புதன், 27 ஜனவரி, 2016

முதலுதவி...

அன்பின் சக்திக்கு,
கவிதைகளின் பக்கம் கொஞ்சம் காலாற நடந்ததனால்,உனக்கான கடிதங்களை மறந்துவிடவில்லை நான்.

வாழ்க்கை என்னும் வலிய போராட்ட நதியில் எதிர்நீச்சல் போடும்போதெல்லாம் சிந்தனைகளும்,எழுத்தும் மட்டுமே சிறுதுண்டுமரமாய் என்னை கொஞ்சம் மிதக்கவைக்கிறது.

எழுதச்சொல்லி உனக்கு ஆயிரம் தூண்டுதல்கள் உண்டு எனக்குள்.

காண்பவை,கேட்பவை,வாசிப்பவை எல்லாமே எழுதத்தூண்டுவதைவிட,
அழத்தூண்டுகிறது.
கண்ணின் ஈரம் காய்ந்தபின் எழுதலாம் என்றால்,அது இந்த மனிதநாளில் முடியாது போலிருக்கிறது.

படிக்கும் பிள்ளைகள் தற்கொலை,அடிக்கும் கொள்ளைகள், ஊடக தர்மங்கள், தலைமறைவு வாழ்வு நடத்தும் ஆய்ந்த தமிழறிஞர்கள், விதியென கடந்துபோகும் மனிதர்கள்..அடுத்த ஆட்சிக்காய் ஆயுதங்கள் தேடும் அரசியல் கட்சிகள்..

நிறைய இருக்கின்றன எழுத..

சக்தி...

அரசியல்கட்சிகளின் அரிதாரப்பெட்டியில் புதிதாய் ஒரு அலங்கார சாமான் வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.....வந்தால்...?

பூரண மதுவிலக்கு..

அரசும் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டது, அது சாத்தியமில்லையென...

ஆனாலும் போராடுகிறார்கள்,
கூடுகிறார்கள்,பாடுகிறார்கள்..குடிக்கும் மக்களுக்காய் வெடித்து அழுகிறார்கள்.

அரசியல் வாதிகளின் வாய்களில் மதுவிலக்கு என்னும் வாடை எல்லாக்கேள்விகளுக்குமான பதிலாய் வருகிறது.

தம்மையும்,மக்களையும் மிக எளிதாக ஏமாற்றும் அளவிற்கு அறிவுமிக்க அரசியல் கட்சிகளிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எனக்குள் இருப்பதை உனக்கு அனுப்பிவைக்கிறேன்.

1)அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தமிழ்நாடு தவிர்த்துத்தான் வேறு இடங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்களா?

2)அய்யோ,மக்கள் குடித்து பாழாய் போகின்றார்கள் என அழும் என் தலைவர்களே! இந்த மக்கள் கூட்டத்தில் உங்கள் தொண்டர்கள் யாருமில்லையா?

3) நீங்கள் அழைத்ததும் வேலைமறந்து ஓடிவரும் தொண்டர்கள் உங்கள் மற்ற கட்டளைகளை மதிக்கமாட்டார்களா?

சரி ...நேரடியாகவே கேட்கலாம்..

உங்கள் கட்சிகளின் மற்ற தலைவர்கள்,தொண்டர்கள் யாரும் குடிப்பதில்லையா?

மதுவை ஒழித்தே தீருவேன் என சவுக்கு எடுக்கும் ஒரு கட்சியின் மாநாட்டு நாளில் மதுக்கடை கல்லா நிறைந்ததாய் சொன்னார்களே,
அது சரிதானா?

ஊருக்காய் மதுவிலக்கு வேண்டும் நல்ல மனசுக்காரர்களே..
முதலில் உங்கள் கட்சி கூட்டுங்கள்...

தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் யாவரும் இனி குடிக்கக்கூடாதென முடிவெடுங்கள்..
அப்படி குடித்தால் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும்,அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்தும் பிடுங்கப்படும் என அறிவியுங்கள்.

முதலமைச்சர் கனவுகளில் மூழ்கிக்கிடக்கும் தியாகிகளே..
நீங்கள் சொல்லியும் திருந்தாமல் குடிக்கும் ஒரு தொண்டர் ஒருவரையேனும் நீக்கிவிட்டு ஓட்டுகேட்க வாருங்கள்.

