல் வண்டி இருந்தது..சுண்டல் வாசமும் இருந்தது...
ஆள்மட்டும் வேறாய் ஒரு பையன் இருந்தான்...
அமைதியாய் சுண்டலை வாங்கிவிட்டு அவர் எங்கே என்றேன்...
அப்பா இறந்து ஒரு மாசம் ஆகிவிட்டது என்றான்...
தன்னிச்சையாய் நழுவிய சுண்டலை இறுக்கிப்பிடித்து..எப்படி என்றேன்...
திடீரென என்கிறான்..
"நீ சிங்கப்பூரில் என்ன செய்தாய்"
"ஹெவி டிரைவர்"
"திருப்பிப்போகலையாப்பா"
"இல்லண்ணே..
இது அப்பா தொழில்..
இதையே பார்த்துக்கலாம்ன்னு"
சொல்லிக்கொண்டிருக்கும் போதே பிச்சை கேட்டுவந்த ஒரு மனிதனுக்கு சுண்டலைக்கொடுத்துவிட்டு
பணம் வேண்டாம் என்கிறான்...

பேருந்து நிலையத்தில் சுண்டல் விற்கும் ஒரு வேலைக்காக தன் அயல்நாட்டு வேலையை விட்டு விட்டு வந்ததோடு அல்லாமல்...அப்பாவைப் போலவே இரங்கும்..
அவனிடம் தவிர யாருக்கு நான் சொல்லக்கூடும்?
தம்பி..
ஐ லவ் யூ டா...






7 கருத்துகள்:

  1. உறவுகள் நழுவிக்கொண்டு இருக்கும் காலத்திலும் இப்படியும் ஒரு நேசம்.அழகான அனுபவபூர்வமான சித்தரிப்பு.

    பதிலளிநீக்கு
  2. மரியாதையாக அழகாக பேசுவர்கள் மனதில் விஷமும் கெட்டவார்த்தைகளை வரிக்கு வரி கொட்டுபவர்களிடம் உண்மையான நேசமும் இருக்கிறது இதை நானும் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சி....

    அப்பாவை போலவே இரங்கும் குணம்...நலம் வாழட்டும்..

    பதிலளிநீக்கு
  4. அன்னைக்கே படிச்சேன்...
    கருத்தும் இட்டுப் பார்த்தேன்... முடியலை....
    அப்பாவைப் போல் பையனும்...
    நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
  5. சுண்டல் வண்டிக்காரர் நெகிழ வைத்துவிட்டார்.

    பதிலளிநீக்கு