புதன், 31 ஆகஸ்ட், 2016

பெண்ணின் பெருந்தக்க... வெற்றுக்கூச்சல்...

அன்பின் சக்திக்கு,

கல்வி என்பது விலை அதிகமாகிப்போன சூழலில் நீ எப்படி படிக்கிறாய் என்பதை விட, என்ன பாதுகாப்பில் இருக்கிறாய் என்பதே இப்போது கவலையாய் இருக்கிறது.

என்ன நடக்கிறது இந்த தேசத்தில்?
உயிரென வளர்க்கும் மகள்கள் மயிரை இழந்து மொட்டையாக்கப்படுகிறார்கள்.
முடி போன வருத்தம் தீரும் முன் உயிர் போகும் செய்திகள் கொல்லாமல் கொல்கிறதே?

ஒரு மரக்கட்டையில் அடிவாங்கிச் சாகவோ..
சீவிச்சிங்காரித்து கனவுகள் வளர்த்து கல்லூரி அனுப்புகிறோம்?

காதலெனும் மயக்கத்தில் கத்தியெடுத்து வெட்டவும், அமிலங்களை வீசவும் எப்படி முடிகிறது..

வெட்டினார்களா தெரியாது.. செம்மரம் வெட்டியதாய் சுட்டுக்கொள்கிறார்கள்.

மகளே..
இந்த நாட்டில் மரங்களுக்கு உள்ள பாதுகாப்பு மகள்களுக்கு இல்லையா?

என்ன சட்டங்கள்..
இருப்பவனுக்கு ஒன்றும் இல்லாதவனுக்கு ஒன்றுமாய்?

மரண தண்டனை எனக்கு உடன்பாடில்லை என்றாலும்..
இவர்களைக் கொன்றாலும் தீராது ஆற்றாமை...

பூக்களையா பொசுக்குவது..?
காதலிக்க மறுத்ததாய்
கத்தி எடுப்பவன் எப்படி காதல் அறிவான்?

வார்த்தைகள் தேடிச்சலிக்கிறேன்..
வரவே இல்லை..
சிந்திக்கிடக்கும் ரத்தம் உறைகிறது நெஞ்சுக்குள்..
பென்சில் சீவும் போது வந்துவிடும் சில துளிரத்ததுக்கே பதறிவிடும் அப்பன்..
எப்படிப்பார்ப்பான் உயிர் ஓடிக்கிடக்கும் கோரத்தை?

பெண்ணின்
பெருந்தக்க யாவுள?
பெண்ணே கடவுள்..
அன்னை பூமி..
நதிகள் யாவும் பெண்ணின் பெயர்கள்..

நாசமாய்ப் போக...

இந்தப்பெருமைகளில் அணுவளவேனும் வந்து அணைத்துக்
கொண்டிருக்குமா அவள் கட்டைகளில் அடிவாங்கும் போது.?

பேராலயத்துக்குள் கொல்லப்படுகிறாள்.
ரயில் நிலையத்தில்..
கல்லூரி வளாகத்துள்..
அவள் நடக்கும் போது,
படுத்திருக்கும் போது,
கழிப்பறை போகும் போது?
இனி அவளை எங்கெல்லாம் கொல்லுவது?
செத்துப் புதைத்தாலும்
கல்லறை விடுவார்களா தெரியாது..?

மேசைகள் தட்டுவதும்,
வெளியே போய் உள்ளே வருவதும்,
வீதியின் முனைகளில் இருந்து வியட்னாம் வெற்றியை கொண்டாடுபவர்களும்,
தமிழன்,தெலுங்கன்,வந்தேறி என நீட்டி முழக்குவோரும் மூட்டைகட்டி வைய்யுங்கள்..

பெற்றபிள்ளைகள் பெட்டியில் வைத்து சவமாக்கிப் பார்த்து நிற்கையில் வெட்டியாய் இருந்து விட்டு...

நாடு என்ன?
அரசு என்ன?
நின்று என்ன?
முழங்கி என்ன?

ஒன்றுமில்லை..
ஒன்றுமில்லை..

அன்புடன்.
செல்வக்குமார்.