வெற்று கோஷங்களிலும்,
வாய்ச்சவடால்களிலும் மக்களை ஏமாற்றியதும்,ஏமாந்ததும் போதும்.

அவரவர் கட்சிகள் சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கைக் கணக்கிற்கு ..நீங்கள் கட்சிக்குள் மதுவிலக்கு முடிவெடுத்தாலே போதும்..

ஆளும் கட்சி மட்டும் குடித்து டாஸ்மாக் வாழ்ந்துவிடாது..

தன்னைத்திருத்திக்கொண்டுதான்"இனிப்பு தின்னாதே" என நபிகள் நாயகம் சொன்ன கதை உண்டு.

உங்கள் கட்சியையும்,
தொண்டர்களையும் கட்டுப்படுத்திவிட்டு..
பாலாறும்,தேனாறும் ஓட ஆட்சிக்கு வாருங்கள்.

திறந்திருப்பதால் குடிக்கிறார்கள் என்பதெல்லாம் போதை தரும் வாதம்..
சாக்கடைகள் கூடத்தான் திறந்தே கிடக்கிறது...

குடிப்பதென்பது இங்கொரு கலாச்சாரமாய் மாறவிட்டுவிட்டு..... தும்பைப்பிடித்து என்ன செய்ய..?

போதைமனிதன் தெளிவாய்த்தான் இருக்கிறான்.
பேருந்தை மறிக்கும் அவன்..புகைவண்டி மறித்த செய்தியில்லை...

நீங்கள் தான் மதுவிலக்கென்னும் போதையில் இருக்கின்றீர்கள்..

தங்கள் அமைப்புக்குள்ளேயே...
மதுவிலக்கில் வென்றால்...
நீங்கள் ஓட்டுக்கேட்டு வரவே வேண்டாம்.
வாக்குகளே வந்து சேரும்.

மதுவைத்தாண்டியும் சீரழிந்து கொண்டிருக்கிறது சமூகம்..
லஞ்சப்பேய்கள் தலைவிரித்தாடும் காட்சிகள் அறியவில்லையா?
கல்விக் கொள்ளையர் யாரும் கண்ணில் படவில்லையா?
பெருமழை சோகம் தீர்ந்தே போனதா?
எல்லார்க்கும் கல்வி போய் சேர்ந்துவிட்டதா?
நீதித்துறைகளில் நீதி கிடைக்கிறதா?

எல்லாம் பாருங்கள்..எங்கள் தலைவர்களே...

செய்வார்களா சக்தி?

அன்புடன்.
செல்வக்குமார்.

10 கருத்துகள்:

  1. கவனிக்க வேண்டிய விசயங்கள் ஏராளம் உள்ளன...

    பதிலளிநீக்கு
  2. கட்சி தலைவர்களுக்கு இக்கடிதம் போய் சேரட்டும். நிறைய யோசிக்க வைக்கிறது.
    பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  3. மதுவை ஒழிப்பேன்என்று சொல்பவர்கள் ஆட்சிக்கு வந்தாலும்
    மதுவை ஒழிக்கப் போவதில்லை
    வெற்று வாக்குறுதிகள்,
    மதுவிற்கு முன்னதாய்
    இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன். தலைவர்களின் கொள்கைப் பேச்சுகளை அந்தத் தலைவர்களே மதிப்பதில்லை! அப்புறம் அல்லவா அவர்களின் தொண்டர்கள் மதிப்பார்கள்!

    பதிலளிநீக்கு
  5. மதுவை ஒழிப்பேன் என்று சொன்ன எந்த கட்சியும் ஆட்சிக்கு வந்தபின் செய்வதில்லை. மது எதிர்ப்பு போராட்டம் என்று அதிலும் ஆதாயம் தேடும் சிலரையும் பார்க்க முடிகிறது.....

    கரந்தை ஜெயக்குமார் ஐயா சொல்வது போல இலவசங்கள் ஒழிக்கப்படவேண்டும்..... நம் மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. சக்திக்கு கடிதம் எனும் பெயரில் நியாயமான கேள்விகள்.செவிடன் காதில் ஊதிய சங்காய் போகும்! அருமை,இன்னும் எழுதுங்கள் செல்வா சார்!

