சனி, 7 மே, 2016

இவர்களாலும்...

அன்பின் சக்திக்கு,

ஆற்றமுடியாமல் அங்கங்கே விட்டெறிந்த வரிகள் பலரால் வாசிக்கப்பட்டதும்,
நேசிக்கப்பட்டதும் அறிகிறேன்.

அன்பு நண்பர் மதுரைத்தமிழன் அவற்றை ஒரு பதிவாகவே எழுதி ஊக்கப்படுத்திவிட்டார்.

அது வரிகளின் வலிமையல்ல..அறிவேன்...
வலி தான்.

ஒவ்வொருவருக்கும் விடியலில் கவலைகளும் தான் கண் விழிக்கின்றன. அதையும் தாண்டி யோசிக்கும் போதுதான் மலைப்பாய் இருக்கிறது செய்திகள்.

இந்திய நாட்டின் தேர்தல் அமைப்பு உலகின் முன்னோடியாய் இருக்கிறது..மகிழ்ச்சி.

தேர்தல் காலங்களில் அத்தனை நடைமுறைகளும் பாரபட்சமின்றி நிகழ்கின்றன.
பணப்போக்குவரத்தை
கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாய் கவனிக்கிறார்களாம்.

அங்கே ஐந்து கோடி,இங்கே எட்டு கோடி என்கிறார்கள்.

ஆஹா..புல்லரிக்கிறது அதிகாரிகளே...

நீங்கள் பதவிக்கு வந்து ஒருசில மாதங்கள் தான் ஆகிறதா?
அல்லது அவர்களிடம் இப்போது தான் பணம் வந்து சேர்ந்ததா?

என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இத்தனை நாளாய்?

பணப்போக்குவரத்தை கண்காணிக்கக்கூடாதென உங்கள் கைகளை யாரேனும் கட்டிப்போட்டிருந்தார்களா?

வியப்பாய் இருக்கிறது உங்கள் வேலையின் ரகசியம்...

ஒன்று நிச்சயம் சக்தி!

இந்த நாடு கெட்டது அரசியல்வாதிகளால் மட்டுமல்ல.
எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கும்,வாங்கும் ஊதியத்துக்கும் மாறாக, மனிதாபிமானமுமற்ற அதிகாரிகளாலும் தான் கெட்டு குட்டிச்சுவராய்ப்போனது.

அரசியல் தலையீடென காரணம் சொல்வார்கள்.

ஊழலுக்கு துணைபோக மாட்டேன் என இவர்கள் உறுதியாய் நின்றால் எத்தனை பேரை கொன்றுவிடுவார்கள் அரசியல்வாதிகள்?

அப்படி நேர்மையான அதிகாரிகளும் உங்களிடமே இல்லாமலில்லை...

காமராஜர் கண்ட கனவு மதிய உணவு என்றாலும்...நெ.து சுந்தரவடிவேல் என்னும் அதிகாரியின் திட்டமிடலே அதன் சாத்தியம்....
கட்டிமுடியாத திரையரங்கத்திற்கு உரிமம் தராத பசுபதி என்னும் ஆட்சியர் இங்கேதான் இருந்தார்...
இவ்வளவு ஏன் சகாயம் என்னும் சக அதிகாரியை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.

சாலைகள் பல்லிளிப்பதாய் அர்சியல்வாதிகளை சாடுகிறோம்..
சரியாயிருக்கிறது என சான்றளித்த அதிகாரியை என்ன கேட்கப்போகிறோம்.

கடந்த வார நாளிதழ்களில் தமிழகத்தின் பல ஆட்சியாளர்கள்,காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கை என்கிறார்கள்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும் காரணம் என்னவாயிருக்கும்..

ஒருதலையான செயல்பாடு,அப்படி ஒரு சந்தேகம்,அல்லது செயல்பாடற்ற தன்மை என இவற்றில் ஒன்றாய் இருக்கலாம்.

ஒரு மாநிலத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்களா?
சந்தேகத்துக்கு உரியவரெனில் இவர்கள் கையில்தான் இத்தனை நாள் அதிகாரம் இருந்ததா?
தேர்தலுக்குப்பின் மீண்டும் வந்துவிடுவார்களே அது சரியா?
செயல்பாடற்றவரெனில் எதற்காக வேலையில் வைத்திருக்க வேண்டும்?

அரசியல்வாதிகளைத் திட்டுகிறோம்.
வாக்குகள் இருக்கிறது அவர்களை மாற்ற..

இந்த அதிகாரிகளின் அதிகபட்ச தண்டனை என்ன தெரியுமா?
இடமாறுதல்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல..இந்த தேசத்தின் சாபம்..

படித்த ,மோசமான அறிவுள்ள,சட்டத்தின் இடுக்குகளை சரியாகத்தெரிந்து சாதிக்கிற,
அரசியல்வாதிகளுக்கு சொல்லிக்கொடுத்து தூண்டுகிற இவர்களும் தான்.

மாற வேண்டும் சக்தி..

"தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா..."

ஆனாலும்,

"திருடராய்ப் பார்த்து
திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது"

அன்புடன்,
செல்வக்குமார்.

7 கருத்துகள்:

  1. படித்தவன் சூது செய்தால் போவான் போவான் ஐயோன்னு என்று பாரதியாராய் மாறி சபிக்கத்தான் தோன்றுகிறது :)

    பதிலளிநீக்கு
  2. அரசியல்வாதிகள் மட்டுமல்ல..இந்த தேசத்தின் சாபம்..

    படித்த ,மோசமான அறிவுள்ள,சட்டத்தின் இடுக்குகளை சரியாகத்தெரிந்து சாதிக்கிற,
    அரசியல்வாதிகளுக்கு சொல்லிக்கொடுத்து தூண்டுகிற இவர்களும் தான்.

    உண்மை நண்பரே உண்மை

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு வரிகளும் உண்மையை உரக்கச் சொல்கிறது. சரியான சாட்டையடி!
    த ம 3

    பதிலளிநீக்கு

  4. தூங்குபவனை எழுப்பிவிடலாம் எளிதில் ஆனால் தூங்குபவன் போல நடிப்பவனை எளிதில் எழுப்பமுடியாது என்பது போல திருடன் திருந்திவிட முடியும் ஆனால் நல்லவன் போல நடிக்கும் திருடன் திருந்த வாய்ப்பில்லை. ஆனால் ஒரு நாள் புரட்சி வரும் அப்போது எல்லாம் மாறிவிடும் என்ற ஒரே ஒரு நம்பிக்கைமட்டும் என்னிடம் உள்ளது

    பதிலளிநீக்கு
  5. உண்மையின் நிலைப்பாடு மாற்றம் வருமா ?

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பகிர்வு. அனைவருக்கும் ஆசை அதிகமாகி விட்டது - பொன், பொருள், பதவி என அனைத்திற்கும் ஆசை.....

    அத்தனைக்கும் ஆசைப்படு என்பது பலருக்கும் பொருந்துகிறது.

    பதிலளிநீக்கு
  7. அருமையான கருத்துகள் கொண்ட பதிவு செல்வா. சரிதான்... அதிகாரிகள்தான் முதல்காரணம் எனலாம். அதாவது அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்கள் அரசியலாளர்கள் ஆனாலும் அவர்களும் தான் காரணம். அதிகாரிகள் பலரும் சொல்லும் மேலிடத்து உத்தரவு என்பது எதைக் குறிக்கிறது? அந்த மேலிடம் எது? ஆட்சியில் இருக்கும் அமைச்சரா இல்லை மேலிடத்தில் இருக்கும் அதிகாரியா

    கீதா

    பதிலளிநீக்கு