11 கருத்துகள்:

  1. மொத்த சமுகத்தின் மனசாட்சி, மேல்-கீழ் எனும் படிநிலையால் ஆனா, ஒடுக்குமுறை உளவியல் கொண்டதாக உள்ளது.
    ஆணுக்கு பெண் அடிமை, படிக்காதவர் படித்தவரை விட தாழ், இளையவர் முதியவர்களுக்கு கட்டுபடவேண்டும். சாதிப் படிநிலை, பணிகளில் தொழிலாளர் தாழ்வு, அரசியலில் மாவட்டம் ஒன்றியம் இப்படி எல்லாவற்றிலும் உயர்வு தாழ்வு... என்னும் பாசிசப் பண்பு கொண்ட சமுக ஏற்பாடு கொண்ட சமுக உளவியல் பாங்கினை மாற்றாமல் ஜனநாய பண்பாடு உருவாக்கமால்... கெட்டிபடுத்தபடும்- முரண்பாடு கொண்ட சமுகத்தை மாற்றாமல்... புலம்புவதை தவிர... என்ன செய்துவிட முடியும்... ஆற்றாமை என்னும் எருமை மாடு அரசு என்ன செய்யும்...?

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்கிடக்கும் ரத்தம் உறைகிறது நெஞ்சுக்குள்..
    பென்சில் சீவும் போது வந்துவிடும் சில துளிரத்ததுக்கே பதறிவிடும் அப்பன்..
    எப்படிப்பார்ப்பான் உயிர் ஓடிக்கிடக்கும் கோரத்தை?
    வேறென்ன சொல்ல?
    நான் கவிஞன் என்பது மறத்துப் போய்,
    ஒரு தந்தையாய்த் தவிக்கிறேன்.
    ஒரு மனிதனாய் வெட்கமும் வேதனையும் கவ்வுகின்றன செல்வா

    பதிலளிநீக்கு
  3. Meera.selvakumar ayya, kavidhaiyai vasika vasika pongiya vedhanaiyaiyum, kanneeraiyum Enna solla?? Endha urudhiyana samooga padhugappil vazhgirom endru ninaikum podhu romba bayamaga ulladhu. Urudhiyatra indha padhugappu sattangal Enna kizhithu vida pogiradhu endra ungal aadhangam kalandha ungal varthaigal irakkamatra manadhaiyum valikka seiyyum. Arumaiyana sindhanaiyil nigazhkaala nijathai vetta veliyyaki kaatiyulla ungal kavidhaiku Penn kulathin nandriyaal vilaiyum kanneerai kaanikkaiyakugiren. Melum ezhudha varthaigal indri manasu kanathu......vedhanaiyal ....mudiyavillai Ayya. Ungal ezhuthukkaluku nandri.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்நாடு பீகாராக மாறிவிட்டதா என்ன? பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லையென்றால் மிகவும் கேவலமாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  5. இந்த நாடும் நாட்டு ம(மா)க்களும் நாசமாகப் போகட்டும்.
    விஜயன்

    பதிலளிநீக்கு
  6. நானும் ஒரு ஆண் என்று சொல்ல வெட்கப்படுகிறேன். பெண்களின் இந்த நிலைக்கு காரணமான ஆண்களைக் கழுவிலேற்றும் காலம் வாராதா. பெண்கள் நிலை மாறாதா. இவனைப் போன்றவர்களைப் பெற்றவர்கள் கூனிக்குறுக வேண்டும் அவமானத்தால் ஏனெனில் இவர்களுக்கும் இதில் மிகப்பெரிய பங்குண்டு. மனம் தாங்கமுடியவில்லை.
    விஜயன்

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை, பெண்ணைப் பெற்றவர்களெல்லாம் துயரத்தில் தவிக்கும் நாட்கள் என்று மறையுமோ? இம்மூடர்களின் அழிவை எதிர்நோக்கும் நாள் வர வேண்டுகிறேன்> பெண் தெய்வம், தாய் நாடு, தாய் மொழி என்று பெண்ணை பாராட்டிப் பேணி வாழ்த்திய நிலை மறைந்து பெண்ணுக்காகக் கண்ணீர் சிந்தும் நிலை உருவாகியிருப்பது வருத்தத்துடன் வேதனையை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. வேதனை...
    மரங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு மலர்களுக்கு இல்லைதான்... என்ன கொடுமை...
    கொலை செய்பவனின் மனதில் எப்படி உண்மைக்காதல் இருக்கும்....
    வலி...

    பதிலளிநீக்கு