ஞாயிறு, 9 அக்டோபர், 2016

ஆயுதபூஜையும்,அவித்த சுண்டலும்..

பழசையே எழுதாதப்பா...
எப்ப பார்த்தாலும் நடந்ததையே சொல்லிட்டு

இருக்கியேன்னு என்னை நானே கேட்டாலும்....
சொல்லித்தான் சில ஆகவேண்டியிருக்கிறது.

இந்த ஆயுத பூஜைன்னு ஒன்னச் சொல்லன்னா கட்டையும்,சுண்டலும் வேகாதென்பதால் இத்தோட முடிச்சுக்கலாம்..

அப்பா ஒரு கூட்டுறவு அங்காடில வேலை பார்த்தார்.
அரிசி,உப்பு,புளி,மிளகாயிலிருந்து,துணிமணி வரைக்கும் விற்கப்படும் ஆலைத்தொழிலாளிகளுக்கான பண்டக சாலை அது..

ஆயுத பூஜைக்கு முதல் நாளே மாலையில் அங்காடிக்கு சென்றுவிட வேண்டும்..

வருடம் முழுதும் சேர்ந்த எண்ணெய்ப் பிசுக்குடன் இருக்கும் தராசும் படிக்கற்களும் குவிந்திருக்கும்.
புளி கொஞ்சம் தருவார்கள்..சீயக்காய்த்தூளுடன்.

தேய்க்கத்தேய்க்க கருப்பு அழியாத வஸ்து அது.
கழுவி முடித்ததும் கைகளில் வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் பிசுக்கு இரண்டு நாள் இருக்கும்.
கூட்டி,ஒட்டடை அடித்து இரவு பத்தாகி விடும்.

அடுத்தநாள் காலை விடியும் முன்னே ஓடிவிடுவேன் வாசலுக்கு...
முதல் நாள் கழுவியதற்காக பொரி மூட்டைகள் அவிழ்த்து மற்றவை கலக்கும் அறைக்கு அனுமதிப்பார்கள்.
பத்துக்குப்பத்து அறையில் முழுக்க பேப்பர் விரித்து மூட்டைகளை பிரித்து கொட்டுவார்கள்...
சர்க்கரைமூட்டை,பொட்டுக்கடலை,அவல் என ஒரு குறுமலையாய் இருக்கும்.
சின்ன கைகளை வைத்து கலக்கும் போது அது வாழ்நாளின் உச்சகட்ட சாதனையை அடைந்ததாய் இருக்கும்..

சூடம் ஏற்றி,சாம்பிராணி காட்டி பொரி வழங்க ஆரம்பிப்பார்கள்..
கூடைகளில் நிரப்பி இருகைகளிலும் அள்ளி அள்ளிப்போட வரிசையாய் வாங்கிப்போகும் மனிதர்கள்.

உள் பனியன் வைத்திருந்த பாலித்தின் கவர் ஒன்றில் நிரம்பி வழியும் பொரியோடு வெளியே அத்தனை கண்களும் நம்மை பார்க்கும் போது ஆஸ்கர் விருது வாங்கியவர் கூட அத்தனை கர்வப்பட்டிருக்க மாட்டார்...
எல்லாப் புகழும் கழுவியதற்கே...

வீட்டில் வந்தால் தம்பிகள் பொரிவாங்கி வந்திருப்பதை ஒப்பிட்டு சண்டை ஆரம்பித்து விடும்.
பொரி காக்க இடம் தேடி பரண், அலமாரி, சாமான்கள் வைக்கும் அறை என அடைக்கலமாகி விடும்.

அடுத்து நாலு இடங்கள் போகவேண்டும்..ரயில்வே ஸ்டேசனில் சாயங்காலம் தான் தருவார்கள்.  போலீஸ் ஸ்டேசனில் இப்ப கொடுத்து விடுவார்கள் என ஓடி நிற்கவேண்டும். அங்கு மட்டும் சத்தம் போடாமல் வரிசையாய் நிற்க வேண்டும்..போலிஸ் ஸ்டேசனாச்சே..
போட்டுட்டாய்ங்கன்னா?

அடுத்து மைக் செட் வைத்திருக்கும் லத்தீப் சார் வீடு...
சாமி கும்பிட்டு ஒரு கை பொரி...

தீப்பட்டிக்கம்பெனிகளில் அவர்கள் விருப்பம் போல் தருவார்கள்.
நமக்கு அந்த வருடம் அதிர்ஷ்டம் இருந்தால் கூடுதலாய் சுண்டல்,அரை மூடி தேங்காய் கிடைக்கலாம்.

முன்னிரவுகளில் வாங்கிய எல்லாப் பொரிகளையும் சேர்த்து அளவும்,அழகும் பார்த்து கொஞ்சமாய் தின்றுவிட்டு ஒளித்து வைத்து விடுவோம்.

வீட்டில் திருட்டு பயம் அதிகம்...தம்பிகள் திறமை சாலிகள் ...
இரண்டுகால் எலிகளாய் எப்படியும் கண்டுபிடித்து கைப்பற்றி விடுவார்கள்..
அடுத்த நாள் பொங்கும் அழுகை தீபாவளிக்கனவுகளில் தான் அடங்கும்..
ஆயுத பூஜை என்பது சின்ன தீபாவளி...

என் அலுவலக ஆயுத பூஜைகளில் என் பொருட்களை இன்னும் நானே கழுவி சுத்தம் செய்து அடுக்கி வைக்கிறேன்..
என் பிள்ளைகளை விடுவதில்லை..
ஒவ்வொரு வருடமும் அதைச்செய்யும் போது நான் அந்த நாளில் என் பிள்ளைப்பிராய நாட்களை மீட்டெடுக்கிறேன்.

எத்தனை லாலாகடை இனிப்புகளை நீங்கள் பொரியின் பக்கத்தில் வைத்தாலும் நான் பொரியின் பொறியில் தான் மாட்டுவேன்.

என் அலுவலகப்பிள்ளைகளிடம் சொல்லுவதுண்டு பொரி அதிகம் எடுத்துக்கொண்டு போங்கள் என...

பூஜையில் வைத்திருக்கும் சுண்டலையும்,பொரியையும் அடுத்த நாள் பார்க்கும் போது அப்படியே இருக்கும்...

எடுத்துத்தின்ன கடவுளும்,என் தம்பிகளும் தூரம் தூரமாய் இருக்கிறார்கள்..

3 கருத்துகள்:

  1. அடடே நல்லதொரு சுவாரசியமான பதிவு, நானும் என்னுடைய இளம்பிராயத்திற்குச் சென்று வந்ததாக உணர்ந்தேன். அன்றைய நாட்களில் வீட்டின் கதவு, சன்னல், சாமி படங்கள் குறிப்பாக எனது மிதிவண்டியைச் சுத்தும் செய்தது இன்றும் நினைவிலுள்ளது.

    பதிலளிநீக்கு