புதன், 16 நவம்பர், 2016

விட்டு விடுதலையாகி...


அன்பின் சக்திக்கு..
நீ பிறக்காதற்கு முன்பிருந்தும்,
உன் அம்மாவை பார்ப்பதற்கு
முன்பே நான் சிகரெட் குடிக்கத்தொடங்கி விட்டேன்..


பள்ளி இறுதி வருடத்தில் என் சக நண்பன் மூலமாய் வந்தது இந்த பழக்கம்..
வீட்டில் அப்பாவும் புகைப்பவர்..
மிக எளிதாக எந்த பயமுமின்றி, ஆசிரியர்கள் முன்பே கூட புகைத்திருக்கிறேன்.

புகைத்தல் என் தனிப்பட்ட உரிமை என்பதாய் இருந்தது..
பள்ளிப்பருவம் முடிந்த காலத்தோடு வேலைகளுக்கு செல்லவேண்டிய காலத்தில் கையில் கொஞ்சம் வரும் காசை
புகைத்து எரித்திருக்கிறேன்.

புகைத்தல் என்பது ஆணின் அடையாளமாக நினைத்துக்கொண்டிருந்தேன்..
யாரோடும்,எங்கேனும் என்னால் குறித்தகாலம் தொடர்ந்து இருக்கமுடியாது புகைக்கக்கிளம்பி விடுவேன்..

சில வருடங்கள் சிங்கப்பூரில் இருந்த போது சிகரெட் விலை கட்டுபடியாகாமல் பீடி மட்டும் உபயோகித்திருக்கிறேன்.

வீட்டிலிருந்து ஏதேனும் சாமான்கள் வேண்டுமா என்றால் இரண்டு பாக்ஸ் சிகரெட் அனுப்பு என்பேன்...

தாடையை தடவி என் அம்மா பலமுறை கெஞ்சி இருக்கிறது.
விவரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் நீங்கள் என்னை பலமுறை,பல விதங்களில் கேட்டுப்பார்த்து அலுத்து விட்டீர்கள்..
சில வருடம் முன் எனக்கு அம்மை போட்டிருந்தது..உடலெல்லாம் முத்து முத்தாக கொப்பளங்கள்..
மூன்று மாதம் வீட்டுக்குள்ளிருந்த நாட்களில் வீட்டில் எல்லாரும் தூங்கும் பின்னிரவு வேளையில் தினம் புகைத்துக்கொண்டிருந்தேன்.

உச்சமாய் சின்னவள் என் கையை அவள் தலையில் வைத்து சத்தியம் வாங்கிக்கூட இருக்கிறாள்..

திரைப்படம் தொடங்கும் போது வரும் புகைத்தல் பற்றிய எச்சரிக்கைகளில் நான் தலையை குனிந்து கொள்வேன்.
உன் அம்மா ஏழு புத்தகங்கள் வாங்கிக்கொடுத்திருக்கிறார்..விடச்சொல்லி.

வருடம் தோறும் விலை ஏறும்வேளை விட்டுவிட எடுக்கும் சபதம்..
குடிகாரன் பேச்சைவிட அற்ப ஆயுளோடு முடிந்து விடும்...

புகைப்பதன் தீவிரம் என் தாழ்மை உணர்ச்சியால் கூட இருந்திருக்கும்...புகைக்கும் நண்பர்களோடு இருத்தல் மரியாதை என்ற எண்ணம்...

ஆனால் சக்தி..
புகைத்தல் என்பது ஒரு நோயாகத்தான் இருந்திருக்கிறது..
நண்பர்கள்..நீங்கள்...
என் தீவிர நலம் விரும்பிகள் என்னை அன்பால் கேட்டுக்கொள்ளும் போதெல்லாம் மனசாட்சியை கொன்றுவிட்டு நான் மவுனமாய் இருந்திருக்கிறேன்.

புகைக்காத,குடிக்காத என் நண்பர்கள் திடீரென இறக்கும் போது நான் புகைப்பதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்று என்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்..

என் அன்றாடச்செலவென்பது அதிகமாய் புகைப்பதாய் இருந்திருக்கிறது.
செய்யும் தொழிலும் என்னை புகைக்கச்சொல்வதாய் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

சக்தி..
மிகச்சமீபமாய் அதிகம் புகைக்க ஆரம்பித்துவிட்டேன்..
வெளியில் கம்பீரமாக உலவினாலும் அதன் பாதிப்புகளை உணரும் வயது வந்துவிட்டது..

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் புகைத்துவந்த பழக்கத்தை இன்றுமுதல் நிறுத்துகிறேன்...

இவ்வளவு காலம் என் புகைத்தலின் மூலம் உங்கள் மனதில் ஏற்படுத்திய என் அத்தனை செயல்களுக்கும் மனப்பூர்வமான மன்னிப்பை கேட்கிறேன்...

இதை நான் எனக்குள்ளேயே முடிவுசெய்து நடத்தியிருக்கலாம்...
ஆனால் நான் அறிவித்துவிட்டே செய்கிறேன்..
இந்த கடுமையான முடிவில் உங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான்....

இனி நான் புகைப்பதை பார்த்தால் எப்போதும் என்னோடு பேசாதீர்கள்..என்னை ..
என் நட்பை கைகழுவி விடுங்கள்...
அதீத அன்புடையோர்..என் நலம் நாடும் யாரும் நான் புகைப்பதை பார்த்தால் எந்த யோசனையுமின்றி செருப்பால் அடியுங்கள்..

நன்றி சக்தி....

அன்புடன்..
செல்வக்குமார்.

4 கருத்துகள்:

  1. Vazhthukkal Ayya👍. Ungal veriyum, aathiramum vairaakiyamaga marivittadhu!! Oru cigarette pugaika ivvalavu mogam undaguma? Niruthuvadhu avvalavu siramama enbadhai ellam ungal kavidhai scan seidhu katiyadhu. Ipadi yarukkum theriyamal ragasiyamaay arambitha pazhakathai, ulagariya solli vittu, illai illai sabadham eduthu kaadhil "pugai" vara vaithu vitteergal. Ivatrai Ellam neengal vendru pudhu manidhanaga vaazha vazhthukkal.

    பதிலளிநீக்கு
  2. 16 நவம்பர்2016 உங்கள் வாழ்வின் முக்கிய நாளாக (D Day) ஆக அமையட்டும். இந்த முடிவு இறுதியான, உறுதியான முடிவாக இருக்கட்டும். நம்மை, நம் அன்பை விரும்புவர்களுக்காக நாம் சிலவற்றை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை. உங்களது இந்த முடிவு மற்ற நண்பர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். இதனைத் துணிவோடு பகிர்ந்த உங்களை மனதாரப் பாராட்டுகிறேன். (சில வரிகளைப் படிக்கும்போது மகாத்மா காந்தியின் சுயசரிதை நினைவிற்கு வந்தது)

    பதிலளிநீக்கு
  3. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  4. சக்தி..
    மிகச்சமீபமாய் அதிகம் புகைக்க ஆரம்பித்துவிட்டேன்..
    வெளியில் கம்பீரமாக உலவினாலும் அதன் பாதிப்புகளை உணரும் வயது வந்துவிட்டஊ////////

    நல்லது! உண்மையை பகிரங்கமாக உணர்ந்து எழுதியது போல் முடிவிலும் நிலைத்திருக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு