வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஜோக்கர்...சிரிக்கமுடியவில்லை

நீண்டநாள் புண்ணின் மேல் படரும் மென்தோலை  அரிப்புக்காய் சொரியும் போது அப்படி ஒரு சுகமும்...
முடிந்தபின் வரும் எரிச்சலும் எப்படியோ
அப்படித்தான் இருக்கிறது ஜோக்கர் படம் பார்த்த எனக்கு.

கன்னங்கள் பழுக்க பழுக்க பளார் பளார் என  வசனங்கள் விழும்போது உற்சாகம் குதியாட்டம் போடுகிறது... வெளியே வந்தால் அடப்பாவமே..
எல்லாமே நம் மீதே விழுந்த அடிகளாய் வலிக்கத்தொடங்குகிறது.

புரையோடிப்போய் சமூகத்தின் ஒரு அடையாளமாய் மாறிப்போன ஊழல்,சாதி,மதம்,அரசியல் பற்றிய கேலிகளை மிக இலாவகமாக கையாண்டிருக்கிறார் வசனங்களில்.

கண்களின் அருகே மெல்லிய சுருக்கங்கள் தெரியும் தர்மபுரி மாவட்டத்துக்கேயான முகம் நாயகனுக்கு நச்சென பொருத்தம்...

அழும் காட்சிகள் நிறைந்த படத்துக்கு ஜோக்கரென பெயர்,
வறண்ட பிரதேசத்தின் தண்ணீர் விற்கும் நிறுவனம், மணக்கா வாழ்வின் பெண்ணுக்கு  ரோஜாத்தோட்டமென அழகிய முரண்.

மக்கள் ஜனாதிபதியாய் மனசால் வாழும் நாயகன் பப்பிரெட்டி பவனாய் பேசுவது ராஜுமுருகனின் லூசுப்பையன் சாயல்.

திரைப்படம் நம் வாழ்வில் நாம் செய்ய முடியாததை யாரேனும் செய்வதாய்க்காட்டி சிறிதுநேர மயக்கமூட்டுவது.
ஒரு தனிமனிதன் 10 பேரை அடிப்பதும்...துப்பாக்கி குண்டின் சுழற்சியைக் காட்டுவதும்,
சுற்றிலும் ஆட காதல் செய்வதும் காலம் காலமாய் தொடர்வது இப்படித்தான்.

ஜோக்கரும் கூட அப்படித்தான் நம் கவனம் ஈர்க்கிறது.

குண்டும் குழியுமான சமீபத்திய சாலையில் நாம் பயணித்துக்கொண்டே மனசுக்குள் திட்டுவதை திரையில் காணும் போது அத்தனை மகிழ்ச்சி.

மருத்துவமனைகளின் அலட்சியம்,
விலங்குகளின் மேல்  செலுத்தப்படவேண்டிய கருணை,
போராட்டங்களுக்கான புதிய யுத்திகள் என விரிந்திருக்கிறது திரைப்பூ...

கழிப்பறை மட்டுமே முழுசுமாய் இயங்கியிருக்க வேண்டிய படம்..
கட்சிக்கூட்டம் தொடங்கி காந்திவேடப்போராட்டமென கதம்பாயிருக்கிறது.

உண்மைக்கதாநாயகனாய் சித்தரிக்கப்பட வேண்டிய பொன்னூஞ்சல் கதாப்பாத்திரம் உருவத்தில் ஏதோ ஒரு ஒற்றுமை தேடியிருப்பதால் முழக்கமிடுபவராகவும்,
கதையை முடித்துவைப்பவருமாக  இருந்துவிடுகிறார்.

மக்கள் ஜனாதிபதி முகநூலில் போராட்டம் அறிவிப்பது வரமா சாபமா தெரியவில்லை.

வசனங்களில் தெறிக்கும் தீ கதையினில் எரியவில்லை....
காட்சிப்படுத்தலில் இருந்த முனைப்பும் அழகும் கதைப்படுத்துதலில் இருந்திருந்தால் ஆட்டத்தின் சீட்டுகளில் 13ம் ஜோக்கராகவே இருந்திருக்கும்.