    பதிலளிநீக்கு
  7. சவுக்கடியான கேள்விகள் நண்பரே அருமை பதில்தான் கிடைக்காது

    பதிலளிநீக்கு
  8. என்னய்யா... அருமை ராசாத்திக்கு அன்பா எதோ எழுத்து இருப்பீங்கன்னு படிக்க வந்தா? அரசியல்வாதிகளின் அடிமடியில் கையை வைக்கிறிங்களே..
    இப்படி ஒரு சட்டம் போட்டா.. ஒரு கட்சியில் ஒரு தொண்டன் சேர மாட்டான்.
    நல்ல ஒரு பதில் கிடைக்காத கேள்வி

    பதிலளிநீக்கு
  9. குடிகாரர்களின் பேச்சுகள்தானே இதெல்லாம்...குடிகாரனின் பேச்சை நம்ப முடியுமா? தெளிவாகும் போது தான் என்ன பேசினோம் என்பதே அவனுக்குத் தெரியாதே..அதே கதைதான்..

    இறுதியில் கேட்கப்பட்டக் கேள்விகள் அனைத்தும் நம் மக்கள் எல்லோர் மனதிலும் இருக்கின்றதுதான். ஆனால் செயல்முறை என்பது வேறாயிற்றே. புரட்சி வந்தாலொழிய மாற்றங்கள் சாத்தியமில்லை...

    இந்தக் கேள்விகளுக்கு அதுவரை பதில்கள் இல்லை....நாம் எல்லோருமே பதில் தரமுடியாத தோல்விக்காரர்கள்..

    பதிலளிநீக்கு
  10. உண்மை தான் மது விலக்கை நம் நாட்டில் கொண்டு வரவேண்டும் ஐயா.நான் சமீபத்தில் அரசு முதலீடு பற்றி படித்தேன் அதில் அரசு அதிகப்படியான முதலீடு மது மற்றும் புகையிலையில் செய்துள்ளது என்று.ஆனால் நம் நாட்டில் அரசு மற்றும் அரசியல் இரண்டுமே கட்டாயமாக தரவேண்டிய இலவசம் கல்வி,மருத்துவம்,குடிநீர் மற்றும் மின்வசதி கட்டணம்.இதில் கல்வி இலவசம் குறிப்பிட்ட வரை(தரமானதில்லை)மருத்துவம் இலவசம் ஆனால் முழுமையாக இல்லை.அதற்கு அவர்கள் மட்டும் காரணம் அல்ல நாமும் தான் முதலில் நம் நாட்டில் இலவசம் முறையை தடுக்க வேண்டும் இதனால் நம் நாடு மேலும் ஏழை ஆகுகிறது ஐயா.எந்த அரசியல்வாதிகளும் இலவசங்களை தனது சொந்த செலவில் செய்வது இல்லை.இந்தியா என்ற பெயரில் உலக வங்கியில் கடன் வாங்கிக் கொண்டு தருகிறது.இன்று பிறக்கும் குழந்தைக்கூட ஒரு கடனாளியாக பிறக்கிறது.நாம் இதற்கு வட்டிக்கே பொருளை வாங்கலாமே..?? எதற்கு இலவசம் என்ற ஒரு பொய் விளம்பரம்.இது மட்டுமா ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் புது ஓட்டுக்கு 1000 ரூபாய் என்றால் போதும் நம் மக்கள் அலறியடித்து ஓட்டு போட்டுவிட்டு பின்பு புலம்பூவார்கள்.நமது ஓட்டு என்பது என்பது விலைமதிப்பற்றது அதை பணத்து ஆசைப்பட்டு இழந்துவிட்டால் நமக்கு எதற்கு மக்களாட்சி..?? காசு மட்டும் போதுமே.

    இது மட்டுமா அரசின் கல்வி தனியார் கையில்,தனியார் டாஸ்மார்க் அரசு கையில்.இதற்கு நாம் சாட்சி.இன்னும் எங்கு பார்த்தாலும் ஊழல்,இலஞ்சம் மற்றும் ஏமாற்றம்.நாம் கொடுத்து பழகிட்டோம் அவர்கள் வாங்கி பழக்கிட்டார்கள்.

    அருமையான பதிவு ஐயா.என் மனம் இதுக் குறித்து ஆவேசம் அடைகிறது காரணம் நம் மக்கள் ஏன் இதுக் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டும் மாறவில்லை என்று தான் ஐயா.

    நன்றி ஐயா நல்ல பதிவு.நாளையாவது நமக்காக விடியட்டும் ஐயா.

    பதிலளிநீக்கு