புதன், 13 ஜனவரி, 2016

வெறுந்தரைக் கனவு...


தைலம்
ஒருபெட்டி.
தாத்தாவுக்கு
பச்சை
இடைவார்.

அம்மாவுக்கு
மின் அடுப்பு
தங்கைக்கு
வாசம் வீசும்
ஜப்பான் சேலை
மாமனுக்கு
மார்ட்டீன் சட்டை.

தம்பிக்கு
சிங்கு கடை
செல் ஒன்று.

கண்ணாடி சூட்கேஸ்
கம்பளி,

கருவில்
விட்டுவந்த
பிள்ளை
விளையாட
சிறு கார்.

கவனமாய்
ஒளிக்கவேண்டும்
கப் வைத்த
உள்பாடி
அவளுக்கு,

கரையும் மிட்டாய்கள்,

கைகளில்
இரண்டு கண்ணாடிக்குடுவைகள்.

ஆண்டுகள்
பல
தொலைத்து
வாங்கியது
இத்தனைதான்.

எல்லார்க்கும்
வாங்கிய
நான்
மீண்டும்
விசா வாங்க
மறந்துவிட்டேன்.

வீட்டுக்கடனிருக்கும்,
விட்டுவந்த
பகையிருக்கும்,

இருக்கட்டும்..

அம்மா
உன்
கைச்சோறும்,

அப்பா எனும்
பிள்ளை..

விட்டென்னைத்
துரத்தாதீர்.

வெறுந்தரையில்
தூங்கவேண்டும்.

வீடு வந்து
சேரவேண்டும்...

















9 கருத்துகள்:

  1. அருமை செல்வா அருமை!!! வேறு வார்த்தைகள் இல்லை சொல்லிட...

    பதிலளிநீக்கு
  2. இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோ!

    கீதா: சென்னை வருகை உண்டா? தெரியப்படுத்தவும்.

    பதிலளிநீக்கு
  3. புலம்பெயர் வாழ்க்கையின் கொடுமை இதற்கெல்லாம் ஈடாகாதுதான் என்றாலும், சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழும் நிலையும் கொடுமையானதுதான் செல்வா! அதை அப்படியே ஓவியம்போல் எழுதி படிப்போர் நெஞ்சில் பசைபோடாமல் ஒட்டிவிடும் பக்குவம் இந்தக் கவிதைக்கு உண்டு. ஒரு சிற்பியைப்போல் கவிதையைச் செதுக்கும் நேர்த்தி உங்கள் கைவரப்பெற்றது பெறுபேறுதான். அதை நல்லவழியிலேயே பயன்படுத்துகிறீர்கள்...தொடர்ந்தும் பயன்படுத்துங்கள். உங்கள் சிம்மாசனம் உறுதியாக உங்களை வரவேற்கும்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. அதெல்லாம் வாக்குறுதி தர முடியாது!உடனே துரத்தவில்லை,
    ஆனால் கொண்டு வந்த பொருட்களுக்கு ஒருவருட கேரண்டி நிச்சயம் இருக்கும் என்பதால் ஒருவருடத்துக்கு பிறகு துரத்தி விடுவோம்ல!

    வெளி நாட்டில் தொழில் புரிபவனில் மன நிலையை நச்சென புரிய வைக்கும் வரிகள். வரிகளில் இருக்கும் சோகம் மனதை அசைப்பது இந்தக்கவிதையில் வெற்றி!

    இன்னும் எழுதலாம் செல்வா சார்எழுதுங்கள்.
    நீங்க ஒன்று சொன்னால் இரண்டு சொல்வது யார்?

    பதிலளிநீக்கு