தர்மபுரியின் குக்கிராமத்திற்கு உண்மை ஜனாதிபதி வருவது உள்ளூர் அமைச்சர் வருவதினும் குறைந்த அளவில் காட்டப்படுவது,
நாயகனின் போராட்ட காலத்திற்கான பொருளாதாரப் பிண்ணனி,
நாயகனின் துணைக்கு வரும் ஒரு பெண்ணின் மற்றொரு முகம், காவல் துறையின் முகத்தை காட்டியதில் முரண்பாடு. (அவ்வளவு எளிதாகவா போராட விட்டுவிடுவார்கள் போலிஸ்காரர்கள்.?)

என்ன சொன்னாலும்

வசனங்கள் நம்மை வசப்படுத்திவிடுவது மறுக்க முடியாது..
சகல கட்சிகளையும் சகல காட்சிகளிலும் வறுத்தெடுப்பதும் புரிகிறது.

பாத்திரப்படைப்புகளில் நாயகனுக்கு அடுத்ததாய்
பவா வின் தேர்வு.
பொதுவாய் படைப்பாளிகள் திரைக்கு வரும்போது கோமாளிகள் போல் பார்த்துப்பழகிய கண்களுக்கு பவாவின் இயல்பான பேச்சு,உடல்மொழி அற்புதம்,
பொன்னுஞ்சலாய் வரும் ராமசாமியின் வசனங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாகிறது.

காட்சிப்படுத்தலில் செழியனின் கேமரா கண்களுக்குள்ளேயே காட்சிகளைக் கடத்துகிறது...

நோய்வாய்ப்பட்ட நாயகியின் பராமரிப்பு,நீதிபதியின் ராசி பற்றிய விசாரிப்பு,
கதையின் முடிப்பில் மட்டும் வலிந்து வரும்  தோழர் என ஒட்டாததாய் நிறைய..

குக்கூ என்னும் மெல்லிய உணர்வைத்தூண்டிய படமெடுத்த ராஜுமுருகன் நீண்ட ஆலோசனைகளுக்கும்,
ஆவலோடும் படமாக்கியிருக்கும் இந்த ஜோக்கர் வசனங்களுக்காகவும்,
காட்சிப்படுத்தலுக்காகவும் பார்க்கலாம்.

பொதுவாய் நான் இசை,.மற்றும் பாடல்களை கூர்ந்து கவனிப்பதில்லை..
வழக்கமான விமர்சகர்கள் போல அதைப்பற்றி எழுதவும் தெரியவில்லை..

என் விமர்சனங்கள் உங்களில் யாரையேனும் வருத்தப்பட வைக்குமெனில் மன்னிக்கவும்...

நான்.
செல்வக்குமார்.
7 கருத்துகள்:

 1. நல்லதொரு விமர்சனம். சில இடங்களில் நம்மிருவரின் கருத்துக்களும் ஒத்துப்போவதில் மகிழ்ச்சி. பொன்னூஞ்சல் கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது நமக்குப் பழகப்பட்ட ஒருவரின் முகம் ஞாபகத்திற்கு வருகிறது.
  வசனங்கள் தான் படத்தின் பலம். கழிப்பறைக் கட்டுவதிலும் ஊழலா! என்ன உலகமடா இது?

  பதிலளிநீக்கு
 2. அருமையான விமர்சனம். நன்றி செல்வக்குமார்.

  பதிலளிநீக்கு
 3. உண்மையைச் சொல்லியே சிரிக்க வைப்பது பெரிய கலை! ரஜினிமுருகன்களுக்கு மத்தியில்அதைச் செய்து வென்ற ராஜூ முருகன் மிகுந்த பாராட்டுக்குரியவர். சிரிப்போம், சிந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 4. இன்னும் பார்க்கவில்லை அண்ணா...
  அருமையான விமர்சனம்...
  உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம் அழகு...

  பதிலளிநீக்கு